TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ராஜபக்ச எதிர்ப்புப் போராட்டத்தில் வெளிப்பட்ட தமிழின எழுச்சி

ஈழத் தமிழினத்தை இனப் படுகொலை செய்து முடித்து, அம்மக்களின் வாழ்க்கையை சின்னா பின்னப்படுத்திய இனவெறி சிறிலங்க அரசின் அதிபர் மகிந்த ராஜபக்ச டெல்லி வருவதை எதிர்த்து தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி ஏந்தி தமிழர்கள் காட்டிய எதிர்ப்பு, இலங்கையில் தங்கள் இனத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை தமிழர்கள் மறக்கவும் மாட்டார்கள், அதற்கு நீதி பெறாமல் விடவும் மாட்டார்கள் என்பதையே பறை சாற்றுவதாக இருந்தது.

சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு நகரத்திலும் பல்வேறு அமைப்புகள் இணைந்தோ அல்லது தனித் தனியாகவோ நடத்தியுள்ள கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களும், அதில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கில் கைது செய்யப்பட்ட தமிழின உணர்வாளர்களின் எதிர்ப்புணர்வும் அரசியலிற்குள்ளேயும், அதற்கு அப்பாலும் தமிழர்களின் நெஞ்கங்களில் ஏற்பட்ட காயம், கோபத் தீயாக இன்னமும் கொழுந்துவிட்டு எரிவதையே காட்டுகிறது.

பொதுவாக தமிழர்களின் போராட்டங்களை காவல் துறையை விட குறைத்துக் காட்டுவதில் முன்னணியில் நிற்கும் செய்தி நிறுவனங்கள் கூட, “தமிழ்நாட்டின் முன்னணி அரசியல் கட்சிகளான தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளைத் தவிர்த்து மற்ற அரசியல் கட்சிகளும் இயங்கங்களும் தமிழர் பிரச்சனையில் முன்னெப்போதும் இந்த அளவிற்கு தங்கள் பலத்தைக் காட்டியதில்லை” என்று ராஜபக்ச வருகைக்கு காட்டப்பட்ட கருப்புக் கொடி எதிர்ப்பை சுட்டிக்காட்டி எழுதும் அளவிற்கு தமிழின எழுச்சி ராஜபக்ச எதிர்ப்புப் போராட்டத்தில் வெளிப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு தரவேண்டும், அதற்கான நீண்டகாலத் திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும், இன்னமும் முகாம்களில் தங்கியுள்ளோரை உடனடியாக அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு அனுப்பி மீள் குடியமர்த்தம் செய்ய வேண்டும் என்றெல்லாம் தமிழக முதலமைச்சர் தன் பங்கிற்கு ‘அரசியல் கடிதம்’ ஒன்றை மத்திய அரசிற்கு எழுதி, ஏதோ தமிழர்களின் மீள் குடியமர்த்தலையும், அவர்களின் மறுவாழ்வையும் உறுதி செய்வதற்காகத்தான் மகிந்த ராஜபக்ச டெல்லி வந்துள்ளதைப்போல் எழுதியுள்ளதை இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட எந்தத் தமிழனும் பொருட்படுத்தவில்லை. மாறாக, ராஜபக்ச திரும்பிப் போ என்றும், தமிழினப் படுகொலை செய்தவனை வரவேற்கும் டெல்லியைக் கண்டிக்கிறோம் என்றும், தமிழினத்திற்கு இழைத்த குற்றத்திற்காக தண்டிக்காமல் ராஜபக்சவை விட மாட்டோம் என்றுதான் முழங்கங்கள் எழுந்தது.

இலங்கைத் தமிழர் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணும் பேச்சுவார்த்தைப் பாதையை தன்னிச்சையாக முறித்துவிட்டு, தெற்காசிய வல்லாதிக்கங்களின் இரகசிய ஆதரவுடன் ஈழத் தமிழினத்தின் மீது பாரிய போரைத் தொடர்ந்து தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க, அதனை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, இரண்டரை ஆண்டுக் காலத்தில் ஒன்றரை இலட்சம் மக்களைக் கொன்று ஒரு பெரும் இனப் படுகொலை செய்த இனவெறி அரசின் தலைவரான மகிந்த ராஜபக்சவிடம் தமிழர்களுக்கு மறுவாழ்வை உறுதிசெய்யுமாறு அரசியல் அறிவு மிக சிறிதேனும் உள்ள எவரும் கேட்க மாட்டார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இப்படித்தான் இன்றைய தமிழக முதல்வராக உள்ள கருணாநிதி பேசினார். ஆனால் இன்று தான் பதவியில் இருப்பதால், அதற்கு தீங்கு நேராமல் பார்த்துக் கொள்ள, டெல்லி எது செய்தாலும் அதற்கு இணங்கிச் செயல்படும் ஒரு ராஜதந்திர அரசியல் செய்து வருவதால், தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு ராஜபக்சவிடம் வலியுறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார்.

இதே கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யும் வலியுறுத்தியுள்ளது. ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும், அங்கு இரு தேசிய இனங்களும் இணக்கத்துடன் வாழ கூட்டாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளது. இந்த கோரிக்கையெல்லாம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு, அதற்காகவெல்லாம் தமிழர் தலைவர் ஈழத் தந்தை செல்வா போராடி களைத்து, பிறகு தனி ஈழம் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி, அதனடிப்படையில் தேர்தலில் நின்று வெற்றிபெற்று அந்நாட்டு நாடாளுமன்றத்திலேயே தனி ஈழமே தமிழர்களுக்கு கண்ணியமான சுதந்திரமான வாழ்வை உறுதி செய்யும் என்று சூளுரைத்த வரலாற்றையெல்லாம் அறிந்தும் அறியாததுபோல் அந்தக் கட்சியின் தமிழ் மாநில செயலர் விடுத்துள்ள அறிக்கையில் கூட்டாட்சியை ஏற்படுத்தி தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண ராஜபகச்விடம் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்!

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அதிபர் தேர்தலின்போதும், அதன் பிறகு நடந்த சிறிலங்க நாடாளுமன்றத் தேர்தலின்போதும், கூட்டாட்சி என்பது சிங்கள அரசியலைப் பொறுத்தவரை ஒரு கெட்ட வார்த்தை என்று ராஜபக்ச கூறியது எல்லா நாளிதழ்களிலும் வெளிவந்தது. தமிழர்களின் பூர்வீக பிரதேசமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் பேச்சிற்கே இடமில்லை என்றும் ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்திருந்தார், ஒருமுறை அல்ல, பல முறை. ஆயினும் இங்குள்ள விவரம் தெரிந்த அரசியல் கட்சிகளின் மாநில தலைமையும், அகில இந்திய தலைமையும் கூட்டாட்சி என்றும், அரசியல் தீர்வு என்றும் எந்த அடிப்படையில் வலியுறுத்துகின்றன என்பதுதான் புரியவில்லை! அங்கு நடந்த இனப் படுகொலைக்கு பதிலென்ன? அதையும் அப்படியே மறந்துவிட வேண்டியதுதானா? இனப் பிரச்சனைக்கு இராணுவ ரீதியில் தீர்வு காணும் சாத்தியம் பிறந்துள்ளது என்று கூறிவிட்டுத்தான் ராஜபக்ச, தமிழினத்திற்கு எதிரான அந்தப் படுகொலைப் போரை முழு அளவிற்கு முடுக்கி விட்டார். அதன் பொருள் என்ன? அப்படிக் கூறி ஈழத் தமிழினத்தை சின்னா பின்னப்படுத்திய ஒரு படைத் தலைவனிடம் தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு அளிக்குமாறு கூறுவது ஏமாற்றுதல் அல்லவா?

அங்கு நடந்த இனப் படுகொலைப் போருக்கு ராடார் உத‌வி முதல் உளவுத் தகவல் வரை கொடுத்து, போரில் ஈடுபட்ட சிங்கள இனவெறிப் படையினருக்கு பயிற்சியும் கொடுத்து போரை ‘வெற்றிகரமாக நடத்த’ அன்றாடம் ஆலாசனை அளித்த இந்திய அரசிடம் போய், தமிழர்கள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுமாறு ராஜபக்சவிடம் வலியுறுத்துங்கள் என்று கூறுவது மோசடியல்லவா?

“இந்தியாவின் போரையே நான் நடத்தினேன்” என்று மகிந்த ராஜபக்ச கூறினாரே, அதன் பொருள் என்ன? இலங்கையில் ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு என்ன உள்ளது? என்று அகில இந்தியக் கட்சியான மார்க்சிஸ்ட் மத்திய அரசைப் பார்த்து ஏன் கேள்வி எழுப்பவில்லை?

“போரை நிறுத்துமாறு உலக நாடுகள் அழுத்தம் அளித்தபோது இந்தியாவின் துணையுடன் அதனை சமாளித்தோம்” என்று அந்தப் போரை நடத்திய சிறிலங்க பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச பல பேட்டிகளிலும், கொழும்பு ஆனந்த கல்லூரி பட்டமளிப்பு விழாவிலும் பேசினாரே அதன் பொருள் என்ன?

தமிழினத்திற்கு எதிராக நடத்தப்பட்டப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து வாய் திருந்தால் தேசத் துரோகி என்று குற்றம்சாட்டி தண்டிப்போம் என்று அந்தப் போரின் போது சிறிலங்க இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை நேற்று முன் தினம் கூட மிரட்டியுள்ளாரே கோத்தபய ராஜபக்ச, அதற்குப் பொருள் என்ன? எந்த அத்து மீறலும் நடைபெறவில்லையென்றால் தனது நாட்டின் முன்னாள் தளபதிக்கு வெளிப்படையான அச்சுறுத்தல் விடுக்கப்பட வேண்டிய அவசியமென்ன?

இறுதிகட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது சாட்சிகளுடன் நிரூபனமாகியுள்ள நிலையில், அது குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை கூறுகிறார். மனித உரிமை கண்காணிப்பகம் கூறுகிறது, அம்னஸ்டி கோருகிறது, பன்னாட்டுச் சிக்கல் தீர்வுக் குழு கேட்கிறது, ஆனால் தமிழக அரசோ, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியோ தமிழ்நாட்டில் அரசியல் நடத்திக்கொண்டிருந்தும் இதுகுறித்து வாய் திறக்காதது ஏன்? தன் நாட்டு மக்களையே கொத்தானிக் குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகள், வெப்பக் குண்டுகள் என்று வீசிக் கொன்ற ஒரு அரசு, அவர்களுக்கு நியாயமான ஒரு அரசியல் தீர்வைத் தரும் என்பதை நம்புவதற்கு உங்களுக்குள்ள அடிப்படை என்ன?

இந்த உலகம் மதித்துப் போற்றும் உன்னத நிலைகளில் உள்ள 10 பெரும் நீதிவான்கள் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் ஒன்றமர்ந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசி, ஆதாரங்களைப் பெற்று, தீர விசாரித்து, சிறிலங்க அரசு ஒரு போர்க் குற்றவாளி என்றும், அது மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்துள்ளது என்றும் ஆணித்தரமாக தீர்ப்பளித்ததே. அதுமட்டுமின்றி, அங்கு நடந்த போரில் தமிழினப் படுகொலை நடந்துள்ளது என்ற குற்றச்சாற்றை ஆழமாக விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதே, இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தமிழக முதல்வர் கடிதம் எழுதுவது தமிழினத் துரோகமல்லவா? மானுடத் தன்மையற்ற போக்கல்லவா?

பாலஸ்தீனத்தின் மீது குண்டு வீசப்பட்டு சில நூறு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டபோது டெல்லியில் வீதிக்கு வந்து போராடிய மார்க்சியக் கட்சி, 20 கடல் மைல் தூரத்தில் தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்றொழிக்கப்பட்டபோது அமைதி காத்ததும், இப்போதும் அதைப் பற்றி பேசாமல், கிடைக்காத அரசியல் தீர்வைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதும் அரசியல் அயோகியத்தனமல்லவா?

* போர் முடிந்துவிட்டது, தமிழீழ விடுதலைக்காக போராடிய இயக்கம் முறியடிக்கப்பட்டுவிட்டது, இதற்கு மேல் அவர்களோடு ஒத்துப்போய்தான் தமிழர்களின் அரசியல் உரிமைகளை நிலைநாட்ட முயற்சிக்க வேண்டு்ம என்று தமிழக முதல்வர் கூறியதை என்றோ தமிழினம் புறக்கணித்துவிட்டது. ஈழம் என்பது கனவு என்று கூறிப்பார்த்தார்கள், அதுவும் செல்லுபடியாகவில்லை. அது நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் நிலைக்கும், அதற்கும் உலக நாடுகளின் ஆதரவும் பெருகிவருகிறது. தமிழனின் உரிமைப் போராட்டத்தை இராணுவ பலத்துடன் அழித்துவிட்டோம் என்ற இறுமாப்பை இந்த ஓராண்டுக்கால தமிழரின் எழுச்சி தவிடுபொடியாக்கிவிட்டது. அந்த எழுச்சியே இனவெறி சிறிலங்க அரசிற்கு எதிராகவும், அதன் அதிபர் ராஜபக்சவிற்கு எதிராகவும் நாளுக்கு நாள் பலம்பெற்று வருகிறது.

தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை மெல்ல உலகத்தின் மனசாட்சியை திறந்துகொண்டிருக்கிறது. இங்குள்ள அரசுகளும், தமிழின உணர்வு என்பதை என்றைக்கும் விரும்பாத அரசியல் கட்சிகளும் அந்த நியாயத்தை உணராமல் தங்கள் ‘கொள்கை அரசியல்’ வசதிக்கு ‘தீர்வு’களைச் சொல்லிக்கொண்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டு்ம.

இலங்கையில் வாழும் ஒரு தொன்மையான, பாரம்பரியமிக்க தேசிய இனம் தனது விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கிறது. அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேற்பட்ட அதன் போராட்டத்தின் நியாயபூர்வமான அரசியல் உரிமையைக் கருத்தில் கொண்டு, அதற்கு ஆதரவு வழங்கி, அந்த தேசிய இனம் விடுதலைப் பெற உதவுமாறு உலக நாடுகளை வலியுறுத்த முன்வர வேண்டும். அதுவே நேர்மையான அரசியல் ஆக இருக்கும். இதனை பாலஸ்தீனத்திற்குச் செய்துகொண்டு, ஈழத்திற்கு மறுக்கக்கூடாது.

தமிழகத்திலிருந்து ஆரூரன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*