TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஐயோ! அயல்நாட்டில் தமிழன் அழிய க.நிதியோ குதூகலத்தில்!!

தமிழ் நாட்டின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தனது தள்ளாடும் வயதிலும் சளைக்காது தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் உலகத் தமிழரின் பாதுகாப்புக்கும் மற்றும் இந்தியாவின் இறையாண்மைக்கும் மனிதநேய பண்புடன் போராடுகின்றார் என்று தான் ஒட்டு மொத்த திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் நம்புகின்றார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு சாவுமணி அடிப்பது போன்றுதான் அவரது செயல்பாடுகள் என்று அவர் பொது வாழ்க்கையில் ஈடுபட்டாரோ அன்றில் இருந்து இன்றுவரை இடம்பெற்று வருகின்றது.

தமிழ்நாட்டு மக்களை நன்றாகவே ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகின்றார் கலைஞர்.

ஐயோ 30 மைல்கள் தொலைவிலுள்ள ஈழத்தில் அநியாயங்கள் நடைபெறுகின்றன. ஆனால் கருணாநிதிக்கோ அவைகள் இன்பமாக இருக்கின்றது. ஐயோ இவரால் எப்படி 10,000 மைல்களுக்கு அப்பாலிருக்கும் தமிழருக்கு பாதுகாப்பு பெற்றுத் தரமுடியும். ஐயோ இவரது குடும்பமே அனைத்து துறைகளையும் தம்வசம் வைத்திருக்கும் வரை இவரது குடும்ப வியாபாரங்களுக்குப் போட்டியாக எவரையும் தலைதூக்க விடாது வரை இவரால் எப்படி தமிழ்நாட்டை வளமாக்க முடியும்.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று போராடிய கலைஞர் பின்னாளில் அதிகாரம் தன் கையில் வந்தவுடன் தனது பழைய நிலைப்பாட்டிலிருந்து தனது சுயநலத்திற்காக மாறியவரினால் எப்படி இந்தியாவின் இறையாண்மையைக் காப்பாற்ற முடியும். ஐயோ பாவப்பட்ட தமிழ்நாட்டு மக்களே, கொஞ்சமாவது சிந்தியுங்கள். நீங்கள் எப்போ சிந்தித்து செயலாற்ற முன்வருகின்றீர்களோ அன்று தான் முழு தமிழனுக்கும் சுதந்திரம் கிடைத்ததாக வெற்றிகொண்டாட முடியும். கடந்த வருடம் ஈழத்தில் தமிழன் சாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை அறிவித்தார். இந்த மாநாடு கோவையில், வரும் ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மாநாட்டுப் பணிகளை ஆய்வு செய்ய கருணாநிதி தள்ளாடும் வயதிலும் சென்னையில் இருந்து புறப்பட்டு கடந்த திங்கட்கிழமை அன்று விமானம் மூலம் கோவை சென்றார். அங்கு, மாநாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை 4.15 மணிக்கு சென்னை திரும்பினார். வானூர்தி நிலையத்தில் அவர் பேட்டியளிக்கையில், “செம்மொழி மாநாட்டிற்காக நடந்து வரும் பணிகள் குறித்து, ஆய்வு செய்வதற்காக கோவைக்கு சென்றிருந்தேன். ஒருநாள் அங்கு தங்கியிருந்து, நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்தேன். மாநாட்டிற்கான பணிகள் சிறப்பாக நடக்கின்றன. எனக்கு முழு திருப்தி ஏற்பட்டுள்ளது.

மாநாட்டுப் பணிகள் மேலும் சிறப்புற அதிகாரிகளுக்கு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளேன்” என்றார். தமிழனாக பிறந்த எவரும் தமிழை செம்மொழியாக்கியதற்காக நிகழ்ச்சி நடாத்துவதற்கோ அல்லது தமிழின் மகிமையை உலகத்துக்கு பறைசாற்றவோ ஒருபொழுதும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள். ஆனால் இப்படியானதொரு மாநாடு நடைபெறும் என்று அறிவிப்பு வந்த காலம் உலகத்தமிழரை ஒருகணம் உலுக்கிவிட்டது. காரணம் அவர்கள் நாளும் பொழுதும் தமது இனம் ஈழத்தில் சிறிலங்கா அரசினால் கொலை செய்யப்பட்டு பல அட்டூழியங்களை சந்தித்த காலப்பகுதியில் தான் கலைஞரின் இந்த மாநாட்டுக்கான அறிவிப்பு வந்தது.

கலைஞர் சொல்வதொன்று செய்வதொன்று என்பதை நிரூபிப்பது போன்றிருந்தது இந்த அறிவிப்பு. காரணம் இவர் ஈழத் தமிழர் கொடூரத்தை அறிந்து பேச்சளவில் நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார்;. ஆனால் தன் உள்ளத்தால் வேறு பல களியாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் என்பது தான் உண்மை. இவர் நினைத்திருந்தால் அன்று பல்லாயிரம் ஈழத் தமிழரை காப்பாற்றி இருக்கமுடியும். ஆனால் பேச்சளவில் தான் ஈழத் தமிழரின் ஆதரவாளன் என்ற தோரணையில் நடித்துக்கொண்டு தனது செயலினால் சோனியா காந்தியின் விசுவாசியாக செயலாற்றினார்.

வெள்ளைக்காரனுக்கு இருக்கும் உணர்வு கூட கலைஞருக்கு இல்லை

கடந்த வருடம் இறுதி யுத்தத்தில் சிங்கள படைகளால் கைது செய்யப்பட்ட போராளிகளை கோரமாக வதை செய்து கொன்றுள்ளதாக செய்திகள் தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் சிங்களப் படைகளால் அரங்கேற்றப்பட்டு மகிழ்ச்சி கொண்டாடிய காட்டுமிராண்டித்தனமான போர்க்குற்ற ஆதாரங்களில் சிலவற்றை வெள்ளைக்காரர்களினால் நடாத்தப்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) வைத்திருக்கின்றது. கடந்த காலங்களில் அவற்றை வெளிக்கொண்டும் வந்தார்கள். இறுதி யுத்தகாலத்தில் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட ஒரு போராளியை சிங்கள படையினர் தென்னை மரத்தில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்திரவதை செய்து கொலை செய்து புலிக்கொடியை அவர்மீது போர்த்தி அழகுபார்த்த கோரக் காட்சியின் படங்கள் சில கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த கோரத்தைப் பார்த்து பல இனத்தினர் குரல் கொடுக்கத் தொடங்கினர். பொதுமக்கள் செறிந்திருந்த பகுதியில் எறிகணை வீச்சு நடத்தப்பட்டதாகவும் இலங்கைப்படையினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. புலிகளுக்கும், அரசாங்கப் படையினருக்கும் கடந்த ஆண்டு இடம்பெற்ற போர் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென இந்த அமைப்பு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைக்குப் பொறுப்பாகவிருந்த கனடிய பெண்மணியைத் தலைமையாக கொண்டியங்கும் சர்வதேச அமைப்பொன்றும் வன்மையான கண்டனத்தை சிறிலங்கா மீது தெரிவித்து அறிக்கை விட்டார்கள்.

சர்வதேச நீதி மாசுபடுத்தப்பட்டுள்ளதாக மற்றுமொரு சர்வதேச அமைப்பு (சர்வதேச மன்னிப்பு சபை) இந்த வாரம் வெளியிட்டுள்ள 111 பக்கங்களை கொண்ட சித்திரவதை தொடர்பான அறிக்கையிலேயே இந்த கருத்தை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் சர்வதேச மன்னிப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது:

“சிறிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது, இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணைகளை சில பலமிக்க அரசாங்கங்கள் மூடிமறைத்துள்ளது. அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையும் இந்த விடயத்தில் தலையிடவில்லை. சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிப்போர்க்காலத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அந்த வேளையில் ரத்தவெள்ளம் ஏற்பட்டிருந்ததாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் குறிப்பிட்டமை குறிப்பிட்டத்தக்கது.”
பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியோ ஒருபடி மேல்சென்று தமிழர் மீது கட்டவீழ்த்தப்பட்ட கொடூரங்களை காணொளிக் காட்சியூடாக மக்களுக்கு காண்பித்து உலகத் தமிழரின் மனங்களை கொள்ளை கொண்டு விட்டது.

இப்படியாக வெள்ளைக்காரர்கள் மனிதநேயத்தை வெளிக்கொண்டுவருகின்றார்கள். ஆனால் தமிழ் நாட்டின் தொலைக்காட்சிகளோ ஈழத் தமிழரின் கொடுமையை இருட்டடிப்புச் செய்கின்றார்கள். இருந்தும் உலகத் தமிழர்கள் இந்த தொலைக்காட்சிகளுக்கும் பத்திரிகைகளுக்கும் ஊக்கமளிப்பது என்பது தான் கவலையளிக்கும் விடயம். சினிமாவுக்கும் மற்றும் அரட்டை அரங்கத்திற்கும் அளிக்கப்படும் முன்னுரிமையில் ஒரு துளியேனும் இந்த ஊடகங்கள் ஈழத் தமிழரின் அவல நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. குறிப்பாக கலைஞர் குடும்பத்தினால் நடாத்தப்படும் ஊடகங்கள் ஈழத் தமிழரின் அவலத்தை இருட்டடிப்பு செய்துவிட்டது. வெள்ளைக்காரர்களினால் நடாத்தப்படும் ஊடகங்களில் வரும் ஈழத் தமிழர் பற்றிய கொடுமைகளையும் மற்றும் புகைப்படங்கள் உலக தமிழ் மக்களை கதிகலங்கச் செய்துகொண்டிருக்கின்றது.

ஆனால் தமிழ்நாட்டிலோ இன்று வரை ஈழத் தமிழரை காப்பாற்ற வேண்டிய எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் செய்திகள் தமிழரின் மனங்களை பிளக்கின்றன. மன்னார் நாச்சிக்குடாப் பகுதியில் கண்ணிவெடி மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த டென்மார்க் பிரதிநிதிகள் பாரிய மனிதப் புதைகுழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புதை குழிக்குள் சுமார் 75 லிருந்து 100 வரையான உடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன. இப் புதைகுழிக்குள் காணப்படும் மனித எச்சங்களின் அடிப்படையில் இளம் வயதுடைய ஆண்களும், பெண்களும் கொல்லப்பட்டு இக் குழிக்குள் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. மன்னாரின் பல பகுதிகளிலும் மீள் குடியேற்றத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், நாச்சிக்குடாப் பகுதியில் மீள் குடியேற்றத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணி பூர்த்தியடையாத காரணத்தினாலேயே, இப்பகுதி மீள் குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்படவில்லை என சிறிலங்கா அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கண்ணிவெடி அகற்றும் பணிகளும் சிறிலங்கா படைத்தரப்பின் தீவிர கண்காணிப்பின் கீழேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் பெருமளவு சர்வதேசப் பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டால், அப்பிரதேசங்களில் இருக்கின்ற மனிதப் புதைகுழிகளை அடையாளம் கண்டுவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே சிறிலங்கா அரசு பெருமளவு சர்வதேசப் பணியாளர்களை கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

தமிழ்நாடு அரசினால் தக்கவைக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களும் மற்றும் மத்திய அரசில் கலைஞர் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கும் நிச்சயம் போர்க்குற்றவாளிகளை கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுதர முடியும். ஆனால் முடமாக இன்னும் இருக்கின்றார்கள் தமது சுய நலன்களுக்காக. உணர்வைப் பற்றி கவிதை எழுதும் கலைஞருக்கோ சாவின் விளிம்பிலிருக்கும் ஈழத்தமிழரின் வாழ்க்கையைப் பற்றி உணராதவராகவுள்ளார். கடந்த சிலதினங்களுக்கு முன்னர் கருணாநிதி ஒரு தமிழ் இனத்துரோகி என மலேசிய பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பழனியப்பன் ராமசாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கூட ஒரு துரோகிதான் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் நடிகரும், இயக்குநருமான சீமானின் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர், மலேசியா திரும்பிய அவர் மேலும் கூறியதாவது: “தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்படாதவரை, இலங்கைத் தமிழர்களுக்கு மாற்றம் ஏற்படாது.” இவரின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மையே. உண்மையான தமிழ் குருதி ஓடும் நபரேனும் அவர்தம் இனம் அழிவதைக்கண்டு ஒருபொழுதும் முடமாக இருக்கமாட்டார்கள். அப்படி இருப்பவர்கள் செத்த பிணத்திற்கு சமன்.

இந்திய நடுவண் மற்றும் தமிழகத்தின் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் சில தடை விதிக்கப்பட்டிருந்தும், இலங்கையில் நிலவும் கொந்தளிப்பை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அதன் ஆதரவு அமைப்புகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி, தமிழகத்துக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இலங்கையில் பெரும்பாலான விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுவிட்டாலும், எஞ்சியுள்ள போராளிகளும், தலைவர்களும், அவர்களது லட்சியமான தமிழ் ஈழத்தை உருவாக்கும் நோக்குடனும், நம்பிக்கை துரோகிகள் (இந்திய அரசு) மற்றும் எதிரிகளை (இலங்கை அரசு) பழிவாங்கும் நோக்குடனும் தமிழகத்தில் ஒன்று சேர்ந்து வருகின்றனர் என்பது சமீபத்தில் பெறப்பட்ட அறிக்கைகள் வாயிலாக தெரியவந்துள்ளதாம்.

இப்படியாக இந்திய நடுவண் அரசு அறிக்கை தயாரித்துக் கொடுக்க தமிழ்நாட்டின் அதிகாரபூர்வ அறிக்கை பொது ஊடகங்களுக்கும் மக்களுக்கும் கடந்த வாரம் தரப்பட்டது. இதைவிட வேறு எந்தவொரு கண்டுபிடிப்பையும் உலகில் யாரேனும் இன்றுவரை கண்டதில்லை போல் இந்த சம்பவத்தை பாலர் வகுப்பு படிக்கும் குழந்தை முதற்கொண்டு முதுமானி படித்து முடித்தவர்கள் வரை மூக்கில் மேல் கைவைத்து சிந்திக்குமளவு இந்தியாவின் நடவடிக்கை அமைந்துள்ளது. இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை தாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து திட்டம் வகுக்கும் தளமாக அவர்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதை ஒதுக்கிட விட முடியாது.

கடல்வழியாகவும், முறையான ஆவணங்கள் மூலமாகவும், இலங்கைத் தமிழ் அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை புறந்தள்ளிவிடவும் முடியாது. உலகம் முழுவதும் பரவியுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பினர், விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்தியாவின் பெரும் அரசியல் தலைவர்களும், அதிகாரிகளுமே காரணம் என்பது போன்ற, இந்திய விரோதப் போக்கை இலங்கை தமிழர்களிடையே விதைக்கும் வகையில் கட்டுரைகளை இணையத்தளத்தில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இத்தகைய பிரச்சாரம், இந்தியாவின் மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை மிகவும் பாதிப்பதாக உள்ளன.

இப்படியாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் மேற்கண்ட காரணங்களுக்காக, விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு சட்டவிரோத அமைப்பு என்றும், இத்தகைய பிரிவினைவாத நடவடிக்கைகள் அனைத்தையும் இயன்ற வகையிலெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை தொடர்ந்து உள்ளது என்று மத்திய அரசு கருதுகிறது. அந்த குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

1) தமிழகத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட எல்.ரி.ரி போராளிகள், அந்த அமைப்பை விட்டு விலகியவர்கள், அனுதாபிகள் ஆகியோரின் நடவடிக்கைகள், குறித்து விசாரித்ததில் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள், எல்.ரி.ரி. இயக்கத்தினரால் எப்படியேனும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவர் என்று தெரியவருகிறது.
2) தடையாணை செயலில் இருந்தும், இந்தியாவில் எல்.ரி.ரி ஆதரவு இயக்கங்கள் மற்றும் தனி மனிதர்களின் நடவடிக்கைகள் காணப்பட்டதாலும், இந்த சக்திகள் எல்.ரி.ரி. இயக்கத்துக்கு தங்களது ஆதரவை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டன.
3) இந்த அமைப்புக் குறித்த இந்தியாவின் கொள்கை மற்றும் அவர்களுடைய செயல்களை ஒடுக்குவதில் மாநில நிர்வாகத்தின் நடவடிக்கை ஆகியவை குறித்து எல்.ரி.ரி. தலைவர்கள், இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள், வெறுப்புற்றிருக்கிறார்கள் என்றும், மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

எல்.ரி.ரி. அமைப்பின் மேற்சொன்ன நடவடிக்கைகள் இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பொது அமைதிக்கும், தொடர்ந்து அச்சுறுத்தலாகவும், குந்தகம் விளைவிப்பதாகவும் கருதி இவ்வமைப்பு ஒரு சட்டவிரோதமான அமைப்பு என அறிவிக்கப்படவேண்டுமென்றும் மத்திய அரசு கருதுகின்றது. மேலும் (அ) எல்.ரி.ரி. அமைப்பின் தொடர்ந்த வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிப்பதாக இருப்பதாலும், (ஆ) இவ்வமைப்பு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாலும், எல்.டி.டி.இ. அமைப்பை சட்டவிரோதமான அமைப்பாக உடனடியாக அறிவிப்பது அவசியம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.

எனவே, தற்போது 1967-ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (37ஃ1967) 3-ம் பிரிவின் (1) உட்பிரிவிலும், (3) உட்பிரிவின் வரம்பு நிபந்தனைகளிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பை (எல்.ரி.ரி) இயக்கத்தினை சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளது.
நடுவண் அரசினால் விடுதலைப் புலிகளின் தடையை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இரு வாரங்களுக்கு பின்னர் இந்த அறிவிப்பு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக விடுதலைப் புலிகள் பூண்டோடு அழிந்து விட்டதாக இந்திய அரசிற்கு சிறிலங்கா அரசு கடந்த வருடம் அறிவித்தது. மேலும் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் மற்றும் அந்த இயக்கத்தின் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டு அம்மான் மற்றும் அனைத்து புலிகளையும் அழித்தோ அல்லது பிடித்து விட்டதாக சிறிலங்கா அறிவித்தது.

மேலும் ராஜீவ் கொலை வழக்கை முடிக்கத் தேவைப்பட்ட பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மானின் மரணச் சான்றிதல்கள் விடயத்தில் இன்னமும் இருநாடுகளுக்கும் இடையில் பெரும் இழுபறி நிலை நிலவுகின்றது. இந்தியாவின் மாறுபட்ட அறிக்கையினூடாக ஏதோ இந்தியா பல நாசகார வேலைகளை சிறிலங்காவிலும் மற்றும் புலம்பெயர் தமிழர் வதியும் நாடுகளிலும் செய்யப்போகின்றார்கள் என்றுதான் கருதவேண்டியுள்ளது.
முள்ளிவாய்க்கால் படுகொலை முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மண்டபம் அகதிகள் முகாம் உள்பட அனைத்து முகாம்களிலும் காவல்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கும்மிடிபூண்டி அகதிகள் முகாமில், இரண்டு தினங்களாக காவல்த்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ‘கியூ’ பிரிவு காவல்த்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முகாமில் பதிவு பெறாதவர்கள் யாரேனும் இருக்கின்றனரா என்று சோதனையிட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் சந்தேகப்படும்படி ஆள் நடமாட்டம் இருந்தால், தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இப்படியாக நடுவண் அரசும் அதற்கு துணைபோகும் கலைஞர் தலைமையில் இயங்கும் திராவிட முன்னேற்ற கழக அரசும் ஈழத் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி செயலாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஐயோ அயல் நாட்டில் தமிழன் அழிய அதைப்பார்த்து குதூகலிக்கும் கலைஞரும் ஈழத் தமிழரை எப்படியேனும் அரசியல் ரீதியாக அழித்தொழித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிநிற்கும் இந்திய நடுவண் அரசும் புதுப்புது கதை வசனங்களை எழுதி ஈழத் தமிழருக்கெதிராக செயலாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் தமிழிலேயே படிக்காமல் மழலை முதல் உயர்கல்வி வரை யார் வேண்டுமானாலும் படிக்கலாம், தமிழே தெரியாமல் அண்டை மொழிகளில் மட்டுமல்ல, ஆங்கிலம் மொழி வழிகளிலேயே படிக்கிற வாய்ப்பு தமிழகத்தில் உள்ளது.

இப்படியானதொரு மாநிலத்தில் உயிரே தமிழ் என்று முழங்கும் கலைஞர் பல தடவைகள் முதலமைச்சர் பதவிக்கு வந்தும் நடுவண் அரசுகளில் செல்வாக்கு இருந்தும் தமிழரின் நலன்களுக்காக எதையும் செய்யாமல் தான் தனது குடும்பம் என்ற ஒரே கொள்கையுடன் பணியாற்றும் வாய்ப்பேச்சில் கெட்டிக்காரரான கலைஞரை நிச்சயம் தமிழ் நாட்டு மக்கள் இனம்கண்டு இவரைப் போன்ற அரசியல்வாதிகளை நம்பி இனி ஒருபோதும் பயனில்லை என்ற வேட்கையுடன் ஈழத் தமிழரை காக்க படை திரட்ட வேண்டுமென்பது தான் உலகத்தமிழரின் அவா.

அனலை நிதிஸ் ச. குமாரன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*