TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வன்னிப் போரின் மறுபக்கம் – மறக்கப்பட்டவர்கள்

அன்று வெள்ளிக்கிழமை. வீட்டு வேலைகளை முடித்துவிட்டுக் குளித்து, கோயிலுக்குப் போவதற்குத் தயாராகியபோது, வீட்டு வாசலில் ‘அக்கா’ என்றொரு குரல் கேட்டது. பழக்கப்படாத குரலாக இருப்பதால் யாரோ புதியவர்கள் என்பதை உணர்ந்துகொண்ட நான் வாசலுக்கு விரைந்தேன்.

நான் போவதற்கு சற்றுப் பிந்திவிட்டால் எமது நாய் அவர்களைப் பதம் பார்த்துவிடும் என்ற பயம்தான். அங்கு கையில் இரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றுடன் இளம் பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

வயது முப்பத்தைந்துக்குக் குறைவாகத்தான் இருக்கவேண்டும். வறுமையால் இளைத்த உடல். குழி விழுந்த கண்கள். அழுக்கடைந்த உடை. நெற்றியில் பொட்டு இல்லை. எனக்கு அவரது தோற்றத்தைப் பார்த்தவுடன் அவரது நிலமை விளங்கிவிட்டது. அவளது கணவன் இறந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் அல்லது ஏதாவதொரு தடுப்பு முகாமில் வாடிக்கொண்டிருக்கலாம் என நினைத்த நான் அதுபற்றிக் கேட்டு அவளது மனதைக் கலக்கமடையச் செய்வதற்கு விரும்பவில்லை. என்னைக் கண்டதும் அப்பெண் ‘பழைய உடுப்புக்கள் இருந்தால் தாருங்கள். போடுவதற்கு மாற்று உடுப்புக்கூட குழந்தைக்கும் எனக்கும் இல்லை’ என்று தயங்கியபடி கேட்டார்.

இயல்பாகவே எமது தமிழ்ப் பெண்கள் வெளிப்படையாக, துணிந்து கதைக்கும் சுபாவம் குறைந்தவர்கள். ஓரளவு வசதியான, நடுத்தர குடும்பத்தில் வாழும் பெண்கள்கூட தமது தேவைகளை தாய்மாரிடமே கேட்பார்கள். அப்படி தாய்மார் அவர்கள் கேட்டதை தகப்பனிடமோ, சகோதரனிடமோ கேட்டு நிறைவேற்றவில்லையெனில் கண்களைக் கசக்கிவிட்டு இருப்பார்கள்.

அது அந்தப் பெண்களின் தவறல்ல. அவர்கள் வளர்க்கப்படும் விதம் அப்படி. தமிழ் சமூகத்தில் பெண்களின் நிலை அவ்வாறுதான் இருக்கிறது. பெண் பிள்ளைகளுக்கு முதலில் தந்தை பாதுகாப்பு, பின்னர் சகோதரன் தொடர்ந்து கணவன், மகன் என ஆண்களைச் சார்ந்தே அவர்களை வாழப் பழக்கிவிடுவார்கள்.

காலமாற்றத்தால் ஓரளவு தமிழ்ப் பெண்கள் தமது கல்வியைப் பெறுவதில் முன்னேற்றம் கண்டிருந்தாலும் ஏனைய விடயங்களில் அவர்களின் நிலமை பல தசாப்தங்கள் பின் நிற்கிறது.

இந்த நிலையில், எதிர்பாராத வகையில் கொடிய யுத்தத்தின் காரணமாகத் தமது பாதுகாவலர்களான ஆண் துணைகளை இழந்து நிற்கும் பெண்களின் நிலமை சொல்லொணாத் துயரங்கள் நிறைந்தது. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் பன்முகம் கொண்டன.

பல தசாப்தங்களாக இடம்பெற்ற போரில் வடக்குக் கிழக்கில் விதவையாக்கப்பட்டவர்கள் தொடர்பான உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு இதுவரை மேற்கொள்ளப்படவில்லையாயினும் கிழக்கில் 40,000 இற்கும் அதிகமான விதவைகளும் வடக்கில் 30,000 இற்கு மேற்பட்டவர்களும் இருப்பதாக முன்னைய புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது. இவர்களில் பெரும்பான்மையானோர் 40 வயதுக்குட்பட்ட இரண்டு முதல் நான்கு குழந்தைகளின் தாய்மார் ஆவர்.

வீட்டை விட்டு வெளியே செல்வதற்குக்கூட ஆண்களின் துணையை நாடும் இந்தப் பெண்களின் நிலை தமது துணையை இழந்ததால் திக்குத் திசை தெரியாத நடுக்காட்டில் விடப்பட்ட குழந்தையின் நிலைக்கு ஒப்பானதாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் உயர் கல்வி கற்றவர்களல்ல. இதனால் தமக்குப் பொருத்தமான தொழில்வாய்ப்பை இவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய சூழ்நிலையில் தமது குழந்தைகளை வளர்ப்பது, அவர்களுக்குக் கல்வி கற்பிப்பது மற்றும் அவர்களின் தேவைகளைக் கவனிப்பது போன்றனவெல்லாம் இந்தப் பெண்களுக்கு மிகவும் கடினமானவையே.

இதனால் தற்போது உதவிகோரி, வேலை தேடி போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் வீடுகளுக்கு வருவது அடிக்கடி நிகழ்கிறது.

இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற்றப்பட்டுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில்கூட குடும்பத்தலைவர்களை இழந்துநிற்கும் இவர்களுக்கான உதவிகள் போதுமானவரை சென்றடையவில்லை. அங்கு இவர்களுக்கான தொழில்வாய்ப்புக்களும் எதுவுமில்லை. சுய தொழிலை மேற்கொள்ளக்கூடிய பொருளாதார வசதி இந்தப் பெண்களிடம் மட்டுமன்றி பெரும்பாலான மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு கிடையாது. இதுவரை இவ்வாறு பெண்களைக் குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்களுக்கென விசேட நிகழ்ச்சித் திட்டமெதனையும் அரசாங்கமோ, எந்தவொரு நிறுவனமோ முன்னெடுக்கவில்லை.

தமக்கு மீள் குடியேற்றத்தின்போது வீடு கட்டுவதற்கு உதவியாக வழங்கப்பட்ட சிறு தொகைப் பணத்தைக் கொண்டு தேநீர்க்கடையையோ அல்லது வேறு சிறு தொழில் முயற்சிகளையோ ஆரம்பித்தவர்களின் நிலையும் அந்தோ பரிதாபம்.

ஏனெனில் இராணுவம் இவர்களுக்குப் போட்டியாக முடிவெட்டும் ‘சலூன்’ முதல் முழு வசதிகளையும் கொண்ட உணவு விடுதிகள்வரை அனைத்தையும் ஆங்காங்கே திறந்து விட்டிருக்கிறது. ஏ-9 வீதியில் சிறிய தேநீர்க்கடையைத் திறந்து வைத்துக்கொண்டு எம்மவர்கள் கொட்டாவிவிட்டுக் காத்திருக்க, தென்னிலங்கையிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் பேருந்துகள் மற்றும் சொகுசு வாகனங்கள் இராணுவத்தால் நடாத்தப்படும் உணவு விடுதியருகே போய் நிற்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், எவ்வாறு எமது மக்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவது? இந்த நிலையே சகல துறைகளிலும் தொடர்கிறது.

இது ஒரு புறமிருக்க, அரைவயிறும், கால்வயிறும் சாப்பிட்டாவது காலத்தைக் கழிக்கலாம் என்றால், அவர்களின்; நிம்மதியான வாழ்வும் பறிபோய்விட்டது.

ஆண்களில்லாத இரண்டு அல்லது மூன்று குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பயம் காரணமாக இரவில் ஓரிடத்தில் படுப்பது வடக்குக் கிழக்கில் புதிய விடயமல்ல. ஆனால் அவர்கள் அப்படி முன்னெச்சரிக்கையாக நடந்தும் இராணுவம் தமது கைவரிசையைக் காட்டத் தவறவில்லை. இத்தகைய ஒரு சில சம்பவங்களே செய்தியாகி எமது காதுகளை எட்டியுள்ளன.

அண்மையில் விசுவமடுவின் ரெட்பானப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் இதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு. ஆண்துணை அற்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த இரண்டு பெண்கள் அங்கு வந்த ஆறு படையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள்.

2009 மே இற்கு முற்பட்ட காலப்பகுதியில், அதாவது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த காலப் பகுதியில் எமது பெண்களின் நிலமை வேறுவிதமாக இருந்தது.

முதலாவது, அவர்களது பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இருக்கவில்லை. எந்தவேளையிலும், எந்த இடத்திற்கும் பெண்கள் போய்வரக்கூடியதொரு நிலலமை இருந்தது.

அடுத்து, பெண்களுக்கான தொழிற்கல்வியும் சுய தொழில் வாய்ப்புக்களும் ஊக்குவிப்புக்களும் அதிகளவில் இருந்தன. அவர்களுக்குப் பொருத்தமான தொழில்துறையை தேர்ந்தெடுத்து பயிற்சி பெற்று தொடர்ந்தும் தமது வாழ்வாதாரமாக அத்தொழிலை மேற்கொள்ளும் நிலமை காணப்பட்டது.

இன்று அவற்றையெல்லாம் எண்ணி பெருமூச்சொன்றை வெளியிடுவதைத் தவிர வேறெதையும் அவர்களால் செய்ய முடியாது.

ஒருபுறம், குடும்பத்தவரை, உறவுகளை இழந்த சோகம், பாதுகாப்பற்ற நிலை, பொருளாதார நெருக்கடி போன்றன என்றால், உழுத்துப்போன சம்பிரதாயங்களைக் கட்டிக்காக்கும் எமது சமூகம் கொடுக்கும் மன உளைச்சல் மறுபுறம்.

பொதுவாகவே எமது தமிழ் சமூகம் பெண்களை சக மனிதராகப் பார்ப்பதில்லை. அவளுக்கும் உணர்வுகள் இருக்கும் என்று நினைத்து அவற்றைப் புரிந்துகொண்டு மதிப்பளிப்பதற்கு முயன்றதுமில்லை. அவ்வாறு எமது சமூகம் மதிப்பளிக்கத் துணிந்திருந்தால் விதவைகளை, கணவனால் கைவிடப்பட்டவர்களை இன்னும் தாம் ஒரு தவறும் செய்யாமல் ஆண் வர்க்கத்தினால் பாதிக்கப்பட்ட பல பெண்களை ஒதுக்கி வைப்பதற்கும் புறக்கணிப்பதற்கும் தலைப்பட்டிருக்காது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமது கணவன்மாரை இழந்து நிற்கும் பெண்களின் கதி என்ன? அதிலும் மிகப் பெரிய துரதிஸ்டம் என்னவெனில், இவ்வாறு கணவன்மாரை இழந்து கைம்பெண்ணாகி நிற்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பதுதான்.

இந்தப் பெண்களின் உணர்வுகளையும் விருப்பு, பெறுப்புக்களையும் எமது சமூகம் புரிந்துகொள்ளத் தலைப்படுமா? அவ்வாறு செய்வதற்கு எமது சமூகம் எத்தனிக்குமானால், அதுவே நிர்க்கதியாகி நிற்கும் இந்தப் பெண்களுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவியாக அமையும்.

‘ஆண்-பெண் என்ற பால் வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதம் இருக்கிறது. அந்த மனிதத்தை நேசியுங்கள், மதிப்பளியுங்கள்’ என்ற விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
 • sasikumar says:

  அண்ணா நிங்கள் இவ்வளவு விபரத்தை அங்கிருந்து எடுத்து வந்து எமக்கு சொல்லி இருகிறிர்கள் அதற்கு நன்றி. எம் சகோதரிகளின் நிலைமையை நினைத்தாள் அழுகை அழுகையாக வருகிறது உங்களால் முடிந்தால் துணையிழந்து நிற்கின்ற சகோதரிகளின் விபரங்களையும் அவர்களுக்கு எங்களால் உதவ கூடிய வழிமுறைகளையும் உங்கள் இணையத்தளம் மூலம் எங்களுக்கு அறியப்படுத்தினால் நாங்கள் எங்களால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்யமுடியும். நாங்களோ இங்கு சொகுசு வாழ்கை வாழ்கிறோம் அங்கு எம் சகோதிரிகளின் நிலையோ உடுக்க மாத்து உடுப்பு இல்லாமல் ஒருநேர சாப்பாடுக்கு கூட கஷ்டப்படுகிறார்கள்

  July 12, 2010 at 00:11
 • முத்து ராமன் says:

  எங்கே போய் இடித்துக்கொள்வது என்று தெரியவில்லை. எப்படி அழுவது என்றும் புரியவில்லை. நான் செத்து இவர்களுக்கு விடுதலை கிடைக்குமென்றால் இன்றே மகிழ்வுடன் சாகத்தயார். ஆனால் யாருக்கு என் உயிர் தேவை? கடைசி வரை என்னுறவுகளுக்கு விடிவே வராதா?
  என் இதயம் வலுவிழந்து வருகிறது. இகூடிய செய்திகளை அறிந்துகொள்ளாமலும் இருக்க முடிவதில்லை. இறைவனும் இல்லை;மனிதனும் இல்லை. எங்கே போய் இடித்துக்கொண்டு அழுவது என்று தெரியவில்லை.
  உததம இலங்கைத்தமிழருக்கா இந்த நிலை ? என்னால் கண்ணீர் மட்டுமே விட முடிவதை நினைத்து அவமானத்தில் குன்றிப்போகிறேன். மரணத்தை நான் தேடிபோகத்தேவையில்லை. அது விரைவில் தானாக தேடிவந்துவிடும். வரட்டும் . அப்படியாவது இக்கொடுமையான நிகழ்வுகளை காணாமல் இருக்கும்,அறியாமல் இருக்கும் வாய்ப்பு கிட்டுமல்லவா?

  August 1, 2010 at 09:03

Your email address will not be published. Required fields are marked *

*