TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நாடுகடந்தாலும் தமிழீழமே எமது முகவரியாகும்

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரான்சில் இருந்து தேர்வாகிய பிரதிநிகளில் ஒரு தொகுதியினர் மே 13 வியாழக்கிழமை அன்று கருத்துப் பகிர்வொன்றை நிகழ்த்தினர்.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான முதல் அமர்வு குறித்தும் – எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் மேலும் அனைவரது பங்களிப்போடு நாடு கடந்த தமிழீழ அரசினை பலப்படுத்துவது குறித்துமான தொடர் கருத்துப்பகிர்வுகளின் தொடக்கமாக இச்சந்திப்பு அமையப்பெற்றிருந்தது.

இம்முதல் கருத்துப்பகிர்விற்கு ஒரு தொகுதி பொது அமைப்பு பிரதிநிதிகள் சமூக செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நாடு கடந்த தமிழீழ அரசு குறித்தான புரிதலை செயற்பாடுகள் ஊடாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வது – தமிழர்களின் சனநாயக அரசியல் முன்னெடுப்பை வலுப்படுத்த கல்விசார் இளையோரை உள்வாங்கிக் கொள்வது – சமூக அரசியல் செயற்பாடுகளை காத்திரமாக முன்னெடுப்பதற்கு வலுவான வள அறிஞர் வழிகாட்டிக் குழுவை உருவாக்குவது – பிரென்சு சமூக அரசியல் தளத்திற்கு தமிழர்களின் சனநாயக அரசியல் முன்னெடுப்பை முன்வைப்பது – சமூக அரசியல் விழிப்பினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கிலான தொடர்சியான சந்திப்புக்களை மேற்கொள்வது என பல்வேறு விடயங்கள் இக்கருத்துப் பகிர்வில் பரிமாறப்பட்டன.

நாடு கடந்த தமிழீழ அரசின் முதல் அமர்வில் கலந்து கொண்ட பின்னர் அமர்வு குறித்தான பகிர்வோடு – அடுத்தகட்ட முன்னெடுப்புகள் குறித்தான விளக்கங்களை உள்ளடக்கியதான மக்கள் சந்திப்புகளை விரைந்து நடாத்துவதென தேர்வாகிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

கருத்துப்பகிர்வின் நிறைவில் அறிக்கையொன்றும் வாசிக்கப்பட்டது.

அறிக்கை பின்வருமாறு:

நாடுகடந்தாலும் தமிழீழமே எமது முகவரியாகும்!

புதிய வரலாற்று நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் எமது நன்றி

கடந்த வருடம் மே 18ல் ஈழத்தமிழ்மக்களின் வாழ்வுக்கும் எதிர்காலத்திற்குமான தேசிய விடுதலைப் போர் சிங்கள தேசியவாத அரசினது இராணுவ கொடுங்கோன்மையாலும், பிராந்திய சர்வதேச அரசுகளின் நலன்சார் அணுகுமுறைகளாலும் தோற்கடிக்கப்பட்டது.

எமது கண்முன் எமது தேசிய இனம் பெரும் இனசுத்திகரிப்பு நடவடிக்கைக்குட்பட்டது. தமிழீழ வரலாற்றினை எழுதிய எமது அக்னிக்குஞ்சுகள் மாவீரர்கள் ஆயினர். நாங்கள் நிர்க்கதியான வேளையில் நாடுகடந்த தமிழீழ அரசு என்கின்ற புதியகளம் திறக்கப்பட்டது.

2009 மே-18ல் நாங்கள் விட்ட இடத்திலிருந்து மீளப்பிறப்பது போன்று புதியவடிவில் – புதிய வீச்சுடன் எமது அரசியல் நகரத்தொடங்கியுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசின் பிரான்சு பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான தேர்தல்பல்வேறு பரிமாணங்களில் வரலாற்று நிகழ்வாகவும் அமைந்துவிட்டது.

இந்தவேளை,

பிரான்சுவாழ் மக்களினால் நேரிடையாக தேர்வான பிரதிநிதிகளான நாங்கள் தேர்தலை ஏற்பாடு செய்து, அதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட நாடுகடந்த அரசுக்கான பிரான்சு செயற்பாட்டுக்கு குழுவிற்கு எமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறிப்பாக, விடுதலைப் புலிகள் இயக்கதின் புலம்பெயர்ந்த நாட்டு செயற்பாடுகளில் மிகவும் நீண்ட, மூத்த பாத்திரத்தினை வகித்துச் செயற்பட்ட திரு.மனேகரன் அவர்கள் பல்வேறு சிரமங்களின் மத்தியில் தளராத உறுதியுடனும், பொறுமையுடனும் செயற்பட்டு இந்த வரலாற்று நிகழ்வினை நிகழ்த்தியுள்ளார். அவருடன் செயற்பட்ட பேராசிரியர் யூலியா அவர்களும் என்றென்றும் எம்மால் மதிப்புடன் நோக்கப்படுவார். மேலும், திரு.சிவா சின்னப்பொடி, திரு.வேலழகன், திரு.பரணி ஆகியோரிற்கும் எமது நன்றியும், பாராட்டுகளும் சேரட்டும்.

இத்தேர்தலுக்கு ஆதரவும், உற்சாகமும் வழங்கிச் செயற்பட்ட ஊடகங்களிற்கு, குறிப்பாக ஜீரீவி தொலைக்காட்சிக்கு எமது மனம்நிறைந்த நன்றி என்றென்றும் உண்டு.

தமிழ்வின், பொங்குதமிழ், புதினப்பலகை உட்பட ஆரம்பம் முதலே இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு உறுதுணை வழங்கிய இணைய ஊடகங்களுக்கும் எமது நன்றி.

இந்தத் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்ற செயற்பாட்டாளர்கள், இளையவர்கள் என அனவரும் என்றும் பாராட்டுக்குரியவர்கள். அத்துடன் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் இந்த வரலாற்றினை நிகழ்த்திய கௌரவத்திற்குரியவர்கள் என்றே எண்ணுகின்றோம்.

இத்தேர்தலின் ஊடாக மக்கள் எமக்கு வெளிப்படுத்திய செய்தியினை நாங்கள் தமிழர் தாகமாக வடித்து – ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு விசுவாசமாக செயற்படுவோம் என்பதை மீள இவ்வேளையில் வலியுறுத்துகின்றோம்.

உருவாக இருக்கும் நாடுகடந்த அரசுக்கான அரசமைப்பில் பிரான்சு வாழ் ஈழத் தமிழ் சமூகத்தின் கரிசனைகளை நாங்கள் தொடர்ச்சியான தொடர்பாடல்கள், சந்திப்புக்கள், கருத்தமர்வுகள் ஊடாக தொடர்வோம் என்பதனையும் இவ்வேளையில் அறியத்தருகின்றோம்.

அனைவரது கருத்துக்களையும் ஆக்கபூர்வமான ஆலோசனையும் நாங்கள் எப்பொழுதும் ஆர்வத்துடன் செவிமடுக்க தயாராக இருக்கின்றோம்

நன்றி

நாடு கடந்த தமிழீழ அரசு பிரதிநிகள்

பாலசந்திரன் நாகலிங்கம் -78

சுபாசினி குருபரன் – 77 – 91

சுதர்சன் சிவகுருநாதன் (சுதன்ராஜ் )- 95 – 78

மகிந்தன் சிவசுப்ரமணியம் – 75

சசிகுமார் சரவணமுத்து – மேற்பிராந்தியம்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamileelam News

Your email address will not be published. Required fields are marked *

*