TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கருப்பு மாதம்: கறுப்பினத்தவருக்கு பெப்ரவரி தமிழருக்கோ மே

கருப்பினத்தினர் பெப்ரவரி மாதத்தைக் கருப்பு மாதமாக அனுஷ்டிக்கின்றார்கள். அதைப்போலவே மே மாதம் தமிழரின் சோகம் நிறைந்த கருப்பு மாதமாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்படுகின்றது.

1983-ஆம் ஆண்டு ஜூலை 23 தொடக்கம் 30 வரை நடைபெற்ற ஈழத்தமிழருக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் 3000 தமிழர் படுகொலை செய்யப்பட்டு முப்பது கோடி டாலர்கள் பெறுமதியான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சூறையாடப்பட்டது. பல இலட்சம் தமிழர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்குப் பாதுகாப்புக்காக சென்றனர்.

இந்த ஜூலை கலவரத்தை இதுநாள் வரை கருப்பு மாதமாக கருதப்பட்டது.

ஆனால் மே 2009 நடைபெற்ற நிகழ்வு உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத சோக நிகழ்வாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இடம்பெற்ற நிகழ்வானது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பாரிய இனப்படுகொலை. இதனை சிங்கள அரசாங்கம் தமிழர்கள் மீது கட்டவீழ்த்தி விட்டு அவர்களின் எதிர்காலத்தையே ஒரு கேள்விக்குறியாக்கிவிட்டது. இந்த மாதத்தை தமிழர்களினால் எப்பொழுதும் மறக்கவோ அந்த நிகழ்வை நடாத்திய சிங்கள அரக்கர்களை மறந்தும் மறக்கக்கூடாது என்ற உணர்வுடன் இன்று எழுச்சிபெற்றுள்ளனர் உலகத்தமிழர்.

இதனை உறுதிப்படுத்துமுகமாக உலகெங்கும் பரந்து கிடக்கும் தமிழர் அமைதிவழியில் போராட்டங்களை மே 1-ஆம் திகதி முதல் நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள். மகிந்த ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்த பின்னர் அரக்கத்தனமான அரச பயங்கரவாதத்தை கட்டவீழ்த்திவிட்டார். 2005-ஆம் ஆண்டு மகிந்த ஆட்சி பீடம் ஏறிய பின்னர் சந்திரிகா விட்டுச்சென்ற தமிழருக்கெதிரான பயங்கரவாதத்தை பலமடங்காக்கி நோர்வே அரசினால் முன்னெடுக்கப்பட்ட சமாதான முன்னெடுப்புக்களை நிறுத்தி கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவிக்கும் யுத்தம் என்ற போர்வையில் இடம்பெற்ற சமரில் கிழக்கு மாகாண மக்களுக்கு எதிரான அநீதிகள் பல மடங்குகளாக்கப்பட்டன.

2006-ஆம் ஆண்டு முதல் முழுமூச்சாக இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகள் மூலமாக மகிந்தா கிழக்கை தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக அறிவித்தார். விடுதலைப் புலிகளோ தற்காப்பு யுத்தத்தை நடாத்திக்கொண்டிருந்ததாக அறிவித்தார்கள். திருகோணமலை மாவட்டத்தில் இருந்த மூதூர் மற்றும் சில இடங்களை சிங்கள இராணுவத்திடம் இருந்து மீட்டு தமது கைவசம் கொண்டுவந்தார்கள் விடுதலைப் புலிகள்.

உடனேயே உலக நாடுகள் விடுதலைப் புலிகளின் தலைமையுடன் பேசி முன்னேறிய புலிகளை தமது தளங்களுக்கு பின்நகருமாறு அழுத்தம் கொடுத்தார்கள். அதனடிப்படையில் விடுதலைப் புலிகளும் பின்நகர்ந்தார்கள். அன்று விடுதலைப் புலிகள் தாக்குதலைத் தொடுத்திருந்தால் சில வாரங்களுக்குள்ளேயே திருகோணமலை கடற்படைத் தளம் உள்ளடங்கிய சிங்களப் படைகளின் முகாம்களை தம் வசம் கொண்டுவந்திருக்கலாம். ஆனால் விடுதலைப் புலிகளோ உலகின் பேச்சைக் கேட்டு பின்நகர்ந்தார்கள்.

அத்துடன் தாம் எந்தவொரு வலிந்த இராணுவத் தாக்குதலையும் நடாத்தவிரும்பவில்லை என்றும் அறிவித்தார்கள் காரணம் தாம் சமாதான ஒப்பந்தத்தை மதிப்பதாக தெரிவித்தார்கள்.

புலிகள் அமைதியை போதிக்க சிங்களவரோ பயங்கரவாதத்தை ஏவிவிட்டார்கள்.

கிழக்கு தம் வசம் வந்துவிட்டதாக அறிவித்த கையுடன் அரசியல் பிரச்சாரத்தை கொழும்பில் முடக்கிவிட்டார் மகிந்தா. சிங்கள மக்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்றார் மகிந்தா. இந்த செல்வாக்கை மென்மேலும் அதிகரிக்க மகிந்தா போட்டார் கணக்கு. வன்னிப் பெருநிலத்தை கைப்பற்றி விடுதலைப் புலிகளின் தனி இராச்சியத்தை அழித்து வடக்கு மாகாணத்தையும் தம் வசம் கொண்டுவருவதற்கான யுத்தத்தை 2008-ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்தார் மகிந்தா.

இந்த இராணுவ நடவடிக்கைக்கு சிங்கள மக்களும் சிங்கள-பௌத்த பிக்குகளும் ஆசிர்வதித்து உற்சாகப்படுத்தினார்கள். ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு தமிழர்களின் பிரதேசங்களை தம் வசம் கொண்டுவந்தார்கள் சிங்கள இராணுவம். குறிப்பாக ஜனவரி 2009-ஆம் ஆண்டுகளில் இருந்து இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகள் பல உயிர் மற்றும் உடமைகளுக்கான சேதங்களை உண்டுபண்ணின.

விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் தம்மால் இயன்ற வரை தற்காப்பு யுத்தத்தை மேற்கொண்டார்கள். தமிழ் மக்கள் பெருமளவு எதிர்பார்ப்புடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்தார்கள். விடுதலைப் புலிகள் சிங்கள இராணுவத்திற்கு ஒரு படிப்பை வன்னி மண்ணில் நிகழ்த்தி தமிழ் மண்ணில் கால்பதித்த சிங்கள சிப்பாய்களை வன்னி மண்ணிற்குள் புதைப்பார்கள் ‘நம்ம பொடியன்கள்; என்று எண்ணியிருந்த மக்களுக்கு பேரடியாக இருந்த மாதம் தான் மே.

தமிழர் நிலத்தைக் கைப்பற்றிய இராணுவம் கொத்துக் கொத்தாக தமிழரை கொன்று குவித்தார்கள். உலக நாடுகளின் அழுத்தங்களுக்கிடையிலும் சிங்கள இராணுவம் தமிழர் பிரதேசங்களைக் கைப்பற்றி யுத்தப்பகுதியில் இருந்த ஏறத்தாழ 350,000 தமிழ் மக்களை கொல்லவும் தயாராக இருந்தது. புலம்பெயர் தமிழரின் பல அறவழிப் போராட்டங்களுக்குப் பின்னர் உலக நாடுகள் மும்மரமாகத் தமது செல்வாக்கைப் பாவித்து ஒரு பிரதேசத்தை யுத்த சூனியப் பிரதேசமாக அறிவிக்கச்செய்தார்கள்.

அதனடிப்படையில் பொதுமக்கள் இந்தப்பகுதியில் தங்கவைக்கப்பட்டார்கள். ஆனால் சிங்கள இராணுவமோ தாக்குதல் செய்யமாட்டோம் என்று அறிவித்த பின்னர் மக்கள் சென்றடைந்தபின்னர் அவர்கள் தங்கியிருந்த பகுதிகள் மீது அகோர தாக்குதல்களை நடாத்தி பல ஆயிரம் தமிழரை கொன்றார்கள். அங்கிருந்து வந்த தகவல்களின்படி 40,000-க்கும் அதிகமான மக்கள் மாண்டதாக செய்திகள் வந்தன.

இதில் பெரும்பான்மையானோர் இறுதி வாரத்தில் இடம்பெற்ற இராணுவத் தாக்குதல்களினால் செத்து மடிந்தார்கள் என்பது தான் கொடூரமான உண்மை. விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்தார்கள். பல பொதுமக்களையும் மற்றும் விடுதலைப் போராளிகளையும் கவசவாகனங்களினால் நசித்தும் சுட்டும் கொலைசெய்யப்பட்டார்கள். விடுதலைப்புலிகளின் முக்கிய அரசியல் தலைவர்கள் வெள்ளைக்கொடியுடன் கொடுத்த வாக்குறுதியின் படி இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி வரும்போது படுகொலைசெய்யப்பட்டார்கள்.

இவைகள் அனைத்தும் இந்த நூற்றாண்டில் உலகம் கண்ட மாபெரும் மனிதப் பேரவலம். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையோ இறந்த தமிழரின் எண்ணிக்கையை இன்றும் ஏறத்தாள 7,000 என்று தான் சொல்லிக்கொண்டிருக்கின்றது. ஆக ஐக்கிய நாடுகள் சபையும் நீதி கேட்டு நிற்கும் மக்கள் பக்கம் நிற்காமல் அரச பயங்கரவாத ஆட்சியை சாந்தப்படுத்த முனைப்புக்காட்டுவதாகவே இருக்கின்றது. விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக வர்ணித்த சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் தாம் செய்த அட்டூழியங்களை மூடி மறைத்தார்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக.

ஆனால் கடந்த ஆண்டு நடாத்திய அட்டூழியத்தைப் பார்த்து பல வெளிநாட்டு ஊடங்கங்களும் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் கண்ணீரும் கம்பலமுமாக உலக மனச்சாட்சியின் கதவுகளை தட்டினார்கள். ஆனால் அறிந்தும் அறியாமல் மௌனம் காத்தன பல வெளிநாடுகள். விடுதலைப்புலிகளின் போராட்டத்தின் தார்மீக நியாயத்தை உணர்ந்தும் பல வெளிநாடுகள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கவோ அல்லது தமிழருக்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிடவோ விரும்பவில்லை. மாறாக சிங்கள அரசாங்கத்தின் செயலை மறைமுகமாக ஆமோதித்தார்கள்.

அமைதி போதித்த புத்தரைப் பின்பற்றும் சிங்கள மக்களும் புத்தருக்கு பூசை செய்யும் பிக்குகளும் அரச பயங்கரவாதத்திற்கு ஆதரவாக இருந்தார்கள். தமிழர்கள் அழியுண்டதையும் லட்சக்கணக்கானவர்கள் மிருகங்களைவிடக் கேவலமாக வதைமுகாம்களில் வைத்து பராமரிக்கப்பட்டத்தைக் கண்டித்து ஒரு அறிக்கையேனும் வெளியிடவில்லை.

ஆயுதம் ஏந்திய புலிப்படையினர் சமாதானத்தைப் போதிக்க புத்தரைப் பின்பற்றும் காவியுடையணிந்தவர்கள் பயங்கரவாதத்தை போதிப்பதானது சிறிலங்கா அழிவுப்பாதையை நோக்கி செல்கின்றது என்பதைக்காட்டி நிற்கின்றது.

இது வெம்பி அழுவதற்கான காலமல்ல…

இது சபதம் எடுப்பதற்கான காலம்!

நடந்து முடிந்த நிகழ்வுகள் ஒருபோதும் தமிழரை வெதும்பச்செய்யப் போவதில்லை. காரணம் அவர்கள் நீதியைக் கேட்டு போராடியதற்காக கொடுக்கப்பட்ட பரிசு. இறந்த உயிர்கள் ஒன்றும் எரியூட்டப்பட்டவையல்ல. அவைகள் விதைக்கப்பட்டவை. அந்த ஆத்மாக்கள் பல லட்சம் வேங்கைகளாக உருவெடுத்து அவர்களின் இறுதி விருப்பம் என்னவோ அதுவே நனவாகும். அப்பொழுது மௌனமாக இருந்த உலக நாடுகளுக்கும் மற்றும் சிங்கள – பௌத்தவாதிகளுக்கும் ஒரு வரலாற்றுப்பாடமாக இருக்கட்டும். இதுவே நாம் மாண்டவர்களுக்கு செய்யும் இறுதிக்கிரிகைகளாக இருக்க முடியும்.

மே 2009 இடம்பெற்ற வார்த்தைகளினாலோ அல்லது சொற்களினால் வர்ணிக்க முடியாத சோகங்களைத் தாண்டி ஒருவருடம் பூர்த்தியாகும் வேளையில் உலகத் தமிழினம் பல அறவழிப்போராட்டங்களை நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள். இந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட சிறிலங்காவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர சபதமெடுக்கும் காலமிது அத்துடன் உலக நாடுகளின் மூலை முடுக்குகள் எங்கும் இதனை வலியுறுத்தி தமிழர் அனைவரும் ஒன்றிணைந்து உலகநாடுகளை வற்புறுத்தவேண்டும்.

பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணைக்குழு மூலமாக உண்மையைக் கண்டுபிடித்து உண்மையான கொலைகாரர்களை சர்வதேசம் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே பல தமிழரின் கோரிக்கையாக இருக்கின்றது. பல தமிழ் அமைப்பினர் மே 1 முதல் மே 19 வரையான காலப்பகுதிகளில் பலவிதமான போராட்டங்களை வெளிநாடுகளில் நடாத்துகின்றார்கள். மழையையும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை இந்த போராட்டங்களில் கலந்து கொண்டுவருகின்றனர்.

இந்த நிகழ்வுகளில் பங்குகொள்வோர் தமிழர்களின் குரல்கள் நசுக்கப்பட்டதை தெரிவிக்கும் முகமாக கறுப்புத் துணியால் வாயைக் கட்டியும், மக்கள் அனுபவித்துவரும் பல்வேறு கொடுமைகளை சித்தரிக்கும் பதாதைகள் மற்றும் சுலோகங்களையும் தாங்கி போராட்டங்களை நடாத்துகின்றார்கள். பல கோசங்களை முன்வைக்கின்றார்கள் அதாவது இளைஞர்களும் மக்களும் சேர்ந்து தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லப்போவதாக அறைகூவல் விடுகின்றார்கள்.

அறவழிப் போராட்டங்களில் ஈடுபடும் மக்கள் பெருமளவிலான தமிழீழத் தேசிய கொடிகளைத் தாங்கி நிற்கின்றார்கள். இதனைப் பார்த்த பலர் தமிழீழ விடுதலைப் பயணம் முன் எப்போதுமில்லாதவாறு இனிவரும் காலங்களில் வேகம்பெறும் என்று கூறுகின்றார்கள். தமிழரின் இந்தப் போராட்டங்கள் தரும் பாடம் என்னவென்றால் கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த நான்காம் ஈழப் போராட்டம் வெம்பி அழுவதற்கான காலமல்ல மாறாக தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல இருப்பதற்கான சபதமெடுக்கும் மாதமிது.

எதுவாயினும் மே மாதம் என்பது தமிழருக்கு கருப்பு மாதமாகத் தான் தமிழர் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும். அத்துடன் இந்த மாதம் உலக வரலாற்றிலும் இந்த நூற்றாண்டில் மானிடம் கண்டிராத பேரவலமாகத் தான் பதியப்பட்டிருக்கின்றது. இந்த மாதத்தை தமிழர்களினால் சபதமெடுக்கும் மாதமாகக் கணிக்கவேண்டும். கொலைகாரர்களைக் கூண்டிலேற்றி நீதி தேவதையின் கருப்பு துணியினால் கட்டப்பட்டிருக்கும் கண்களைத் திறப்பதற்காக போராட சபதம் எடுக்கும் மாதமாக இந்த மே மாதத்தை அங்கீகரிக்கவேண்டும்.

சிங்கள அரசோ இந்த மாதத்தை வெற்றி மாதமாக அங்கீகரித்து பல களியாட்டங்களை நடாத்த திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கின்றார்கள். இப்படியாக பல களியாட்ட நிகழ்ச்சிகளை நடாத்தி கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்தை வெற்றி விழாவாக நடாத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அடுத்த வாரம் காலி முகத்திடலில் மாபெரும் நிகழ்ச்சியொன்றிற்காக களை கட்டத்தொடங்கிவிட்டது. இந்த நிகழ்ச்சியில் மகிந்த மற்றும் முன்னணித் தலைவர்கள் பங்குபற்றி சிங்கள இராணுவம் செய்த அராயகத்தை அங்கீகரித்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

தமிழர்கள் துக்கம் கடைப்பிடிக்கும் வேளையில் சிங்களவரோ களியாட்ட மாதமாக கொண்டாடுகின்றார்கள். எப்படி கறுப்பினத்தினருக்கு பெப்ரவரி மாதம் கருப்பு வரலாற்று மாதமாக பேணப்படுகின்றதோ நிச்சயம் மே மாதம் தமிழரின் கருப்பு மாதமாக அனுஷ்டிக்கப்படும்.

நீதி தேவதையின் கண்களைத் திறக்க உலகநாடுகளின் மனக்கதவுகளைத் திறக்க அனைத்து தமிழரும் ஒன்றிணைந்து போராட்டங்களை நடாத்தி ஈழத் தமிழரின் அறுபது ஆண்டுகளுக்கு மேலான போராட்டத்தின் தார்மீகத்தை உணர்த்தி தமிழரின் விடியலை உண்மையாக்க சபதமெடுக்கும் மாதம்தான் தமிழரின் இரத்தத்தினால் தோயப்பட்ட மே மாதம்.

சிந்திப்போம் செயலாற்றுவோம்.

அனலை நிதிஸ் ச. குமாரன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*