TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இனஅழிவின் சாட்சியங்களை உலகின் முன் கொண்டுசெல்வோம்

நம்மீது மேற்கொள்ளப்படும் ஒடுக்கு முறைகளை, திணிக்கப்படும் மனித அவலங்களை, எவ்வாறு சர்வதேச மக்களுக்கு தெரியப்படுத்த முனைகிறோம் என்பதுதான் இப்போது எம்முன்னே இருக்கும் கேள்வி. ஒடுக்கப்படும் மக்கள் குறித்து சிந்திக்கும் காலங்களில் நாம் இது குறித்து உரையாடுகின்றோமா? நாம் பயணிக்கும் பாதையில் ஜனநாயக முகமூடி தரித்த ஆதிக்க வாசிகளைச் சந்தித்து, அவர்களிடம் எமது வேண்டுதலை, நியாயப்பாடுகளை முன்வைத்து, திருப்திப்பட்டுக் கொள்கிறோம். நீதி, அறம், நியாயம், தர்மம் போன்ற கருத்து நிலைகளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற கற்பிதத்தில் தர்மம் வெல்லும் என்று நம்பி வாழத் தலைப்படுகின்றோம்.

நவீன உலகில் அரசியல் சூழல் அதுவல்ல. எப்போதும் அது அவ்வாறு இருந்ததில்லை. ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான தேடலும், அணிசேர்தலும், அழித்தலுமே இந்த நவீன அரசியலின் வேர்களாகும். ஹிட்லரின் உலக ஆதிபத்திய ஆசைக்கு எதிராக நிகழ்ந்த பெரும் போர், இன்னு மொரு தனித்துவமான ஏகாதிபத்தியமொன்றினை உலகிற்கு வழங்கிச் சென்றுள்ளது. அதுபோல ஓகஸ்ட் 2008 இல் நிகழ்ந்த உலகப் பொருளாதார வீழ்ச்சி, ஆசியாவில் புதியதொரு மாற்றங்களாகவும், ஏகாதிபத்தியம் ஒன்றின் எழுச்சிக்கும் வித்திட்டுள்ளது.

எமது 62 வருடகால தேசிய விடுதலைப் போராட்டத்தில், இந்த மாற்றங்களும் உள்வாங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆயுதப் போராட்ட காலத்தின் நலன்கள் எம்மை பெரிதும் பாதித்தன. உலக ஏகாதிபத்தியங்களின் பிராந்திய நலன்களை, முக்கியமாக கடலாதிக்க நலன்களைத் தமக்குச் சாதகமாக, சிங்களம் கையாண்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.
ஆயுதப் போர் முடிவடைந்தும், ஏகாதிபத்தியங்களுக்கிடையே நிகழும் மோதலை, எவ்வாறு எதிர்கொள்வது என்பதில், சிங்கள தேசம் தடுமாற்றமடைவதை நோக்க வேண்டும்.
சீனா – இந்தியா மேலாதிக்க மோதல் களத்திலிருந்து, மேற்குலகம் தனிமைப்பட்டு அல்லது விலகி இருந்தால், சிங்களத்தின் நிலை சிக்கலடையும்.

அதேவேளை போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல், பொருளாதாரக் கெடுபிடி போன்றவற்றை மேற்குலகம் உயர்த்திப் பிடித்தால், இந்திய நலனிற்கே அது சாதகமாக அமைந்துவிடும். ஏனெனில் மேற்குலகின் சீற்றத்தைத் தணிக்கும் ஆளுமை, சீனாவைவிட இந்தியாவிற்கே அதிகம் உண்டென்பதை ஆசிய அரசியல் சூழல் உணர்த்துகிறது. ஆகவே மேற்குலகின் அழுத்தங்களைச் சமாளிக்கும் திறன், இந்தியாவிற்கு மட்டுமே உண்டென்பதைப் புரியும் சிங்களதேசம், இந்தியாவுடனான உறவினை மென்போக்காக கையாளும்.அதேவேளை, இந்தியாவின் மேலாதிக்க மனோபாவ காய்நகர்த்தல்களுக்குள் தம்மை முழுமையாக ஆட்படுத்தாமல், சீனாவுடனான தனது ஆழமான உறவினை சிங்களம் பிறிதொரு தளத்தில் பலப்படுத்தும்.

அதனை தற்போது நிகழும் சீன – இந்திய கடனுதவி போட்டிகள் வெளிப்படுத்துகின்றன. 2006 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு சீனா வழங்கிய கடனுதவி 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு 306 மில்லியன்கள், எண்ணெய்க் குதம் நிறுவுவதற்கு 65 மில்லியன்கள், அனல் மின்நிலைய இரண்டாம் கட்டப்பணிக்கு 981 மில்லியன்கள், கட்டுநாயக்கா விமானநிலைய விரைவு நெடுஞ்சாலைக்கு 242 மில்லியன்கள், மாத்தறை அனைத்துலக விமானநிலைய கட்டுமானத்திற்கு 200 மில்லியன்கள் என்று நீண்டு செல்கிறது சீனாவின் முதலீட்டு ஆக்கிரமிப்பு.

சீனாவின் வட்டி வீதம் அதிகமாகவிருந்தாலும் அதையிட்டுக் கவலை கொள்ளவில்லை சிங்களதேசம். இதைத்தவிர திருமலையில் இயற்கைத் துறைமுக அபிவிருத்திக்கு சீனாவின் உதவி கிடைக்கவிருக்கும் செய்தியன்றும் உலாவருகின்றது. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விவகாரம் என்ன வென்றால் இலங்கையின் எரிசக்தி தேவையின் பெரும்பகுதியை இந்தியா பூர்த்தி செய்வதாகும். அம்பாந்தோட்டையில் சீனா நிர்மாணிக்கும் எண்ணை சேமிப்புக் குதங்கள், இந்தியாவின் எரிசக்தி ஆதிக்கத்தை காலப் போக்கில் குறைத்து விடும் வாய்ப்புண்டு. எரிசக்தி வழங்கலே இலங்கையில் இந்தியாவிற்கு இருக்கும் பெரும் பிடிமானமாகும். அதனை முறியடித்து, மாற்று வழங்கல் பாதையினை சீனா நிர்மாணித்து விட்டால், இந்திய ஆதரவு இலங்கைக்கு தேவைப்படாது.

அதுவரை, பயங்கரவாத ஒழிப்பு, கைதிகள் பரிமாற்றம், மடு – தலைமன்னார் தொடருந்து பாதை நிர்மாணிப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட சிறு ஒப்பந்தங்களை இந்தியாவுடன் சிங்களம் மேற்கொள்ளும். இந்தியாவின் பிராந்திய நலனை நிரந்தரமாக்கும், சீபா (CEPA) போன்ற இராட்சத ஒப்பந்தங்களை தற்போதைய சூழ்நிலையில் தவிர்ப்பதற்கே சிங்களம் முனையும். அதாவது சீனாவின் உதவியுடன் தன்னைப் பலப்படுத்தும் வரை, இந்தியாவுடனான உறவினைச் சிங்களம் நீடிக்குமென்பதை இதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம். ஆனாலும் சீனா என்கிற நிரந்தர நண்பனின் ஆளுகைக்குள் சிங்களம் சங்கமிக்கும் வரை, தாயக, புலம்பெயர் ஈழத்தமிழினம், தமது விடுதலை நோக்கிய செயற்பாடுகளை, வேறொரு தளத்தில் விரித்துச் செல்ல வேண்டும்.

ஈழத் தமிழினத்தின் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கிற பிறப்புரிமை சார்ந்த கோட்பாடுகளை இந்த அனைத்துலகம் இதுவரை அங்கீகரிக்கவில்லை.
பயங்கரவாதமென்கிற பானைக்குள், மிக இலாவகமாக அதனை அடைத்து விட்டார்கள். இப்பானையை உடைக்கும் ஒரே கூராயுதம், இனஅழிப்பு (GENOCIDE) என்கிற விவகாரந்தான்.
இலங்கையில் நிகழும் தமிழின அழிப்பை தகுந்த ஆதாரங்களுடன் நாம் உலகின் முன் நிறுவினால், அது சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை நோக்கிய பாதையை எமக்குத் திறந்துவிடும்.இணயத்தள மோதல்கள், தனிநபர் வசை பாடல்கள், கனவுலகில் சஞ்சரிக்கும் புலம் பெயர் மக்கள் என்கிற அறிவுரைகள் யாவும், ஆரோக்கியமான சிந்தனைச் சூழலை எம்மிடையே உருவாக்காது என்பதனை இனியாவது நாம்உணர்ந்து செயல்பட வேண்டும்.

இதயச்சந்திரன்

நன்றி்:ஈழமுரசு.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*