TamilSpy

பொழுது போக்கு இணையம்…

குமரன் பத்மநாதன் – இவரும் அவரா?: சங்கிலியன்

தமிழர்களின் வரலாறானது ஈழத்திலும் சரி தமிழகத்திலும் சரி மாறிமாறி பல துரோகத்தனங்களை சந்தித்துவந்திருக்கின்றது. இவ்வாறான ஒரு பின்புல நிலையில் அண்மையில் விடுதலைப் புலிகளின் முக்கியமானவர்களில் ஒருவராக காணப்பட்ட குமரன் பத்மநாதன் என்பவரின் செயற்பாடுகள், ஊடகங்களின் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் இனம்புரியாத உணர்வலைகளை இவ்விடயம் தோற்றுவித்துள்ளது மறுக்கமுடியாது.

வரலாற்றுக்கு எட்டிய காலத்திலிருந்து பார்த்தால் காக்கைவன்னியன் தொடக்கம் அண்மைக்காலத்தில் நிகழ்ந்த கருணாவின் காட்டிக்கொடுப்புகள் வரை ஈழத்தமிழர்கள் தம்வாழ்நாளில் சந்தித்த பாரிய துரோகங்கள் எண்ணிலடங்காதவை. தமிழர்களை பொறுத்தவரை இவனும் அவனோ? என்று எண்ணுகின்ற மிகவும் நெருக்கடியான சூழ்நிலைக்குள் தமிழர்கள் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் அண்மையில் நடக்கின்ற அல்லது நாங்கள் அறிந்துகொள்கின்ற நிகழ்வுகளின் பின்னனிகள் பற்றிய சில விடயங்களை முன்வைக்கவிரும்புகின்றோம்.

தற்போது யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் சிறிலங்கா அரச புலனாய்வாளர்களின் கச்சிதமான செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. யாழ்ப்பாணத்தில் ஒருவர், இப்போது அரச படையினரின் நடவடிக்கைகளை விமர்சிக்கின்ற கருத்துக்களையோ அல்லது விடுதலைப் புலிகள் பற்றிய தமது உண்மையான கருத்துக்களையோ வெளியிட்டால், அவர் நிச்சயமாக ஒரு அரச புலனாய்வாளரின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படுவார் என்ற நிலையே தற்போது உள்ளது.

அதேவேளை கைதுசெய்யப்பட்ட அல்லது சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கியமான பிரதிநிதிகள், சிலருக்கு தாராளமான மரியாதை வழங்கப்பட்டு மக்கள் கூடும் முக்கியமான இடங்கள் ஊடாக அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். குறித்த சிலர் அவ்வாறு உண்மையாகவே செயற்படுகின்றார்கள் என ஒரு கருத்துக்கு எடுத்துக்கொண்டாலும் பெரும்பாலானோர் மறைமுக நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே அவ்வாறு செயற்படுகின்றார்கள் என்ற யதார்த்தத்தையும் நாம் அறியகூடியதாகவுள்ளது.

இவ்வாறு முன்னாள் முக்கிய உறுப்பினர்களை மரியாதை கொடுத்து ஊர்வலமாக அழைத்துச் செல்வதன் மூலம் சிறிலங்கா அரசு என்ன சொல்லவருகின்றது என்பதைத்தான் நாம் பார்க்கவேண்டும்.

இவ்வாறு அரச படையினருடன் சல்லாபம் செய்யும் தமது போராளிகளை காண்கின்ற மக்களின் மனவுறுதியை உடைத்து, தமிழர்களின் போராட்ட உணர்வின் அடிப்படைகளை மறக்கடித்துவிடும் ஒரு நாசகாரத் திட்டத்தையே சிறிலங்கா அரசு முன்னெடுத்துவருவதையும் தமிழ் மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

தமிழர்களின் ஆகக்குறைந்த அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு பின்னடிக்கும் சிறிலங்கா அரச தரப்பு, தமிழர்களின் உச்சமட்ட அரசியல் அபிலாசைகளுக்காக போராடிய அமைப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு ஏன் இவ்வாறான ”சுதந்திரமான” நடமாட்டத்தை கொடுத்துள்ளது என்பதை தெளிவாக பிரித்தறிய வேண்டியநிலையில் உள்ளனர்.

இதேபோன்று விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியாகவிருந்த ராம் எவ்வாறான முனையில் நகர்த்தப்பபடுகின்றார். ஒரு இயக்கம் தனியே அவருக்கு கீழ் செயற்படுவது போலவும் தமிழர்களுக்கான விடுதலை இராணுவம் அவரின் கீழ் இப்போதும் செயற்படுகின்றது என்பது போன்றும் சிறிலங்கா அரசு காட்டிக்கொள்ள பெரும்பாடு பட்டுவருவதையும் நாங்கள் இன்னும் மறந்துவிடவில்லை.

இந்தவகையில்தான் வெளித்தோற்றத்திற்கு தெரிவதுபோன்ற வகையில், தற்போது காணப்படுகின்ற விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினராகவிருந்த குமரன் பத்மநாதனின் பக்கங்களை பார்க்கவேண்டிய நிலையில் உள்ளோம்.

உலகத்திலேயே மிகவும் கொடூரமான கபடத்தனமான ஒரு எதிரியாகவே சிறிலங்கா அரச இயந்திரம் இருக்கின்ற நிலையில், அவதானமாக சில முடிவுகளை முன்னெடுப்பது காலத்தின் தேவையென கருதுகின்றோம்.

அதேவேளை குமரன் பத்மநாதன் போன்றவர்கள் சிறிலங்கா அரசுடன் கைகோர்த்துத்தான் செயற்படுகின்றார்கள் என்ற நிலையே உண்மையானால், காலவோட்டத்தில் தமிழ் மக்களால் நிச்சயமாக அவர் நிராகரிக்கப்படுவார்.

தமிழர்களின் தேசிய உணர்வானது தனியே முப்பது ஆண்டுகால விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையிலோ அல்லது அதற்குமுந்திய முப்பதாண்டு கால சாத்வீக போராட்டங்களின் அடிப்படையிலோ உருவானது அல்ல. அதற்கு முந்திய காலம்தொட்டே தமிழர்களின் இறைமைத்துவ உணர்வுகள் தனித்துவமானதாகவே இருந்துவந்திருக்கின்றது.

அந்தவகையில் உரியகாலம் வரும்வரை நிதானமான எச்சரிக்கையுடனான அணுகுமுறைகளை முன்னெடுப்பதே தமிழர்களின் இன்றைய வலுநிலையில் சாத்தியமானதாகவும் பொருத்தமாகவும் இருக்கும்.

”நிறைவாகும் வரை மறைவாக இரு” இதுவே உணர்ச்சிக் கவிஞனின் வரிகளாகும். இது பலவற்றுக்கும் பொருந்தும். அதை நாம் எல்லோரும் புரிந்திருக்கின்றோமா?

சங்கிலியன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • தமிழன் says:

    இன்று – குமரன் பத்மநாதன்: இவரும் அவரா?

    நாளை – இதே சங்கிலியன்: இவரும் அவரே!

    இதுதான் நாங்கள் புலிகள் ஆரம்பித்தவுடனேயே கூறியது. பேரினவாதத்திற்கு துணைபோகும் பாசிசத்தின் வரலாறும் இதுவே யதார்த்தமும் இதுவே.

    July 2, 2010 at 19:53

Your email address will not be published. Required fields are marked *

*