TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வடக்கு மக்களை அச்சுறுத்திவரும் சிங்களக்குடியேற்றங்கள்

போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு, கிழக்கு மக்களிடையே சிங்களக் குடியேற்றங்கள் பற்றிய அச்சம் அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் இந்த அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்கள்.

அதற்கு அரச தரப்பில் இருந்து எந்த உறுதிமொழியும் கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. கடந்த ஒரு வருடத்தில் கிழக்கிலும் வடக்கிலும் சிங்களக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு தீவிரமடைந்துள்ளன.

இதன் விளைவாக தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகம் அபகரிக்கப்படுகின்ற, சொந்த மண்ணிலேயே சிறுபான்மையினராக்கப்படுகின்ற அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

தட்டிக் கேட்பதற்கு யாருமில்லாத நிலையில் மிகவும் துணிச்சலோடு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இதில் அரசாங்கம் சம்பந்தப்படவில்லை என்றோ அல்லது அரச தூண்டுதலின்றி நடக்கிறதென்றோ யாரும் கூறிவிட முடியாது.

கடந்தவாரம் அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதம் நடந்தது.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

மீள்குடியமர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அடுத்த வருடம் நடக்கவுள்ள சனத்தொகைக் கணக்கெடுப்பின் மூலம் தீர்வு காணடியும் என்று அவர் கூறியிருந்தார்.

அதாவது, 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவது பற்றியதாகவே அவரது கருத்து அமைந்திருந்தது.

ஆனால், அதன் அடிப்படை அதுவாக இருக்க முடியாது.

ஒரு வருடத்துக்கு முன்னர் தமது சொந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை, முகாம்களில் உள்ள மக்களை மீளக்குடியமர்த்துவது பற்றிய கவலை அவடம் இருப்பதாகத் தெரியவில்லை.

1983ஆம் ஆண்டுக்குப் பின்னர், வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களின் மீதே அவரது கரிசனை இருக்கிறது.

அதையும் விட, முன்பிருந்ததை விடவும் அதிகமான சிங்களவர்களை குடியேற்றிவிட வேண்டும் என்ற கரிசனையே அவரிடம் அதிகமாக உள்ளது.

1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் 21,000 சிங்களவர்களும் 60,000 முஸ்லிம்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப் போவதாகவும் கூறியிருக்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

இது முற்றிலும் தவறானதொரு புள்ளிவிபரம். யாழ்ப்பாணத்தில் இந்தளவு சிங்களவர்கள் இருக்கவில்லை.

அதுபோல முஸ்லிம்களின் எண்ணிக்கையும் இந்தளவு கிடையாது.

கடைசியாக 1981ம் ஆண்டில் நடத்தப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பில், யாழ்.மாவட்டத்தல் இருந்த சிங்களவர்களின் எண்ணிக்கை வெறும் 4,615 மட்டுமே.

அதேவேளை, முஸ்லிம்களின் எண்ணிக்கை 13,757பேர்தான்.

அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான புள்ளிவிபரம் இப்படியிருக்கும் போது, யாழ்ப்பாணத்தில் இருந்து 1983 இற்குப் பின்னர் 21,000 சிங்களவர்களும், 60,000 ஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டதாக வரலாற்றைப் புரட்டிப் போட்டிருக்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

இப்படி அவர் தவறான புள்ளிவிபரத்தை நாடாளுமன்றத்தில் கொடுத்துப் பேசியிருக்கிறார் என்றால் இதற்குப் பின்னாளில் பெயதொரு ஆபத்துக் காத்திருக்கிறது என்பதுதான் அர்த்தம்.

முக்கியமான ஒரு அமைச்சர் பொய்யான புள்ளிவிபரத்தை நாடாளுமன்றத்தில் தெரிவித்த போது, அதற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவாகிய 9 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்தத் தவறைச் சுட்டிக்காட்டவில்லை.

மௌனமாக இருந்து தலையாட்டியிருக்கிறார்கள்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க இப்படியொரு தவறான புள்ளிவிபரத்தை நாடாளுமன்றத்தில் வெளியிட்டது மீள்குடியேற்றம் என்ற போர்வையில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வதற்கே.

சிங்களக் குடியேற்றங்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் அரசாங்கம் சுலபமாகச் செய்து வருகிறது.

யாழ்ப்பாணத்தில் இது இன்னம் ஆரம்பிக்கப்படாத போதும் அதற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது. அதேவேளை, எல்லையோர மாவட்டங்களின் நிலை மோசமடைந்து வருகிறது.
மன்னார், மடு வீதியில் முதலில் 50 குடும்பங்கள் என்று தொடங்கிய சிங்களக் குடியேற்றம் பின்னர் 200 குடும்பங்கள் என்றாகியது. இப்போது 250 குடும்பங்களை மீளக்குடியேற்றப் போவதாகச் சொல்கிறது அரசாங்கம்.

மணலாற்றில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட்ட பின்னர் அனுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட மகாவலி “எல்’ வலயத்தை இப்போது நாயாறு வரைக்கும் விவுபடுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அப்படியென்றால் நாயாறு வரைக்கும் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள அரசு திட்டம் தீட்டுகிறது என்றே அர்த்தம்.

இன்னொரு பக்கத்தில் வவுனியா வடக்கில் ஆற்றங்கரையோரங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கும் அரசு திட்டமிடுகிறது.

மகாவலி “எச்’ வலயத்தில் குடியேற்றப்பட்டவர்களின் மூன்றாவது தலைமுறையினருக்கு வழங்குவதற்கு காணிகள் இல்லாதிருப்பதால் அவர்களை வவுனியா வடக்கில் காணிகளை வழங்கி குடியேற்றவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை நியமிக்கவும் அரசு திட்டமிடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவையெல்லாம் சிங்களக் குடியேற்றங்கள் வடக்கில் வேகமாக இடம்பெறப் போவதற்கான அறிகுறிகள்.

இந்த அத்துமீறிய குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துகின்ற பலமோ, சக்தியோ இப்போது தமிழர் தரப்பிடம் இல்லை.

அரசியல் ரீதியாக செல்வாக்குச் செலுத்தக் கூடிய தமிழ்க் கட்சிகள் கூட இந்த விடயத்தில் போதிய அக்கறை காண்பிக்கவில்லை.

அரசாங்கம் சட்ட ரீதியாக, மீள்குடியமர்வு என்ற பெயல் குடியேற்றங்களை நிறுவ முனைகிறது.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் 21,000 சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறியது வெறுமனே வார்த்தைகள் அல்ல.

அவர் அதை விடவும் அதிகமானோரை அங்கு குடியேற்றுவது பற்றிச் சிந்திக்கிறார் செயற்படுத்த முனைகிறார் என்பதே அதன் அர்த்தம்.

இது வடக்கிலும் கிழக்கிலும் தமிழன் தனியாதிக்கத்தை முறியடிப்பதற்காக அரசாங்கம் வகுக்கின்ற திட்டம்.

கிழக்கைப் போன்று வடக்கிலும் தமிழர்களை சிறுபான்மையினராக்குவதே அரசின் நோக்கம்.

இப்போதைக்கு இது சாதாரணமாகத் தெரியலாம்.

ஆனால், இன்னும் பத்தோ இருபதோ வருடங்களில் தான் இந்த ஆபத்து பூதாகர வடிவெடுக்கும்.

அப்போது தலையில் அடித்துக் கொள்வதால் எந்தப் பயனும் ஏற்படாது.

வடக்கிலும் தமிழன் அரசியல் பலம் பறிபோகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது தான் இன்றைய முக்கிய தேவை.

கபில்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*