TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வேதனையின் வலியோடும் ஓராண்டை நோக்கும் தமிழர்கள்

வேதனையின் வழியோடும் ஓராண்டை நோக்கும் தமிழர்களும்! வெற்றியின் ஓராண்டைக் கொண்டாடும் மகிந்தவும்.

வலி சுமந்த மாதம் இந்த மே மாதம். இது ஈழத்தமிழர்களுக்கு அதிலும் குறிப்பாக வன்னியில் பல ஆண்டுகளாக வாழ்ந்து அங்கு விடுதலைப்புலிகளுக்கு தூண்களாக நின்ற நமது உறவுகளுக்கு இந்த மாதம் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் நினைவுகளோடு பிறந்துள்ளது.

இதேபோல புலம்பெயர்ந்து வாழும் நமது தமிழ் மக்களும் இந்த மே மாதத்தை கண்ணீரைச் சொரிந்து உள்வாங்கிக் கொண்டார்கள். மறுபக்கத்தில், விடுதலைப் புலிகளின் வீரத்தை தனியாக வெற்றிகொள்ள இயலாது உலகிடம் சென்று இரந்து கேட்டு உதவி பெற்று கடந்த வருடம் மே மாதத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களையும் போராளிகளையும் கொன்றழித்து நின்ற மாதத்தை மகிந்தவும் அவரது சகாக்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கின்றார்கள்.

அந்த மாங்கனித் தீவெங்கும் மாபெரும் கொண்டாட்டங்கள். வடக்கிலும் கிழக்கிலும் விடுதலைப் புலிகளின் அழிவுக்கு காரணமாகவும் தங்கள் சுயநலமும் சுகவாழ்வுமே நோக்கமாகக் கொண்டவர்களும் விடுதலைப் புலிகளின் அழிவைக் கொண்டாடும் வகையில் சிங்களப் படையினரோடு கை கோர்த்து நிற்க தயாராகின்றனர்.

இவ்வாறாக இந்த மே மாதம் அந்தத் தீவில் இரண்டு வகையில் வரவேற்கப்படுகின்றது. ஆனாலும் விடுதலைப் புலிகளின் வீரத்தையோ அன்றி போராளிகளின் தியாகங்களையோ புகழ்ந்து பேசி அதனைக் கூட கொண்டாட அங்கு ஒருவரும் முன்வரக் கூடாது என்பதில் கவனமாக உள்ள அரசின் தீவிரத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

போராளிகளின் நினைவுச் சின்னங்கள் அங்கு அழிக்கப்படுகின்றன. தலைவர் பிரபாகரன் அவர்களுடைய பிறந்த இல்லம் தற்போது கற்குவியல்களாக காட்சியளிக்கின்றது.

விடுதலை ஒன்றே நோக்கமாகக் கொண்டு போராடிய விடுதலைப் புலிகளின் துயிலும் இல்லங்கள் மீண்டும் எழுந்து விடக் கூடாது என்பதில் மகிந்தாவும் அவரது சகாக்களும் மிகவும் உ~hராக உள்ளார்கள் என்பது நன்கு தெரிகின்றது. அதனால்தான் புனிதமும் அழகும் மிக்க அந்த நினைவாலயங்கள் அழிக்கப்பட்டு அதற்கு சிங்களச் சிப்பாய்களின் சாயங்கள் பூசப்படுகின்றன.

தங்கள் மண்ணிலிருந்து கொடிய போர் காரணமாக அடித்துத் துரத்தப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் இடங்களுக்குச் சென்று வாழலாம் என்ற அறிவிப்புக் கேட்டு அங்கு செல்கின்றார்கள். ஆனால் அங்கும் இரண்டு வகையான காட்சிகள். ஓன்று சிங்களச் சிப்பாய்கள் தமிழர்களின் வீர வரலாற்றை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளார்கள் என்பதை நமது மக்கள் காண்கின்றார்கள்.

அதற்கு மேலாக தங்கள் உண்மையான இருப்பு மீண்டும் அங்கு தோன்றக் கூடாது என்பதிலும் அரசாங்கமும் அதன் ஏவல் நாய்களான இராணுவமும் கவனமாக உள்ளது என்பதையும் நமது மக்கள் அவதானிக்கின்றார்கள்.

இதன் காரணமாகவே கிளிநொச்சிக்குச் சென்று வாழ எண்ணியவர்கள் தங்கள் சுயமான சொற்களால் கூறுகின்றார்கள் “நாங்கள் இங்கு போர்க் காலத்திலும் பார்க்க மிகவும் கொடிதான வாழ்வை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.” என்று மீள் குடியேற்றம், மறுவாழ்வு, என்ற சொற்பதங்கள் எல்லாம் வெறும் கடதாசிகளில் மட்டுமே எழுதப்பட்டு.. அங்கு நிஜமான எதையும் காணமுடியாமல் நமது மக்கள் தவிக்கின்றார்கள்.

ஆனால் சிங்களச் சிப்பாய்களோ வெற்றியை கொண்டாடி மகிழவும் அங்கு மீண்டும் தமது வாழ்வைத் தொடங்கலாம் என்ற நம்பிக்கையோடு சென்றவர்களை மிரட்டவும் தூண்டப்படுகின்றார்கள். இதனால் அந்த வன்னி மண்ணில் மீண்டும் மீண்டும் இனரீதியான அடக்கு முறைகளுக்கும் பொதுவான இராணுவ அதிகார பீடத்தின் அச்சுறுத்தல்களுக்கும் நமது மக்கள் உள்ளாகின்றார்கள்.

உண்மையில் இந்த வலி சுமந்த மாதத்தில் நமது மக்கள் தங்கள் வலி அதிகரிப்பதையே காண்கின்றார்கள் தவிர அந்த வலி தணிவதை கனவிலும் காணாதவர்களாகவே உள்ளார்கள். சிங்களம் தங்கள் வெற்றியைக் கொண்டாடி மகிழும் கோசங்கள் எல்லாம் மீண்டும் கொத்துக் குண்டுகள் எழுப்பிய பயங்கர ஒலியாகவே நமது மக்களுக்கு கேட்கும் என்றே நாம் இங்கு கூறிவைக்கின்றோம்.

கனடா உதயன் கதிரோட்டம் மே 07. 2010

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*