TamilSpy

பொழுது போக்கு இணையம்…

த.தே.கூட்டமைப்பு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்!

வன்னியில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மற்றும், தடுப்பு முகாம்களில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப் பட்டுள்ள தமிழ் மக்களை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நேரில் சென்று பார்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இறுதிக் கட்டப் போரின்போது சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து உயிரோடு தப்பி வந்து, வதை முகாம்களில் அடைக்கப்பட்டுக் கொடுமைப் படுத்தப்பட்ட அம் மக்களை, அந்த மக்களின் பிரதிநிதிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்வோர் ஒரு வருடங் கடந்த நிலையிலாவது, பெரு மனதுடன் நேரம் ஒதுக்கி, நேரில் சென்று பார்க்க முடிவு செய்தமையைப் பாராட்டியே ஆக வேண்டும்.

தேர்தலுக்கு மட்டுமே பொதுமக்களைச் சந்திப்பதும், தேர்தல் முடிந்த கையோடு வாக்காளர்களை மறந்துவிட்டு, மீண்டும் அடுத்த தேர்தலின் போது மாத்திரம் வாசலுக்கு வருகை தந்து மக்களைச் சந்திக்கும் பெரும்பாலான அரசியல்வாதிகளோடு ஒப்பிடும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வளவோ மேல் எனலாம்(?)

ஏற்கனவே பதவியில் இருந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் கடந்த தேர்தலோடு காணாமற் போய் புதிதாக ஒருசிலர் தெரிவு செய்யப் பட்டுள்ள நிலையில், புதியவர்களின் வற்புறுத்தலின் பேரில்தான் பழையவர்கள் இந்த முடிவிற்குச் சம்மதித்திருக்க மாட்டார்கள் என நம்புவோமாக.

அதேநேரம், ஒரு வருடமாக இருந்திராத கரிசனை தேர்தல் சமயத்திலும், அதன் பின்னான காலப் பகுதியிலும் ஏற்பட்டுள்ளமையை விசேட கவனத்துடனேயே பார்க்க வேண்டும்.

விரும்பியோ விரும்பாமலோ இன்றைய நிலையில் தமிழ் மக்களின் சார்பில் குரல்தரவல்ல நிலையில் விளங்கும் அரசியல் சக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே.
ஆனால், அதற்காக தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் அக் கட்சியிடம் கைளித்துவிட முடியுமா என்றொரு கேள்வி எழுகின்றது.

தேர்தல் முடிந்த கையோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறி லங்காவுக்கான இந்தியத் தூதுவரைச் சந்தித்து விருந்துண்டு அளவளாவி இருக்கின்றார்கள். இதன்போது தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் தீர்வு தொடர்பாகவும் கலந்துரையாடப் பட்டிருக்கக் கூடும்.

தொடர்ந்து வந்த நாட்களில் சிறி லங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ{க்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கும் இடையே சந்திப்பு ஒன்று நடைபெற்றிருக்கின்றது. இதில் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக பேசப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

இச்சந்திப்பில், தீர்வுத் திட்டம் தொடர்பில் என்ன பேசப்பட்டது என்ற விபரங்கள் வெளிவரவில்லை. ஆனால், கட்சிக்குள் இது தொடர்பில் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளாவது கலந்துரையாடப் பட்டிருக்கும் என நம்புவோம். எனினும், இது தொடர்பில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இதுவரை வாயே திறக்கவில்லை.

இந்த இரண்டு சந்திப்புக்களுக்கும் மீளக் குடியமர்த்தப் பட்ட மக்களை தற்போது கூட்டமைப்பு உறுப்பினர்கள் சந்திப்பதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கக் கூடுமா?

அந்த மக்களைச் சந்திப்பதால் இதுவரை வெளிவராத புதிய விடயம் எதனையும் தெரிந்து கொள்ளவோ அன்றி அந்த மக்களின் இழிநிலைக்குப் பரிகாரம் காணவோ கூட்டமைப்பு உறுப்பினர்களால் முடியாது என்பது தெரிந்த விடயமே. ஆறுதல் கூறுவதைத் தவிர அவர்களால் ஆகப் போவது வேறு எதுவும் இல்லை என்பதே யதார்த்தம்.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதில் பெரும் பங்கு வகித்த இந்தியா, தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் தானே தயாரித்த தீர்வுத் திட்டம் ஒன்றைக் கொண்டிருக்கின்றது என்ற அபிப்பிராயம் பரவலாக உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் ஒரு சிலருடன் இந்திய உளவு ஸ்தாபனமான ‘றோ”வின் பிரதிநிதிகள் ஒருசில மாதங்களின் முன்னர் நடாத்திய சந்திப்பின் போது இதுபற்றி அளவளாவப் பட்டதாகத் தெரிய வருகின்றது.

ஆக இப்போது எழுகின்ற கேள்வி என்னவென்றால் 87 இல் செய்ததைப் போன்று மற்றுமொரு அரைகுறைத் தீர்வுத் திட்டத்தை இந்தியா எம் மீது திணிக்கப் போகின்றதா என்பதே! அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்கப் பாட்டுடன்!

இந்தியத் தூதுவருடன் நடந்த சந்திப்பு பற்றிய விபரங்கள் பகிரங்கப் படுத்தப் படாததன் மூலம் இது விடயத்தில் உண்மையிருக்கக் கூடும் என்ற ஐயம் அதிகரிக்கின்றது.

யதார்த்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னைவிடப் பலம் இழந்த நிலையிலேயே இருக்கின்றது. எனவே, இந்தியா என்ன தீர்வுத் திட்டத்தை முன்வைத்தாலும் தலை அசைத்தே ஆகவேண்டும்.

தமிழ் மக்களின் நலனைக் கருத்திற் கொள்ளாமல் தனது பிராந்திய நலனை மாத்திரம் கருத்திற் கொண்டு முன்வைக்கப்பட்ட அரைவேக்காட்டுத் திட்டமே 13 ஆவது திருத்தச் சட்டமாக இன்றும் சேடமிழுத்துக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவைத் தட்ட முடியாது என்பதற்காக உப்புச் சப்பற்ற தீர்வுத் திட்டமொன்றை ஏற்றுக் கொள்வதால் ஆகப் போவது எதுவுமில்லை. எமது மக்களின் இழப்புக்கு அது பரிகாரம் ஆகவும் மாட்டாது. அதேவேளை, இன்றைய தருணத்தில் கிடைக்கும் எதனையும் இழக்கும் நிலையிலும் நாம் இல்லை.

எனவே, திட்டத்தைப் பகிரங்கப் படுத்துவதன் ஊடாக அதற்கு எதிராக உருவாகக் கூடிய அல்லது உருவாக்கப்படக் கூடிய பொது மக்கள் அபிப்பிராயம் பேரம் பேசுவதற்கு உதவக் கூடும்.

அது மாத்திரமன்றி, தாயகத்துக்கு வெளியே வாழும் புலம்பெயர் தமிழர்களின் கருத்தும், ஆதரவும் இது விடயத்தில் பெறப்பட வேண்டும்.

தூரதிர்ஸ்டவசமாக, இன்றைய நிலையில் புலம்பெயர் தமிழர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே முறையான புரிந்துணுர்வுடன் கூடிய ஒரு தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. அத்தகைய மிகவும் அவசியமான தொடர்பு உருவாக்கப்பட்டே ஆகவேண்டும்.

புலம்பெயர் தமிழர்களின் ஒருசில அரசியல் முன்னெடுப்புக்கள் சிலவேளைகளில் கூட்டமைப்புக்கு ஏற்புடைத்ததாக இல்லாமல் இருக்கக் கூடும். அல்லது வெளிப்படையாக அவற்றுக்கு ஆதரவு அளிப்பதில் சிக்கல்கள் இருக்கக் கூடும். ஆனால், அதற்காக கணிசமான எண்ணிக்கையில் வெளிநாடுகளில் வாழும் அவர்களை ஒதுக்கிவிடக் கூடாது. ஒதுக்கி விடவும் முடியாது.

தமிழ் மக்களின் அரசியல் பலத்தை கடந்த இரண்டு தசாப்தங்களாகத் தன்னகத்தே கொண்டிருத்த விடுதலைப் புலிகள் இன்று அழிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையில் பாரிய பொறுப்பு சுமத்தப் பட்டுள்ளது. இந்நிலையில், இனிவரும் தலைமுறை துரோகிகள்| என அவர்களை வசைபாடாத வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புணர்வுடனும் தீர்க்க தரிசனத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.

சண் தவராஜா.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*