TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மௌனத்தின் வலி யாருக்கும் புரிவதாக இல்லை!

இரு தடவைகள் தென்னிலங்கை இளைஞர்கள் நடத்திய ஆயுதக் கிளர்ச்சிகள் அரசாங்கப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டு ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீரவும் கொல்லப்பட்டதற்கு பிறகு “அந்தப் பயங்கரவாதத்தின் தோல்வியை ஏன் தென்னிலங்கை மக்கள் தடபுடலாகக் கொண்டாடவில்லை என்பதையும் வருடாந்தம் தேசியக் கொண்டாட்டங்களை நடத்துவதற்கு ஏன் அரசாங்கங்கள் தீர்மானிக்கவில்லை என்பதையும் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இன்றைய அரசாங்கமும் தென்னிலங்கை மக்களும் உண்மையில் பயங்கரவாதத்தின் வெற்றியையா கொண்டாடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். என தினக்குரல் நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது.

* போர் முடிவின் ஒருவருட நிறைவும் தமிழர் நிலையும் என தலைப்பிட்டு விசனம் தெரிவித்திருக்கும் தினக்குரல் நாளேட்டின் ஆசிரியர் தலையங்கத்தின் சில முக்கிய கருத்தில்

போர் முடிவின் ஒருவருட நிறைவும் தமிழர் நிலையும் இலங்கையின் சுமார் மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து இன்றுடன் சரியாக ஒருவருடம் நிறைவு பெறுகிறது.

போரின் இறுதிக் கட்டத்தில் வன்னியில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரங்களில் இலங்கை அதுகாலவரை கண்டிராத அவலங்களை அனுபவித்த மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வவுனியா அகதி முகாம்களில் குவிந்து கொண்டிருந்த வேளையில் தென்னிலங்கை ஆரவாரமாக கொண்டாட்டங்களில் மூழ்கியிருந்தது.

உள்நாட்டுப் போரின் விளைவாக இலங்கைச் சமுதாயத்தில் ஏற்பட்டிருந்த மிகவும் ஆழமான இனப்பிளவை போர்வெற்றிக் கொண்டாட்டங்கள் பிரகாசமாகப் பிரதிபலித்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. போர் வெற்றியின் முதலாவது வருட நிறைவைக் கொண்டாடுவதற்கான நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாட்டின் சகல மாவட்டங்களிலும் அரசாங்கத்தினால் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்வுகள் இன்றைய தினத்துடன் முடிவடையவிருந்த போதிலும், ஜி15 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரானுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வதற்கு வசதியாக இறுதி நிகழ்வான முப்படைகளினதும் பிரம்மாண்டமான கொழும்பு காலி முகத்திடல் அணிவகுப்பு நாளை மறுதினம் இடம்பெறவிருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் போர்வெற்றித் தினத்தை தேசிய நிகழ்வாகக் கொண்டாடப் போவதாகவும் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு தொடர்பிலான இலங்கை மக்களின் உணர்வுகளும் இனப்பிளவைப் பிரதிபலிப்பவையாகவே அமைந்திருக்கின்றன.

இலங்கைப் படைகள் இன்னொரு நாட்டின் படைகளைப் போரில் தோற்கடிக்கவில்லை. அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்கள் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வைக் காணத் தவறியதன் விளைவாக வடக்கு, கிழக்கில் தோன்றிய தமிழ்த் தீவிரவாத அரசியல் இயக்கங்களில் இறுதிவரை ஆயுதப் போராட்டத்தைக் கைவிடாமல் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு இயக்கமே தோற்கடிக்கப்பட்டு அதன் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தன. அடிப்படையில் இந்தப் போர் இந்தியா உட்பட பல வெளிநாடுகளின் உதவியுடன் அரசாங்கத்தினால் அதன் சொந்தப் பிரஜைகளில் ஒரு பிரிவினருக்கு எதிராகவே நடத்தி முடிக்கப்பட்டது.

தொடர்ந்து கொண்டாட்டங்களை நடத்துவது போருக்குப் பின்னரான இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு குந்தகமாகவே அமையும் என்று வெளிப்படுத்தப்பட்டிருக்கக்கூடிய கருத்துக்கு தங்கள் எதிர்வினையைக் காட்டியிருக்கும் சில கொழும்பு அரசியல் அவதானிகள் பயங்கரவாதக் கொடுமையினால் மூன்று தசாப்தங்களாகப் பெரும் அழிவுகளையும் அவலங்களையும் சந்தித்த இலங்கை மக்கள் அந்தப் பயங்கரவாதத்தின் தோல்வியை கொண்டாடுவதற்கு முற்றிலும் உரிமையும் அருகதையும் உடையவர்கள் என்று வாதத்தை முன்வைக்கிறார்கள்.

* இரு தடவைகள் தென்னிலங்கை இளைஞர்கள் நடத்திய ஆயுதக் கிளர்ச்சிகள் அரசாங்கப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டு ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீரவும் கொல்லப்பட்டதற்கு பிறகு “அந்தப் பயங்கரவாதத்தின் தோல்வியை ஏன் தென்னிலங்கை மக்கள் தடபுடலாகக் கொண்டாடவில்லை என்பதையும் வருடாந்தம் தேசியக் கொண்டாட்டங்களை நடத்துவதற்கு ஏன் அரசாங்கங்கள் தீர்மானிக்கவில்லை என்பதையும் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இன்றைய அரசாங்கமும் தென்னிலங்கை மக்களும் உண்மையில் பயங்கரவாதத்தின் வெற்றியையா கொண்டாடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

முல்லைத்தீவுக் கரையோரத்தில் விடுதலை புலிகளைத் தோற்கடித்த அரசாங்கப்படைகள் தேசிய இனப்பிரச்சினையையும் அங்கேயே புதைத்துவிட்டார்கள் என்று கடந்தவருடம் இதேநாட்களில் சிங்கள கடும்போக்கு அரசியல்சக்திகள் கூறியிருந்ததை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இனநெருக்கடிக்கு இராணுவத் தீர்வு காணப்பட்டுவிட்டதாக அந்தச் சக்திகள் கொண்டிருக்கும் நம்பிக்கையே அந்த வார்த்தைகளாக வெளிப்படுத்தப்பட்டிருந்தன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இன்று தென்னிலங்கை சிங்கள அரசியல் சமுதாயம் முழுவதுமே அத்தகைய மனநிலையிலேயே இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன என்ற எண்ணமே சிங்கள அரசியல் சமுதாயத்திடம் இன்று இல்லை என்றுதான் கூறவேண்டும்.

கடந்தவருடம் இதேகாலகட்டத்தில் அரசாங்கப் படைகளினால் மீளக்கைப்பற்றப்பட்ட தமிழ்ப் பகுதிகளில் படையினருக்கான நினைவுத் தூபிகளையும் புத்தர்பெருமானின் சிலைகளையும் பரவலாக நிறுவுவதற்கு கொடுத்த முன்னுரிமையை இடம்பெயர்ந்த மக்களுக்கு உருப்படியான முறையில் புனர்வாழ்வு அளித்து அவர்களை மீளக்குடியமர்த்துவதில் அரசாங்கம் காண்பிக்கவில்லை.

தமிழ்த் தேசியவாதம் மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியதாக எந்தவடிவிலும் தீவிரமாகத் தலைகாட்டாதிருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்பதில் அரசாங்கமும் சிங்கள அரசியல் சமுதாயமும் குறியாக இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

தமிழர் பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கல் மூலமாக அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டுமென்ற நெருக்குதல்கள் இந்தியாவிடமிருந்தோ அல்லது சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகளிடமிருந்தோ மீண்டும் வராதிருப்பதை உறுதிசெய்வதே அரசாங்கத்தின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையின் முக்கியமான அம்சமாக இருக்கிறது.

விடுதலைப்புலிகளுக்குப் பதிலாக, தற்போது புலம் பெயர்ந்த தமிழர்களின் அரசியல் செயற்பாடுகள் பற்றி சிங்கள மக்களுக்கு பூச்சாண்டி காட்டப்படுகிறது.

அதேவேளை சர்வதேச சமூகத்தை சாந்தப்படுத்துவதற்கான முயற்சிகளிலும் மறுபுறத்தில் அரசாங்கம் அக்கறை காட்ட ஆரம்பித்திருக்கிறது. இதன் விளைவுதான் உள்நாட்டுப் போரில் இருந்து பெற்றுக் கொண்ட பாடங்களும் தேசிய நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு நியமனமாகும்.

போர் முடிவுக்கு வந்து ஒருவருடம் நிறைவுறும் கட்டத்தில் நேற்றையதினம் எட்டுப் பேரைக் கொண்ட ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட 2002 பெப்ரவரி தொடக்கம் போர் முடிவுற்ற 2009 மே வரையான நிகழ்வுகளுக்கு மறைமுகமாக அல்லது நேரடியாக பொறுப்பானவர்களை கண்டறிவதே இந்த ஆணைக்குழுவின் பிரதான நோக்கமாகும். ஆனால், தமிழ் மக்களுக்கு ஆணைக்குழுக்களைப்பற்றி எந்தவிதமான அக்கறையுமேயில்லை.

உள்நாட்டுப் போரின் விளைவான அவலங்களில் இருந்து மீட்சிபெறுவதற்கு உதவக்கூடிய உருப்படியான செயற்பாடுகளையும் காணமுடியாமல், அரசியல் ரீதியில் தங்களின் குரலை வலுவான முறையில் ஒலிக்க முடியாதவர்களாக மௌனமாக தமிழர்கள் அழுகிறார்கள். மௌனத்தின் வலி யாருக்கும் புரிவதாக இல்லை!

எனக்குறிப்பிடும் தினக்குரல் தனது நேற்றைய ஆசிரியர் பகுதியில் கடவுளும் கனமழையும் என குறிப்பிட்ட வெளியிட்ட கருத்தில் கீழ்வருமாறு தெரிவிக்கிறது

* எமது அரசியல்வாதிகள் உண்மையிலேயே விநோதமான பிறவிகள். மழையோ, வெள்ளமோ, புயலோ, பூகம்பமோ எந்த அனர்த்தத்தையென்றாலும்கூட அரசியலாக்கி கோணல்மாணலாகக் கருத்துகளை வெளியிடுவதற்கு அவர்கள் ஒருபோதும் தயங்குவதில்லை. மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது குறித்தும் அரசியல்வாதிகள் பொதுவில் கவலைப்படுவதில்லை.

கடந்த சில நாட்களாகத் தலைநகர் கொழும்பிலும் நாட்டின் பல பகுதிகளிலும் கனமழை இடைவிடாது பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உள்நாட்டுப் போரின் முடிவின் ஒருவருட நிறைவைக் கொண்டாடுவதற்காகக் கடந்த ஒருவாரகாலமாக அரசாங்கம் நாடுபூராவும் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகள் மழை, வெள்ளம் காரணமாக குழம்பிப்போய்விட்டன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்றைய தினம் கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவிருந்த பிரதான தேசிய நிகழ்வான முப்படைகளின் அணிவகுப்பையும் காலவரையறையின்றி ஒத்திவைக்க வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. மழையையும் பொருட்படுத்தாமல் சில தினங்களாகப் பெரும் பொருட் செலவில் காலி முகத்திடலில் அரங்குகளை அமைத்து படையினரின் ஒத்திகைகளையும் செய்துவந்த பாதுகாப்பு அமைச்சு அணிவகுப்புக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது.

போர் வெற்றியின் முதலாவது வருடாந்தக் கொண்டாட்டங்கள் சீர்குலைந்தமைக்கு இயற்கையினதும் கடவுளினதும் சாபமே காரணமென்று ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) கூறுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

நேற்று முன்தினம் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா போர் வெற்றியை முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் பகிர்ந்துகொள்ளாமல் முழுப்பெருமையையும் தனதாக உரிமைகொண்டாடிக்கொண்டு அரசாங்கம் கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதைக் கடவுளே ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இயற்கையின் சாபமே கனமழையாகக் கொட்டிக் கொண்டாட்டங்களைச் சீர்குலைத்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை, பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய ஜே.வி.பி.யின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான சுனில் ஹந்துன்நெத்தி போர் வெற்றிக்குப் பங்களிப்புச் செய்த ஜெனரல் பொன்சேகாவை கடற்படைத் தலைமையகத்தில் சிறை வைத்துக்கொண்டு போர் வெற்றிக்கொண்டாட்டங்களை நடத்துவதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்ததால் இயற்கையே மழையாகக் கொட்டி தண்டனை வழங்கியிருக்கிறது என்று கூறியிருந்தார்.

போர் வெற்றியின் சிற்பியான ஜெனரல் பொன்சேகாவுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகள் காரணமாக அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு அரசாங்கத்தை இயற்கை அனுமதிக்கவில்லை. போர் வெற்றி உகந்தமுறையில் கொண்டாடப்படுவதாக இல்லையென்பதால் நிகழ்வுகளை நடத்த முடியாமல்போயிருப்பது ஒரு சாபத்தின் விளைவேயன்றி வேறு ஒன்றுமில்லை என்றும் ஹந்துன்நெத்தி சபையில் குறிப்பிட்டிருந்தார்.

மார்க்சீயவாதிகள் என்று தங்களைக் கூறிக்கொண்ட ஜே.வி.பி.யின் தலைவர்களுக்கு கடவுள் மீதும் இயற்கை நீதியின் மீதும் தற்போது அளவுகடந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவாக உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

ஜெனரல் பொன்சேகாவை அரசாங்கம் நடத்துகின்ற முறையை கடவுள் ஏற்றுக்கொள்ளவில்லையென்பதால்தான் போர்வெற்றிக் கொண்டாட்டங்களை இயற்கை குழப்பியிருக்கிறது என்பதே ஜே.வி.பி.யினரின் நிலைப்பாடாக இருக்கிறது.

இறுதிக் கட்டப் போரின் போது இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் பொன்சேகாவை கைது செய்து அவரை அரசாங்கம் இராணுவ நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தாமல் இருந்திருந்தால் போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் இயற்கை அனர்த்தம் காரணமாகக் குழம்பியிருக்காது என்பதே ஜே.வி.பி.யினரின் அந்த நிலைப்பாட்டின் உள்ளார்ந்த அர்த்தமாகும்.

ஜெனரல் பொன்சேகா போர்வெற்றிக்குச் செய்த பங்களிப்பை ஏற்றுக்கொண்டு அவரையும் பங்கேற்கச் செய்து கொண்டாட்டங்கள் நடத்தபடுவதாக இருந்தால் அதை ஜே.வி.பி.யினர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் வெளிப்படையாகிறது.

போர்வெற்றியின் முதலாவது வருடாந்தத் தினமான நேற்று முன்தினம் (மே 18) ஜெனரல் பொன்சேகாவின் விடுதலை வேண்டி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் விசேட அதிஷ்டான பூஜையொன்றை நடத்துவதற்கு ஜே.வி.பி. திட்டமிட்டிருந்தது. ஆனால், சீரற்ற காலநிலை காரணமாக அந்தப் பூஜை ரத்துச் செய்யப்பட்டது. இதற்கு ஜே.வி.பி.யின் தலைவர்கள் என்ன கூறப்போகிறார்கள்?

போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட முறையை கடவுள் ஏற்றுக்கொள்ளவில்லையென்பதனாலேயே இயற்கையின் தண்டனை அரசாங்கத்துக்குக் கிடைத்திருக்கின்றதென்றால் ஜெனரல் பொன்சேகாவின் விடுதலை வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பூஜை நடந்தேறுவதையும் அதே கடவுளும் இயற்கையும் ஏன் விரும்பவில்லை?

முன்னாள் இராணுவத் தளபதி விடுதலையாவதை கடவுள் விரும்பவில்லையா?

ஜெனரல் பொன்சேகாவை தடுப்புக் காவலில் வைத்துக்கொண்டு போர் வெற்றிக் கொண்டாட்டங்களை அரசாங்கம் ஏற்பாடு செய்ததை கடவுள் ஏற்றுக்கொள்ளவில்லையென்று நம்பும் ஜே.வி.பி.யின் தலைவர்கள் மற்றும்படி போர் நடத்தி முடிக்கப்பட்ட முறையை அதே கடவுள் முற்றுமுழுவதுமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்று கூறுவதற்கா முன்வருகிறார்கள்?

எல்லாம் கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*