TamilSpy

பொழுது போக்கு இணையம்…

புலம்பெயர் தமிழர்களை இரு துருவப்படுத்த முயல்கிறதா

புலம்பெயர் தமிழர்களிடையே பிளவுகளை உருவாக்கி, அவர்களது போராடும் வலுவை முறியடிக்கும் சிங்கள நிகழ்ச்சி நிரலுடன் சில சக்திகள் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வருகின்றன. எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும் அவர்கள் கொண்ட திசையினை மாற்றிக் கொள்ள முன்வராத காரணத்தால், அவற்றை மக்கள் முன்னால் அம்பலப்படுத்தவேண்டிய கட்டாயம் தேசிய ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசின் பின்னணியுடன் இயங்கும் இந்தக் குழுக்களின் தற்போதைய இலக்கு நாடு கடந்த தமிழீழ அரசுக்கும் மக்கள் பேரவைக்கும் இடையே முழுமையான முரண்பாடுகளை உருவாக்கி, அவைகளை எதிர் எதிர் நிலைகளுக்குக் கொண்டு சென்று புலம்பெயர் தமிழர்களின் போராட்ட வலுவை முறியடிப்பதாகவே உள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசுக்குச் சார்பானவர்களாகத் தங்களை நிலை நிறுத்திக்கொண்டு, மக்கள் பேரவை மீதான தாக்குதல்களைத் தொடுப்பதக் மூலம் இந்தச் சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவர்கள் அனைவரும் தங்களை கே.பி.யின் வாரிசுகளாக அறிவித்தும் வருகின்றனர். நாடு கடந்த தமிழீழ அரசு என்ற திட்ட வரைவை வெளியிட்டு, அதன் இணைப்பாளராக திரு. உருத்திரகுமாரன் அவர்களை நியமித்ததுடன் கே.பி. அவர்கள் தனது பணியை முடித்துக் கொண்டு தற்போது, சிங்கள தேசத்தின் பிடியில் உள்ளார். அவர் குறித்து வெளிவரும் தகவல்கள் தலை சுற்றுவதாக இருந்தாலும், இறுதி யுத்த காலத்தில் அவரது பங்கு என்ன எனபது வெளியாக இன்னமும் சில காலம் செல்லலாம்.

ஆதலாம் தற்போதைக்கு திரு. உருத்திரகுமாரன் அவர்களது அரசியல் நகர்வைக் கட்டுப்படுத்தும் காயாக கே.பி.யை முன் நிறுத்துவதில் இவர்கள் முனைப்புக் காட்டி வருகின்றனர். முள்ளிவாய்க்கால் பேரவலம் வரை தமிழ்த் தேசிய ஊடக பலமாக விளங்கிய ‘தமிழ் நாதம்’, ‘புதினம்’ ஆகிய இணையத் தளங்கள் ஈழத் தமிழர்களின் அவலமான காலங்களில் ஆற்றவேண்டிய ஊடகப் பணியை நிறுத்திக் கொண்டதனால் உருவான வெற்றிடத்தை ‘லங்கா சிறி’, ‘தமிழ் வின்’ போன்ற இணையத் தளங்கள் சுவீகரித்துக் கொள்ளும் வரை கண்டு கொள்ளாமல் இருந்த தமிழ்த் தேசியவாதிகள் இப்போது, தலையில் அடித்துக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

தமிழ்த் தேசிய உணர்வையும், புலம்பெயர் தமிழர்களின் ஒன்று பட்ட பலத்தையும் சிதைப்பதையும் குறியாகக் கொண்டு இந்த ஊடகங்கள் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகின்றன. இவை மிகவும் ஆபத்தான தளங்களாக தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் நோக்கப்படுகின்றது. தற்போது, கடந்த சில வாரங்களாக, பிரான்சிலிருந்து வெளியாகி வரும் ‘தாய் நிலம்’ என்ற பத்திரிகையும் திட்டமிட்ட சதிகளை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளது தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமது எதிர்ப்புக்களை வெளிக்காட்டு விதமாக அந்தப் பத்திரிகையை எரிக்கும் சம்பவமும் பாரிஸ் நகரில் இடம் பெற்றுள்ளது. தம்மை நாடு கடந்த தமிழீழ அரசுக்கான உரிமையாளர்களாக நிலைநிறுத்த முயற்சிக்கும் சிலரால் வெளியிடப்படுவதாகக் கருதப்படும் ‘தாய் நிலம்’ பத்திரிகையின் உள்ளடக்கத்தில் தமிழ்த் தேசியச் சிதைவுக்கான முயற்சியே காணப்படுகின்றது. முகவரி இல்லாமலே முதல் இரண்டு பத்திரிகைகள் வெளியாகிய நிலையில், மூன்றாவது பத்திரிகையில் பிரான்சின் புற நகர்ப் பகுதியான ‘லா குர்நோவ்’ என்ற இடத்தில் தற்காலிகமாகது எனக் கூறப்படும் நாடு கடந்த அரசுக்கான செயலகத்தின் முகவரியோடு, திரு. சிவா சின்னப்பொடி அவர்களை ஆசிரியராகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகங்களின் வெளிப்படுகை என்பது மக்களுக்கானதாக, மக்களை இணைக்கும் பாலமாக அமைய வேண்டியது காலத்தின் கட்டாயமாக இரக்கையில், இந்த ஊடகத்தின் ஆசிரியர் தலையங்கமும், கட்டுரைகளும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்குவதும், சிதைவுகளை உருவாக்குவதுமான சிந்தனைகளே வெளிப்படுத்தப்பட்டிருந்தது. மக்களைப் பிளவு படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியத்தைச் சிதைவு படுத்தும் பல முன் முயற்சிகள் இந்தப் பத்திரிகை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று இவர்களது சதியை முறியடிக்க வேண்டியது மிக மிக அவசியமான தேசியப் பணியாக உள்ளது.

பிரான்சில் நாடு கடந்த தமிழீழ அரசின் உத்தியோக பூர்வ பத்திரிகை என்ற தோற்றப்பட்டுடன் வெளிவந்துள்ள இந்தப் பத்திரிகை நாடு கடந்த தமிழீழ அரசுக்கான போர்க் களத்தையே சிதைப்பதாக உள்ளது. இந்தப் பத்திரிகையை வெளியிட்டவர்களின் முழுமையான நோக்கம், தமிழ் மக்களை இரு துருவப்படுத்தி, தமிழ்த் தேசிய எழுச்சியை முறியடிப்பதாக உள்ளதாகவே உணரப்படுகின்றது. சிங்கள தேசம் புலம்பெயர் தேசங்களில் உருவாகக் கூடிய தேசிய எழுச்சித் தளங்களைச் சிதைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், வெளிவரும் தேசியப் பிளவு வாதத்தை முறியடிக்க வேண்டிய கடமை புலம்பெயர் தேசத்தின் ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு.

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போர்க் களத்தைச் சிதைப்பதற்காக அங்கே சில கருணாக்களை உருவாக்கியது போலவே, இங்கும் சில கருணாக்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டே இருக்கும் என்பது நிச்சயம். இந்தப் போர்க் களமும் தோற்கடிக்கப்பட்டு விட்டால், ஈழத் தமிழினம் என்ற அடையாளங்கள் கூட எதிர் காலத்தில் இலங்கைத் தீவில் எஞ்சப் போவதில்லை. திரு. உருத்திரகுமாரன் அவர்கள், தனது நோக்கத்திலும், செயலிலும், செய்தியிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலான ஒன்றுபடுதலின் அவசியம் வலியுறுத்தப்பட்டே வருகின்றது.

அதுவே புலம்பெயர் போர்க் களத்தின் பலமாக அமையும். எமது மக்களது அத்தனை தளங்களின் முரண்பாடுகளும் பேசித் தீர்க்கப்பட வேண்டியவையே அல்லாது, துருவப்படுத்தல் மூலமாக அல்ல. எமக்கு முன்னால் ஆயிரம் பணிகள் குவிந்துள்ளன. அதற்காகப் பல்லாயிரம் பணியாளர்களும், தொண்டர்களும், எஞ்சியுள்ள அத்தனை தமிழர்களது ஆதரவுத் தளமும் அவசியமானது. யாராலுமே தனித்துப் பயணிக்க முடியாத பாதையில், ஒன்று படுதல் என்பதே முதற் பணியாக உள்ளது. இந்தப் பணியில் நாடு கடந்த தமிழீழ அரசும், மக்கள் பேரவைகளும் இணைந்து பயணிப்பதன் அவசியம் உணரப்பட வேண்டும்.

இப்போது முரண்பாடுகளின் பிடியில் சிக்கியுள்ள அனைவருமே 2009 மே 18 இற்கு முன்னர் ஒரே தளத்தில், ஒன்றாக, விடுதலைப் புலிகளாகப் போர்க் களங்களில் பணியாற்றியவர்களே. தேசியத் தலைவர் அவர்கள் அனைவர் தேள்களிலும் இந்த விடுதலைப் போரை வென்றெடுக்கும் பணியினைச் சுமத்தியுள்ளார். எங்கள் சூரியத் தேவனின் சொல்லுக்கு மிஞ்சிய தேவ தூதர்கள் யாரும் பிறக்கப் போவதில்லை. அவர்தம் வார்த்தையே எங்கள் வேதம். அவர் இட்ட கட்டளைகளை மட்டுமே காதில் எடுத்துக்கொண்டு அவர் காட்டிய பாதையில் பயணிப்போம்.

ஒன்றாக… ஒற்றுமையாக… எங்கள் இலக்கை நோக்கிப் பயணிப்போம். ‘நாடு கடந்த தமிழீழ அரசும் மக்கள் பேரவையும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக எதிரிகளை வேட்டையாடட்டும். தமிழீழ இலட்சியத்தை அடையட்டும்’ இதுவே நாடு கடந்த தமிழீழ அரசுக்கான நிறைவேற்றுப் பணிப்பாளரான திரு. உருத்திரகுமாரன் அவர்களது குறிக்கோளாகவும் உள்ளது.

அகத்தியன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*