TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வலி சுமந்த மாதமும் மாறாத ரணங்களும்

இது வலி சுமந்த மே மாதம்.

கடந்த ஆண்டு நிகழ்ந்த இனப் படுகொலையின் கோர நினைவுகளை, ஆறாத வடுக்களை சுமந்து வருகிறது.துரத்தியடிக்கப்பட்ட வன்னி மக்கள், இன்னமும் முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த ஓராண்டுக்குள் கொக்கிளாய் பறவைகள் சரணாலயம் அழிக்கப்பட்டதால், அப் பறவைகள் எங்கு அடைக்கலம் தேடிச் சென்றனவோ புரியவில்லை.

சரணாலய நிலப்பரப்பை இனி பதுங்கு குழிகளும் இராணுவக் கோபுரங்களுமே நிரப்பப் போகின்றன. நவீன தேசிய நல்லிணக்கத்தின் நேசத் தளங்களாக இவை உருமாறும். மாவீரர் துயிலும் இல்லங்கள் இடிக்கப்பட்டு அப் பூமியில் ஏகாதிபத்தியங்களின் முதலீட்டுக் கோபுரங்கள் நிமிர்ந்து நிற்கும்.

நடந்தவற்றின் அடியழிக்க முயன்றாலும் ஆறாத இரணங்களை ஏற்படுத்திய கோர நினைவுகளை மக்களின் ஆழ் மனத்திலிருந்து அகற்ற முடியாது. மே 18 ஆம் திகதியை போர் வெற்றி நாளாகக் கொண்டாடும் ஆட்சியாளர், தேசிய இன நல்லிணக்கத்தை யாருடன் ஏற்படுத்தப் போகிறார்களென்று தெரியவில்லை.

யாழ். நகரில் சின்னத்திரை சித்திரங்களை வரவழைத்து, சிங்களத்தின் வெற்றிச் செய்தியை தமிழ் மக்களும் கொண்டாட வேண்டுமென எதிர்பார்ப்பது வெந்த புண்ணில் கீறிப் பார்ப்பது போலாகிவிடும். வலி சுமக்கும் பெருந்திரளான தமிழ் மக்கள், இன்னமும் இயல்பு வாழ்விற்குத் திரும்பவில்லை.

ஆட்டம், பாட்டு, கொண்டாட்டங்கள் போன்ற பொய்மைத் திரைகளை விரித்து, நாடு சகஜ நிலைக்கு திரும்பி விட்டதென உலகை ஏமாற்றலாம். யுத்தம் முடிந்துவிட்டதென கூட்டமைப்பு மகிழ்ச்சியுறலாம். நடந்ததை மறப்பது நிரந்தர நண்பன் என்றொருவர் இல்லையென்பது அரசியலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபாக இருக்கலாம்.

ஆனால் ஒடுக்கப்படும் மக்களுக்கு துன்பச் சிலுவை சுமப்பதனை தமது வாழ்வாகிக் கொண்டவர்களுக்கு நினைவுகள் எல்லாம் வலி மிகுந்ததாகவே இருக்கும். திணிக்கப்பட்ட தேர்தல்களில் மக்களின் மன உணர்வு வெளிப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் ஒரு வெறுப்புணர்வும் ஆவேசமும் நிறைந்திருந்தது.

பொதுத் தேர்தலில் அது வடிந்து விட்டது. இனியொரு தேர்தல் வட மாகாணத்திற்கு வரும். அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்ட பின் இந்த மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமாவென்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இத் தேர்தலில் கலந்து கொள்ளுமென எதிர்பார்க்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அடுத்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிடலாம். கிழக்கில் வெற்றி பெற்றால், வடக்கு மாகாண சபையை இதனுடன் இணைக்க வேண்டுமா என்கிற தேர்தலையும் நடத்த முன்வரலாம். சட்டத்தில் அதற்கு இடமிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த இணைப்பு அரசியலும் வெற்றியடைந்தால் தாயகக் கோட்பாட்டை நிலை நிறுத்திவிட்டதாக கூட்டமைப்பு பெருமை கொள்ளும.

ஆனாலும் அதிகாரமற்ற தாயகமாகவே அது இருக்கும். இறைமையுள்ள தேசிய இனம், தேசம் என்கிற அடிப்படையான கோட்பாடுகளை சிங்கள தேசம் ஏற்க மறுத்தால், இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு நிர்வாக அதிகாரம் மட்டுமே மிஞ்சும் என்பதே உண்மை.

2011 இல் தமிழகத்தில் தேர்தல் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுவதால் 13 ஆவது திருத்தச்சட்ட அமுலாக்கம், மீள் குடியேற்றம் போன்ற தமிழர் தரப்பு விவகாரங்களை இந்தியாவும் உயர்த்திப் பிடிக்குமென எதிர்பார்க்கலாம். இந்திய அறிஞர் குழாம், தற்போது அடிக்கடி கூடும் கருத்தரங்குகளில் தமிழர் பிரச்சினையும் ஒரு பின்னிணைப்பாக செருகப்படுகிறது.

பொருளாதார முதலீட்டு ஆதிக்கம் ஊடாக சீனாவைப் புறந்தள்ளி இலங்கையை எவ்வாறு தமது கட்டுக்குள் கொண்டு வருவது என்பது குறித்தே ஆய்வுகள் நிகழ்த்தப்படுகின்றன. மனித உரிமை மீறல் அஸ்திரங்களை காவியபடி இலங்கையில் பல நெருக்கடிகளை மேற்குலகம் மேற்கொண்டாலும் சீன ஆதிக்கத்தை மட்டுப்படுத்துவதே இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் உள்ள பிரதானமான விடயமாகவிருக்கிறது.

வருகிற 10, 11 ஆம் திகதிகளில் புதுடில்லியில் நடைபெறவுள்ள, “”ஸ்ரீலங்காவின் சமாதான நகர்வினை முன் கொண்டு செல்லல்” என்கிற தலைப்பில் அமைந்த சர்வதேச மாநாட்டினை இந்தியாவின் வெளியுறவுச் செயலர் நிருபமாராவ் ஆரம்பித்து வைக்கவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இதில் இலங்கையைச் சார்ந்த நிபுணர்களும் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் சில ஈழத் தமிழர்களும் கலந்து கொள்கிறார்கள்.

1. புனர்வாழ்வு, மீள் குடியேற்ற வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லல்.

2. 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் நகர்ந்து தீர்வொன்றினை முன் மொழிதல்.

3. இலங்கைத் தமிழர்கள், ஏனைய சிறுபான்மை இனங்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் வகிபாகம்.

4. இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் நிலை குறித்த விவகாரங்கள்என்பன இம் மாநாட்டில் உரையாடப்படவுள்ள விடயங்களாகும்.

இதில் இந்தியாவின் முதலீட்டு அதிகரிப்பு எவ்வாறு துரிதப்படுத்தப்பட வேண்டுமென்கிற விவகாரமே முதன்மை பெறுமென ஊகிக்கலாம். இம் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலிற்குள் அடங்காத பல விடயங்கள், வாசலிற்கு வெளியே, பிறிதொரு தளத்தில் நிச்சயம் பேசப்படும். அதாவது, பொருளாதார முதலீட்டோடு, பாதுகாப்பு, எண்ணெய் அகழ்வாராய்வு மற்றும் மீன்பிடித்துறை போன்றவற்றில் அதிக ஈடுபாடும் ஒன்றிணைவும் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதை இந்தியா வலியுறுத்தலாம்.

தொடர்ச்சியான தொடர்பாடல் மூலமாக சீனாவுடன் போட்டியிடக் கூடிய சாதகமாக சூழலை பராமரிக்க வேண்டுமென இந்தியா விரும்புகிறது. அத்தோடு கல்வி, தகவல், தொழில்நுட்பம், சுகாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உல்லாசப் பயணத்துறை போன்ற விடயங்களில் தீவிரமான முதலீடுகளை குவிக்க வேண்டுமென இந்தியா ஆர்வம் கொள்கிறது.

ஆனாலும் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்கு ஒரு பில்லியன் டொலர்களையும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு 855 மில்லியன் டொலர்களையும் 2000 ஹெக்டர் நிலப் பரப்பில் அமையவிருக்கும் மாத்தறை விமான நிலையத்திற்கு 210 மில்லியன் டொலர்களையும் கொழும்பு கட்டுநாயக்க கடுகதி வேகப் பாதைக்கு 248 மில்லியன் டொலர்களையும் கடனடிப்படையில் முதலீட்டு உதவிபுரியும் சீனாவுடன் போட்டியிடுவது சற்றுக் கடினமான விவகாரமாக இந்தியாவிற்கு இருக்கும்.

அதேவேளை ஆசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையத்தில் அமைந்திருக்கும் இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகமும் அதற்கு மிக அண்மையில் உருவாகிக் கொண்டிருக்கும். 3500 மீற்றர் நீளமும் 75 மீற்றர் அகலமும் உடைய ஓடு பாதையைக் கொண்ட விமான நிலையமும் சீன ஆதிக்கத்திற்குள் சென்று விடுமென்கிற அச்சம், இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது. பல ஆண்டுகளாக இலங்கைக்கு நிதி உதவி வழங்கிய நாடுகளின் பட்டியலில் முதன்மை இடம் பிடித்த ஜப்பானையும் மிஞ்சிவிட்டது சீனா.

மத, கலாசார, ஒன்றிணைவுகளும் பரஸ்பர புரிந்துணர்வுகளும் அரசியல் போக்கினைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிப்பதில்லை. அரசியல் என்பது அப்பட்டமான சுயநலத்தின் ஊற்றிலிருந்து பிறக்கின்றது என்பதனை இந்தியாவும் உணரும், முள்ளிவாய்க்காலில் வலி சுமந்த மக்களும் புரிவார்கள்.

இதயச்சந்திரன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*