TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வலிசுமந்த வன்னி வாழ்க்கை: பாகம்-4 – இராவணேசன்

உடல்களைப் புதைத்தல் நடவடிக்கை என்பது மிகப் பாரிய மனிதாபிமான நடவடிக்கையாகவே வன்னியில் அமைந்திருந்தது. எந்தவித வசதிகளும் இன்றி அனைத்தும் பறிக்கப்பட்டு உயிர் என்கின்ற உன்னதத்தினைக் காத்துக் கொள்வோம் என்ற நப்பாசையில் நகர்ந்த மக்களிடம் இருந்து உயிர்கள் பிரிக்கப்பட்டபோது அடுத்த கட்டம் அந்த உடலத்தை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த பல்லாயிரம் குடும்பங்களுக்கு ஒளி தந்தது தமிழர்புனர்வாழ்வுக்கழகம்.

கிளிநொச்சியில் இருந்து போர் உக்கிரம் பெற்ற வேளைகளில் மக்கள் கொல்லப்பட்டுக் கிடந்த போது அந்தத் தகவலை தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்குத் தெரிவிக்கையில் உடனடியாகவே வாகனம் ஒழுங்குபடுத்தப்பட்டு உடலங்கள் சுடுகாடுகளிலோ காடுகளிலோ தாக்கப்பட்டன. அல்லது எரிக்கப்பட்டன. இடப்பெயர்வு நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க இறப்புக்களின் வேகம் அதிகரிக்க முடிந்தவரையில் உடலங்களை அகற்றுவதற்கான நடவடிக்கையில் தீவிரமாக புனர்வாழ்வுக்கழகம் செய்பட்டது.

முள்ளிவாய்க்காலை போர் அண்மித்த காலத்தில் உடல்கள் வீதிவீதியாக வீழ்ந்து கிடந்த போது உடனடியாகவே அவற்றை அகற்ற புனர்வாழ்வுக்கழகம் நடவடிக்கை எடுத்தது. காரணம் அவற்றை உறவினர்கள் வந்து பார்ப்பது என்பது சாத்தியமானதாக இல்லை. ஏனெனில் உறவினர்களுக்கு குறித்த நபர் எங்கிருக்கின்றார். என்ன செய்கின்றார், இறந்ததாரா? எங்கு இறந்தார்? போன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடிக் கொள்ள சந்தர்ப்பம் இருக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்வதே நெருக்கடியாக இருந்தது.

இந்த நிலையில் சடலங்களை அகற்றும் போது அந்தச் சடலங்களை புகைப்படக்கருவிகளில் படம் பிடித்து வைத்துக் கொண்டு புதைத்தார்கள். அவ்வாறு புதைத்தன் பின்னர் உறவுகள் தமது உறவுகளைத் தேடி வந்தால், புகைப்படக் கருவியைக் காட்டி அடையாளப்படுதிக் கொள்வார்கள். குறித்த உறவுகளை மிகச் சிறிய புகைப்படக் கருவித் திரையில் தான் பார்க்க முடியும். அந்த வேளையில் குறித்த புகைப்படக் கருவிக்கு பற்றரி இல்லாமல் பணியாளர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டமையும் இன்னமும் நெஞ்சில் நிற்கின்றது.

இதனைவிடவும் உடலங்களை புதைக்க இடம் இல்லை. கடற்கரை எங்கும் மக்கள் மிக நெருக்கமாக வாழ்ந்தார்கள். அங்கு உடலங்களை புதைக்க முடியாது. வயல் வெளிகளில் இரண்டு அடி வெட்டினால் நீர்வரும். அதனால் அங்கு புதைப்பதும் கடினம் எனவே, சிறிய கிடங்குகளுக்குள் ஒருவருக்கு மேல் ஒருவர் என உடல்களைப் புதைத்தார்கள். இந்தக் கிடங்குகளையும், ரீ.ஆர்.ஓ பணியாளர்களே அமைத்தார்கள். இந்தப் பணியாளர்களில் பலர் பல மாதங்களாக எந்தக் கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் உயர் நிலைப் பணியாளர்களை விடவும் மிகச் சாதாரண நிலையில் இருந்த பணியாளர்களின் உழைப்பே நாங்கள் மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கான பிரதிபலிப்பாய் அமைந்திருந்தது. அதிலும் முக்கியமாக முள்ளிவாய்க்கால் கிழக்கு (வெள்ளாம் முள்ளிவாய்க்கால்) அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தான் வன்னியின் மருத்துவப் பணி நிறைவடைந்தது. குறித்த மருத்துவமனை மீதான தொடர் தாக்குதல்களை அடுத்து மே பதின்நான்காம் திகதியுடன் மருத்துவமனைப் பணிகளை முன்னெடுக்க முடியாமல் மருத்துவர்கள் கைவிட்டிருந்தனர்.

இந்த நிலையில அங்கு சிகிச்சைபெற்றுவந்த முன்நூறுக்கும் அதிகமான காயமடைந்தோரும் அவர்களைப் பராமரிக்க நின்றிருந்த நூற்றுக்கணக்கான உறவினர்களும் தாக்குதல்களில் கொல்லப்பட்டும் படுகாயம் அடைந்தும் இருந்தனர். காயம் அடைந்தவர்களும், ஏனையவர்களும் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களால் உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில் பதினைந்தாம் திகதி எவரும் மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை. ஆனால் ரீ.ஆர்.ஓ பணியாளர்கள் சிலர் பெற்றோல் கலன் ஒன்று, மண்வெட்டி என்பவற்றுடன் மருத்துவமனையைச் சென்றடைந்தனர். அங்கு நிலத்தில் ஊர்ந்து சென்று குழி ஒன்றை அமைத்தனர். அதனுள் உடலங்களை இழுத்துப் போட்டுவிட்டு பெற்றோல் ஊற்றிக் கொழுத்தினர். அது எரிந்து முடிந்ததும் எஞ்சிய உடலங்களை எரித்தனர். அவ்வாறு அனைத்து உடலங்களையும் எரித்து விட்டே வெளியேறினர்.

அந்தப் பணிபற்றி வாசிக்கின்றபோது இலகுவானதாகத் தென்படலாம், ஆனால் அவர்கள் நிமிர்ந்து நின்றால் துப்பாக்கி ரவை பட்டோ, எறிகணைத் துகள்கள் பட்டோ இறந்துவிடும் அல்லது காயமடையும் ஆபத்து நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது வீதம் இருந்தது. அதனை எதிர்நின்றே அந்தப்பணியாளர்கள் பணியாற்றியிருந்தனர். இந்த நிலையில் உலகில் தொண்டு நிறுவனங்களாகவும், உதவும் அமைப்புக்களாகவும் நாடுகளாகவும் காட்டிக்கொள்வோரும் விளம்பரப்படுத்திக் கொள்வோரும் இருக்க, எமக்காக நாம் என ரீ.ஆர்.ஓ வின் கீழ் மட்ட நிலைப் பணியாளர்கள் தம்மை அர்ப்பணித்து பணியாற்றினார்கள்.

மருத்துவப்பணி:

மருத்துவப் பணி என்பதன் அர்த்தம் என்பதை அங்கு பணிபுரிந்த மருத்துவர்களிடமே ஏனைய உலகப் பிரசித்தி பெற்ற மருத்துவர்கள் கூட கேட்டு அறிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் ஒவ்வொரு இடப்பெயர்வுகளினையும் எதிர்கொண்ட மருத்துவர்கள் மனதளவில் எந்தளவிற்கு நெருக்கடிகளை எதிர்கொண்டிருப்பர் என்பதை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. காரணம் பல்லாயிரம் உயிர்கள் உரிய வசதிகள் இருந்தால் காப்பாற்றப்பட்டிருக்கும் என்ற தாக்கம் அவர்களிடம் இருந்தமையை உணரமுடிந்தது. சிறிய, மிகச் சிறிய காயங்களை உடையவர்கள் கூட மருந்து இன்மையால் உயிரிழந்த அவலம் மிகப் பாரிய அளவில் நிகழ்ந்தேறியது.

மருந்துத்தடை ஏற்படுத்தப்பட்டமையால் சிறிய காயத்தினைக் கட்டுப்படுத்தும் மருந்துகளுக்குக் கூட தட்டுப்பாடு நிலவியது. மருத்துவமனையை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் மருத்துவப் பணியாளர்கள் பலர் கொல்லப்பட்டனர். காயமடைந்தோரை ஏற்றிவந்தோர், அவர்களைப் பராமரிக்கச் சென்றோர், பார்க்கச் சென்றோர் என நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனை வளாகத்தில் செத்து வீழ்ந்தனர். தமது உறவுகளைக் காப்பாற்றுமாறு மருத்துவர்களின் கால்களைப் பிடித்து மக்கள் கதறியழுதனர். காயமடைந்து பல நூறு பேர் ஒன்றாக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகின்றபோது எவரைப் பார்ப்பது என்ற குழப்ப நிலை ஏற்பட்டது.

முதல் நாள் கொண்டுவரப்பட்ட காயமடைந்தோர் மறு நாள் வரையில் மருந்து கட்டுப்படாமலேயே உயிரிழந்தனர். காரணம் மருந்து கட்ட போதிய மருத்துவப்பணியாளர்கள் இன்மை, மருந்துகள் இன்மை என்பதாகும். ஒரு காயமடைந்தவரைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வேறொரு தீவிர காயமடைந்த நபர் வந்திருப்பார். அவரைப் பார்க்கச் சென்றால் ஏற்கனவே பார்க்கப்பட்டவர் சிறிது நேரத்தில் உயிரிழந்துவிடுவார்.

குறிப்பிட்ட ஒரு விடயத்தினை இதில் சொல்லலாம். மிக நாட்களாக எந்தவித மருந்துகளும் வன்னிக்கு வரவில்லை. இந்தவிடயத்தினை மீண்டும் மீண்டும் தெரியப்படுத்தி இறுதியில் புதுமாத்தளன் மருத்துவமனைக்கு கப்பலில் மிகக் குறைந்த மருத்துவப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அந்தவிடயம் அரச ஊடங்களில் பெரிய விடயமாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. மருந்துவந்து மறுநாள் அதிகாலை அவை வைக்கப்பட்டிருந்த அறை மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டன. அதே நாள் நடத்தப்பட்ட ஆர்.பி.ஜி தாக்குதலின் போது தான் பெண் ஒருவரின் காலுக்குள்ளால் குறித்த செல் வெளியேறிய சம்பவம் மருத்துவர் ஒருவரால் புகைப்படமாக்கப்பட்டு ஊடகங்களில் பிரபல்யமாகியிருந்தது நினைவிருக்கலாம்.

புதுமாத்தளன் பகுதியும் ஆக்கிரமிக்கப்பட மருத்துவப்பணி செய்த மருத்துவர்களில் பலர் படை ஆக்கிரமிப்புக்குள் சென்றுவிட முக்கியமான மருத்துவர்கள் முள்ளிவாய்க்காலை அடைந்தனர். அவர்களது பிரதான நோக்கம் மக்களுக்கு மருத்துவப் பணி செய்தல் என்பதாகும். இதனைவிடவும் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவைச் சேர்ந்த பல மருத்துவர்கள் குறித்த காலப்பகுதியில் மண்ணைவிட்டு வெளியேறிவிட, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் மக்களுடன் பயணித்து மக்களைக் காத்தனர் என்ற கசப்பான உண்மையினை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

முடிந்தவரையில் தம்மால் மருத்துவப்பணியினை மேற்கொண்டது மட்டுமன்றி வெளி உலகிற்கு உண்மைகளை வெளிப்படுத்தி தம்மை ஒரு படி உயர்த்திக் கொண்டார்கள். அதன் பின்னர் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் அனைவரும் அறிந்தவிடயமே. ஆனாலும் இந்த இடத்தில் சில உண்மைகளைச் சொல்லவேண்டியுள்ளது. குறிப்பாக ஐந்து மருத்துவர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்கள். அவர்கள் ஐவரும் மக்களுக்காக பணியாற்றினார்கள் என்ற தப்பான கருத்து நிலை வெளியே ஏற்படக்கூடாது என்பதற்காக சில விடயங்களைக் குறிப்பிட வேண்டும். அந்த மருத்துவர்களில் மூவர் மட்டுமே மக்கள் பணி ஆற்றியிருந்தார்கள்.

சத்தியமூர்த்தி, வரதராஜா, சண்முகராஜா ஆகியோரே மக்களுக்கான பணிகளை இறுதிவரை மேற்கொண்டார்களே தவிர, ஏனைய இருவரும் எந்த இடத்திலும் மக்கள் நலனினை நோக்காகக் கொண்டு மருத்துவப்பணியாற்றவில்லை. பணி புரிந்த மருத்துவர்களுடன் விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவு மருத்துவப் போராளிகள், நலன் விரும்பிகள் எனப் பலர் உழைத்தனர். இவர்களுடன் பிரிட்டனைச் சேர்ந்த தமிழ்வாணியும் முள்ளிவாக்கால் மேற்கு மற்றும் கிழக்கு மருத்துவமனைகளில் தன்னாலான பணியினை ஆற்றியிருந்தார். மருத்துவமனையில் ஒரு தொகுதி காயமடைந்தோர் இருந்தால் அதன் அரைப் பகுதி உயிரிழந்தோரின் உடலங்களும் மருத்துவமனை வளாகங்களில் காணப்பட்டன.

உடையார்கட்டு மகாவித்தியாலயம்,

வள்ளிபுனம் வித்தியாலயம்,

புதுக்குடியிருப்பு பொது மருத்துவமனை,

இரணைப்பாலை மகாவித்தியாலம்,

ஆனந்தபுரம் வித்தியாலயம்,

புதுமாத்தளன் பாடசாலை,

அம்பலவன் பொற்கணை மகாவித்தியாலம்,

வலைஞர்மடம் அ.த.க பாடசாலை,

முள்ளிவாய்க்கால் மேற்கு முருகன் ஆலய சனசமூக நிலையம்,

முள்ளிவாய்க்கால் மேற்கு அ.த.க பாடசாலை,

முள்ளிவாக்கால் கிழக்கு வித்தியாலயம்

அனைத்திலும் மருத்துவமனைகள் செயற்பட்டன. குறிப்பிட்ட அனைத்தின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மாத்திரம் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்பது மிகக் கொடுமையான விடயமாகும். இந்தத் தாக்குதல்களின் போது தப்பித்துத் தப்பித்து மக்களுக்காக பணியாற்றிவந்த கிளிநொச்சி மருத்துவமனை மேலாளர் தர்மகுலசிங்கம் அவர்கள் முள்ளிவாய்க்கால் கிழக்கு மருத்துவமனை மீதான தாக்குதலில் உயிரிழந்திருந்தார். முள்ளிவாய்க்கால் மருத்துவமனைகளில் இருந்து அவர் வழங்கிய செவ்விகள் புலம்பெயர் தொலைக்காட்சிகளிலும், இணையங்களிலும் வெளிவந்திருந்தமை நினைவிருக்கலாம். மருத்துவமனைச் செயற்பாடுகள் அனைத்தும் முற்றாகத் தடைப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக அவர் பிரிந்தது தான் மருத்துவ வட்டாரங்களில் தற்போதும் கவலையானவிடயமாக பேசப்படுவனவற்றில் ஒன்றாகும்.

ஊடகங்கள்

உலக ஊடகங்கள் வெளிப்படுத்தும் ஊடகச் செய்களை பார்த்த வெளிநாடுகளுக்கு வன்னியில் இருந்து நேரடிக் காட்சிகளைக் கொடுத்தார்கள் வன்னி ஊடகர்கள். போர் ஆரம்பம் முதல் ஊடகர்களும், ஊடகத் துறை சார்ந்தோரும் வன்னியில் செயற்பட்டாலும் கணிசமானோர் பல காரணங்களைக் காட்டி ஒதுங்கிக்கொண்டார்கள். ஆனாலும் புலிகளின்குரல் வானொலி, ஈழநாதம் பத்திரிகை என்பன தொடர்ந்தும் இயங்கத் தலைப்பட்டன. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி கண்டாவளை என்கின்ற கிராமத்தில் இருந்து தனது பணியினை தொடரமுடியாது கைவிட்டுவிட்டது.

இந்த இடத்தில் மே 15வரையில் புலிகளின்குரல் தனது ஒலிபரப்பை கைவிடாது தொடர்ந்தது. அதன் உழைப்பு அளப்பரியதாக இருந்தது. காரணம் அதன் ஒலிபரப்புச் சாதனங்கள், அவற்றுக்கான மின்சார இணைப்பு, ஒலிபரப்பு அன்ரனா போன்றவிடயங்களை ஒன்றாக நகர்த்துவதுடன், ஒலிபரப்புக்கான விடயங்களை தயார் செய்தல், செய்திகளைச் சேமித்தல், செய்திகளைத் தொகுத்தல் மற்றும் இணையத்திற்கான ஒலிபரப்பு நடவடிக்கைகள், இணையங்கள் சிலவற்றுக்கான செய்திகளை அனுப்பும் பணி போன்றவிடயங்களை ஒரு சிலரே மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை. காரணம் குடும்பங்களை நகர்த்த வேண்டிய நெருக்கடி நிலை அனைவருக்கும் காணப்பட்டது.

ஆனாலும் இடைவிடாது புலிகளின்குரல் செயற்பட்டது. முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் அதன் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தொடர் தாக்குதலின் போது அதன் அறிவிப்பாளர்கள் மூவர் உட்பட்ட நால்வர் காயம் அடைந்தனர். ஆனாலும் அதன் பணி நின்றுவிடவில்லை. ஒரு கட்டத்தில் துப்பாக்கிச் சூட்டு ஒலிகளும், எறிகணை ஒலிகளும் வானொலியில் கேட்கின்ற நிலை ஏற்பட்டது. அந்த ஒலிகளுக்கு மத்தியிலும் அதன் பணியாளர்கள் செயற்பட்டனர். பதினைந்தாம் திகதி அதன் ஒலிபரப்புச் சாதனங்கள் அனைத்தையும் தகர்த்ததன் பின்னரே அதன் பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறியதாக அறியமுடிந்தது.

ஈழநாதம் பத்திரிகையினைப் பொறுத்தவரையில் அதன் பணி நடமாடும் சேவையாகவே அமைந்தது. பத்திரிகை அச்சிடும் இயந்திரம் (ஓப் செற்) கணிணி, அச்சிடும் இயந்திரத்திற்கான துணைச் சாதனங்கள், மின் இயந்திரம், என்பவற்றை ஏற்றியபடி வாகனம் நகர்ந்தது. முடிந்தவரையில் பத்திரிகை அச்சிட்டு வெளியிடப்பட்டாலும், ஏப்ரல் வரையிலேயே அதன் பணியினை முன்னெடுக்க முடிந்தது. இந்தக் காலப் பகுதியிலேயே அதன் பணியாளர்களான மகேஸ், சசிமதன், சுகந்தன் ஆகிய பணியாளர்கள் எறிகணைத் தாக்குதல்களால் கொல்லப்பட்டனர்.

ஊடக இல்லத்தின் நடவடிக்கையானது இறுதிவரை தொடர்ந்து அதன் செயற்பாட்டில் மிகச் சிலரே இறுதிவரை உழைத்தார்கள். இடப்பெயர்வுத் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க அந்த நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றியவர்களின் தொகை மிகவும் குறைவடைந்தது. இந்த எண்ணிக்கை அம்பலவன் பொற்கணை வல்வளைப்புடன் வலுவாகக் குறைந்து கொண்டது. முடிந்தவரையில் இறுதி நாட்களில் அங்கிருந்த ஊடகர்கள் சிலரால் பதிவாக்கப்பட்ட பதிவுகளை ஊடக இல்லத்தினர் வெளி உலகிற்கு அனுப்பும் பணியினை மேற்கொண்டனர். இந்த இடத்தில் ஊடக இல்லத்தின் கீழ் பணியாற்றிய நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி தேவிபுரம் பகுதியில் உயிரிழந்தமையை நினைவில் கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகளின் ஒளிப்படப்பிரிவினரும் பல பதிவுகளை மேற்கொண்டனர். இவ்வாறு உழைத்த உழைப்புக்களை வெளி ஊடகங்களுக்கு அனுப்புகின்றபோது அவற்றை நிர்வகிக்கும் தமிழ் தேசியத்திற்காக தம்மை அர்ப்பணித்துச் செயற்படுகின்றோம் எனக் கூறிக்கொள்ளும் சில முன்னணி ஊடகத்தினர் மக்களின் கொலை பாரிய அளவில் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என நேரே சொல்லி செய்திகளைப் புறக்கணித்து செய்திகளை அனுப்பிய ஊடகர்களை கண்கலங்கவைத்த சம்பவங்களும் நிகழ்ந்தேறத்தான் செய்தன.

மேற்குறித்த ஊடகங்களின் ஊடாகவும், சுயாதீனமாகவும் செயற்பட்ட பல ஊடகர்களின் நிலை இன்றுவரை என்ன என்றே தெரியாத நிலையில் உள்ளது. பலரது உழைப்பின் பெறுமதி வெளியில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொருவரும் பார்க்கின்ற ஒவ்வொரு காட்சிகளுக்கும் பின்னால் கொடுக்கப்பட்ட விலைகள், அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் என எண்ணுக்கணக்கற்ற செய்திகளை எப்போ வெளியே சொல்லப்போகிறோம். தெரியாத புதிர்களுக்கான விடைகளை எப்போ தேடப்போகின்றோம் என்ற ஏக்கம் இன்னமும் மனங்களில் அலை மோதுகின்றது.

வலிகள் தொடரும்………

இராவணேசன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*