TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வட்டுவாகலில் கணவரையும் 3 பிள்ளையும் பறிகொடுத்த தாய்

சிறிலங்கா அரசின் கொலை வெறித் தாக்குதலின் கொடுமையினால் குழந்தைகளையும் கணவரையும் மண்ணில் புதைத்து விட்டு விதவை என்னும் முத்திரை குற்றப்பட்டு முல்லைத்தீவின் வட்டுவாகல் ஊடாக வவுனியாவிற்கு வந்த அகதி மக்களின் ஒருத்தி கண்ணீருடன் எழுதிக் கொள்வது.

நானும் கணவரும் மூன்று குழந்தைகளுமாக ஐந்து பேரைக் கொண்ட எனது குடும்பம் கிளிநொச்சியில் மிகவும் சந்தோசமாக வாழ்ந்தோம் அச்சமயம் கிளிநொச்சி நகரில் மக்கள் மீது மேற்கொண்ட தரை ஆகாய வழியான கனரக ஆயுதங்களின் கொடூரத் தாக்குதலுக்கு அஞ்சி 2008ம் ஆண்டு காலப் பகுதியில் மக்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்தன எனது குடும்பமும் இடம் பெயர்ந்து வட்டக்கச்சியில் மூன்று மாதங்களாக வசித்து வந்தோம் அதன் பின்னர் அங்கும் அதே தாக்குதல் நிலமைகள் தொடர அங்கிருந்தும் இடம் பெயந்தோம் அதன் பின்னராக எமது இடப் பெயர்வுகள் பத்து அல்லது பதினைந்து நாட்கள் தான் ஒவ்வொரு இடத்திலும் வசிப்போம் இவ்வாறு நாம் பத்து இடமாவது இடம் பெயர்ந்திருப்போம்.

யுத்த காலத்தில் எம் மக்கள் பட்ட துன்பங்கள் பற்றி ஊடகங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு இடங்களிலும் மக்கள் தமது உடமைகளை மட்டும் இழந்து இடம் பெயரவில்லை தமது உறவுகளின் உயிர்களையும் இழந்து தான் சென்றார்கள். எனது குழந்தைகளை மிகவும் கஸ்டப்பட்டு பாதுகாத்து இறுதியாக வட்டுவாகல் வந்திருந்தோம். அப்போது நான் எனது பொருள் இழப்புக்கள் பற்றிக் கவலைப்படவில்லை கணவரும் பிள்ளைகளும் என்னுடன் இருக்கின்றார்கள் என்று தான் நினைத்திருந்தேன் இவ்வேளையில் எனக்கு இப்படியான ஒரு நிலைமையை காண்பேன் என நினைத்துக் கூட பார்க்காத சந்தர்ப்பத்தில் நடந்த சம்பவம்.

இது.13.05.2009. அன்று புதன் கிழமை காலை கணவரும் மூன்று பிள்ளைகளும் எமது கூடாரத்தினுள் இருந்த சமயம் இராணுவத்தினரால் ஏவிய எறிகணைகளில் ஒன்று எமது கூடாரத்தின் மீது வீழ்ந்து வெடித்தது அச்சமயம் நான் கிணற்றடிக்கு தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளேன் எறிகணை வெடிக்கும் சத்தம் அச்சமயம் கேட்டது எறிகணை வீழ்ந்து வெடித்த திசையை நோக்கினேன் எங்கும் ஒரே சத்தம் உடனே கேட்ட வண்ணம் இருந்தது.

எமது கூடாரம் இருந்த இடம் தெரியாமல் தரை மட்டமாக காட்சி அளித்தது அவ்விடத்திற்கு விரைந்தேன் அங்கே இரத்த வெள்ளத்தில் நான்கு பேரும் வீழ்ந்து கிடக்கும் கோரக் காட்சியை கண்ணால் பார்த்தேன் இரண்டாவது மகள் தலை சிதறிய நிலையில் உயிர் பிரிந்திருந்தார் ஏனையவர்கள் உயிருக்குப் போரடிக் கொண்டிருந்தார்கள் நான் தனியே நின்று என் செய்ய முடியும் எதுவும் செய்வதறியாது நின்றேன் என்றாலும் அகப்பட்ட துணியினால் காயத்தைக் கட்டிக் குழறினேன்.

இடநெருக்கடி காரணமாக கூடாரங்கள் மிகவும் நெருக்கமாகவே காணப்பட்டன இதனால் எமது கூடாரத்தின் மீது விழுந்த செல்லினால் அயலில் உள்ள மக்களும் இறப்புக்களும் காயங்களும் ஏற்பட்டன இதனால் யார் யாருக்கு உதவி செய்வதென்று தெரியாத நிலமை இதனால் உடனடியாக யாரும் உதவிக்கு வரமுடியவில்லை எங்கும் எறிகணை துப்பாக்கிச் சத்தங்கள் கேட்ட வண்ணம் இருந்தன.

மக்கள் தொடர்ச்சியாக இடம் பெயர்ந்த வண்ணம் இருந்தமையால் தெருக்களில் வாகனங்களினதும் நடந்து செல்லும் மக்களினதும் நெருக்கம் காரணமாக உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கான வசதி இருக்கவில்லை அவர்களுக்கு அதிகளவு இரத்தப் பெருக்கு ஏற்பட்டு சிறிது நேரத்தின் பின் ஏனைய மூவரினதும் உயிர்கள் ஒருவர் பின் ஒருவராகப் பிரிந்தது.

அதன் பின் யார் ஆறுதல் கூறியும் எனக்கு கேட்கும் மனநிலையில் நான் இல்லை சம்பவ இடமே கண்ணுக்குத் தெரிந்தது ஊரோடு ஒத்தது என்று கூறினால் என் மனம் ஏற்குமா? எனக்கு வட்டுவாகலில் இருந்து வவுனியாவுக்கு வரும் மனநிலையில் அப்போது நான் இருக்க வில்லை என்னை அயலவர்கள் தான் கட்டாயப்படுத்தி அழைத்து வந்தார்கள்.

நான் வவுனியா நலன்புரி நிலையத்திற்கு வந்தும் வட்டுவாகலில் நடந்த சம்பவமே கண்ணுக்குத் தெரிந்தது ஆனால் முகாமில் உள்ள என்னைப் போல இழப்புக்களை எதிர் நோக்கிய எம் உறவுகளைப் பார்த்து என் மனதையும் ஓரளவு தேற்றிக் கொண்டேன்.

இவ்வளவு வேதனைகளையும் கஸ்ரங்களையும் அனுபவித்து முகாமிற்கு வந்த பின்னரும் எமது துன்பங்கள் தீரவில்லை யாரைப் பார்த்தாலும் இங்கு குண்டுச் சத்தம் மட்டும் தான் கேட்காமல் இருக்கின்றோம் என்பார்கள் நான் தனியாளாக முகாமில் இருப்பதனால் சி.ஐ.டியினர் விசாரணைகளுக்கு அழைப்பார்கள்.

எனது இழப்புக் குறிய சான்றிதழ் எதுவும் முகாமில் என்னிடம் இல்லை முகாமில் இயங்கும் வவுனியா அரச செயலகக் கிளையினால் வன்னியில் இறுதிக் காலத்தில் இறந்த மக்களுக்கான இறப்புப் பத்திரம் எதுவும் வழங்கப்படவில்லை எனது இழப்புக்குறிய சாட்சியாக முகாமில் உள்ள சிலரின் வாய்மூல சாட்சிதான் ஆனால் அவர்கள் தமது உயிருக்குப் பயந்து எனக்கு சாட்சி சொல்ல முன் வரமாட்டார்கள்.

என்னைப் போல நிறைய சகோதரிகள் சிறிலங்கா அரசு நிகழ்த்திய கொடூர யுத்தத்தினால் குடும்பத் தலைவன் இழக்கப்பட்ட நிலையில் பிள்ளைகளின் அன்றாடம் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் மிகவும் கஸ்ரப்பட்டுக் கொண்டிருக்கும் அடிப்படை வசதிகள் அற்ற வவுனியா முகாம்களில் வாழ்கிறார்கள் அவர்களின் மன நிலைகூடப் பாதிக்கப்படும் சூழ்நிலையில் தான் இருக்கின்றார்கள் அவ் விதவைகளின் குழந்தைகளினதும் சுபீட்சமான எதிர்காலத்திற்கு யார் தான் உதவி செய்ய முன்வர போகின்றார்கள்…

கனகராசா யோகராசா – 18.10.1969 – 13.05.2009

யோ. தமிழ்நிலா 16.09.2002 – 13.05.2009

யோ. ரோகிதா -18.09.2004 – 13.05.2009

யோ. தமிழ்வேந்தன் -19.06.2006 – 13.05.2009

ஈராறு மாதங்களாகியும் உங்கள் ஒலி

என் காதில் கேட்கின்றது -அக்கணம்

திரும்பிப் பார்த்தால் என் -மழலைகளின்

உருவம் இன்றி விம்முகின்றேன்

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*