TamilSpy

பொழுது போக்கு இணையம்…

“வரலாற்றை விளங்கிக் கொள்வது கடினம்”

“வரலாற்றை விளங்கிக் கொள்வது கடினம்.ஆனாலும் அது சுலபம். அது ஒரு விநோதமான நிகழ்ச்சிகளின் கூட்டு. எந்தக் கணிதங்களுக்குள்ளும் எந்த விருப்பங்களின்படியும் அது நடப்பதில்லை. ஆனால் அதற்கொரு கணிதம் சமன்பாடும் உண்டு” என்று சொல்வது மிகச் சரிதான்.

“வரலாற்றின் சேதி ஒன்றும் புதியதல்ல.ஆனால், அது புதிய நிகழ்ச்சிகளுக்கூடாக தன்னுடைய பழைய சேதிகளைச் சொல்கிறது” என்பார்கள்.

கிளிநொச்சியில், 18.06.2010 அன்று நடந்த யப்பானியச் சிறப்புத் தூதுவர் யசூஸி அகாஷியின் வரவையொட்டிய நிகழ்ச்சிகள் இதைத்தான் சொல்கின்றன. அகாஷி கிளிநொச்சிக்கு வருகிறார். அதே உலங்குவானூர்தி, விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்துக்குமிடை யில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலத்தில் அகாஷி வந்து இறங்கிய அதே மைதானத்தில் வந்திறங்குகிறது.

அவரை வரவேற்பதற்காக படையணிகளும் அரசியற் பிரமுகர்களும் அரசாங்கப் பிரதிநிதிகளும் அதேமாதிரிக் காத்திருக்கின்றனர். இந்த அரசியற் பிரமுகர்கள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜஷபக்ஷ, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் ஆகியோர். வந்திறங்கிய அகாஷி, வரவேற்பாளர்களால் கைகொடுத்து வரவேற்கப்பட்ட பிறகு, விடுதலைப்புலிகளின் அதே சமாதானச் செயலகம் இருந்த இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

அது இப்போது 51 ஆவது படையணியின் தலைமையின் கீழ் விருந்தினர் விடுதியாக இருக்கிறது. அகாஷி எல்லாவற்றையும் பார்க்கிறார். அவருடைய முகத்தில் பலவிதமான கோலங்கள்.

அந்தக் கணத்தில் அகாஷியின் மனத்திரையில் என்னமாதியான எண்ணங்கள் ஓடியிருக்கும். (இதைப்பற்றி அகாஷி நிச்சயம் தன்னுடைய டயறிக்குறிப்பில் எழுதுவார். நெருங்கிய நண்பர்களுக்கு என்றோ ஒரு நாள் ஏதோ சொல்லக்கூடும்)

கிளிநொச்சிப் பயணத்தைத் திட்டமிட்ட போதே அவருக்கு பழைய கால நினைவுகள் நிச்சயம் வந்திருக்கும். முன்னர், அவர் சொன்னதையெல்லாம் நினைத்திருப்பார். அப்போது, பரவிப்பாஞ்சானில் உள்ள சமாதானச் செயலகத்தில் வைத்து, ஊடகவியலாளரைச் சந்தித்தபோது அவர் சொன்னார், “இலங்கைக்கு இப்போது தேவை, இந்த அமைதியை நிரந்தரமாக்குவதைப் பற்றிச் சிந்திப்பதே. அது கடினமான பணிதான்.”

ஆனால், கடந்த கால நினைவுகளை மறப்பதன் மூலம் மன்னிப்பதன்மூலம் அதைக் கடப்பதன் மூலமாகவும் அமைதிப் பிராந்தியத்தை எட்டலாம். கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் (யப்பானியர்கள்).

உலகத்திலேயே யப்பானில்தான் அணுக் குண்டு வீசப்பட்டது. அதன் பாதிப்புகள் இன்னும் நீடிக்கின்றன. ஆனால், நாங்கள் எதிர்கால யப்பானுக்காக கடந்த கால நிகழ்ச்சிகளை மறக்கவே கடினமான விசயங்களை மறக்கவே வேண்டியிருந்தது. என்றாலும் பாதிக்கப்பட்ட மக்கள் அதற்குத் தயாராக இருக்கவில்லை. “எங்களுக்குத் தேவை கடந்த காலமல்ல, எதிர்கால யப்பானே” என்று மக்களுக்கு உணர்த்தினோம். பின்னடைவுகளில் இருந்து முன்னுக்குப் பயணிக்க வேண்டும்.

அதற்காக மக்களைப் பயிற்றுவிக்க வேண்டியிருந்தது. விருப்பங்களுக்காக அல்ல தேவைகளுக்காகவே அமெரிக்காவுடனும் கைகுலுக்கிக் கொண்டோம். என்றபடியால்தான், விரைவில் யப்பான் முன்னணிக்கு வந்தது. இன்றைய யப்பான் கடந்த காலத்தின் அனுபவங்களில் இருந்தும் கடந்த காலத்தைக் கடந்தும் வந்ததே. ஆகவே, இலங்கையில் அமைதிக்குத் திரும்புவதற்கு மக்களைத் தயார்ப்படுத்த வேண்டும். அதற்காக அரசியற் தலைமைகள் புதிதாகச் சிந்திக்க வேணும்”.

ஆனால், அகாஷியின் அந்த வார்த்தைகளை யாரும் அப்பொழுது கவனத்தில் கொள்ளவில்லை. (ஆனால், அகாஷி இவ்வாறு தெரிவித்ததை ஏற்கனவே 2007 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இந்தக் கட்டுரையாளர் உட்படச் சிலர் சுட்டிக்காட்டியிருந்தனர்) வளர்க்கப்பட்ட பகைமையும் கூர்மையான முரண்பாடுகளும் எல்லாவற்றையும் எதிர்நிலையிலேயே கொண்டு சென்று விட்டன.

அந்தச் சமாதானச் செயலகத்தில் இப்பொழுது மதியவிருந்து. (மன்னிக்கவும் அது இப்பொழுது சமாதானச் செயலகம் என்ற பெயரில் இல்லை). “அங்கே பஷில் ராஜபக்ஷ, சந்திரகுமார் முருகேசு” இன்னும் யப்பானியப்பிரதிநிதிகள், அரசபிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் எல்லோரும் இருக்கும் பொழுது அகாஷி சொன்னாராம், “இதே இடத்தில்தான் விடுதலைப் புலிகளின் தலைவர், பிரபாகரனைச் சந்தித்தேன். இங்கே இருந்து புலிகளின் தலைவர்களுடன் பல விசயங்களைப் பற்றியும் பேசியிருக்கிறேன்” என்று.

அகாஷியைப் பற்றிய விமர்சனங்கள், அவர் சொன்னதைப் பற்றிய அபிப்பிராயங்கள், அவருடைய இந்த வருகையைப பற்றிய கருத்துகள் எல்லாம் பலவிதமாக இருக்கலாம்.

ஆனால், நாம் கவனிக்க வேண்டிய உண்மைகளும் விசயங்களும் இதில் இருக்கின்றன. அரசியற் சிந்தனைகளும் விவேகங்களும் எந்த அளவுக்கு அரசியலை முன்னெடுக்கும்போது முக்கியமானவை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

அகாஷி சொன்னவற்றில் மட்டுமல்ல, அதற்குப் பின்னர் நடந்து கொண்டிருக்கும் அத்தனை நிகழ்ச்சிகளிலும் அகாஸியின் இப்போதைய கிளிநொச்சி வருகையிலும் இந்த வருகையில் நடந்திருக்கும் அதே மாதிரிகளை ஒத்த நிகழ்வுகளிலுமாக. இந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது அல்லது அறியும்போது சிலருக்கு கவலைகள் வரலாம். சிலருக்கு கோபம் ஏற்படலாம். சிலர் இதிலிருந்து பல உண்மைகளையும் பாடங்களையும் கற்றுக் கொள்ளலாம். சிலர் இவற்றை ஏளனங்கூடச் செய்யலாம். அதெல்லாம் அவரவர் கொள்ளளவையும் புரிதலையும் பொறுத்தது.

ஆனால், இந்தக் காட்சி மாற்றங்கள்தான் வரலாறு. இந்த நிகழ்ச்சிகளும் நாளை மாறலாம். மாறும். ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில், இன்றுள்ள நெருக்கடிகளை, தீர்க்கப்படாத பிரச்சினைகளை, எப்படித்தீர்த்துக் கொள்வது என்பதைப் பொறுத்தே நாளைய நிகழ்ச்சிகள் அமையும். நாளைய வரலாறும் அமையலாம்.
எதையும் மக்களுக்காகச் சிந்தித்தால், நுண்ணுணர்வுடன் பார்த்தால், அறிவுபூர்வமாக அணுகினால் பல பிரச்சினைகள் எளிமையாகவே தீர்க்கப்பட்டுவிடும். முன்னர் அதிக பொறுப்பு விடுதலைப் புலிகளுக்கு இருந்த தென்றால், இப்போது அந்தப் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது.

வரலாறு, அதே இடத்தில் அந்தப் பொறுப்பை அரசாங்கத்திடம் கொடுத்திருக்கிறது.

அகாஷியின் வருகையும் அவர் சொன்னவையும் இதைத்தான் கோடிட்டுக் காட்டுகின்றனவோ. அதாவது, மேலும் காலம் செல்லவில்லை. வரலாற்றைப் புரிந்து கொள்ளுங்கள் என்ற சேதியை இவை சொல்கின்றனவோ. இதேவேளை, கிளிநொச்சியில் இந்தநிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இன்னும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. பலருடைய கவனத்தையும் கோரும் சம்பவம். கவனிக்க வேண்டிய நிகழ்ச்சி அது.

யப்பானியத் தூதர் அகாஷி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருமுகேசு சந்திரகுமார், படைத்தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு உதவிவழங்கும் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் கலந்து கொண்டு விவசாயிகளுக்கான விவசாய உபகரணங்களை வழங்கினார்.

அப்போது பஷில் ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த மாற்றத்தை அபிவிருத்தி நடவடிக்கைகளை நோக்கி கூட்டமைப்பு கவனத்தைக் கொண்டிருப்பதையும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து வேலைசெய்ய கூட்டமைப்பின் தலைவர் அரசாங்கத்துடன் பேசியதையும் குறிப்பிட்டுப் பேசினார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்வில் சிவஞானம் சிறிதரனைச் சந்தித்த பஷில் ராஜபக்ஷ அவரை அரவணைத்துத் தனது மகிழ்ச்சியையும் வரவேற்பையும் தெரிவித்திருக்கிறார்.

கூட்டமைப்புப் பிரதிநிதியின் இந்த பங்கேற்பு இனிவருங்காலத்தில் கூட்டமைப்பானது எல்லாத்தரப்புடனும் ஒருங்கிணைந்து பணியாற்றக் கூடிய ஒரு நிலையைக் காட்டுகிறதா என்று எண்ண வைக்கிறது. அதாவது அரசாங்கத்தை எந்த நிலையில் வைத்துக் கையாள்வது, மக்களுக்கு எந்தமாதிரியான பணிகளை மேற்கொள்வது, நடைறைப் பிரச்சினைகளுக்கு எவ்வகையான தீர்வுகளை முன்வைப்பது என்று பல எண்ணங்களை ஏற் படுத்துகிறது.

இதுவரையில் அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பான பொது நிகழ்வில் கூட்டமைப்பு இவ்வாறு பகிரங்கமாகப் பங்கேற்றதில்லை. இவ்வாறு பங்கேற்பதன் மூலம் அரசாங்கத்தைக் கடுமையாகக் கூட்டமைப்பினால் இனி விமர்சிக்க முடியாது என்று சிலர் சொல்கின்றனர். அதாவது கூட்டமைப்பின் எதிர் நிலைப்பாட்டு அரசியல், தமிழ்த்தேசியவாத அரசியலில் எங்கோ ஓர் புள்ளியில் சமரசத்துக்கான புள்ளி ஏற்பட்டே தீரும் என்கின்றனர் அவர்கள். ஆனால், மக்களின் நிலைமையை கவனத்திற் கொள்ளாமல் இருக்க முடியாது என்ற யதார்த்தத்தின் வெளிப்பாடே இந்த மாற்றம் என்கின்றனர் வேறு சிலர்.

போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நிலையை மாற்றவேண்டிய பொறுப்பும் நிர்ப்பந்தமும் கூட்டமைப்புக்கு ஒரு நெருக்கடியே என்கின்றனர் இவர்கள்.

அண்மையில் கூட்டமைப்பின் மீது தொடர்ச்சியாக பல கோணங்களில் இருந்தும் பல்வேறு தரப்பினரும் முன்வைத்து வரும் விமர்சனங்கள் கூட்டமைப்புக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுத்திருக்கின்றன. ஆகவே அந்த அழுத்தங்கள் கூட்டமைப்பை இவ்வாறு படியிறங்க வைத்திருக்கலாமோ என்றும் சிலர் எண்ணுகின்றனர். எப்படியோ இது கூட்டமைப்பின் ஒரு தொடக்கமா அல்லது மாற்றமா என்பதை தொடரப்போகும் நிகழ்ச்சிகளும் எதிர்காலமும்தான் சொல்லப்போகின்றன.

ஆனால், ஒரு விசயம், யப்பானியத் தூதர் கிளிநொச்சிக்கு வரும்போதெல்லாம் புதிய சேதிகள் சொல்லப்படுகின்றன. அல்லது புதிய சேதிகளுக்கான நிகழ்வுகள் நடக்கின்றன.

அகாஷி விடைபெறும்போது மீண்டும் அதே இடங்களை திரும்பிப் பார்த்தாராம்.

அவருக்கு விடைகொடுத்துக் கைகள் அசைகின்றன. அவருடைய கண்களில் அவர் எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தினாரா என்று தெரியவில்லை.

பொதுவாகவே ராஜதந்திரிகள் எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதில்லை என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், அவருடைய இதயம் பலதையும் நினைத்தேயிருக்கும். வரலாறு என்பது எத்தனை விநோதமானது?

கிருஷ்ணர்த்தி அரவிந்தன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • VIJAY says:

    WHOEVER READ THIS MUST CRY IF THE PERSON HAVING KIND HEART.

    June 29, 2010 at 20:06

Your email address will not be published. Required fields are marked *

*