TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தனது குடும்பத்தினரை அதிகார மையத்தின் சக்தி

தனது குடும்பத்தினரை அதிகார மையத்தின் சக்தி வாய்ந்தவர்களாக உருவாக்குவதில் குறியாக இருக்கும் மகிந்த.

பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் அடுத்த கட்டமாக அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ளது. தற்போதைய அரசியலமைப்பின் கீழ் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது- இது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று முன்னர் கூறிவந்த அரசாங்கம் இப்போது அதைப்பற்றியெல்லாம் பேசுவதில்லை. இப்போது அரசியலமைப்பை திருத்திக் கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்பதே உண்மை.

பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவின் தலைமையிலான அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் என்று நம்பியிருந்தது. அதை வைத்துக் கொண்டு சுலபமாகவே அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டிருந்தது.மகிந்த ராஜபக்ஸ தமது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்காகவே அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சியில் இப்போது இறங்கியுள்ளார்.

முதலாவது அவர் தன்னை நிலையான ஜனாதிபதியாக மாற்றிக் கொள்ள முனைகிறார். இதற்காக அவர் தனது குடும்பத்தினரை அதிகார மையத்தின் சக்தி வாய்ந்தவர்களாக மாற்றி வருகிறார். இதற்கெல்லாம் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதே அரசாங்கத்தின் இப்போதைய நோக்கம்.

மகிந்த ராஜபக்ஸ இரண்டாவது தவணைக்காலத்துக்காக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு விட்டபோதும்- அவர் இன்னமும் இரண்டாவது தடவை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவில்லை. எதிர்வரும் நவம்பர் மாதமே இரண்டாவது தவணைக்காலத்துக்காகப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியலமைப்புப் படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகளே பதவியில் இருக்க முடியும்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் இருந்த போது உருவாக்கிய அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்து தனது பதவிக்காலத்தை மேலும் நீடிக்க வழிசெய்திருக்க முடியும்

அதாவது மூன்று தடவைகளோ அல்லது அதற்கு மேலோ ஜனாதிபதியாக ஒருவர் போட்டியிடலாம்- பதவி வகிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. நிறைவேற்று அதிகாரம் உள்ள பதவிகளில் இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் இருப்பது ஆபத்தானது என்பதாலேயே இந்த ஏற்பாடு.

அமெரிக்காவில் கூட ஜனாதிபதியாக ஒருவர் ஆகக் கூடியது இரண்டு தடவைகள் மாத்திரமே பதவியில் இருக்க முடியும். அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளே ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம். ஆனால் இலங்கையிலோ ஒரு ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாகும்.

உலகில் நிறைவேற்று அதிகாரப் பதவிகள் உள்ள அரசியலமைப்புகளில் இதுபோன்று பதவிக்காலங்களை வரையறை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதைக் கவனத்தில் கொண்டே ஜே.ஆரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரண்டு தடவைகளாக வரையறை செய்திருந்தார்.

ஆனால் 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவியை இல்லாமல் செய்யப் போவதாக வாக்குறுதி கொடுத்து முதலாவது பதவிக்காலத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ- தனது பதவிக்காலத்தை மூன்றாவது தவணைக்காலத்துக்கும் நீடிப்பதற்கு முயற்சித்து வருகிறார்.

இன்னும் முதலாவது பதவிக்காலமே முடியாதுள்ள நிலையில்- அவர் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் பதவியேற்பதற்கு வசதியாக அரசியலமைப்பைத் திருத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மிகவும் முக்கியமானதொரு விடயம்.

தனது முதலாவது பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னரே அரசியலமைப்பைத் திருத்தும் முயற்சியை அவர் மேற்கொள்ளப் போவது உறுதியாகியுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதத்துக்குள் அரசியலமைப்பு திருத்தம் இடம்பெறும் என்று புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அதாவது தமது அரசியல் அதிகாரத்தை இன்னும் 12 ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்வதில் மகிந்த ராஜபக்ஸ உறுதியாக இருக்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

ஏற்கனவே மகிந்த ராஜபக்ஸவின் குடும்ப ஆட்சி குறித்து விமர்சனங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. இது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் மகிந்த ராஜபக்ஸ கவலைப்படுபவராகவே தெரியவில்லை. தம் குடும்பத்தினரை அரசியலின் அதிரகார மையம் நோக்கி கொண்டு வருவதிலேயே குறியாக இருக்கிறார்.

* மூத்த சகோதரர் சமலை நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தும் சபாநாயகராகவும், படைகளைக் கட்டுப்படுத்தும் பாதுகாப்புச் செயலராக இளைய சகோதரர் கோத்தாபயவையும் நியமித்துள்ள மகிந்த ராஜபக்ஸ மற்றொரு சகோதரரான பசில் ராஜபக்ஸவை பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக நியமித்துள்ளார்.

* இவர்கள் மட்டுமன்றி இந்தமுறை பொதுத்தேர்தல் மூலம் தனது மகன் நாமல் ராஜபக்ஸவையும் எம்.பியாக்கி விட்டார்.

* ஏற்கனவே சமல் ராஜபக்ஸவின் மகன் சசீந்திர ராஜபக்ஸ ஊவா மாகாண முதலமைச்சராக்கப்பட்டு விட்டார்.

* மகிந்த ராஜபக்ஸவின் உறவினரான நிருபமா ராஜபக்ஸ அமைச்சராக்கப்பட்டு விட்டார்.

இப்படியாக ராஜபக்ஸ குடும்பத்தின் ஆதிக்கம் அரசியலின் மையப்பகுதியை ஆட்டிப்படைக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தச்சூழலில் தனது பதவிக்காலத்தை மேலும் 12 ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்ளும் வகையில் அரசியலமைப்பில் மாற்றத்தை மேற்கொள்ள அவர் முனைவது பல்வேறு விமர்சனங்களை நிச்சயம் தோற்றுவிக்கச் செய்யும்.

இதற்கு எதிர்க்கட்சிகள் நிச்சயம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படும் நிலையில் மகிந்த ராஜபக்ஸவோ அவரது அரசாங்கமோ இருக்கப் போவதில்லை. ஆனாலும் இது அவருக்கு சவால் மிக்கதொரு விடயமாகவே மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

காரணம்

* ராஜபக்ஸ குடும்பத்தவரின் அதிகாரத்தை நிலை நிறுத்தும் முயற்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் இருந்து தான் எதிர்ப்புகள் வரவேண்டும் என்றில்லை. அது ஆளும்கட்சிக்குள் இருந்து கூட வரலாம். அத்தகையதொரு நிலை வராமல் பார்த்துக் கொண்டு அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டிய நெருக்கடி ஒன்று அவருக்கு உள்ளது, இதை அவர் சாதாரண விடயமாக கருதி ஒதுக்கி வைத்திருந்தால்- இந்த விவகாரம் அவருக்கு எதிரான பூகம்பமாக வெடித்தாலும் ஆச்சரியம் இல்லை.

கபில்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*