TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பணம் காய்க்கும் மரமாக மாறியிருக்கும் கிளிநொச்சி நகரம்

போரால் சிதைந்து போய்க் கிடக்கும் இந்த நகரத்தைக் காண்பித்தே- சர்வதேச நிதியுதவிகளை இலங்கை அரசாங்கம் பெற்று வருகிறது. இதனால் முன்னர் புலிகள் இயக்கத்தின் நிர்வாகத் தலைநகராக விளங்கிய கிளிநொச்சியை நோக்கி இலங்கை அரசு தனது கவனத்தைத் திருப்பியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. கிளிநொச்சியை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் ஒரு உயர்மட்டக் குழுவை முதலில் நியமித்தது. இதன் பின்னர் அங்கு அமைச்சர்கள் கிரமமாக பயணங்களை மேற்கொள்கின்றனர். சர்வதேச இராஜதந்திரிகளை அரசாங்கம் அடிக்கடி அழைத்துச் சென்று காண்பிக்கிறது. அதுமட்டுமன்றி கொழும்பு, கண்டி ஆகிய நகரங்களுக்கு வெளியே முதல் முறையாக கிளிநொச்சியில் தான் அமைச்சரவைக் கூட்டம் கூட நடக்கப் போகிறது. அதைவிட வடக்கு மாகாணத்தின் நிர்வாக அலகுகளை கிளிநொச்சிக்கு மாற்றும் முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த மூன்று மாதங்களுக்குள்- திருகோணமலையில் இயங்கும் வடக்கு மாகாணசபையின் அனைத்து நிர்வாகப் பிரிவுகளையும் கிளிநொச்சிக்கு மாற்றுவதற்கு அரசாங்கம் முனைகிறது. வடக்கு-கிழக்கு மாகாணசபை இரண்டாகப் பிரிக்கப்பட்ட போதும் வடக்கு மாகாண நிர்வாகம் திருகோணமலையிலேயே இயங்கி வருகிறது. ஆனால் வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்ட போது அதன் நிர்வாகத் தலைநகராக மாங்குளமே அமையும் என்று கூறப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இப்போது அரசாங்கம் கிளிநொச்சிக்கு வடக்கு மாகாணத்தின் நிர்வாக அலகுகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது ஏன் என்பது தான் புதிராக உள்ளது.

கிளிநொச்சியை அபிவிருத்தி செய்வது என்ற போர்வையில் வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெறுவது சுலபமானது. அதுவும் வடக்கு மாகாணசபைக்கு விரைவில் தேர்தல் நடக்கப் போகிறது. அந்த மாகாணசபையைக் கிளிநொச்சியில் அமைத்து அழிவுகளின் அடையாளங்களையே இல்லாமல் செய்வதற்கு நிதியுதவி கோருவது சுலபமானது.

மாங்குளம் என்பது வடக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவான ஒரு நகரம்.

ஆனால் அங்கு மாகாணசபை நிர்வாக அலகுகளை அமைக்க முனையாமல் கிளிநொச்சிக்கு அதை மாற்றியிருப்பதில் இருந்து அரசாங்கம் வேறு எதற்கோ திட்டமிடுகிறது என்பது தெளிவாகிறது. அதுவும் மாகாணசபைக்கு விரைவில் தேர்தல் நடக்கப் போகின்ற நிலையில் இந்த மாற்றம் நிகழவிருப்பது முக்கியமானது.

கிளிநொச்சி என்பது இன்னமும் இயல்பு வாழ்க்கை முழுமையாகத் திரும்பாத ஒரு நகரம். போரின் அழிவுகளுக்குச் சாட்சியாக உள்ள ஒரு நகரம். இந்த நிர்வாக மாற்றத்தின் ஊடாக நிகழ்த்தப்படப் போகும் மாற்றங்கள் நிச்சயமாக கிளிநொச்சியின் எதிர்காலத்துக்கு நல்லதாக அமையுமா- தமிழரின் எதிர்காலத்துக்கு நல்லதாக அமையுமா என்தெல்லாம் சந்தேகமே ஆனால் இலங்கை அரசுக்கு மட்டும் இது மிகவும் வாய்ப்பானதொன்றாக அமையப் போகிறது. ஏனென்றால் கிளிநொச்சி தான் அரசுக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுகின்ற நகராக மாறியிருக்கிறது. இதற்கிடையே வடக்கு மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில்- தமிழ்க் கட்சிகள் மத்தியிலான அரசியல் நகர்வுகள் கவனத்துக்குரியதொன்றாக மாறியுள்ளன.

ஒருபுறத்;தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான காலஎல்லை இன்னும் சில நாட்களிலேயே முடியவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இன்னும் இழுபறிகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. மறுபுறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வன்மையாக எதிர்க்கும் கட்சிகள்- ஒன்றிணைந்து ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளன.

* கொழும்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இல்லத்தில் நடந்துள்ள இந்தக் கூட்டத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி சென்றது மிகப்பெரிய ஆச்சரியம். அவர் டக்ளஸ் தேவானந்தாவை நீண்டகாலமாகவே கடுமையாகத் தாக்கிப் பேசி வருபவர். அத்துடன் அண்மையில் அவர் எழுதிய பகிரங்க கடிதம் ஒன்றில்- தான் இனிமேல் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தார். இந்தக் கூட்டத்தில் அரசாங்கத்துக்கு ஏதோ ஒருவகையில்- ஏதோ ஒரு காலகட்டத்தில் துணை நின்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வன்மையாக எதிர்க்கின்ற, கட்சிகள் அனைத்தும் கலந்து கொண்டிருப்பது முக்கியமானது.

தமிழரின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல் என்ற போர்வையில் நடத்தப்பட்டிருக்கும் இந்தக் கூட்டத்தின் பின்னணிக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் அண்மைய இந்தியப் பயணத்துக்கும் இடையில் தொடர்புகள் இருக்கலாம் என்று தெரிகிறது. அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் அடிப்படையிலான ஒரு தீர்வுக்கு தமிழ்க்கட்;சிகளை இணங்க வைத்தல் என்பதே இந்தக் கூட்டத்தின் அடிப்படைத் திட்டம் போலுள்ளது. குறைந்தபட்சத் தீர்வாக 13வது திருத்தத்துக்கு இணங்கிப் போவது தொடர்பான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஒருவகையில் இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான நகர்வாகவும் அமைந்துள்ளது. இந்தத் தமிழ்க்கட்சிகள் அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு இணங்கிப் போனாலும் ஆச்சரியமில்லை. அப்படியானதொரு நிலை வரும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒதுக்கி விட்டு அந்தத் தீர்வை நடைமுறைப்படுத்தும் நிலைக்கு அரசாங்கம் செல்லலாம்.

இந்தக் கூட்டத்தில் தன்னாட்சி அதிகாரம் பற்றிப் பேசும் சிவாஜிலிங்கமும், சிறிகாந்தாவும் சென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் இப்போது வடக்கு மாகாணசபைத் தேர்தலைக் குறிவைத்து வௌ;வேறு திசைகளில் இருந்தெல்லாம் காய்கள் நகர்த்தப்படுகின்றன. ஆனால் எந்தக் காயை எவர் நகர்த்துகிறார் என்பது தான் தமிழ் மக்களின் கண்ணுக்குத் தெரியவில்லை.

நகர்த்தப்படும் காய்கள் மட்டுமே அவர்களுக்குத் தெரிகின்றன. இந்தக் காய்நகர்த்தல்கள் தமிழருக்கு விடிவைத் தேடித்தருமா என்பது சந்தேகம் தான். ஆனால் இலங்கை அரசுக்கும் சரி- அதற்கு ஆமாம் சாமி போடும் தரப்புகளுக்கும் சரி- இந்தக் காய் நகர்த்தல்கள் தமக்குச் சிறந்த எதிர்காலத்தைத் தேடித்தரும் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிகிறது. அதனால் தான் எலியும் பூனையுமாக- கீரியும் பாம்புமாக இருந்தவர்கள் எல்லாம் ஒன்றாகக் கூடியிருப்பதைக் காணமுடிகிறது.

கபிலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*