TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வலிசுமந்த வன்னி வாழ்க்கை: பாகம்-5 – இராவணேசன்

மாவீரர் துயிலிடங்கள்:

கிளிநொச்சிக்குப் பின்னான காலகட்டத்தில் விசுவமடுவில் அமைந்திருந்த தேராவில் மாவீரர் துயிலும் இல்லமே பிரதான துயிலும் இல்லமாக விளங்கியது. காரணம் முள்ளியவளைப் பகுதி ஏலவே சூனியப் பகுதியாக மாறியிருந்தது. இந்த நிலையில் விதையாகின்ற அனைத்து மாவீரர்களையும் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திலேயே விதைக்க வேண்டி சூழல் எதிர்கொள்ளப்பட்டது.

அந்தத் துயிலும் இல்லமும் படையினரால் ஆக்கிரமிக்கப்படுகின்ற போது இரணைப்பாலையின் 25ஏக்கர் என்கின்ற தென்னந்தோட்டப் பகுதி துயிலும் இல்லத்திற்குரிய இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேராவிலுக்குப் பின்னர் விதைக்கப்பட்ட துயிலும் இல்லங்களில் குறித்த துயிலும் இல்லத்தில் ஆயிரக்கணக்கான மாவீரர்கள் விதைக்கப்பட்டுள்ளனர். இந்தத் துயிலும் இல்லம் மாத்தளன் புதுக்குடியிருப்பு வீதியோரத்தில் உள்ள தென்னந் தோட்டத்திலேயே அமைக்கப்பட்டிருந்தது.

பல்வேறு தடவைகள் வித்துடல்கள் விதைக்கப்படுகின்றபோது துயிலும் இல்லத்தினை நோக்கி எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் ஆனந்தபுரத்திற்கும் வலைஞர் மடத்திற்கும் இடைப்பட்ட நீராவியடி என்கின்ற வயல்வெளியை அண்டிய பகுதியிலும் நூற்றுக்கணக்கான மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கபட்டன. அதேபோன்று வலைஞர்மடத்திற்கும் பனையடி என்ற பகுதிக்கும் இடைப்பட்ட பனை மரங்கள் நிறைந்த பகுதியில் மற்றொரு துயிலும் இல்லம் அமைக்கப்பட்டது. குறித்த பகுதி உயர்வான பகுதி ஆகையால் அந்தப் பகுதியில் வித்துடல்களை விதைக்கின்ற போது தொலைதூரத்தில் இருந்து படையினரால் அவதானிக்கப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

தாயக விடுதலைப் போர் தொடங்கி அது மிகப் பாரிய பின்னடைவைச் சந்தித்த போது இறுதியாக அமைக்கப்பட்ட துயிலும் இல்லம் அமைந்த இடம் முள்ளிவாய்க்கால் கிழக்கு கப்பல் பாதையை அண்டியதாக அமைக்கப்பட்டது. கப்பல்ப் பாதை என்பது யோர்தான் நாட்டுக்குச் சொந்தமான கப்பல் அரிசியுடன் முல்லைத்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய போது அது விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டு தரித்து நிறுத்தப்பட்ட பகுதிக்குச் செல்லும் வீதியாகும். குறித்த வீதிக்கு மிக அருகாகவே இறுதியான துயிலும் இல்லம் அமைக்கப்பட்டிருந்தது.

மாவீரர் இறுதி நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிட வேண்டும், வீரச்சாவுகள் நிகழ்கின்ற போது முன்னர் மாவீரர்களின் வீடுகளில் வித்துடல்கள் வைக்கப்பட்டு ஒன்று தொடக்கம் இரண்டு நாட்கள் வணக்கம் செலுத்தப்பட்டு உறவுகளுடன் அலங்கரிக்கப்பட்;ட ஊர்தியில் வித்துடல் துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப்பட்டு முழுமையான இராணுவ மரியாதைகளுடன் தூய விதைகுழியில் விதைக்கப்படும்.

ஆனால் போர் நெருக்கடி அதிகரிக்க அதிகரிக்க இவ்வாறான மரபுகளைக் கைக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை எதிர்கொள்ளப்பட்டது. பொதுவான மண்டபங்களில் வித்துடல்கள் வைக்கப்பட்டதும், வாகனங்களில் மிக நெருக்கமான உறவினர்கள் ஏற்றிவரப்பட்டு இறுதி வணக்கம் செலுத்தப்பட்டு நாங்கள் மேற்குறிப்பிட்ட துயிலும் இல்லங்களில் வித்துடல்கள் விதைக்கப்பட்டன.

நெஞ்சு கனக்கும் சிலவிடயங்களை இந்த இடத்தில் சொல்வதில் மிகக் கடினமாய் இருக்கிறது ஆனாலும் சொல்லியே ஆகவேண்டும், மாவீர்களைச் சுமக்கும் பேழைகளை உருவாக்குவதில் நெருக்கடிகள் காணப்பட்டன. இதனால் ஒரு சில பேழைகளையே அனைத்து மாவீரர்களுக்கும் பயன்படுத்தவேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டது என்பதுடன் மாவீர்கள் விதைக்கப்படுகின்ற போது வரிச் சீருடை அணிவிக்கப்பட்டே விதைக்கப்படுவார்கள். ஆனால் வரிச் சீருடைக்கான தட்டுப்பாடும் பாரிய அளவில் ஏற்பட்டமையால் அந்த மரபும் மீறப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்தேறின.

ஒரு கட்டத்திற்கு அப்பால் குறிப்பாக மே 13ஆம் திகதிக்குப் பின்னர் வீரச்சாவுகள் அதிகரித்தன. ஆனால் வீரச்சாவடைந்த மாவீரர்களை சரியான முறையில் விதைப்பதற்கான வழிகளோ, சந்தர்ப்பமோ கிடைக்கவில்லை என்ற மிக சோகமான சம்பவங்களும் நடைபெற்றன.

இறுதி நாட்கள்:
இறுதி நாட்கள் மிக மோசமானவை குறிப்பாக மே 13இல் இருந்து இறுதி நாட்களின் கொரூரம் மிக மிக கோரமாகத் தலைவிரித்தாடியது. எங்கும் பிணக்குவியல்கள், எங்கும் மரண ஓலங்கள், வீதிகளில் காயமடைந்த நிலையில் ஒப்பாரி வைக்கும் பிஞ்சுகள் முதல் பெண்கள் வரையில் செய்வதறியாது போவோர் வருவோரின் கால்களைப் பிடித்து கதறி அழுத்தார்கள், கெஞ்சினார்கள். ஆனால் எதற்கும் செவிமடுக்க முடியாத நிலையில் ஏனைய மக்கள் காணப்பட்டனர். காரணம் அந்த அழைப்புக்களைச் செவிமடுத்து நின்றால் அல்லது உதவி செய்ய முற்பட்டால் அவர் அல்லது அவரை நம்பியிருக்கும் ஏனைய உயிர்களின் நிலை கேள்விக்குறியாகிவிடும்.

வீதியில் முழுமையாக தரித்து நின்ற பல்லாயிரக்கணக்கான வாகனங்களைக் கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்ட அதேவேளை குறித்த வாகனங்களாலேயே பல்லாயிரம் உயிர்கள் காக்கப்பட்டும் இருந்தன. காக்கப்பட்டதற்கான காரணம் இறுதி நாட்களில் எறிகணைத்தாக்குதல்களின் அகோரம் ஒப்பீட்டளவில் குறைந்தாலும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதல்கள், குறுந்தூர எறிகணை, கைக்குண்டு மற்றும் பதுங்கிச்சுடுதல் போன்ற தாக்குதல்களே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. குறித்த தாக்குதல்களை வீதிகளிலும் காணிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தின. இதனால் பல்லாயிரம் உயிர்கள் காக்கப்பட்டன என்பது உண்மைதான்.

ஆனாலும் இதற்கு மாறான சம்பவங்களும் நடந்து முடிந்தன. பதுங்குகுழிகள் இல்லாத நிலையில் மக்கள் இடம்பெயர்ந்து வரவர தாக்குதல் தீவிரம் அதிகரித்தது. இந்த வேளையில் மக்கள் தங்களைக்காத்துக் கொள்ள வாகனங்களின் கீழே பதுங்கிக் கொண்டனர். வாகனங்களைச் சேர்த்து துணிகளைக் கட்டி குடிசைகளாக்கிக் கொண்டனர். அந்த வேளை எறிகணைகள் குறித்த வாகனத்தின் மீது வீழ்ந்தால் அத்தனை உயிர்களும் கருகிப் போகும் அவலம் மிகக் கொடிதாய் நிகழ்ந்தது.

இதேவேளை மே 14ஆம் திகதியுடன் மருத்துவமனைச் செயற்பாடுகள் முழுமையாகத் தடைப்பட்டன. தொடர்ந்து மேற்கொள்ள முடியாத அளவிற்கு மருத்துவமனையினை இலக்குவைத்து தொடரான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. குறித்த மருத்துவமனை முள்ளிவாய்க்கால் கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அமைந்திருந்தது. குறித்த மருத்துவமனை தான் வன்னிப் போரின் இறுதி மருத்துவமனையாகும். இதே மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தான் ஏனைய மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களிலும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனை செயலிழந்தமையால் காயமடைந்த அனைவரும் இரத்தம் வெளியேறும் நிலையினை எதிர்கொண்டு உயிரிழப்பு வீதம் மிகவும் உயர்ந்தது.

மருத்துவர்களும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட மருத்துவ உதவியாளர்களும் மருத்துவப் பணிக்காகத் தயாராக இருந்த போதிலும் போர்ச் சூழல் மருத்துவப் பணியாற்றமுடியாத சூழலை ஏற்படுத்தியது. இதனை அடுத்தே மே 16 மருத்துவர்களும், மேலதிக அரச அதிபரும் அவர்களைச் சார்ந்தோரும் முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறினர். அவர்கள் வெளியேறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக மருத்துவ கலாநிதி வரதராஜா நெஞ்சில் படுகாயம் அடைந்தநிலையில் மயக்கம் அடைந்தார். அவர் மயக்கம் அடைந்த நிலையிலேயே படை ஆக்கிரமிப்புப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டதாக பின்னர் அறிய முடிந்தது.

போரின் தீவிரம் வேகம் பெற வேகம் பெற மக்கள் வட்டுவாகல் (வெட்டுவாய்க்கால்) பகுதியை நோக்கி நகரத் தலைப்பட்டனர். சில மாதங்களாக பசியின் பிடியில் வாடிய மக்களின் பசியினையும் தாகத்தினையும் அதிகரிக்கும் வகையில் மக்கள் நிமிரமுடியாத அளவிற்கு தாக்குதல் கொடூரம் இடைவிடாது தொடர்ந்தது.

இந்த இடங்களில்தான் தாய் இறந்த நிலையில் குழந்தை தாயில் பால்குடித்த சம்பவங்கள், கால்கள் இழந்த நிலையில் நகரமுடியாது தங்களைக் தூக்குமாறு கெஞ்சி அழுத அவலங்கள், காயமடைந்து மயக்கமடைந்தோரை இறந்ததாகக் கருதி மண்ணில் புதைத்த கொடுமையின் பின்னான ஆற்றாமைகள், ஒரு சொட்டுத் தண்ணீர் கிடைக்காதா என ஏங்கிய பச்சிளம் குழந்தைகளின் ஓலக்குரல்கள், கண்களுக்கு முன்பாகவே துப்பாக்கிரவைகள் பட்டு இயங்கமுடியாத நிலையினை எதிர்கொண்ட உறவுகளின் கண்ணீர்த் துயரங்கள் இன்னமும் பல்லாயிரம் அவலங்கள் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்காலுக்கும் வட்டுவாகலுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் அரங்கேறின.

ஆற்றாமை, அவலம், கோபம், பிரிவு, ஒப்பாரி, பசி, தாகம், துயரம், காயம், சாவு, வெப்பியாரம், குமுறல் இன்னும் எத்தனை உள்ளதோ அத்தனைக்கும் அர்த்தம் அந்த மண்ணில் கிடைத்தது.

மக்கள் நெருங்கி நெருங்கி நடந்தார்கள் அடி மேல் அடிவைத்து நகர்ந்தார்கள். நான்கு புறங்களிலும் படை சூழ்ந்து கொண்டது அதனை எதிர்த்து மூர்க்கத்தனமாக போராளிகள் சமராடினர். எந்தக் காப்பும் இன்றி நேர் எதிர்நின்று சமர்புரிந்த போராளிகள் இன்னமும் மக்களின் மனங்களில் நின்கின்றார்கள். ‘தயவு செய்து அகன்று செல்லுங்கள் சிறிது நேரத்தில் வெடிக்கப் போகின்றோம்’ எனச் சொல்லி மக்களை வெளியேற்றி வெடித்த போராளிகளின் அர்ப்பணிப்புகளும் இன்னமும் மக்களின் மனங்களில் பச்சையாய் பதிந்திருக்கின்றது.

இதேவேளை பதினேழாம் திகதி முள்ளிவாய்க்காலில் இருந்த மக்களைத் திரும்பிப்பார்க்க வைத்த சம்பவம் நந்திக்கடலை அடுத்த கேப்பாபுலவு என்ற கிராமத்தில் நிகழ்ந்தது. மிகப் பாரிய சண்டை, அனைத்து பகுதிகளிலும் இருந்து குறித்த பகுதியை நோக்கிய செல்மழை, துப்பாக்கிச் சண்டை என மக்கள் வன்னியில் பார்த்த சண்டைகளைவிடவும் மேலான ஒரு மிகப் பெரும் சமரை முள்ளிவாய்க்காலில் இருந்த மக்கள் கேப்பாபுலவு காட்டுப் பகுதியில் பார்த்தார்கள்.

அந்தச் சண்டையின் தொடர் நகர்ந்து நகர்ந்து மக்கள் முல்லைத்தீவை அடைந்ததன் பின்னர் மணலாற்றுக் காட்டுப் பகுதியிலும் எதிரொலித்ததை இறுதி நாட்களில் வெளியேறியோர் நன்கறிவர். மணலாற்றுக் காட்டுப் பகுதியில் தன்னியக்க வேவு விமாங்கள், உலங்கு வானூர்திகள் இரண்டு நாட்களாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை பற்றி இன்னமும் அங்கிருந்து வெளியேறிய மக்கள் பேசிக்கொள்வார்கள்.

மீண்டும் மக்கள் அவலத்தின் தொடருக்கு வருகின்றோம். வீதியில் அங்குலம் அங்குலமாக அடியெடுத்து நடக்கும் மக்கள் வீதிகளில் நடக்கின்றபோது எதிரே வீழும் உடல்களைக் கடந்தே செல்கின்றனர். அதேவேளை தார் வீதியில் செல்கின்றபோது கால்களில் மனித இரத்தம், மனித சதைத் துண்டங்கள் எல்லாம் ஒட்டுகின்றன. கண்ணீர் வராத முகத்தினை பார்க்கமுடியவில்லை. அனைவரும் அழுகின்றனர். ஏனோ அழுகின்றனர். எல்லாம் முடிந்தது. இத்தனையும் இழந்தோம், இத்தனை அவலங்களைச் சுமந்தோம்.

எண்ணிலடங்கா இடர்களைக் கடந்தோம், இழக்கக் கூடாத இழக்க முடியாத உயிர்களை இழந்தோம் இறுதியில் வரிசையில் கையேந்தும் நிலைக்கு வந்துவிட்டோம் என்ற வெப்பியாரம் கொப்பளிக்க நகர்ந்தார்கள் வன்னி மக்கள், வன்னி என்கின்ற மிகப் பெரும் திமிர்கொண்ட தேசம் கூனிக்குறுகியது, எதற்கும் அசையாத செல்வச் செருக்குக் கொண்ட வன்னித்தாய் தன்னை சிவப்புக்கலந்த வெண்நிறப் புடைவையால் மூடிக் கொள்கிறாள். வட்டுவாகல் பாலத்தில் பயணித்த மக்களது கண்கள் பார்த்த நீர்ப்பரப்பெங்கும் பிணக்குவியல்கள் தென்படுகின்றன.

ஊதிப்பெருத்த உடலங்கள் எல்லாம் கடந்து முட்கம்பி வேலிகளுக்குள் வன்னி அடங்கிக்கொள்கின்றது. இன்னமும் எத்தனை ஆயிரம் குற்றுயிர்களைச் சுமந்த உடல்கள் முள்ளிவாய்க்காலில் ஓலக்குரல் எழுப்புகின்றனவோ தெரியாது?

நிறைவு.

இராவணேசன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles, Featured

Your email address will not be published. Required fields are marked *

*