TamilSpy

பொழுது போக்கு இணையம்…

உலகத் தமிழருக்கு எதிரான இலங்கையின் சதி அம்பலம்

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் போர் இடம்பெற்ற வேளையில் உலகத் தமிழர் வதியும் அத்தனை நாடுகளிலும் நாசகார வேலைகளை உண்டுபண்ண இலங்கைத் தூதுவராலயங்கள் ஊடாக இராணுவ புலனாய்வாளர்கள் பல பிரயத்தனங்களை மேற்கொண்டனர். உலகத் தமிழர்கள் மிக எச்சரிக்கையாக இருந்தே வந்தனர். ஆனால் கடந்த ஆண்டு இடம்பெற்ற தற்கால இராணுவப் பின்னடைவுக்குப் பின்னர் இலங்கையின் புலனாய்வாளர்கள் தமிழர் மத்தியில் ஊடுருவி வெற்றியும் அடைந்துவிட்டார்கள்.

இது இப்படியே தொடருமேயானால் உலகத் தமிழர் பல பிரச்சனைகளை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். இலங்கையின் சதிவேலைகள் இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இலங்கையின் அரச பயங்கரவாதம் நாடு கடந்து பல நாடுகளுக்கு பரவியது. பிரான்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் படுகொலையின் பின்னணி மற்றும் புலம்பெயர் தமிழ் இளையோரிடையே ஏற்பட்ட குழுச்சண்டைகளின் பின்னணிகளை அலசிப்பார்த்தால் இலங்கை அரசின் சதிகளை உணரலாம். குறிப்பாக இளைஞர்கள் சண்டைபோடும் வேளையில் அதைப் பெரிதாக ஊதி தமிழ் மக்கள் மீது சேறுவாரும் வேற்றின ஊடகங்களுக்கு இலங்கை அரசினால் பரிசாக கொடுக்கும் சலுகைகள் சொல்லில் அடங்காதவை.

யுத்தம் இடம்பெற்ற வேளையில் தமிழர் இந்தச் சதி வேலைகளை பற்றி ரொம்ப அலட்டிக்கொள்ளவில்லை. இலங்கையின் சதிவலை பின்னாளில் இறுக்கம் அடைந்து தமிழ் சமூக முன்னோடிகளையும், தொழில் சார் வல்லுனர்களையும் தம் வசப்படித்தி தமிழருக்கு உள்ளேயே முறுகல் நிலையை உருவாக்கி அவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்தி அதிலும் வெற்றிகண்டு விட்டார்கள் இந்த சதிகார வலையமைப்பு. இன்று புலம்பெயர் தமிழருக்குள்ளும் ஏன் மலேசியா மற்றும் இந்தியாவில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்குள்ளும் பல நாசகார வேலைக்கான பணிகளில் இறங்கியுள்ளது இலங்கை அரசு. தமிழ்நாட்டு மக்களை எப்படியேனும் ஈழக் கொள்கைக்கு எதிராக கொண்டுவந்து விடவேண்டும் என்ற முனைப்பில் இலங்கை பல காலமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளோ தமது அரசியல் இருப்புக்காக தமது கொள்கைகளை வகுத்து செயலாற்றிக்கொண்டு வந்துள்ளார்கள் என்பது தான் உண்மை. சில வாரங்களுக்கு முன்னர் தமிழீழ ஆதரவாளர்கள் புகையிரதத்தைக் குறிவைத்து குண்டு வைக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு சில தமிழ் இனவாளர்கள் கைது செய்யப்பட்டதும் மற்றும் இந்தச் செய்திக்கு ஊடகங்களினால் கொடுக்கப்பட்ட முன்னுரிமையைப் பார்க்கும் பொழுது இந்த வேலை இலங்கை அரசின் நேரடித் தலையீட்டுடன் இந்தியப் புலனாய்வு துறையினரால் நடத்தப்பட்ட நாடகமாகத் தான் இந்த சம்பவத்தை பார்க்க முடிந்தது. இது போன்ற பல அசம்பாவிதங்களை உருவாக்குவதன் மூலமாக ஈழக் கோரிக்கைக்கும் ஈழக் கோரிக்கையை முன்னிறுத்தி செயல்படுவோரையும் மற்றும் ஆதரவளிப்போரையும் பயமுறுத்தி அவர்களின் கனவை அடியோடு இல்லாதொழிக்கத் தான் இப்படியான சம்பவம்.

இலங்கையின் சதிவலைக்குள் விழாமலிருக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை அரசியல் கோமாளிகள் என்று தொடர்ந்து சிங்கள தலைவர்கள கூறிவருகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அரசியல் தார்ப்பரியத்துக்கு ஒவ்வாமல் இன்னொரு நாட்டு அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று கூறியும் கண்டனத்தை வெளியிடாமல் மாறாக அந்த நாட்டுடன் சேர்ந்தியங்கும் இந்தியாவை பல கோடி தமிழர்கள் தமது தேசம் இந்தியா என்று இன்று வரை சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். இதைவிட பாவம் வேறு எதுவுமே இருக்கமுடியாது.

இப்படியாக பல வேலைத்திட்டங்களை இந்தியாவில் செய்து கொண்டிருக்கும் இலங்கை, தற்பொழுது மலேசியா, தென் ஆபிரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகமாக வாழும் தமிழ்நாட்டு வம்சாவளி மக்களையும் விட்டுவைத்தாற்போல் இல்லை. இங்கும் பல தமிழருக்கு எதிரான வேலைகளை செய்துகொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மலேசிய அரசு மூலமாக தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

மலேசியா மண்ணைப் பிரதான தளமாகக் கொண்டு புலிகள் தமது இராணுவக் கட்டமைப்பை மீளமைத்து மீண்டும் இலங்கைக்கு எதிராகப் போர் செய்ய தயாராகிறார்கள் என்றும் தாம் பல விடுதலைப்புலிகளை கைது செய்து வருவதாக பொய் பரப்புரைகளை மலேசியா அரசும் அதன் காவல்துறையினரும் பரப்பி உண்மையான ஈழத் தமிழ் அகதிகளுக்கு சொல்லொணாத் துயரங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இது இவ்வாறிருக்க இலங்கை அரசு தனது சதி வலையமைப்பு ஊடாக புலம்பெயர் நாடுகளில் இருக்கும் ஈழத் தமிழர் மீது நேரடியாகவே ஊடறுப்பு போர் ஒன்றை கட்டவீழ்த்தியுள்ளது.

சோரம் போகும் புலம்பெயர் தமிழர்

விடுதலைப் பயணம் தொடங்கிய காலம் முதல் இன்று வரை பல எட்டப்பர்களை ஈழத் தமிழினம் கண்டுள்ளது. அரசியல் பாதையில் தமிழ் தலைமை போராடியபொழுது பொன். இராமநாதன், பொன். அருணாசலம், ஜி. ஜி. பொன்னம்பலம், முருகேசன் திருச்செல்வம் மற்றும் பல முதுபெரும் பல தலைவர்கள் தமிழருக்கு சம ஆட்சி அரசு தேவையில்லை சிங்களவரும் தமிழரும் சகோதரர்களாக எப்பொழுதும் இருக்கலாம் என்று தமிழின விரோத அரசியலை நடத்தினார்கள். தந்தை செல்வாவின் பல அறவழிப் போராட்டங்களை ஒடுக்க பல தமிழ் தலைவர்களை இலங்கை அன்று உருவாக்கியது. இராணுவத் தீர்வே தமிழீழத்தை பெற்றுத்தரும் என்ற கொள்கையுடன் ஆயுதம் ஏந்திய போராளிகளுக்குள் பல முரண்பாடுகள். ஒவ்வொரு இயங்கங்களும் நான் பெரிதா நீ பெரிதா என்ற அடிப்படையில் எதிரியின் சூழ்ச்சியில் வீழ்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தினார்கள்.

பின்னாளில் பல எட்டப்பர்கள் உருவானார்கள். தமிழீழ விடுதலையைப் பெற்றெடுக்கக்கூடிய ஒரே விடுதலை அமைப்பாக விடுதலைப் புலிகள் வளர்ந்ததும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராளிக்குழுக்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக தமிழீழ பகுதிகளில் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்தியங்கி தமிழ் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் எதிராக பல அட்டூழியங்களை செய்தார்கள் செய்துகொண்டும் இருக்கின்றார்கள். இவைகளே தமிழரின் ஆயுதப் போராட்டத்திற்கு ஏற்பட்ட தற்காலிக பின்னடைவு என்றால் மிகையாகாது. இப்படியாக சாத்வீக மற்றும் ஆயுத வழிப்போரட்டங்களுக்கு எதிராக ஈழத் தமிழர்களையே பாவித்து அவர்களின் போராட்டங்களை மழுங்கடித்தார்கள்.

இவ்வளவு சம்பவங்களுக்கும் பிறகும் திருந்தாமல் இன்னும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பன் வேலைகளை தமிழரில் சிலர் ஈடுபடுவதானது தமிழருக்கு விழுந்த சாபம் என்றுதான் சொல்ல வேண்டும். உள்நாட்டில் மங்கியிருக்கும் ஈழ விடுதலை மூச்சை புலம்பெயர் தமிழர் சுவாசம் கொடுத்து ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்கு உத்வேகம் கொடுத்துவிடுவார்கள் என்ற பயத்தில் இலங்கை அரசு தனது அனைத்து வளங்களையும் ஒன்றிணைத்து புலம்பெயர் தமிழர் மீது வலிந்த போரைத் தொடுத்திருக்கின்றது என்பது தான் உண்மை. இதற்கு தேவைப்படுவது என்னவென்றால் புலம்பெயர் தமிழருக்குள் இருக்கும் சமூக மற்றும் வணிக முன்னோடிகளை தம் வசப்படுத்தி அவர்கள் மூலமாக தான் நினைத்ததை செய்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கியுள்ளது இலங்கை அரசு.

இவர்களை தம் வசப்படுத்துவதானால் பல அனுகூலங்கள் இலங்கைக்கு கிடைக்கும்.
குறிப்பாக புலம்பெயர் தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் அரசியல் மற்றும் இராசதந்திர அழுத்தங்கள் ஊடாக தமிழருக்கு எதிராக யுத்தம் புரிந்து கொலை மற்றும் பல மனிதவுரிமை மீறல்களுக்காக தண்டனையை சிங்களத் தலைவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இதனை இல்லாதொழிக்க ஒரே வழி புலம்பெயர் தமிழருக்குள் பிரிவை உண்டுபண்ணலாம் என்று இலங்கை கருதுகின்றது.

அத்துடன் ஈழக் கோரிக்கையை தமிழர்கள் மறந்துவிட்டார்கள் என்று உலக அரங்கில் பிரச்சாரப்படுத்தலாம் மற்றும் உலக நாடுகளுடன் இருந்து தமிழரின் மறுவாழ்வுக்காக பணத்தை வாங்கி தாம் கொள்ளையடிக்கலாம் என்ற நோக்குடன் களம் இறங்கியுள்ளது இலங்கை. கருணா, டக்ளஸ், சித்தாத்தன், மாத்தையா மற்றும் கே.பி என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் போன்றவர்களினால் மட்டும் வளர்த்தெடுக்கப்பட்டதல்ல ஈழ விடுதலைப் போராட்டம். ஈழ விடுதலைப் போராட்டம் பல பரிமாணங்களைக் கொண்டது. அதனை தமிழர்கள் உணர்ந்து செயல்பட்டால் ஈழ விடுதலை வெகுசீக்கிரமே உருவாகும். ஆனால் இலங்கை அரசு கே. பியை கருவியாக பாவித்து புலம்பெயர் தமிழரை தம் வசப்படுத்திவிட வேண்டும் என்ற வேள்வியுடன் களம் இறங்கியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து சிலர் இலங்கை சென்று ஜனாதிபதியை சந்தித்து காசோலையையும் கொடுத்து தமிழரை காப்பாற்றச் சொல்லிவிட்டு நாடு திரும்பினார்கள். இதன் பின்னர் ஏற்பட்ட கசப்பான பல சம்பவங்கள் இலங்கையின் பிரித்தாளும் தந்திரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியது. இதன் பின்னர், கே. பி ஊடாக ஒன்பது புலம் பெயர் தமிழரை இலங்கைக்கு வரவழைத்து விருந்து கொடுத்து அனுப்பியுள்ளது இலங்கை அரசு. இக்குழு ஆறு நாடுகளில் இருந்து இலங்கை சென்றது.

அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு:

1. மருத்துவர் ரூபமூர்த்தி – அவுஸ்திரேலியா
2. திருமதி. சந்திரா மோகன் ராஜ் – சுவிற்சலாந்து
3. திரு. சிறிபதி சிவனடியார் – யேர்மனி
4. திரு. பேரின்பநாயகம் – கனடா
5. திரு. விமலதாஸ் – பிரித்தானியா
6. திரு. சார்ல்ஸ் அன்டனிதாஸ் – பிரித்தானியா
7. மருத்துவர் அருணகுமார் – பிரித்தானியா
8. திரு. கங்காதரன் – பிரான்ஸ்
9. திரு. சிவசக்தி – கனடா

இக்குழுவினர்களின் சந்திப்புக்கான ஒழுங்குகளை கே.பியே செய்ததாக இலங்கையின் பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதியின் பாசமிகு சகோதரருமான கோதபாய ராஜபக்ச பிரித்தானிய வானொலிக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் கே.பியை இலங்கை படைப் புலனாய்வாளர்களே இயக்கி வருவதாகவும், அவரூடாக புலம்பெயர் மக்களை தம்மிடம் மண்டியிட வைப்பதே சிறீலங்கா அரசின் நோக்கம் என, இலங்கை சென்று திரும்பியவர்களில் ஒருவரான மருத்துவர் அருட்குமார் அம்பலப்படுத்தியுள்ளார்.

தான் தனிப்பிட்ட முடிவில் கொழும்பு சென்று பிரித்தானிய திரும்பியுள்ளதாக கூறியிருக்கும் மருத்துவர் அருட்குமார் தமிழ்நெட் இணையத்திற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவென கே.பியின் ஏற்பாட்டில் ஜூன் 14 ஆம் நாள் விஜயம் செய்த இந்த குழுவினர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களுக்குச் சென்றதுடன், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச, ஈழத்தில் பல அட்டூழியங்களுக்கு பொறுப்பானவரும் கருணாவை புலிகளிடம் இருந்து பிரிக்க முக்கிய பொறுப்பை வகித்த நீண்ட காலம் இலங்கை படைப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருக்கும் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவித்தாரன, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரையும் சந்தித்திருந்தனர்.

இவர்கள் ஜூன் 20 வரை தங்கியிருந்து மேலும் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டதாகத் தகவல். சந்திப்பு நடைபெற்ற இடத்திற்கு கோதபாய வந்தபொழுது கே.பி அவரைக் கட்டித்தழுவ முற்பட்டதாகவும், அவரது இந்த நடவடிக்கை தமக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் கூறும் அருட்குமார், விடுதலைப் புலிகள் தடுத்து வைக்கப்பட்ட பிரிவு – 4 முகாமைப் பார்வையிட அனுமதி மறுத்த படையினர், பிரிவு இரண்டாவது முகாமிற்கு தம்மை அழைத்துச் சென்றதாகவும், அங்கும் படைப் புலனாய்வாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டவர்களே முன்னாள் போராளிகள் போன்று தம்மை சந்திக்க முற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆணவத்துடன் கோதபாய தம்முடன் உரையாடியதாகக் கூறும் மருத்துவர் அருட்குமார், வரலாற்றைப் பற்றி யாரும் பேசக்கூடாது எனவும், அரசு செய்யும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு மட்டும் நல்க வேண்டும் என, அடிமை போன்று நடத்த முற்பட்டதாகவும், புலம்பெயர் மக்களின் பணத்தைப் பெற்றுக்கொள்வதிலேயே குறியாக இருந்ததாகவும் தெரிவித்தார். புலம்பெயர் மக்களை கே.பி ஊடாக உள்வாங்க முனைவது, அல்லது புலம்பெயர் தமிழ் மக்களை பிரிவுகளாக உடைத்து சின்னா பின்னமாக்கி மன்டியிட வைப்பது என்பதில் இலங்கை அரசும், படைப் புலனாய்வாளர்களும் திட்டமிட்டிருப்பதை தமது சந்திப்புக்களில் உணர முடிந்ததாக கூறும் மருத்துவர் அருட்குமார், கே.பியை 2006ஆம் ஆண்டே தான் சந்தித்திருப்பதாக கோதபாய கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் வளங்களை இந்தியா சுரண்டுவதாக இந்த சந்திப்புக்களில் குற்றம் சுமத்தியுள்ள சிறீலங்கா அரச தரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களை தரக்குறைவாகப் பேசியதாகவும், தமிழர் புனர்வாழ்வு மையம் (ரி.ஆர்.சி) என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி, அதனூடாக புலம்பெயர் மக்களின் நிதியைப் பெற்றுக்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அருட்குமார் கூறினார். இதிலிருந்து புலம்பெயர் தமிழர் கற்க வேண்டிய பாடம் பல. அருட்குமார் தனது வலியை வெளிக்கொண்டு வந்திருக்கின்றார்.

பிரித்தானியாவை சேர்ந்த சார்ல்ஸ் அன்டனிதாஸ் அறிக்கை வாயிலாக கூறும்பொழுது தாம் எந்த அரசியல் நோக்கத்துடனும் இந்த சந்திப்பை மேற்கொள்ளவில்லை எனவும் இந்த சந்திப்பு முழுக்க முழுக்க மனிதநேய நோக்குடனையே இடம்பெற்றதாக கூறும் இவர் தாம் பல வாக்குறுதிகளை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுள்ளதாக கூறியிருப்பது நகைப்புக்குள்ளானவையாகவே பார்க்கப்படுகின்றது. காரணம் இலங்கை அரசு பல வாக்குறுதிகளை பல காலமாக கொடுத்துக்கொண்டு தான் வருகின்றது.

இவைகளில் ஒரு வாக்கையேனும் இன்றுவரை இலங்கை அரசுகளினால் காப்பாற்ற முடியவில்லை. சார்லஸ் என்ன ஒன்றுமறியா பச்சைப் பிள்ளையா? இவருக்கு பல காலமாக கே. பியை தெரியும். கே. பிக்கு கோதபாய மற்றும் மகிந்த போன்ற அரச பயங்கரவாதிகளைத் தெரியும். அப்படியிருக்க இவர் கூறும் கூற்றுக்கள் நகைப்பாக உள்ளது. எதுவாயினும் இவர் போன்றவர்கள் கூறும் சமாதானத்தை புலம்பெயர் தமிழர் உள்வாங்கி தம்மை பாதுகாக்க மற்றும் ஈழ விடுதலைக் கனலை அணையாமல் வைத்திருக்க பொறுப்பு புலம்பெயர் தமிழர் உள்ளிட்ட உலகத் தமிழரிடம் தான் உள்ளது.

புனர்வாழ்வு என்ற போர்வையில் பணத்தை சூறையாட முனையும் இலங்கை

தமிழரின் இரத்தத்தைக் குடித்த சிங்கள அரச பயங்கரவாதிகள் அவர்களின் வேர்வை சிந்தி சம்பாதித்த பணத்தையும் சுவீகரித்துக்கொள்ள திட்டம் வகுத்து செயலாற்றுகின்றது இப்பொழுது. சிங்களப் பெண்களை பணிப்பெண்களாக மத்திய கிழக்கிற்கு அனுப்பி அவர்களின் சம்பாத்தியத்தை பெற்று ஆயுதம் வாங்கியும் அரசியல்வாதிகள் கொள்ளையடித்தும் கேடுகெட்ட பிழைப்பு நடத்தும் இவர்கள் சமாதானம் திரும்பிவிட்டதாக அறிவித்து உலகை முட்டாள்களாக்க முயலுகின்றார்கள்.

இதற்கு தேவையான ஆயுதம் தமிழர் புனர்வாழ்வு மற்றும் வடக்கு கிழக்கு மறுசீரமைப்பு. இதற்காக உலக வங்கி மற்றும் சில பணம் கொடுக்கும் உலக வங்கிகள் பணத்தை இலங்கைக்கு தாராளமாக அள்ளிக்கொடுக்கின்றார்கள். இது போதாதென்று உலக நாடுகளும் அள்ளிக்கொடுக்கின்றார்கள். எப்படியும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பு நாடாக வேண்டும் என்ற விருப்பில் தாராளமாக அள்ளிக்கொடுக்கின்றது இந்தியா. வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக, தடுப்புக் காவலில் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கும் கே. பி மலேசியாவில் நிதி சேகரிப்பு திட்டம் ஒன்றை ஆரம்பித்தார்.

மலேசியாவில் பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலையில் உள்ள ஈழத் தமிழர் மலேசியாவில் ஒன்றுகூடி நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் கடந்த வாரம் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரக தகவல்களின்படி, இந்த நிகழ்வின் போது பல தொழில் அதிபர்கள் தமது நிதிகளை வழங்கியுள்ளனர். பல கோடி ரூபாக்கள் இந்த நிகழ்வில் சேர்க்கப்பட்டதாக இராசதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இவ்வாறான நிதி சேகரிப்பு நிகழ்வுகள் எதிர்காலத்திலும் நடத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வரும் தகவல்களின்படி கே.பியை பாவித்து அவரின் நெருங்கிய சகாக்கள் ஊடாக மேற்கத்தைய நாடுகளிலும் பணம் சேர்க்க நிகழ்சிகளை நடாத்த இலங்கை திட்டமிட்டுள்ளதாக தகவல்.

இதற்கு பல முன்னணி வர்த்தக நிறுவனங்களும் மற்றும் தமிழ் சமூக முன்னோடிகளும் ஆதரவளித்திருப்பதாக நம்பகரமான வட்டாரங்கள் கூறுகின்றன. அத்துடன் சேர்க்கப்படும் பணத்தை தமிழரின் பயன்பாட்டுக்கு செலவழிக்காமல் சிங்களப் பகுதிகளில் அபிவிருத்தி வேலைகளையும் மற்றும் தமக்குள்ளே பணத்தைப் பிரித்தெடுக்கும் நோக்குடன் இறங்கியுள்ளார்கள் இந்த அரசியல்வாதிகள். இதற்கு துணை போகின்றார் கே. பி. இவருக்கு மகிந்த அரசினால் கொடுக்கப்பட இருக்கும் சன்மானம் என்னவென்றால் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அதன் அதிகாரத்தை கே. பியிடம் கொடுக்க மகிந்தா சம்மதித்துள்ளதாக

அறியக்கூடியதாகவுள்ளது. இது இவ்வாறிருக்க விடுதலைப்புலிகள் ஒரு அறிக்கையொன்றை இலங்கை அரசின் முகமூடியை கிழிப்பதுபோல் அறிக்கை விட்டுள்ளார்கள். இந்த அறிக்கை விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலக இணைப்பாளர் இராமு.சுபன் என்பவரினால் விடுக்கப்பட்டுள்ளது. போராளிகளை விடுவிப்பதற்கும், தாயக மக்களின் துயரங்களைப் போக்குவதற்கும் எமது இயக்கமும், புலம்பெயர் மக்களும் விட்டுக் கொடுப்புக்களுக்குத் தயாராக இருக்கின்றார்கள் என்ற நல்ல நோக்கினை இலங்கை அரசாங்கம் கபடத்தனமாகப் பயன்படுத்த முனைகிறது, என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கை தெரிவித்துள்ளதாவது: “இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் சர்வதேசத்தின் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்ற அதேவேளை எம் உரிமைக்கான போராட்டத்தினை நசுக்க தொடர்ந்தும் திடசங்கற்பம் பூண்டுள்ளது.

எம் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்பது சர்வதேச ரீதியாக பல வழிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது இயக்கத்தினை அழிப்பதன் மூலம் தமிழர்களின் போராட்டத்தின் இலட்சியத்தை அழித்துவிடலாம் என்ற சிங்கள அரசின் நோக்கம் எடுபடவில்லை. இத்தகைய சூழலில் இலங்கை அரசு பல்வேறு நரித்தனம் கொண்ட தந்திரத் திட்டங்களை வகுத்து நகர்த்தி வருகின்றதை எம்மக்கள் நன்கு அறிவர். சர்வதேச ரீதியாக எழுந்துள்ள அழுத்தங்களைத் தணிப்பது, சர்வதேச உதவிகளை தமிழர்களின் பேரால் பெற்று சிங்களக் குடியேற்றங்களைப் பெருக்குவது, இன நல்லிணக்கம் என்ற பேரிலும், அபிவிருத்தி என்ற பேரிலும் எம் உரிமைக்கான போராட்டத்தினை அடியோடு இல்லாமல் செய்வது ஆகிய நீண்டகால திட்டங்களை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இத்தகைய சிங்களப் பேரினவாதத்தின் சூழ்ச்சி நடவடிக்கைகளுக்குப் புலம்பெயர் தமிழர்கள் பெரும் தடையாக இருப்பதனை இலங்கை அரசாங்கம் நன்கு கணித்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் இருந்த விரக்தி, குழப்பங்கள், கருத்து முரண்பாடுகளைக் களைந்து ஆரோக்கியமான முறையில் ஒன்றிணைந்து செயற்படத் தொடங்கிய புலம்பெயர் தமிழரின் செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்துக்குப் பெரும் தலையிடியாக அமைந்து வருகின்றன..” மேலும் அந்த அறிக்கையில்அவர்கள் கூறியுள்ளதாவது: “இதன் காரணத்தால் புலம்பெயர் தமிழர் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி அவர்களின் ஒற்றுமையைக் குலைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது இலங்கை அரசாங்கம்.

அதன் ஒருபகுதியாக, சிறையிலுள்ள போராளிகள் சிலரைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி சில திட்டங்களைச் செயற்படுத்தி புலம்பெயர் மக்களின் ஒருதொகுதியைத் தம் வசப்படுத்தி, வளங்களை உள்வாங்க முனைகிறது. இதன்மூலம் குழப்பங்களை ஏற்படுத்தி எமது ஒற்றுமையைச் சிதைத்து, தமிழரின் உரிமைக்கான போராட்டத்தினையும் புலம்பெயர் தேசங்களில் நசுக்க எண்ணியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே இலங்கை அரசாங்கத்தால் சில நகர்வுகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போராளிகளை விடுவிப்பதற்கும், தாயக மக்களின் துயரங்களைப் போக்குவதற்கும் எமது இயக்கமும், புலம்பெயர் மக்களும் விட்டுக் கொடுப்புக்களுக்குத் தயாராக இருக்கின்றார்கள் என்ற நல்ல நோக்கினை இலங்கை அரசாங்கம் கபடத்தனமாகப் பயன்படுத்த முனைகிறது. அதற்காக தமிழ்மக்களின் எதிர்பார்ப்பைப் பயன்படுத்தி, தம்வசப்படுத்தும் உளவியற்போரை இலங்கை அரசு கையாளத் தொடங்கியுள்ளது.” விடுதலைப்புலிகளினால் விடுக்கப்படிருக்கும் விழிப்பு எச்சரிக்கை நூறு வீதம் உண்மையே. இதை புரிந்து புலம்பெயர் தமிழர் உட்பட உலகதமிழர் ஓன்றுபட்டு ஒரே குடையின்கீழ் நின்று ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகளை பெற்றிட வேண்டும்.

அனைத்திற்கும் அவசியமானது ஓன்று என்னவென்றால் அனைத்துத் தமிழரும் தமது விருப்பு வெறுப்புக்களை ஒதுக்கி வைத்து விட்டு ஒரே அணியின் கீழ் வந்து ஈழத் தமிழரின் உரிமைகளை இராஜதந்திர வழிகளூடாக அடைய வேண்டும் என்பது தான் தமிழர் நலனில் அக்கறை கொண்டோரின் விருப்பம். இலங்கை அரசு ஏற்கனவே புலம்பெயர் உட்பட உலகத் தமிழரின் வலையமைப்புக்குள் உட்புகுந்து விட்டார்கள் என்பது தான் யதார்த்தமான உண்மை. இதனைப் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டியது தான் உலகத் தமிழரின் இன்றைய கடமை. எப்படி முள்ளுக்குள் சிக்கியுள்ள துணியை பத்திரமாக எடுக்க முடியுமோ அதைப்போன்றே தான் விரோதிகள் தமிழருக்குள் ஏற்கனவே புகுந்துவிட்டார்கள், ஆகவே எதிரிகளை சாணக்கியமாக இனம் கண்டு வெற்றி வாகை சூடவேண்டும் எனபது தான் தற்காலப் பணி இல்லாவிட்டால் புலம்பெயர் தமிழர் உட்பட உலகத் தமிழர் கொடுக்க வேண்டிய விலை அதிகமாக இருக்கும்.

அனலை நிதிஸ் ச. குமாரன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*