TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வலிசுமந்த வன்னி வாழ்க்கை: பாகம்-3 – இராவணேசன்

வன்னி இடப்பெயர்வின் போது அந்த மக்களுக்கென தேக்கிவைக்கப்பட்டிருந்த உலக உணவுத் திட்டத்திற்குச் சொந்தமான பொருட்கள் பெருமளவில் வீண்விரயமாகியமை பற்றிக் குறிப்பிட வேண்டும். பொருட்கள் அதன் சேமிப்பு மண்டபங்களில் சேமிக்கப்பட்டிருந்தன. அவ்வாறு சேமிக்கப்பட்டிருந்த பொருட்களில் அரிசி, மா, சீனி, பருப்பு, எண்ணை போன்றன உள்ளடக்கம். குறித்த சேமிப்பு இடங்களை படையினர் அண்மிப்பதற்கு சில நூறு மீற்றர்களுக்கு முன்பாக அவற்றை உடைக்கின்ற சம்பவங்கள் நிகழும்.

அவ்வாறு உடைக்கப்படுகின்ற பொழுது அந்தப் பொருட்களைப் பெறுவதற்காக முண்டியடித்தபடி மக்கள் வெள்ளம் அலை மோதும். பொருட்களுக்காக மக்கள் திரள்கின்ற போது அந்த இடத்தினை கண்காணிக்கின்ற தானியங்கி விமானங்கள் தகவலைக் கொடுக்க உடனடியான எறிகணைத் தாக்குதல்களும், தொலை தூர துப்பாக்கித் தாக்குதல்களும் நடத்தப்படும். இதன் போது பலர் செத்து வீழ்வர். பலர் காயம் அடைவர்.

அவர்களுடன் யாராவது நண்பர்கள், உறவினர்கள் வந்தால் மாத்திரமே குறித்தவர்களை அங்கிருந்து அகற்றமுடியும். அல்லது அகற்றப்படும். அவர்கள் தனித்து வந்திருந்தால் அங்கேயே கிடக்க வேண்டியது தான். இறந்தவர்களைக் கடந்தும் காயப்பட்டவர்களைக் கடந்தும் குறித்த பொருட்களை மக்கள் எடுத்துச் செல்வதிலேயே குறியாக இருப்பார்கள். அந்த இடத்தில் மனிதாபிமானத்தைப் பற்றி யாராவது சிந்தித்தால் சிந்திப்பவரது குடும்பம் பட்டினி மூலம் நாள் தோறும் கண்ணீர் விடுகின்ற சம்பவங்களே கண்முன் தோன்றி மறையும்.

எனவே அவர்கள் குறித்த பொருட்களை எறிகணை, துப்பாக்கிப் பிரயோகங்களைத் தாண்டி பல கிலோமீற்றர்கள் தூக்கிக் கொண்டு செல்வதனை அவதானிக்க முடியும். அவ்வாறு பொருட்கள் எடுக்கச் சென்றவர்கள் மொத்தத்தில் நூறிற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.

தருமபுரம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் கிழக்குவரையில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன. இவ்வாறு பெறப்படுகின்ற பொருட்களை சிலர் விற்பனை செய்கின்ற சம்பவங்களும் நடந்தேறின. உண்மையில் இது பாரிய வரப்பிரசாதமாக அமைந்திருந்தது என்றே கூறவேண்டும். காரணம் வன்னியில் பல வசதிபடைத்தோர், பல தொழில்துறை அதிகாரிகள், அரச அதிகாரிகள் என பணம் படைத்தோர் இருந்த போதிலும், அவர்களிடம் இலட்சக் கணக்கான பணம் இருந்தாலும் அவர்கள் அரிசியினைப் பெறுவதற்கு பட்ட கடினம் அங்கிருந்தவர்களுக்குத் தான் தெரியும்.

ஒரு கிலோ அரிசி இரண்டாயிரம் ரூபாய், மாவு மூவாயிரம் ரூபா, சீனி இரண்டாயிரம், செத்தல் பதினெண்ணாயிரம் ரூபா, தேங்காய் ஒன்று ஆயிரம் ரூபாய் என விலைப்பட்டியல் நீண்டது. மேற்குறித்த பொருட்களின் சராசரி விலையினைக் குறிப்பிடுகின்றோமே தவிர குறித்த பொருட்களை பெற்றுக் கொண்டால் அங்கு அவர்கள் தான் அதிஸ்டசாலிகள். காரணம் பொருட்கள் எங்கும் இல்லை. எங்காவது ஏதாவது சேமிப்பு இடங்கள் உடைக்கப்பட்டால் மாத்திரமே இந்தப் பொருட்களைக் காணமுடியும்.

தேங்காய் மீதான முழுமையான தட்டுப்பாடு காரணமாக வன்னி மக்கள் தென்னஞ்சோலைகளில் வாழ்ந்த மக்கள் தண்ணீர் விட்டுக் கறி ஆக்கி உண்ட அவலம் என்றும் மறக்கக் கூடியதல்ல. அதனுடன் குறித்த கறிக்கு மிளகாய், வெண்காயம் ஏன் எதுவுமே இடுவதில்லை கிடைக்கின்ற இலை குளைகளையோ, வெந்தையத்தையோ இட்டு அதனைச் சூடாக்கி உண்டார்கள். பருப்பு என்ற பெயரில் குதிரைக்கு வழங்கும் கோது நீக்கப்படாத பருப்பு எப்போதாவது வழங்கப்படும்.

அதில் கறி வைப்பார்கள், வடை சுடுவார்கள், பகோடா செய்வார்கள், அவித்து வெறுமனவே உண்பார்கள். அந்தப் பருப்பு எவராலும் திரும்பிப் பார்க்கக் கூடியதல்ல. ஆனாலும் அதனை உருமாற்றி உண்ணும் போது மனதில் புதிய உணவு என்ற உணர்வு தோன்றும் போது உண்ணக்கூடியதாக இருக்கும். ஆனாலும் குறித்த பருப்பினை அவிக்கின்ற போது அது அவிவதற்கே பல மணி நேரம் எடுக்கும் அது அவியவிட்டுக் கொண்டிருக்கின்றோது விழுகின்ற எறிகணைகளை எதிர்கொள்ளவேண்டும். அடிக்கின்ற காற்றினைச் சமாளிக்கவேண்டும் எல்லாவற்றையும் அங்கிருந்த தாய் மார் எதிர்கொண்டார்கள்.

நாள்தோறும் பிஸ்கற் அல்லது வேறு சோட்டைத்தீனி உண்ட குழந்தைகள் தமக்கு அவற்றை வழங்கும்படி அடம்பிடித்தார்கள். இதனைச் சமாளிக்க முடியாத பெற்றோர் அந்தக் குழந்தைகளுக்கு அடித்து அவர்கள் அழ தாமும் அழுத அந்த நாட்களை எவரும் மறந்துவிட முடியாது.

பதுங்கு குழிகளை அமைக்கவென தறிக்கப்பட்ட பனைகளில் இருந்து கழிக்கப்படுகின்ற குருத்துக்களை உண்டு பல நாட்களைக் கழித்த பல நூறு குடும்பங்கள் வன்னியில் இருந்தன.

பசியைப் போக்க சிறிய வடலிகளை தறித்து அவற்றின் குருத்துக்களை உண்டார்கள். ஒரு வெற்றிலையின் விலை ஆயிரம் ரூபாவிற்கு அதிகமாகவே விற்கப்பட்டது. ஆனாலும் குறித்த விலைக்கு வெற்றிலையைப் பெறுவதே அங்கு சாத்தியம் இல்லை. எனவே நாயுண்ணி, ஆலம்பட்டை, குரும்பட்டி போன்றவற்றை வெற்றிலைக்காகப் பயன்படுத்தனார்கள். காட்டுத் துளசி முற்றாகத் தீர்ந்த நிலையிலேயே மேற்குறித்தவற்றை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

இதனைவிடவும் கீரை ஒரு கட்டு முன்னூறு ரூபா, ஒரு கட்டு தூதுவளை இருநூறு ரூபா, ஒரு கிலோ மீன் ஆயிரத்து எண்ணூறு ரூபாய் தொடக்கம் இரண்டாயிரம் ரூபாய் வரையில் விற்கப்பட்டது. இந்த இடத்தில் சில உதாரணங்களைக் குறிப்பிடலாம். புதுமாத்தளன் பகுதியில் இடம்பெற்ற ஒரு சம்பவம் சீனி மூடை ஒன்றைப் பெறுவதற்காக ஒருவர் தனது ஹையஸ் வாகனத்தைக் கொடுத்தார்.

அதேபோல மோட்டார் சைக்கிள்களைக் கொடுத்து மக்கள் மா மூட்டைகளை பெற்றுக்கொண்டார்கள்.

ஒரு இடத்தில் ஏதாவது பொருள் விற்கப்பட்டால் அது அந்த இடத்தில் ஒரு மணி நேரத்திற்குள் விற்றுத் தீர்ந்துவிடும். வெறும் தேயிலையைப் பெறுவதே பாரிய நெருக்கடியாக இருந்தது. பிள்ளைகளுக்கு பால்மாப் பொதிகள் இல்லாத நிலையில் தாய்மார் தேயிலை தேடித்திருந்ததை பலர் அறிவார்கள். காரணம் வெறும் தேயிலைச் சாயத்தினையாவது பிள்ளைகளுக்கு இடையிடையே கொடுத்தால் அவர்களது பசி ஓரளவு தணியும் என எண்ணினார்கள்.

எங்காவது யாரையாவது பிடித்து அரிசி பெற்றுக் கொண்டாலும் அதனை கஞ்சியாக்கிக் குடிப்பதற்கு உப்புக்கு மக்கள் அலைந்து திரிந்தார்கள். பட்டினியால் அல்லது வறுமையால் சொந்த உறவுகள் கூட தங்கள் உறவுகளை பிரிய முற்பட்டார்கள் அல்லது ஒதுக்க முற்பட்டார்கள்.

தமிழர் புனர்வாழ்வுக்கழகமும், தமிழீழ நிர்வாக சேவையும் வழங்கிய கஞ்சிக்காக படித்த கல்விமான்கள், பணம்படைத்தோர், முதியவர்கள், வயோதிபர்கள் என வரிசையில் நின்றார்கள். கஞ்சிக்கு காத்திருந்தவர்கள் மீது ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்தப்பட்டது.

எறிகணைத் தாக்குதல்களால்; நிகழ்ந்தேறிய உயிரிழப்புக்களை விடவும் பசியால் துடித்த உயிர்களின் அவலம் என்பதே வன்னியின் வரலாற்றில் மிகக் கொடிதாகும். வன்னி கடற்றொழில், விவசாயம் இரண்டையும் இரு கண்களாகக் கொண்ட நிலத்தொகுதியாகும். இங்கு மக்கள் வாழ்க்கையை முன்னெடுக்க வெளி இடங்களில் இருந்து நாளாந்த உணவுத் தேவைக்கான அவசியமான எந்தப் பொருட்களையும் வன்னியில் உற்பத்தி செய்து பெற்றுக் கொள்ளமுடியும். ஏற்கனவே பல ஆண்டுகளாக வன்னி மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைக் காலங்களில் எல்லாம் வன்னி மக்கள் தமது உணவுத் தேவைகளை எல்லாம் சுய உற்பத்திகளின் மூலமே ஈடுசெய்திருந்தமையே இதற்குச் சான்றாகும். இந்தச் சிறப்பிற்குரிய வன்னி மண்ணில் மக்கள் சந்தித்த உணவுப் பட்டினி என்பது மிக மோசமானது.

மக்களை முழுமையாக ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் கொண்டு செல்வதற்கான வழியாக மக்கள் மீது தாக்குதல்களை ஈவிரக்கமற்ற முறையில் மேற்கொள்வது அவர்கள் மீது உணவுப் பொருட்களுக்கான தடைகளை ஏற்படுத்துவது போன்ற உத்திகளை சிங்கள அரசு கைக் கொண்டது. இது ஏற்கனவே சம்பூர் பகுதியில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டு சிங்கள அரசு அதில் வெற்றியும் பெற்றிருந்தது. இந்த நிலையில் மாத்தளன் முதல் முள்ளிவாய்க்கால் வரையான பகுதிகளை மையப்படுத்தி வாழ்ந்த அல்லது அப்பகுதிகளுக்குள் முடக்கப்பட்டமக்களை நோக்கியும் சிங்கள தேசம் தனது வன்முறைகளைக் கைக்கொண்டது.

நான்கு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கு வாழ்ந்த போது அங்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களே இருப்பதாகவும், 3இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருந்த போது 80ஆயிரம் வரையான மக்களே அங்கிருப்பதாகவும் சிங்கள தேசம் வெளி உலகிற்கு அறிவித்ததுடன் வன்னிப்பகுதிக்கு அனுப்பப்படுகின்ற உணவுப் பொருட்களையும் மிகக்குறைந்த அளவிலேயே அனுப்பி மக்களைப் பட்டினி போட்டது. ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் ஒவ்வொரு குடும்பமும் சராசரி இரண்டு தொடக்கம் நான்கு வரையான சந்தர்ப்பங்களிலேயே அரசினால் அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்ட பிச்சை என்று சொல்லக் கூடிய பொருட்களைப் பெற்றுக் கொண்டார்கள். அவ்வாறு வழங்கப்படுகின்ற பொருட்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வாரத்திற்குப் பயன்படுத்துவது என்பதே மிகக் கடினமாகும்.

மக்கள் குறைவாகவே வன்னியில் இருக்கிறார்கள் எனக் கூறி அனுப்பப்படும் பொருட்களைத் தான் இலட்சக்கணக்கான மக்களுக்கு பகிர்ந்தளிக்கவேண்டிய நிலையில் சிங்கள அரசாங்கத்தின் வன்னியில் இருந்த அதிகாரிகள் இருந்தார்கள். இந்த இடத்தில் அரசாங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் பார்த்தீபன் என்பவரைப் பற்றிக் குறிப்பிடவேண்டும். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பினைச் சொந்த இடமாகக் கொண்ட அவர் மக்களுடன் இறுதிவரை இடம்பெயர்ந்து மக்கள் அனுபவித்த அனைத்து அவலங்களையும் நேரடியாகவே கண்ணுற்றவர். அவர் அரச தரப்பினருக்கும், சர்வதேச ஊடங்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் வன்னியில் மக்கள் தொகை என்ன அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உடனடித் தேவைகள் என்ன? என்பன தொடர்பில் தொடர் அறிவிப்புக்களை மேற்கொண்டே வந்தார். ஆனாலும் அவருடைய கருத்தினைக்கூட எவரும் ஏற்று நடக்கவில்லை. படை ஆக்கிரமிப்புக்குள் வந்த அவர் தனக்கிருக்கும் அச்சுறுத்தல் எந்த வேளையிலும் எதிர்கொள்ளப்படலாம் என்ற அச்சம் காரணமாக தற்போது இலங்கையில் இருந்து வெளிநாடு ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்த இடத்தில் மீண்டும் விடயத்தினைத் தொடர்கின்றோம். மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் மக்களுக்கு சராசரி ஒரு வாரத்திற்குக் கூடப் போதுமானவையாக இருக்கவில்லை.

இந்த நிலையில் தான் அனைத்து வசதிகளுடனும் வாழ்ந்த ஏராளமானோர் பிச்சை எடுக்கும் நிலைக்கு அல்லது கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பிச்சை எடுக்கும் மனநிலைக்கு வந்தாலும் பிச்சை வழங்கும் நிலையில் யார் இருந்தார்கள்? யாரிடம் உணவுப் பொருட்கள் இருந்தன? குழந்தைகளுக்கான பால் மா என்பது கிடைக்கவே இல்லை. எங்காவது ஏதாவது பால் மா விற்கப்படுமாக இருந்தால் அதன் சாதாரண விலை ஐந்தாயிரம் ரூபாய் வரை விற்பனையாகியது. இந்த விலை கொடுத்து யாரால் பால் மா வாங்கிப் பிள்ளைகளுக்கு கொடுக்க முடியும். இந்த நிலையில் தொண்டு நிறுவனம் ஒன்றினால் ஒரு தொகுதி பால்மாப் பொதிகள் வன்னிக்கு எடுத்து வரப்பட்டிருந்தன. அவை வழங்குவதற்கான அறிவுப்பு புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பட்டது. அந்த மாவினைப் பெற்றுக் கொள்வதற்கென அதிகாலை 3மணிக்கெல்லாம் மக்கள் நிரலில் நின்றிருந்தனர்.

இடைக்காட்டுப் பகுதியில் மக்கள் வரிசையில் நின்று மாப் பொதிகளைப் பெற்றுக் கொண்டிருந்த காலை வேளை குறிப்பிட்ட மக்களை இலக்குவைத்து சரமாரியான எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அவ்வேளை அங்கு நின்றிருந்த பலர் தமது குழந்தைகளையும் தங்களுடன் அழைத்தே வந்திருந்தனர். இந்தத் தாக்குதலின் போது 20ற்கும் அதிகமானோரும் குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட பெருமளவானோர் படுகாயம் அடைந்தனர். இந்த இடத்தில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றேன். எறிகணைத் தாக்குதல் நடைபெற்று சிறிது நேரத்தில் 5வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் வீதியால் அழுதபடி ஓடியிருக்கின்றார். அவரை இடைமறித்த மக்கள் எங்கு செல்லுகின்றீர் தம்பி? என வினாவியிருக்கின்றனர். அதற்கு அந்தச் சிறுவன் “அம்மா செல்விழுந்து செத்துப் போனா, அப்பா இன்னும் நித்திரையால எழும்பேல்ல, கூட்டிக் கொண்டு வரப்போறன்” என்று கூறிவிட்டுத் தரிக்காமலேயே சென்று தந்தையை அழைத்து வந்ததை சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு நண்பர் தெரிவித்தார். அந்த ஐந்துவயதுச் சிறுவன் வாசகர்களுக்கு சிறு உதாரணத்திற்காகக் குறிப்பிடப்படுகின்றான். இது இழக்கப்பட்ட ஐம்பதனாயிரம் உயிர்களில் ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.

வறுமையால் பல பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களின் வறுமை நிலை காரணமாக தாய் தந்தையினர் படுகின்ற மன வேதனை என்பது மிகக் கொரூரமானது. ஒவ்வொரு பிள்ளையும் பசியினால் அழுகின்றபோது அந்தப் பிள்ளைகளை செல்மழைக்குள் காத்தும் வறுமையினால் அணு அணுவாய் பறிகொடுக்கும் பரிதாபத்தினை எவ்வாறு தாங்கிக் கொள்வது. பிள்ளைகளுக்கென ஒரு முறை மட்டுமே பால் மா வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட மாப் பொதிகளில் பெருமளவானவற்றை மக்கள் விற்பனை செய்துவிட்டனர். காரணம் அதன் மூலம் கிடைக்கின்ற சிறிய தொகைப் பணத்தினைக் கொண்டு ஏனைய பிள்ளைகளுக்கும் ஒரு வேளையாவது உணவு கொடுக்கலாம் என மக்கள் எண்ணினார்கள்.

இதனைவிடவும் பால் மாப் பொதிகளும் ஏனைய உணவுப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்ற நடவடிக்கைகள் வன்னியில் செயற்பட்ட சில தனியார் வாணிபங்களாலும் மேற்கொள்ளப்பட்டன. அவர்களால் முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து பால் மாப் பொதிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கும் மக்கள் அதிகாலையிலேயே கூடிவிட்டனர். சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வரிசையில் காத்திருந்தனர். நண்பகலாகியும் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே சென்றது. ஈற்றில் பொருட்கள் தீர்ந்தாக அறிவிக்கப்பட வெயிலின் மத்தியில் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெறுங் கையுடனேயே வீடு திரும்பினர். அவர்களில் எத்தனை பேர் இடைநடுவே உயிர் அறுந்து வீழ்ந்திருப்பர் என்பது வேறு விடயம்.

பசியைத் தீர்த்துக்கொள்ள மக்கள் உண்ணக்கூடிய அனைத்தையும் உண்ணத் தலைப்பட்டார்கள். பிரண்டை என்றொரு கொடிவகை உயிரினம் இருக்கிறது. அதனை சம்பலாக்கி உணவாக உட்கொள்ளலாம் எனக் கருதிய பல குடும்பங்கள் அவற்றை உணவாக உட்கொண்டன. அவர்களில் பலர் உடல் நடுக்கத்திற்கு உட்பட்டனர். இதனை உட்கொண்ட இளம் பராயத்தினர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இத் தாக்கத்திற்கு உட்பட்டு அவதிப்பட்டனர். இவர்கள் புதுமாத்தளன் பகுதியில் அமைந்திருந்த தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தனர்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பது இரண்டு தரப்புக்களுக்கு இடையில் போர் நடைபெறுகின்றபோது அங்கிருக்கும் மக்களைக் காத்து மக்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தோற்றுவிக்கப்பட்டது என்றும் அது உலகம் முழுவதும் விரிவடைந்து செயற்பட்டுவருகின்றது என்று புத்தகங்களில் பார்த்த நினைவு இருக்கிறது. உண்மையில் அது புத்தகத்தில் மட்டும் தான் என்பதை வன்னியில் உணரமுடிந்தது. ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் சர்வதேச ரீதியாக பல இலட்சம் ஊழியர்களையும், பல இலட்சம் வாகனங்களையும், பல்லாயிரக்கணக்கான அலுவலகங்களையும் வைத்துக்கொண்டு ஏமாற்று நடவடிக்கையினையே முன்னெடுக்கின்றன. என்பதை வன்னியில் நிரூபித்துவிட்டே வெளியேறின.

சுதந்திரபுரம் பகுதி பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்;டதை அடுத்து ஐக்கியநாடுகள் சபையின் அதிகாரி ஒருவர் உட்பட்ட [email protected] பணியாளர்கள் அங்கிருந்தனர். அவர்கள் நிலைகொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டதன் பின்னரும் அவர்களை இலக்குவைத்து படையினரால் நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருந்து அவர்கள் தப்பிப்பிழைப்பதற்காக சுதந்திரபுரம் பொது மைதானத்தில் அவர்கள் தவழ்ந்தாக அதன் பணியாளர் ஒருவர் வேதனையுடன் சொன்னார்.

அதற்கு மறுநாள் பத்து நிமிடங்களுக்குள் சுதந்திரபுரத்தில் இருந்து புதுக்குடியிருப்பிற்கு வெளியேறிவிட வேண்டும் என எச்சரிக்கப்பட்டிருக் கின்றது. இதனை அடுத்து உயிர்தப்பினால் போதும் என ஐக்கியநாடுகள் சபையினரும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரும் மிக வேகமாக புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்தனர். அவர்களின் வாகனத் தொடரணியை இலக்குவைத்து படையினரால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் அவர்களின் வாகனங்கள் சில சேதமடைந்த அதேவேளை செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்கள் சிலர் சிறு காயங்களுக்கு உட்பட்டனர்.

அதேபோல புதுக்குடியிருப்பில் இருந்தும் சில மணி நேரங்களிற்குள்ளாக வெளியேறவேண்டும் என ஸ்ரீலங்கா அரச இயந்திரம் விடுத்த பணிப்பினை சிரமேற்கொண்டு வன்னியைவிட்டு அவர்கள் வெளியேறினர். ஆனால் அவர்களால் என்ன செய்ய முடிந்தது? என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? மக்களுடன் நின்று பணியாற்ற முடியாதவர்களுக்கு ஏன் இந்த அமைப்புக்கள்? ஏன் தொண்டாற்றுவதற்கான ஆசை? என்ற கேள்விகள் வன்னியில் இருந்த மக்கள் மத்தியில் தோன்றின. சிறிதாக ஏதாவது அறிக்கைகள் அவர்கள் விடுவார்கள். உடனடியாக அரசு விடுக்கும் கடும் தொனியிலான அறிக்கைகளை அடுத்து அவர்கள் பெட்டிப்பாம்பாக அடங்கிய வரலாறுகள் அனைவரும் அறிந்தவை.

இருப்பினும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒரு பணியினை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அது கப்பல் மூலமான காயமடைந்தோரை இடம்மாற்றும் நடவடிக்கை. புதுமாத்தளன் கடற்பரப்பிற்கு கப்பல் ஒன்று வாடகைக்கு அமர்த்தப்பட்டுக் கொண்டுவரப்படும். மிகுந்த காயங்களுக்கு உட்பட்டவர்கள் அதில் ஏற்றப்படுவர். அந்தக் கப்பல் வரும் நாளன்று காலையோ அல்லது அதற்கு முதல் நாள் இரவோ மக்கள் வாழ்விடங்கள் மீதான தாக்குதல்களை அதிகமாக எதிர்பார்க்கலாம். தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் போக காயமடைந்தவர்களை ஏற்றி அனுப்பினால் போதும் என்ற ஏக்கம் ஒவ்வொரு உறவுகளிடத்தும் நிறைந்தே காணப்படும். ஆனால் நாய்களுக்கு எலும்புத்துண்டுகளைக் காட்டி ஏமாற்றுவது போன்றதான செயற்பாடுகள் கப்பல்களின் மூலம் வன்னிமக்களுக்கு ஏற்பட்டன.

கப்பல் வரும் என அறிவிக்கப்படும் கப்பலும் கடற்பரப்பில் தென்படும் அது கரையை அண்மித்துக் கொண்டிருக்கும் வேளை அதனை நோக்கி தரையில் இருக்கும் படையினர் தாக்குதல் நடத்துவர். இல்லாது விடின் கடலில் நிலைகொண்டிருக்கும் கடற்படையினர் கப்பலிற்கு அருகாகத் தாக்குதல் நடத்துவர். ஆனால் தாக்குதல்கள் கப்பலில் படும்படியாக இடம்பெறும். இந்தத் தாக்குதல்களை அடுத்து கப்பல்; மீளவும் நடுக் கடற்பரப்பிற்குச் சென்றுவிடும். இதனிடையே தரையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் உயிர்களில் பல இரத்தம் வெளியேறியோ அல்லது வெய்யில் தாக்கம் காரணமாகவோ உயிர்களை இழந்துவிடும். சில சந்தர்ப்பங்களில் கப்பல்கள் காயமடைந்தோரை ஏற்றாமலேயே திரும்பிச் சென்ற சம்பவங்களும் உண்டு. இவ்வாறான நடவடிக்கை மூலம் கடற்படை ஒரே நேரத்தில் இரண்டு கைங்கரியங்களை ஒப்பேற்றும். ஒன்று தமது கடற்படைக்குச் சொந்தமான கப்பலையே செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வாடகைக்கு விடுவது. அதன் மூலம் இலாபம் ஈட்டுவது. மற்றையது காயமடைந்த மக்களை ஏற்றாது தடுப்பது. இரண்டின் மூலமும் அது தனது பார்வையில் இலாபத்தையே ஈட்டிவிடும். இருந்தாலும் இந்த விடயங்களை நேரடியாக அவதானித்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் என்ன செய்ய முடிந்தது?

கத்தோலிக்க மத அமைப்புகள் பிரதிநிதித்துவப்படுத்தும் கரித்தாஸ் – கியூடெக் போன்ற நிறுவனங்களின் நிர்வாகிகளான மதகுருமார் மக்களுடன் முடிந்தவரை இருந்தார்கள். அவர்களில் ஒருவர் காலை இழந்த சம்பவமும் நிகழ்ந்தேறியது. அவர்களிடம் வளம் அல்லது உதவிக்கான பொருட்கள் எதுவம் இன்மையால் அவர்களால் மக்களுக்கு போதிய உதவிகளை வழங்க முடியவில்லை.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆற்றிய பணி என்பது தான் குறிப்பிடத் தக்கதாக அமைந்தது. தமிழர்புனர்வாழ்வுக் கழகத்திற்கான அனைத்து வங்கி நடவடிக்கைகளும் ஏற்கனவே அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டு விட்டிருந்தது. வெளிநாடுகளுக்கான அனைத்துத் தொடர்புகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையிலும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தன்னாலான பணிகளைச் செய்வதில் சோர்ந்துவிடவில்லை. அது செய்த பணிகளில் இரண்டு விடயங்களை குறிப்பாக மிக முக்கியமாகக் குறிப்பிடலாம். ஒன்று கஞ்சி வழங்கல் நடவடிக்கை மற்றையது இறந்த உடலங்களை புதைப்பது அல்லது எரிப்பதற்கான நடவடிக்கை.

கஞ்சி வழங்கல் நடவடிக்கை என்பது மிக மிக முக்கிய ஒரு விடயமாகவே வன்னியில் அன்றைய சூழலில் பார்க்கப்பட்டது. வன்னியில் 75 ஆயிரம் வரையான மக்களே இருப்பதாக கூறிக்கொண்டு மூன்று மாதத்திற்கு ஒரு தடவை குறிப்பிட்ட உணவுப் பொருட்களை மட்டுமே அரசாங்கம் அனுப்பியது. அவ்வாறாக அனுப்பும் பொருட்களை பாரிய மனிதாபிமான நடவடிக்கையாக சர்வதேசத்தின் முன் அரசாங்கம் காட்டிநிற்கும். ஆனால் பல இலட்சம் உயிர்கள் உணவுப் பஞ்சத்தினை எதிர்கொண்டிருந்தன. அந்த உயிர்களை இன்னமும் சில நாள்களுக்கு வைத்திருக்கும் நடவடிக்கையாக கஞ்சி வழங்கல் நடவடிக்கை அமைந்தது,

வலைஞர்மடம், புதுமாத்தளன் பகுதிகளில் இந்த பேரவலம் நிகழ்ந்தது. நீண்ட நேரம் காத்திருந்து கஞ்சி கிடைக்காமல் அழுதழுது வீடு சென்ற எத்தனையோ நூறு குழந்தைகள் இன்னும் உயிடன் இருக்கின்றனவா என்று தெரியாது. உணவு என்ற பேர் அரக்கனால் மக்கள் எதிர்கொண்ட அவலம் என்பது ஒன்றிரண்டல்ல பல்லாயிரக்கணக்கானது. அவற்றினை அடுக்கிக் கொண்டே செல்லலாம். அடுத்த தொடரில் அவை பற்றி விரிவாக நோக்குவோம்.

வலிகள் தொடரும்……………..

இராவணேசன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*