TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நெல்லியடி இளைஞர் படுகொலை வாய்மூடி மௌனமாக இருப்பதேன்

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வந்த குற்றச்செயல்களின் உச்சக்கட்டமாக- நெல்லியடியில் இளைஞர் ஒருவர் சுட்டுகொல்லப்பட்டுள்ளார்.

தும்பளையைச் சேர்ந்த மகாலிங்கம் சதீசன் என்ற இந்த இளைஞர் நெல்லியடியில் வர்த்தக நிலையம் ஒன்றைத் திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த போதே சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். இரவு 7.30 மணியளவில் அவர் திறக்கவிருந்த வர்த்தக நிலையத்துக்கு வெளியே- பெயரைக் கூறி அழைத்த மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களே அவரைச் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றனர்.

மறுநாள் யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் தான் இந்தச் செய்தி வெளியானது. தமிழ் ஊடகங்கள் தவிர்ந்த ஆங்கில, சிங்கள ஊடகங்களில் இந்தச் செய்தி வெளிவரவேயில்லை. போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட முதலாவது சம்பவம் இது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சம்பவத்தை ஆங்கில, சிங்கள ஊடகங்கள் ஏன் இருட்டடிப்புச் செய்தன என்ற கேள்வி எழுவது இயல்பு.

இந்தக் கொலைக்கான காரணம் என்ன? யார் இந்தக் கொலையைச் செய்தனர்? என்பன மக்கள் முன் கேள்விகளாக எழுந்துள்ளன. யாழ்ப்பாண மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தப் படுகொலையை சுமார் மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கண்மூடித்தனமான படுகொலைகள் போன்று சாதாரணமாக ஒதுக்கி வைத்து விட முடியாது. ஏனென்றால் போர் நடந்த காலப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் ஏராளம் நடந்தன. ஆனால் போர் முடிவுக்கு வந்த பின்னரும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது மக்களை அச்சத்தின் பிடியில் சிக்க வைத்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கு யாருமே கண்டனம் தெரிவிக்க கூட முன்வரவில்லை.

* யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவான ஐந்து எம்.பிக்களில் ஒருவரோ, அல்லது ஈபிடிபி சார்பில் தெரிவான மூன்று எம்.பிக்களோ அல்லது ஐதேகவின் சார்பில் தெரிவான ஒரு எம்.பியோ இந்தச் சம்பவத்தைக் கண்டிக்கவோ, இதுபற்றி வாய்திறக்கவோ இல்லை. யாழ்ப்பாணத்தில் இயல்பு நிலை உருவாகி விட்டது- அச்சமற்ற வாழ்வை மக்கள் வாழ்கிறார்கள் என்று பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில்- நடந்தேறியிருக்கின்ற இந்தச் சம்பவம் குறித்து மக்களின் பிரதிநிதிகள் வாய் திறக்காது மௌனமாக இருப்பது வேடிக்கை.

ஒரு கொலை- அதுவும் துப்பாக்கிச் சூட்டு மரணம் ஒன்று நிகழ்ந்திருப்பதை சாதாரண விடயமாகக் கருதி விடமுடியாது. இதுவே தென்னிலங்கையில் நடந்திருந்தால் எத்தனை விசாரணைகள் நடந்திருக்கும்- சுட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால் அப்படியான எந்த முக்கியத்துவமும் இந்தக் கொலைக்கு கொடுக்கப்படவில்லை. இதற்கு தமிழ் அரசியல்வாதிகளும் மௌனமாக இருந்து துணைபோயிருப்பது வேதனையானது.

குறிப்பிட்ட இளைஞன் 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டடைப்புக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட்டவர் என்றும், பின்னர் ஏற்பட்ட அச்சுறுத்தலால் வன்னிக்குச் சென்றவர் என்றும் கூறப்படுகிறது. வவுனியா தடுப்பு முகாமில் தங்கியிருந்து விட்டு மீண்டும் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய இளைஞர் யாரால் குறிவைக்கப்பட்டார்? இது ஒன்றும் பாதுகாப்புக் கெடுபிடிகள் இல்லாத சூழலில் நடந்த கொலையல்ல.

சில வாரங்களுக்கு முன்னர் இப்படி நடந்திருந்தால் மக்கள் நலன் கருதியே பாதுகாப்பு நடைமுறைகளை தளர்த்தியிருதோம் என்று படைத்தரப்பு நியாயம் கற்பிக்கலாம். அதற்கு வாய்ப்பே இல்லை. யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தப் படையினர் மீளவும் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவதாக யாழ்.படைத்தளபதி அறிவித்திருந்த நிலையில் தான் இந்தச் சம்பவம் நடந்தது.

அதுவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ யாழ்ப்பாணம் வந்த நிலைமையை ஆராய்ந்து புதிய பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்திய பின்னர்- அது நடைமுறைக்கு வந்த பின்னர் தான் இந்தக் கொலை நடந்துள்ளது. எனவே படையினரின் பாதுகாப்பு நடைமுறைத் தளர்வுகளால் இந்தக் கொலை நடந்ததாக காரணம் காட்ட முடியாது. பாதுகாப்பு அமைச்சு, ஊடகத் தகவல் நிலையம் என்பன நாளாந்தம் பாதுகாப்புச் செய்திகளை வெளியிடுவது வழக்கம்.

அப்படியான எந்தச் செய்தியிலும் யாழ்ப்பாண இளைஞரின் கொலை பற்றிக் குறிப்பிடவேயில்லை. இது ஏன் என்று கேள்வி எழுகிறது. முன்னர் புலிகளின் தலையில் இலகுவாக பழியைப் போட்டு விடுவது போல- இப்போது செய்ய முடியாது. ஏனென்றால் அவர்கள் இப்போது இல்லை. இதை அரசாங்கம் பகிரங்கமாக எத்தனையோ தடவைகள் அறிவித்து விட்டது.

எங்காவது மிஞ்சியிருக்கும் புலிகள் யாராவது இதைச் செய்திருக்க வாய்ப்புகள் உண்டா என்றால் அதற்கும் சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியானால் படைத்தரப்பு சம்பந்தப்பட்டோரைக் கைது செய்ய உச்சக்கட்ட முயற்சிகளை எடுத்திருக்கும். அடிப்படி நடந்ததாகவும் தெரியவில்லை. அப்படியானால் இது யாரின் வேலை என்ற கேள்வி எழுகிறது.

இதற்கான பதில் மக்களுக்குப் பெரும்பாலும் தெரிந்தேயிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்குவதற்கு இந்தக் கொலையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. இப்போது யாழ்ப்பாண நகருக்கு செல்லும் வாகனங்களில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டு சோதனையிடப்படுகின்றனர். இந்தளவுக்கும் யாழ்ப்பாண நகருக்குள் குற்றங்கள் ஏதும் நடந்ததாக தெரியவில்லை.

யாழ்ப்பாணத்தில் பதற்றநிலையைத் தோற்றுவித்து அதனூடாக எதையோ சாதிக்கும் முயற்சிகள் நடப்பதாகவே தெரிகிறது. யாழ்ப்பாணத்தில் தனியார் காணிகளில் இருந்து படையினர் விலக்கப்படவுள்ளதாக ஆனையிறவில் கோத்தாபய ராஜபக்ஸ பேசிய பின்னர் நடக்கின்ற பல சம்பவங்கள்- படைவிலக்கம் என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

இதுபோன்ற கொலைகள் குற்றச்செயல்களின் பின்னணியை கண்டறிவதற்கு அரசாங்கத்துக்கு தமிழ் கட்சிகள் அழுத்தம் கொடுத்ததாகத் தெரியவில்லை. இது போன்ற சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இயல்புநிலை உருவாவதற்கு நிச்சயம் தடையாகவே அமையப் போகின்றன. இதை அரசாங்கம் உணர்ந்து கொண்டு நடவடிக்கை எடுக்கத் தவறினால் இதன் விளைவுகள் பாரதூரமானதாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

ஹரிகரன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*