TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இந்தியாவில் நீதி இல்லையா? டக்ளஸால் கொல்லப்பட்ட கதறல்!

இந்தியாவில் நீதி இல்லையா? டக்ளஸால் கொல்லப்பட்ட குடும்பத்தின் கதறல்!.

டக்ளஸ் தேவா னந்தாவை கைது செய்து தமிழகத் திற்கு கொண்டுவர வேண்டும் என்கிற குரல்கள் ஆக்ரோஷமாக எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.)யின் தலைவரான டக்ளஸ், தற்போது இலங்கையில் ராஜபக்சே அமைச்சரவையில் “பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் துறை’ மந்திரியாக இருக்கிறார்.

கடந்த வாரம் டெல்லி வந்த ராஜபக்சேவுக்கு இந்திய அரசின் பாரம்பரிய மரியாதையும் விருந்தும் கொடுத்து கௌரவித்தனர் ஜனாதிபதியும் பிரதமரும். ராஜபக்சேவுக்கு கொடுக்கப்பட்ட அதே வரவேற்பும் மரியாதையும் அவருடன் வந்திருந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் கொலை, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் வழக்குகளில் தமிழக காவல்துறையின் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள டக் ளஸுக்கு மத்திய அரசின் மரியா தையா? அவரை கைது செய்து தமிழக காவல்துறையிடம் ஒப்ப டைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கருத்து உரு வாக… விவகாரம் பூதாகர மானது.

அதேசமயம், “”டக்ளஸ் தேவானந்தா மீது மூன்று வழக்கு கள் நிலுவை யில் உள் ளன. அதில் தேடப்படும் குற்ற வாளியாக இருக்கிறார். இந்தத் தகவலை டெல்லி போலீ ஸாருக்குத் தெரியப்படுத்தியிருக் கிறோம்” என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவிக்க, இந்த விவகாரம் மேலும் பரபரப் பானது.

இந்நிலையில், தங்களின் இந்திய பயணத்தை மிக ஜாலியாக முடித்துக் கொண்டு ஹாயாக இலங்கைக்குச் சென்று விட்டனர் ராஜபக்சேவும் டக்ளஸும்.

தமிழகத்தின் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் மீது மிக வலிமையாக இருப்பது… இளைஞர் திருநா வுக்கரசுவை சுட்டுக்கொன்ற வழக்கு. 1986-ல் சூளைமேட்டில் முத்து இருளாண்டி காலனியில் நடந்த இந்த கொடூரம் அப்போது தமிழகம் முழு வதும் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது.

இந்தக் கொலை வழக்கு உட்பட நிலுவையில் உள்ள வழக்குகளின்படி டக்ளஸை கைது செய்ய தமிழகத்திற்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்கிற கருத்துகள் எதிரொலிக்கும் நிலையில், “அப்போது நடந்தது என்ன?’ என்பதை அறிய முத்து இருளாண்டி காலனிக்குச் சென்றோம்.

திருநாவுக்கரசு பற்றி விசா ரித்தபோது… “”மறக்கக்கூடிய சம்பவமா அது? மிக கொடூரமாக நடந்த துப்பாக்கிச் சூடு. சினிமா வுல கூட பார்த்திருக்கமாட்டீங்க… அப்படி இருந்தது அன்னைக்கு” என்ற காலனி மக்கள், “”திருநா வுக்கரசுவின் அப்பா, அம்மால் லாம் இறந்து போயிட்டாங்க. அவரோட அண்ணன் நடராஜன் குடும்பம் இங்கதான் இருக்கு, அவரைப் போய்ப் பாருங்க” என்றனர்.

தனது மனைவி ரத்னா வுடன் ஒண்டுக் குடும்பத்தில் வசித்துக்கொண்டிருந்தார் நட ராஜன். அவரை சந்தித்து திருநா வுக்கரசு பற்றி பேசத் துவங்கிய தும் அப்படியே சோகத்தில் மூழ்கிவிட்டார் நடராஜன்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “இலங்கையிலும் சரி, இங்கேயும் சரி… தமிழன் உயிருன்னா… இவங்களுக்கு கேவலமா போயிடுச்சு. இந்த 24 வருஷத்துல ஒருமுறை கூட போலீஸ்காரங்க இந்த விஷயத்தைப் பத்தி எங்ககிட்ட விசாரிக்கவே இல்லைங்க” என்று ஆதங்கப்பட்டார். அப்போது அவரது முகத்தில், கடந்தகால சம்பவத்தை நினைத்து ஆத்திரமும் கோபமும் கொப்பளித்தது.

மீண்டும் ஒருமுறை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசிய நடராஜன், “”சின்ன வயசுலயே எங்கப்பா செத்துட்டாரு. எங்கம்மாதான் எங்களை வளர்த்தாங்க. அவங்களும் என் தம்பி திருநாவுக்கரசு கொல்லப்பட்ட மறுவருஷம் இறந்துட்டாங்க. திருநாவுக்கரசுக்கு நேர் மூத்தவன் நான். எங்களுக்கு 1 அக்கா. 4 தங்கைகள். மொத்தம் 7 பேர் நாங்க.

இந்த காலனி முழுக்க அரிஜன மக்கள்தான். எங்க காலனியிலேயே என் தம்பி திருநாவுக்கரசுதான் அப்போ அதிகம் படிச்சவன். எம்.ஏ. பட்டதாரி. அதனால அவனுக்கு ஏக மரியாதை. அவனும் மக்களுக்கு ஏதேனும் பிரச்சினைன்னா முன்னால வந்து நிப்பான். பொது சேவையைத்தான் தனது உயிராக நினைச்சான்.

இந்தப் பகுதி மக்களுக்காக “உடற்பயிற்சிக் கழகம்’னு ஆரம்பிச்சு சேவை செஞ்சான். இந்த ஏரியா முனையில இப்போ கார்ப்பரேசன் ஸ்கூல் ஒண்ணு இருக்கு. 1986-ல் அந்த இடம் காலியா கெடந்துச்சு. அந்த இடத்துல ஒரு “ஜிம்’ ரெடி பண்ணினான். எங்க காலனி மக்கள் மட்டுமல்லாது இதனையொட்டியுள்ள திருவள்ளுவர்புரம் மக்களும் ஜிம்முக்கு வந்து உடற்பயிற்சி செய்வாங்க.

இப்போ இருக்கிற மாதிரி அன்னைக்கு வீடுகளெல்லாம் இல்லே. ஒரே ஒரு மாடிதான் வீட்டுக்கு. இந்த ஏரியாவுல ஒரு வீட்லதான் 10 இளைஞர்கள் தங்கியிருந்தாங்க. 25, 26 வயசு அவங்களுக்கு இருக்கும்.

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான பத்மநாபா இயக்கத்தை (அப்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப்) சேர்ந்த இளைஞர்கள்னு அரசல்புரசலா எல்லாத்துக்கும் தெரியும். இந்த குரூப்புக்கு டக்ளஸ்தான் லீடர் மாதிரி. ஆனா எல்லாருமே பேரைச் சொல்லி கூப்பிடுவாங்க. காலையிலயும் சாயந்தரமும் திருநாவுக்கரசு உருவாக்கிய “ஜிம்’முலதான் உடற்பயிற்சி செய்வாங்க. ராத்திரியானா தண்ணி அடிச்சிட்டு ஒரே கும்மாளமாக இருக்கும். இலங்கையில பிரச்சினைங்கிறதால இங்க வந்து தங்கியிருக்காங்கன்னு நாங்கள்லாம் நினைச்சோம். ஆனா அந்த படுபாவிங்க என் தம்பியை சுட்டுக் கொல்லுவாங்கன்னு தெரியாமப் போச்சு.

1986 நவம்பர் 1-ந் தேதி. அன்னைக்கு தீபாவளி. ஊரே பட்டாசு வெடிச்சு கொண்டாடிக்கிட்டு இருந்துச்சு. மதியம் ரெண்டரை, மூணு மணி இருக்கும். தீபாவளிங்கிறதுனால அந்த 10 பேரும் இங்குள்ள சாராயக் கடையில நல்லா குடிச்சிட்டு ஒரு பொட்டிக் கடையில நின்னு முறுக்கும் பழமும் வாங்கித் துன்னுட்டு காசு கொடுக்காம போகப் பார்த்திருக்காங்க.

காசு கொடுங்கன்னு கடைக்காரர் கேட்க, அவங்களுக்குள்ளே வாய்த்தகராறு. அந்த கடைக்காரரை இவங்க அடிக்க, அப்போ அங்கு நின்னுக்கிட்டு இருந்த எங்க காலனி ஆள் ஒருத்தர், கடைக்காரருக்கு சப்போர்ட்பண்ணி கடுமையா பேசியிருக்காரு. உடனே அவனுங்க எங்க ஆளப்போட்டு கண்ணு மூக்கு தெரியாம தாக்க… அவரோட அலறல் சத்தம் கேட்டு காலனி மக்கள், நாங்கள் எல்லாம் ஓடினோம்.

ஊர் மக்கள் ஓடி வர்றதப் பார்த்து அவனுங்க வீட்டுக்குள்ளே ஓடிப்போய் ஆளா ளுக்கு துப்பாக்கியைத் தூக்கிட்டு வந்துட்டானுங்க. டக்ளஸ்ங்கிற ஆளோட கையில ஏ.கே.47 துப்பாக்கி.

“எவனாவது நெருங்கி வந்தீங்க… சுட்டுப் பொசுக்கிடுவேன்’னு காட்டுக் கத்து கத்திக் கிட்டே வானத்தை நோக்கி டக்ளஸும் இன்னும் ரெண்டு மூணு பேரும் படபடன்னு சுட்டாங்க. இதனால, மக்கள் எல்லாம் அப்படியே நின்னுக்கிட்டே கற்களைத் தூக்கி அவங்க மேல வீசினோம்.

அதுக்குள்ளே துப்பாக்கியால சுடுறானுங்க… சுடுறானுங்கன்னு மக்கள் கூச்சல் போட… அப்போ வீட்ல சாப்பிட்டுக்கிட்டிருந்த என் தம்பியும் மச்சான் குருமூர்த்தியும் வெளியே ஓடி வந்தாங்க. டக்ளஸ் கும்பல் துப்பாக்கியை வெச்சுக்கிட்டு வீதியில அங்கும் இங்கும் நடந்துக்கிட்டே ஆக் ரோஷமாக குரல் கொடுத்ததை கேட்டுக்கிட்டே “சுட்டுடாதீங்க சார்! சுடாதீங்க சார்!’ன்னு அவங்களை நோக்கி என் தம்பி போனான்.

“போகாத தம்பி… போகாத தம்பி’ன்னு காலனி மக்கள் சொல்ல… அதைப் பொருட் படுத்தாம “அவங்களை சமாதானப்படுத்தறேன்’னு திருநாவுக்கரசு முன்னேற… இதனால ஆத்திர மடைஞ்ச டக்ளஸ், என் தம்பியைப் பார்த்து படபடவென சுட… நாலஞ்சு குண்டுகள் திருநாவுக்கரசு நெஞ்சை துளைத்தது. அதுல ஒரு குண்டு அவன் நெஞ்சைத் துளைச்சு வெளியேறி பக்கத்துல இருந்த சுவத்தை தாக்கியது. அந்தச் சுவத்துல அரையடிக்குப் பள்ளம். அப்படின்னா… அந்தத் துப்பாக்கியின் வேகம் எவ்வளவு இருக்கும்னு பார்த்துக்கங்க.

துப்பாக்கி குண்டுகள் பட்டு அப்படியே கீழே விழுந்து உயிருக்குப் போராடினான் என் தம்பி. டக்ளஸின் இந்த வெறிச்செயலைக் கண்டு கொதிச்சுப்போன எங்க மக்கள் டேய்… டேய்… டேய்…ன்னு கத்திக்கிட்டே அவனுங்களை நோக்கி ஓடினோம். இதைப்பார்த்து மீண்டும் சுட்டது அந்தக் கும்பல். இதில் என் மைத்துனர் குருமூர்த்திக்கும் ரவி என்கிற ஒரு இளைஞனுக்கும் குண்டடிபட்டது.

அவனுங்க துப்பாக்கியைக் காட்டி மிரட்ட… காலனி மக்கள் எல்லாம் கற்களை வீசியும் டயர்களை கொளுத்தியும் அவனுங்க மீது வீசினோம். ஏரியாவே கலவரமானது. பயந்த சுபாவம் உள்ள மக்கள் எல்லாம் வீட்டுக்குள்ளே போய் கதவை அடைச்சிக்கிட்டாங்க. டயரை கொளுத்தி கொளுத்தி அவங்க மீது மக்கள் வீச… உடனே அவனுங்க வீட்டுக்குள்ளே போய் ஹெல்மெட்டையும் ராணுவ உடையையும் மாட்டிக்கிட்டு மொட்டை மாடிக்கு ஏறிட்டானுங்க. ஒவ்வொரு வீட்டு மொட்டை மாடி, மொட்டை மாடியா தாவிக்கிட்டே நடைபோட்டானுங்க.

கையில இருந்த துப்பாக்கியைத் தூக்கித் தூக்கி வானத்துல சுட்டு மிரட்டினாங்க. அவனுங்க வீட்டுக்குள்ளே ஓடிய சமயத்துல சட்டென ஓடிப்போய் என் தம்பியை தூக்கிக்கிட்டு வந்து ஆட்டோவில் ஏத்திக்கிட்டு பறந்தோம். ஆனா… போற வழியிலேயே என் தம்பி உயிர் போயிடுச்சு” என்று கண் கலங்கினார் நடந்த சம்பவத்தை விவரித்தபடி.

“மொட்டை மாடியில் நின்னுக்கிட்டு துப்பாக்கியால் மக்களை மிரட்டிக்கொண்டிருக்க, ஏரியாவே பதட்டமாயிடுச்சு. இந்த சம்பவத்தை அறிந்து ஒரு வேனில் போலீஸ்காரங்க வர.. வேனில் இருந்து அவங்களை இறங்க விடாமல் வேனை நோக்கி சரமாரி யாக சுட்டாங்க. வேன் அப்படியே யு டேர்ன் எடுத்துக்கிட்டுப் பறந்தது. கொஞ்ச நேரத்துல அப்போதைய சட்டம் -ஒழுங்கு ஐ.ஜி. ஸ்ரீபால், போலீஸ் காரங்களோடு வந்து இறங்கினார்.

ஏரியாவை முழுக்க தங்கள் கஸ்டடியில் எடுத்துக் கொண்டது போலீஸ். சரணடையுமாறு எவ்வளவோ கெஞ்சியும் அந்த கொலைகாரக் கும்பல் ஒப்புக்கொள்ளவில்லை. போலீஸ் கமிஷனர் தேவாரம் இங்கு வரவேண்டும் என்று சொல்ல… அவரும் வந்தார். அதன்பிறகு அவரிடம் சரணடைந்தார்கள் 10 பேரும்” என்ற நடராஜன், “டக்ளஸ் உட்பட 10 பேர் மீதும் கொலை வழக்கு போட்டது போலீஸ். ஆனா ஒருமுறை கூட எங்ககிட்டே விசாரிச்சு, சாட்சிகளை சேர்த்து அவனுங்களுக்கு தண்டனை வாங்கித்தர போலீஸ் முயற்சி எடுக்கவே இல்லை. என் தம்பியை சுட்டுக்கொன்னதுமில்லாம, மக்களைக் கொல்ல துணிஞ்சிருக்கானுங்க.

ஆனா, அவனுங்களுக்கு தண்டனையே இல்லே. தமிழன் உயிரென்ன இவனுங்களுக்கு மயிரா? இலங்கையிலும் சுட்டுக் கொல்றானுங்க, இங்கேயும் சுட்டுக் கொல்றானுங்க. இந்த சம்பவம் நடந்து 24 வருஷமாச்சு. தேடப்படுற குற்றவாளின்னு சொல்லுது போலீஸ். ஆனா அந்த டக்ளஸ் ராஜமரியாதையோட இந்தியாவுக்கு வர்றான், பிரதமரோடு விருந்து சாப்பிடறான். அவனை கைதுபண்ண எந்த நடவடிக்கையும் எடுக்கலை. என் தம்பியோட சாவுக்கு இந்தியாவுல நீதி கிடைக்காதா?” என்றார் கதறியபடியே!

நடராஜனின் மனைவியும் திருநாவுக் கரசின் அண்ணியுமான ரத்னா, “”என் கொழுந்தனார் உயிரோடு இருந்திருந்தா எங்க காலனியும் எங்க குடும்பமும் எவ்வளவோ வளர்ச்சி அடைஞ்சிருக்கும். அன்னைக்கு நடந்த சம்பவத்தை இப்போ நினைச்சாலும் குலை நடுங்குது. மக்களை மிரட்டி, ஜனங்க மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு கொலை காரன் வெளிப்படையா உயிரோடு இருக்கான்னு தெரிஞ்சும் அரசாங்கம் கம்முனு இருக்குன்னா… செத்துப்போனது ஒரு ஏழை -அதுவும் தாழ்த்தப் பட்டவன்ங்கிறதால் தானே! தாழ்த்தப் பட்டவங்க சுட்டுக் கொல் லப்பட்டா இந்தியாவுல நீதி கிடைக்காதா? இலங்கை யில தமிழர்களைச் சுட்டுக் கொன்ன ராஜபக்சேவுக்கும், தமிழகத்தில் தமிழனை சுட்டுக்கொன்ன டக்ளஸுக்கும் விருந்து கொடுக்கிற இந்திய அரசாங்கமே… எங்களுக்கு நீதி கிடைக்காதா? அந்த குற்றவாளியை தூக்குல போட்டாதான் என் கொழுந்தன் ஆன்மா சாந்தியடையும்” என்று குமுறினார்.

டக்ளஸ் கும்பலால் குண்டடிபட்டவரும் திருநாவுக்கரசுவின் தங்கை கணவருமான குருமூர்த்தி, “”என் கை விரலில் குண்டு பட்டதால், ஓட்டை மட்டும் விழுந்துச்சு. என் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லே. ஆனா, என் மச்சினன் மாதிரியே ரவிங்கிற ஒருத்தருக்கும் குண்டடிபட்டுச்சு. அவனையும் தூக்கிக் கிட்டு ஆஸ்பிட்டலுக்குப் போனாங்க. கே.எம்.சி.யில ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு பிறகு ஸ்டான்லியில் அட்மிட் பண்ணினாங்க அந்த பையனை. ஒருநாள் உயிரோடு இருந்தான். மறுநாள் அந்தப் பையனும் செத்துட்டான். ஹாஸ்பிட்டலில் உயிர் போனதால இந்த மர ணத்தை மறைச்சிட் டாங்க” என்று கூறியவர், “இந்த கேஸ் ஹைகோர்ட்ல வந்தப்போ முதல் ஹியரிங்கிற்கு என்னையும் அழைச்சிக் கிட்டுப் போனாங்க. அப்போ டக்ளஸ், ரமேஷ், ராஜன், முரளின்னு 10 பேரை நிறுத்தினாங்க.

அவ்வளவுதான்… ரெண்டாவது ஹியரிங்கிற்கு போனப்போ அதுல 2 பேரை காணோம். அவங்க செத்துப் போயிட்டதா சொன்னாங்க. அப்புறம் 3-வது ஹியரிங்ல 3 பேர் செத்துப் போயிட்டதா சொன்னாங்க. 4-வது ஹியரிங் வந்தப்போ “”எல்லாருமே செத்துப் போயிட்டாங்க. கேஸை மூடிட்டோம். இனிமே நீங்க வரத் தேவையில்லை”ன்னு அரசு வக்கீல் சொன்னாரு. அதுக்குப் பிறகு வழக்கே வரலை. ஆனா இப்போ திடீ ரென்று டக்ளஸ், இந்தியாவுக்கு வரவும்தான் எங்களுக்கு அந்த கொலைகாரன் உயிரோடு இருக்கிறதே தெரியுது.

இவ்வளவு காலமும் உயிரோடுதான் இருந்திருக்கிறான், இலங்கையில மந்திரியாவும் இருக்கான். தேடப்படும் குற்றவாளின்னு இப்போ அறிவிக்கிற போலீஸ்… இவ்வளவு காலமும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தது? என் மச்சான் சாவுக்கு நீதிகேட்க தமிழக மக்கள்தான் உதவணும்?” என்கிறார்.

இளையசெல்வன்

படங்கள் : அசோக்

நன்றி: நக்கீரன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles, Featured

Your email address will not be published. Required fields are marked *

*