TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நிபுணர் குழுக்களும் வரிச்சலுகை சிக்கல்களும்

இறுதிப் போர் நடந்து ஒரு வருடத்தின் பின்னர் நிபுணர் குழுவொன்றினை அமைத்துள்ளது ஐ.நா. இலங்கை அரசு உருவாக்கியிருக்கும் உண்மையை கண்டறியும் நல்லிணக்க நிபுணர் குழுவிற்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் அறிவித்துள்ள மூவரடங்கிய நிபுணர் குழுவிற்கும் இடையே செயற்பாட்டளவில் காணப்படும் வேறுபாடுகள் எவை என்பது குறித்த தெளிவு இன்னமும் இல்லை. அங்கு நேரில் செல்லாமல் உண்மைகளைக் கண்டறிவோம் என்கிற செய்தியும் வருகிறது. அதேவேளை காலனித்துவ மனப்பாங்குடன் ஐ.நா. அமைத்துள்ள மூவர் குழுவிற்கு விசா வழங்கமாட்டோமென அரச தரப்பிலிருந்து மறுப்பறிக்கைகளும் வெளி வருகின்றன.

இறைமையுள்ள தேசம் உருவாக்கியுள்ள நல்லிணக்கக் குழுவைவிட பான் கீ மூனின் மூன்றாம் தரப்பினர் எதனைச் சாதித்து விடப் போகிறார்களென்று அரசு கருதுகிறது.

போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் அரசின் “பட்டறிவிலிருந்து கற்ற நல்லிணக்கக் குழு’ அனைத்துலகத் தரம் வாய்ந்ததாக அமையாது என்பதே ரூவாண்டா படுகொலை தொடர்பாக சர்வதேச குற்றவியல் மன்றில் தலைமை நீதிபதியாகக் கடமை புரிந்த ஸ்டீபன் ரப்பின் பார்வையாக இருக்கிறது. ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அமைத்த நிபுணர் குழுவில் அமெரிக்காவைச் சேர்ந்த சட்டத்தரணி ஸ்டீவன் ரட்னரும் , இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மனும்தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஜாஸ்மின் சூகாவும் அங்கம் வகிக்கின்றனர்.

விமர்சனத்திற்குள்ளான ஒஸ்ரியப் பிரதிநிதி இதில் சேர்க்கப்படவில்லை. இதில் தென்னாபிரிக்காவின் உண்மையும் நல்லிணக்கமும் என்கிற ஆணைக்குழுவில் பிரதிநிதித்துவம் வகித்த ஜாஸ்மின் சூகா அவர்களை பான் கீ மூனின் ஆலோசகர் நிக்கோலாஸ் ஹெசம் அவர்கள் பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது. மனித உரிமை பேரவை நியமித்த இன்னொரு பிரதிநிதியான தரூஸ்மான் அவர்கள் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய ஆசியானின் மனித உரிமை தொழிற்பாட்டுப் பொறி முறைக் குழுவின் இணைத் தலைவராகவும் வட கொரியாவின் மனித உரிமை குறித்த விவகாரங்களைக் கண்காணிக்கும் ஜெனீவாவின் விஷேட பிரதிநிதியாகவும் செயலாற்றுகின்றார்.

இத்தகைய அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்ட ஐ.நா. வின் நிபுணர் குழுவினர் இலங்கைக்கான நேரடிப் பயணத்தை மேற்கொள்ளாமல் தமது பணியினை எவ்வாறு சிறப்பாகச் செய்ய முடியுமென்கிற கேள்வி எழுகிறது. இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் ஐ.நா. நிபுணர் குழுவின் வரவினை அல்லது தலையீட்டினை எதிர்க்கும் இலங்கை அரசின் ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியான கலாநிதி பாலித கோஹன்ன, இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவின் கோலான் குன்று, காசா மற்றும் மேற்குக் கரைகளில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐ.நா.வின் நிபுணர் குழுவிற்கு தலைமை வகிக்கிறார்.
ஊருக்கு உபதேசம், தனக்கு இல்லை என்பது போலுள்ளது இஸ்ரேலை விசாரணை செய்யும் குழுவில் அங்கம் வகிக்கும் இலங்கையின் நிலைப்பாடு.

அனைத்துலக இராஜதந்திர களங்களில் உரையாடப்படும் மேற்குலக ஏகாதிபத்திய எதிர்ப்புக் கூட்டுக்குள் தம்மையும் பொருத்திக் கொள்வதற்கு இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள்ளான பாலஸ்தீன பிரதேசத்தின் மனித உரிமை நிலைவரங்களை கண்காணிக்கும் குழுவில் இணைந்திருப்பது பொருத்தமானதென இலங்கை அரசு கணிப்பிடுகிறது. ஆனாலும் நிபுணர் குழுவில் தென்னாபிரிக்கப் பிரதிநிதி கலந்திருப்பதுதான் அணிசேரா நாடுகளின் முழுமையான ஆதரவினைப் பெற முடியாததொரு சூழ்நிலையை சிங்களத்திற்கு ஏற்படுத்தும்.
பான் கீ மூன் அமைத்த பாலஸ்தீனத்திற்கான மனித உரிமையைக் கண்காணிக்கும் நிபுணர் குழுவில் இலங்கையின் ஐ.நா.விற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹன்னவின் பங்களிப்பு என்னவென்பது குறித்து பார்க்கலாம்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் மனித உரிமை நிலைவரங்கள் குறித்து பரிசீலிப்பதற்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 1968ஆம் ஆண்டு டிசெம்பரில் விஷேட ஆணைக்குழுவொன்று அமை க்கப்பட்டது. இதன் செயற்பாடானது அங்கு நேரில் சென்று அறிக்கை தயாரித்து ஐ.நா. வுக்கு அறிவிப்பதை முக்கிய பணியாகக் கொண்டது.
பாலித கோஹன்னவை தலைவராகக் கொண்ட தற்போதைய ஆணைக்குழுவில் மலேசியாவைச் சேர்ந்த ஹமிடன் அலியும் செனகலைச் சேர்ந்த மொமர் குயேவும் அங்கம் வகிக்கின்றனர். கடந்த மாதம் காசாவை நோக்கிச் சென்ற நிவாரணக் கப்பலை இடை மறித்துத் தாக்கிய இஸ்ரேலின் அத்துமீறல் குறித்து விசாரிப்பதில் இந்த நிபுணர் குழு ஈடுபட்டுள்ளது.

மனிதாபிமான உதவியைத் தடுத்து நிறுத்திய இஸ்ரேலின் நடவடிக்கையை அரச பயங்கரவாதத்தின் வெளிப்பாடென உலக நாடுகள் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை,வணங்காமண் என்ற நிவாரணக் கப்பலை இந்தியாவும், இலங்கையும் பந்தாடிய சோக நிகழ்வினை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமாக இருக்கும். ஆனாலும் இஸ்ரேலைப் பொறுத்தவரை நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்கு தானே ஒரு குழுவை அமைத்து அதில் சர்வதேச பார்வையாளர்களாக ஐரிஸ்காரரையும், கனேடிய தேசத்தவரையும் புத்திசாலித்தனமாக இணைத்து அக் குழுவிற்கொரு சர்வதேச அந்தஸ்தை கொடுத்து விட்டது.

இலங்கையின் நிபுணர் குழுவில் சர்வதேசப் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாததால் அதன் நம்பகத் தன்மையும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. இஸ்ரேல் விவகாரத்தில் அந் நாடு உடன்
பாடு காணும் ஐ.நா. ஆணைக்குழுவோடு மட்டுமே தானும் இணைந்து செயலாற்ற முடியுமென்று அமெரிக்கா தெரிவித்த நிலைப்பாட்டினை இங்கு கவனிக்க வேண்டும்.
அவ்வாறு இலங்கை அரசினைக் காபந்து பண்ணக்கூடிய வல்லரசு நாடுகள், இன்னமும் தமது ஆதரவுக் கருத்தினை வெளிப்படையாகத் தெரிவிக்க முன்வரவில்லை. ஆனாலும் இந் நிபுணர் குழுவை இயங்க விடாமல் தடுப்பதற்கு அணி சேரா நாடுகளையும் சீனா ரஷ்யா போன்ற வல்லரசுகளையும் இலங்கை அரசு நாடிச் செல்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சமாந்தா பவரின் இலங்கை விஜயமோ அல்லது ஜீ.எல். பீரிசின் அமெரிக்கப் பயணமோ பான் கீ மூனின் நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்கவில்லை. அரசின் நல்லிணக்க குழுவை வரவேற்ற இதே அமெரிக்க தேசந்தான் போர்க் குற்றம் குறித்து விசாரித்து தமக்கு ஆலோசனை வழங்குமாறு பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவையும் வரவேற்றுள்ளது. நவீன கால ஆதிக்க நியாயவாத அரசியலில், இரட்டைப் போக்கு இராஜதந்திர அணுகுமுறைகள் மிகச் சாதாரணமாகவே பிரயோகிக்கப்படுகின்றன. ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை காரணமின்றி 6 மாதங்களுக்கு தற்காலிகமாக நீடிப்பதும் பின்னர் மனித உரிமை விவகாரங்களை முன்னிலைப்படுத்தி 15 நிபந்தனைகளை விதித்து அச்சுறுத்துவதும் அடிபணிவு அரசியலிற்குள் இலங்கையை எவ்வாறு வீழ்த்தலாமென்கிற சூத்திரத்தின் வெளிப்பாடுகள்தான்.

ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்களையும் முதலீட்டாளர்களையும் காப்பாற்றுவதற்கே தற்காலிக நீடிப்பு என்பது ஒரு சடங்காக மேற்கொள்ளப்படுவதாக பொருளியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனாலும் இத் தடவை மேற்குலகால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் சற்று இறுக்கமாக இருக்குமென்பதை ஐ.நா.வின் நிபுணர் குழு உருவாக்கத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். இந்த 150 மில்லியன் வரிச் சலுகை வருமானத்திற்காக ஐரோப்பிய யூனியனிடம் நாம் மண்டியிடத் தேவையில்லை என்கிற வகையில் அலரி மாளிகையில் நடைபெற்ற அவசர உயர் மட்டச் சந்திப்பில் ஜனாதிபதி கூறியதாக தெரிய வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 15 நிபந்தனைகளில் கைச்சாத்திடாமல் தவிர்க்க வேண்டுமாயின் மாற்றுத் திட்டமொன்று இலங்கையின் வசம் இருக்க வேண்டும். சீனாவின் முதலீட்டு ஆதிக்கம், இச் சிக்கல்களிலிருந்து தம்மை விடுவிக்க உதவுமென்று பீரிஸ் குழுவினர்
கணிப்பிடலாம். ஊழியர்களின் சம்பள அதிகரிப்பும், தொழிலாளர்களுக்கிடையே நிலவும் முரண்பாட்டுச் சூழலும் குறைந்த கூலி வழங்கும் நாடுகளான ஸ்ரீலங்கா, வியட்னாம், கம்போடியாவை நோக்கி சீனத் தொழிற்சாலைகளை நகர்த்தும் வாய்ப்புக் களை உருவாகின்றன என்பது உண்மை.

ஆனால் சீன நிறுவன ங்கள் தமது முதலீட்டோடு தொழிலாளர்களையும் சேர்த்து இறக்குவதே உள்நாட்டில் பல அரசியல் சிக்கல்களை ஏற்படுத்துவதாக இந் நாடுகள் விசனமடைகின்
றன. இருப்பினும் ஆளும் வர்க்கத்தின் மீது குடும்ப ஆதிக்கம் நேரடியாகச் செல்வா க்கு செலுத்துவதாகக் கருதப்படும் இலங்கையில் இச் சிக்கல்கள் இலகுவில் சமாளிக்கப்படக் கூடியவையே. பொருளாதார புள்ளிவிபரங்களின்படி 2008ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மொத்த ஆடை ஏற்றுமதி 3.3 பில்லியன் டொலர்களாகும். அதில் 48 சதவீதத்தை ஐரோப்பிய ஒன்றியமும் 45 சதவீதத்தை அமெரிக்காவும் வகிக்கின்றன.

மஹிந்த ராஜபக்ஷ கூறுவது போன்று வெறுமனே 150 மில்லியன் டொலர் வர்த்தகமல்ல. இந்த வரிச் சலுகை மூலம் கிடைக்கப் பெறும் ஏற்றுமதி வியாபாரம். ஏறத்தாழ 270 தொழிற்சாலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு மில்லியன் இலங்கையரின் வாழ்வாதாரம் இறுக்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தை இத் தொழில்துறை ஈட்டித் தருவதையும் இலகுவில் நிராகரிக்க முடியாது. ஆனாலும் மேற்குலகின் இரு முனைத் தாக்குல்கள் தீவிரமாகும் இவ்வேளையில் இந்தியாவின் மௌனம் அல்லது அந்நியமாகி நிற்பது போன்றதொரு தோற்றப்பாட்டின் பின் புலத்தில் சீனாவுடனான இலங்கையின் நெருக்கம் உறுதிப்படுத்தப்படுவதை காண முடிகிறது.

அழுத்தம் அதிகரிக்கப்படும் போது வேறு வழியின்றி தன்னை நாடி இலங்கை அரசு வருமென்கிற நம்பிக்கையிலும் இந்தியாவின் மர்ம மௌனம் நீடிக்கலாம். வடக்கு இராணுவ மயமாவதும் அதில் சீனாவின் நேரடிப் பங்கு பலமாக இருப்பதும் சில எச்சரிக்கைச் செய்திகளை இந்தியாவிற்கு வழங்குவதாக ஊகிக்கப்படுகிறது. சீனாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையே நீண்ட நாட்களாக நடைபெற்ற நாணய மதிப்பு குறித்த பனிப் போர் அண்மையில் ஒரு சுமுக முடிவினை எட்டியிருந்தது. யுவான் நாணயத்தின் மதிப்பினை குறைவான நிலையில் செயற்கையாக வைத்திருக்காமல் அதன் இயல்பான முதிர்ச்சிக்கு வழி
விட வேண்டுமென அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஜீ 20 மாநாட்டிற்கு முன்பாக சீனா நிறைவேற்றியுள்ளது.

ஆகவே ஆசியாவில் இராணுவ சமநிலை தவிர்ந்த ஏனைய பொருளாதார விடயங்களில் முதன்மைச் சிக்கலாகக் கருதப்பட்ட நாணய மறு மதிப்பீடு குறித்த விவகாரம் தற்காலிகமாக தீர்க்கப்பட்டதன் விளைவாக சீன அமெரிக்க பொருண்மிய உறவில் புதிய திருப்பமொன்று ஏற்பட்டுள்ளதை இந்தியா நிச்சயம் அவதானிக்கும். ஆனாலும் சீனத் தொழிலாளர்களின் ஊதிய அதிகரிப்பு வீட்டு விலையேற்றம், வங்கிகள் வழங்கும் கடனுதவி அதிகரிப்பு என்பன 2008 ஓகஸ்டில் அமெரிக்கா எதிர்கொண்ட வீழ்ச்சியை நினைவுபடுத்துகிறது. சீனாவின் மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தையான ஐரோப்பாவில் பொருளாதாரச் சீரழிவு மோசமடைகிறது.

சில ஐரோப்பிய நாடுகளின் திறைசேரியே திவாலாகும் நிலை ஏற்படலாமென நம்பப்படுகிறது.

ஆகவே உற்பத்தியான பொருட்களை விற்பனை செய்யும் சந்தைகள் வெற்றிடமாகும் போது உற்பத்தியை அதிகரிக்க முடியாது. ஆனால் நிறுத்தவும் முடியாது. தொழிற்சாலைகளை மூடினால் தொழிலாளர்களுக்கிடையே அமைதியின்மை நிலவி போராட்டம் வெடிக்கும்.சீனா, அமெரிக்கா, இந்தியா போன்ற பொருண்மிய வல்லரசு நாடுகளே இச் சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமல் திணறும் போது இலங்கையின் கள யதார்த்தம் மிகப் பரிதாபமானது.
ஆகவே பிராந்திய நலனிற்காக மோதும் வல்லரசுகளுக்கிடையே நிலவும் முரண்பாடுகளை தமக்குச் சாதகமாகக் கையாண்டவாறு எவ்வளவு காலத்திற்கு தனது இராஜதந்திர தப்பித்தல் வழிமுறைகளை இலங்கை அரசு நீடிக்குமென்பதை பார்ப்போம்.

இதயச்சந்திரன்
நன்றி:வீரகேசரி

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*