TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஆதாரம் காட்டியும் அசையாத இலங்கை அரசு!

அந்தப் போராளியின் கொலைக்கு இந்தியாவும் தமிழகமும் பொறுப்பு ஏற்க வேண்டும். அந்தப் போராளியின் குருதியில் பாதி சோனியா, மன்மோகன் சிங், கருணாநிதி ஆகியோரது கைகளில் படிந்திருக்கிறது. இவர்களை நாம் ஒரு போதும் மன்னிக்க மாட்டோம். வி.புலிகளின் மீதான தடை நீடிக்கப்பட்டதற்கு இந்திய மத்திய அரசு சொல்லும் காரணங்களில் புலம்பெயர் தமிழர்கள் இந்தியாவுக்கு எதிராக இணைய தளங்களில் பரப்புரை செய்கிறார்கள் என்பது ஒன்று.

தமிழினப் படுகொலைக்கு உதவிய சோனியா மற்றும் மன்மோகன் சிங் இருவருக்கும் புலம்பெயர் தமிழர்கள் பாமாலையா பாட முடியும்? அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முதல்வர் கருணாநிதிக்கு பூமாலை போடவா முடியும்? முதல்வர் கருணாநிதியால் எப்படி சாப்பிட முடிகிறது? தூங்க முடிகிறது? என்பதுதான் தெரியவில்லை!

‘இலங்கை அரசு போர்க் குற்றங்களை இழைத்திருக்கிறது. எனவே, அதன் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்ற குரல்கள் வலுவடைந்து வருகின்றன.

கடந்த 17-ம் தேதி, ப்ரஸ்ஸல் நகரை தலைமையிடமாகக்கொண்ட ‘இன்டர்நேஷனல் க்ரைஸிஸ் க்ரூப்ஸ்’ என்ற மனித உரிமை நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இலங்கையில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன என்றும், ஐ.நா. சபை உடனடியாக இலங்கை அரசின் மீது விசாரணையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தமது குற்றச்சாட்டுக்குப் போதுமான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளன என்றும் அந்த அறிக்கை வெளியிட்ட குழு தெரிவித்திருந்தது.

இன்டர்நேஷனல் க்ரைசிஸ் க்ரூப்ஸைத் தொடர்ந்து ‘ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்’ என்ற அமைப்பும் இதே விதமான குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறது. கடந்த 20-ம் தேதி அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இலங்கை ராணுவம் போர்க் குற்றங்களைச் செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது. அத்துடன், தமிழ்ப் போராளி ஒருவர் இலங்கை ராணுவத்தினரால் படுகொலை செய்யப்படுவதுபற்றிய ஐந்து புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறது. இதுபோன்று, இலங்கை விமானப் படையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரால் எடுக்கப்பட்ட 200 புகைப்படங்கள் தம்மிடம் உள்ள தாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த புகைப்படங்களில், ஒருவர் பனை மரம் ஒன்றோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிற காட்சியும், அவருடைய உடம்பிலும் முகத்திலும் ரத்தம் வழிகிற காட்சியும், அவரைச் சுற்றி ராணுவ உடை அணிந்தவர்கள் நிற்பதும், அதில் ஒருவர் அவரது முகத்துக்கு நேராக கத்தியை காட்டுவதும் தெரிகிறது. இந்தக் காட்சிகள் இரண்டு புகைப்படங்களில் உள்ளன. அடுத்து வரும் மூன்று புகைப்படங்களில் அந்த இளைஞர் செத்துக் கிடப்பதும், அவர் மீது விடுதலைப் புலிகளின் கொடி போடப்பட்டிருப்பதும் தெரிகிறது.

அந்தப் புகைப் படத்தில் இருப்பவரைப்பற்றி விசாரித்ததில், அந்த இளைஞர் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்திருப்பதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது. இந்தப் புகைப்படங்களை ஆராய்ந்த நிபுணர் ஒருவர், இறந்துகிடக்கும் இளைஞனின் புகைப்படத்தில் முகத்தில் ஒட்டிக்கொண்டு இருப்பது மூளையின் சிதைவுகள்போல் உள்ளது. அவர் பின்னந்தலையில் கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுவதாகவும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்டர்நேனஷல் க்ரைஸிஸ் க்ரூப்ஸின் அறிக்கை இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விரிவாகவே விவரித்துள்ளது.

30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தின் கடைசி ஐந்து மாதங்களில் பலமுறை இலங்கைராணுவ மும் விடுதலைப் புலிகளும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியிருக்கிறார்கள். பல ஆண்டுகளாகத் தொடர்ந்த சண்டையில் இருதரப்பினருமே பல்வேறு வன்கொடுமைகளைச் செய்திருக்கிறார்கள் என்ற போதிலும், அத்துமீறல்களின் அளவும் தன்மையும் 2009 ஜனவரிக்கும், போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்த மே மாதத்துக்கும் இடையில் மிக அதிகமாக இருந்தன. இடைப்பட்ட மாதங்களில் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் கொல்லப்பட்டனர். பலர் படுகாயப்படுத்தப்பட்டனர். பலர் உணவும் மருந்தும் இன்றிச் சாகடிக்கப்பட்டனர் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை ராணுவம் மேல்மட்டத்தில் இருந்தவர்களின் ஒத்துழைப்போடு போர்க் குற்றங்களைச் செய்திருக்கிறது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. விடுதலைப் புலிகள் மற்றும் அதன் தலைவர்கள் ஆகியோரும்கூட போர்க் குற்றங்களைச் செய்துள்ளனர். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் நீதியை எதிர்கொள்வதற்கு வாய்ப்பு இன்றி இறந்துவிட்டனர். இலங்கை அரசாங்கம் நியாயமான விசாரணையை மேற்கொள்வதற்குத் தகுதியற்றது என்பதாலும், பல்வேறு நாடுகளும் இலங்கை மாதிரியைத் (srilankan model) தமது உள்நாட்டு முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்வதற்குப் பயன்படுத்தக்கூடிய ஆபத்து இருப்பதாலும், சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்டர்நேஷனல் க்ரைசிஸ் க்ரூப்ஸிடம் கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணை மேற் கொள்ளச் செய்வதற்கான போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின்மீது வேண்டுமென்றே குண்டு களை வீசியது: ஜனவரி மாதம் முதற்கொண்டே அரசாங்கமும் ராணுவமும், பொதுமக்களை மிகவும் குறுகிய பாதுகாப்பு வளையத்துக்குள் செல்லுமாறு வற்புறுத்தி, அங்கு வந்தவர்களைக் கண்மூடித்தனமாகக் குண்டு வீசித் தாக்கினார்கள். பொதுமக்களுக்கு ஏற்படும் உயிரிழப்புகள் தெரிந்திருந்தும் மே மாதம் வரை தொடர்ந்து அவர்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு: காயம்பட்டவர் களாலும், நோயாளிகளாலும் நிரம்பி வழிந்த மருத்துவமனைகள், மருத்துவ முகாம்கள் எங்கே இருக்கின்றன எனத் தெரிந்தும், வேண்டுமென்றே அவற்றின் மீது குண்டுகளை இலங்கை ராணுவம் வீசியது. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்ந்து இதுபற்றி அரசுத் தரப்பில் தகவல்களைத் தெரிவித்தும்கூட, மே மாதம் வரை குண்டுகள் வீசப்பட்டு, பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறும்படி நிர்ப்பந்திக் கப்பட்டனர்.

சேவை மையங்கள் மீது தாக்குதல்: மனிதாபிமான ரீதியிலான சேவைகளை ஆற்றிய மையங்கள் எங்கெங்கு செயல்படுகின்றன என்பது தெரிந்திருந்தும், அங்கு அவற்றின் ஊழியர்கள், வாகனங்கள், பொதுமக்கள் இருப்பது தெரிந்திருந்தும், குண்டுகள் வீசப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் குழந்தைகள், பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துக்காட்டியும், உணவு மற்றும் மருந்து சப்ளைகளைத் தடுத்து நிறுத்தியும் குண்டு வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் துன்புறுத்தப்பட்டனர்.

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டதாக இன்டர்நேஷனல் க்ரைஸிஸ் க்ரூப்ஸ் கூறியுள்ளது. இலங்கை ராணுவம் மட்டுமின்றி விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களைச் செய்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பொதுமக்களை வேண்டுமென்றே சுட்டது: குண்டு வீச்சுக்குப் பயந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்குத் தப்பித்துச் செல்ல முயன்ற பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட்டு பலரைக் கொன்றது மற்றும் படுகாயப்படுத்தியது.

பொதுமக்களுக்கு வேண்டுமென்றே கஷ்டங்களைக் கொடுத்தது:

போர் நடக்கும் பகுதியில் உணவுப்பொருட்கள் இல்லாமையாலும், குண்டுவீச்சினாலும் உயிருக்கு ஆபத்து இருப்பது தெரிந்திருந்தும், பலர் காயம்பட்ட நிலையிலும் அந்தப் பகுதியைவிட்டு வெளியேற புலிகள் அனுமதிக்கவில்லை. வேலை செய்வதற்கும், சண்டைபோடுவதற்கும், பொதுமக்களில் பலரைக் கட்டாயப்படுத்தியது, எதிர்ப்பு தெரிவித்தவர்களை அடித்து உதைத்தது ஆகிய குற்றங்களை விடுதலைப் புலிகள் செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2009 ஆகஸ்ட் மாதம் முதல் இன்டர்நேஷனல் க்ரைசிஸ் க்ரூப் சேகரித்த ஆதாரங்கள், போர் நடந்த முறை குறித்தும் இருதரப்பிலுமான அரசியல் மற்றும்ராணுவத் தலைமைப் பொறுப்புகளை வகித்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்துவதற்குப் போதுமான ஆதாரங் களாக உள்ளன. நம்பகமான கண்ணுற்ற சாட்சிகள், புகைப்படங்கள், வீடியோப் பதிவுகள், சாட்டிலைட் படங்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் வழியேபரிமாறிக் கொள்ளப்பட்ட தகவல்கள், பல்வேறு தரப்புகளில் இருந்தும் பெறப்பட்ட ஆவணங்கள் என ஏராளமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இழைக்கப்பட்ட குற்றங்களில் இவை கொஞ்சம்தான், ஆனால் கடந்த வருடம் நடைபெற்ற யுத்தத்தைப்பற்றி ஆராய்வதற்கு இது முதல் படியாக இருக்கும். விடுதலைப் புலிகள் சிறுவர்களைப் படையில் சேர்த்தது மற்றும் சரணடைய வந்தவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது ஆகியவை குறித்து மேலும் விசாரிக்கப்பட வேண்டும்.

இலங்கை ராணுவத்தையும், விடுதலைப் புலிகளையும் குற்றம் சாட்டும் இன்டர்நேஷனல் க்ரைஸிஸ் க்ரூப், சர்வதேசச் சமூகத்தையும் கடுமையாக விமர்சித்து இருக்கின்றது. மிகப் பெரிய இனப் படுகொலை நடத்தப் பட்டபோது சர்வதேச நாடுகள் அதைத் தடுப்பதற்கு சரியான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாததை அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையில் ராணுவ அத்துமீறல்கள் நடந்துகொண்டு இருந்தபோது, சர்வதேசச் சமூகம் கண்ணை மூடிக்கொண்டு இருந்தது. ஒருசில நாடுகள் அமைதி காக்குமாறு அறிக்கைகள் விட்டன, வேறு எதுவும் உருப்படியாகச் செய்யவில்லை. பலநாடுகள் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என அறிவித்து அவர்களின் வீழ்ச்சியை ஆதரித்தன.

அவை, இலங்கை அரசாங்கத்தின் கடுமையான அணுகு முறையை ஆதரித்தன, தமிழர்களின் பிரச்னைகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் நியாயமானத் தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறவில்லை. போர் குறித்த சட்டங்களை மீறியும், மிகப் பெரிய மனித அவலத்தை நடத்தியும்தான் கடைசியில் விடுதலைப் புலிகளை ராணுவரீதியில் அழிக்க முடிந்தது. இது உலகெங்கும் வாழுகின்ற தமிழர்களிடையே கசப்பு உணர்வை உண்டு பண்ணியது மட்டுமின்றி, அங்கு ஓர் அமைதித் தீர்வை ஏற்படுத்துவதற்கும் தடையாக மாறியது. ஐ.நா சபையின் நம்பகத்தன்மையையும் குலைத்துவிட்டது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

போர்க் குற்றங்களைப்பற்றி எடுத்துக் கூறியுள்ள இன்டர்நேஷனல் க்ரைஸிஸ் க்ரூப்ஸ், இன்னோர்ஆபத்தை யும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இலங்கையில் தமது உரிமை களுக்காகப் போராடிய தமிழர்கள் மிகக் கொடூரமாக ராணுவத்தால் ஒடுக்கப்பட்ட நிகழ்வானது, பல்வேறு நாடுகளுக்கு மிக மோசமான முன்னுதாரணமாக மாறக் கூடிய ஆபத்து இருக்கிறது. தமது சொந்த நாட்டு மக்கள் மீது விமானத் தாக்குதலைத் தொடுக்க பெரும்பாலும் அரசாங்கங்கள் தயக்கம் காட்டுவதே உலக நடைமுறை. ஆனால், தமது குடிமக்கள் மீதே விமானத் தாக்குதலை நடத்தி பல்லாயிரக்கணக்கானவர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசின் நடவடிக்கை இன்று மற்ற நாடுகளுக்குத் தைரியம் அளித்திருக்கிறது.

தாமும் இதே பாணியைப் பின்பற்றி தமது நாடுகளில் இருக்கும் எதிர்ப்புக் குழுவினரை ஒடுக்குவதற்கு இன்று அரசாங்கங்கள் சிந்திக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ”மனித உரிமைகளைப்பற்றி கவலைப்படாத, பேச்சுவார்த்தைக்கு முன்வராத, கட்டுப்பாடில்லாத ராணுவ நடவடிக்கையை மேற்கொள்கிற இலங்கையின் அணுகுமுறையை இப்போது எல்லா நாடுகளுமே தமக்கான முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள நினைக்கின்றன. கலகக் குழுக்களை எதிர்கொள்வதற்கு வெற்றிகரமான உதாரணமாக இது மாறிவிட்டது!” என்கிற இந்த அறிக்கை, இலங்கை அரசு (இனியாவது!) எடுக்கவேண்டிய நடவடிக்கைகளையும், ஐ.நா. சபையும், அதன் உறுப்பு நாடுகளும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

அதுமட்டுமின்றி இந்தியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் சுவிட்சர்லாந்து முதலான நாடுகளுக்கு ஒரு வேண்டுகோளையும் இந்த அறிக்கை முன்வைத்துள்ளது. இந்த நாடுகள் தமது நாடுகளில் உள்ள விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்தவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பக் கூடாது என்றும், தமது அதிகார வரம்புக்கு உட்பட்ட விதத்தில் இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்களைப்பற்றி இந்த நாடுகளே விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென்றும் தமது நாடுகளுக்கு தஞ்சம்கோரி வருகின்ற ஈழத் தமிழர்களை குறிப்பாக, போர்க் குற்ற விசாரணை தொடர்பான சாட்சிகளை இந்த நாடுகளின் அரசாங்கங்கள் கௌரவமாக நடத்த வேண்டும் என்றும், இலங்கை அரசின் மீது பல்வேறு விதமான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் அறிக்கையும் இதே கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது. அது மட்டுமின்றி, இலங்கை அரசு கண்துடைப்பாக சில விசாரணை கமிஷன்களை அமைத்துள்ளது. அதை சர்வதேச சமூகமும், ஐ.நா. சபையும் நம்ப வேண்டாம். இது உலக நாடுகளை ஏமாற்றுவதற்கு இலங்கை கையாளும் வழக்கமான தந்திரம். இலங்கையில் இதுபோல் ஒன்பது கமிஷன்கள் அமைக்கப்பட்டன. ஆனால், ஒன்றுகூட உருப்படியான பரிந்துரையை வழங்கவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறது. தவிர, ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் இலங்கை விவகாரத்தில் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விமர்சித்திருக்கிறது-. கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் தேதி அவர் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் பற்றி விசாரிப்பதற்கு கமிட்டி ஒன்றை நியமிக்கப்போவதாகத் தெரிவித்தார்.

ஆனால், அதன் பிறகு இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை அந்த கமிட்டிக்கு ஓர் உறுப்பினரைக்கூட அவர் நியமிக்கவில்லை. பான்-கி-மூனின் இத்தகைய மெத்தனமான அலட்சியப்போக்கு, இலங்கை போன்று மனித உரிமைகளை மீறுகின்ற இனப் படுகொலைகளைச் செய்கின்ற அரசாங்கங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துவிடும் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது. சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் இந்த அறிக்கைகளால் இப்போது இலங்கை அரசு விழிபிதுங்கி நிற்கிறது. வழக்கம்போல இந்தியாதான் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று ராஜபக்ஷே எதிர்பார்க்கிறார். இந்தியாவும்கூட அதற்குத் தயாராக இருக்கிறது என்பதைத்தான் அண்மைக் கால நிகழ்வுகள் காட்டுகின்றன. விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீட்டித்துள்ள மத்திய அரசு, அதற்காகக் கூறியுள்ள காரணங்கள் ராஜபக்ஷேவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கடந்த ஆண்டு ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது தமிழ்நாட்டு மக்கள், நாடாளுமன்றத் தேர்தல் சந்தடியில் அதைக் கவனிக்கத் தவறிவிட்டனர். சர்வதேசச் சமூகம் விழிப்படைந்து வரும் இந்த நேரத்திலாவது தமிழ்நாட்டு மக்கள் தமது குரலை உயர்த்தி இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை நடத்தும்படி வலியுறுத்த வேண்டும்!

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles, Featured
  • Amy B. says:

    The Amyloidosis Foundation estimates that approximately 3,000 people are diagnosed with amyloidosis each year in North America and that blood cancers overall have increased more than 40% in the last decade.

    June 4, 2010 at 07:03
  • Emily N. says:

    Hi, I’m very interested in Linux but Im a Super Newbie and I’m having trouble deciding on the right distribution for me (Havent you heard this a million times?) anyway here is my problem, I need a distribution that can switch between reading and writing in English and Japanese (Japanese Language Support) with out restarting the operating system.

    June 8, 2010 at 00:41

Your email address will not be published. Required fields are marked *

*