TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வலிசுமந்த வன்னி வாழ்க்கை: பாகம்-1 – இராவணேசன்

சில காலங்களாக உலகின் அனைத்து வாய்களிலும் உச்சரிக்கப்பட்ட ஒரு பேசு பொருளாக விளங்கியது வன்னி மண். அந்த மண் ஆரம்பம் முதல் இறுதிவரை வீரத்திற்கும் செழுமை பொருந்திய வளத்திற்கும் எந்த வேளையும் குறையாத வனப்பிற்கும் உட்பட்டது என்பதே காலாகாலங்களின் பதிவாக விளங்கியது. ஆனாலும் 2009ல் அந்த மண்ணிற்கான காலப் பதிவு என்பது முற்றிலும் மாறுபட்டது. இந்த ஆண்டின் ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியானது இலங்கையின் வரலாற்றில் என்றும் அழியாத சொற்களுக்குள் உட்படுத்த முடியாத மிக மிக மோசமான காலப்பகுதி என்பதுதான் முக்கியமானது.

மன்னாரில் ஆரம்பித்த நிலவிழுங்கல் நடவடிக்கை தொடராக சிறிது சிறிதாக நகர்ந்து தமிழ் மக்களின் உயிர்களை அவர்கள் சிறுகச் சிறுகச் சேமித்த சொத்துக்களை, அவர்களின் நிலங்களை அவர்களின் அன்பிற்கினிய கால்நடைகளை ஏன் அவர்களின் பசுமையான வாழ்க்கையை எல்லாம் ஏப்பமிட்டது. நம்பிக்கை என்ற ஒன்றை மட்டுமே தமது மனங்களில் கொண்ட மக்கள் ஒவ்வொரு பகுதியாக இடம் பெயர்ந்தார்கள். அந்த இடப்பெயர்வுகள் ஒவ்வொரு கட்டமாக படிப்படியாக இடம்பெற்றன.

ஒவ்வொரு இடப்பெயர்வுகளின் போதும் அவர்கள் மனதில் இருந்த நம்பிக்கையானது அவர்களை சோர்விலிருந்து மீட்டெடுத்து நகரவைத்தது. ஆனாலும் அவர்கள் ஒவ்வொரு கட்டமாக இடம்பெயர்ந்த போதும் ஒவ்வொரு உயிர்களையோ தமது உடைமைகளையோ குடியிருந்த தற்காலிக பகுதிகளுக்கு தாரைவார்த்தே செல்லவேண்டிய நிலையை எதிர்கொண்டு நகர்ந்தார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் தம்மிடம் இருந்த ஒவ்வொரு பொருட்களாக விற்றார்கள். எவ்வளவு காலத்திற்குத் தான் அவர்களது பொருட்கள் தீர்ந்து போகாமல் தாக்குப் பிடிக்கும். எவ்வளவு காலத்திற்குத் தான் தமது பொருட்களை கூலி கொடுத்து இடப்பெயர்வுக்கு உட்படுத்த முடியும். எல்லாச் சுமைகளையும் முடிந்தவரை சுமந்தார்கள்.

இடப்பெயர்வுகள் அவர்களின் தொடர்கதைகளாகி பல பத்து இடப்பெயர்வுகளின் பின்னர் மிக நெருக்கமான பகுதியை நோக்கியதாக இடப்பெயர்வு குவிவு இடம்பெறுகின்றது. இது மாத்தளன் முதல் முள்ளிவாய்க்கால் வரையான பகுதிகளை இலக்குவைத்ததாக அமைகின்றது. வன்னியின் அனைத்துப் பகுதிகளிலும் போர் உக்கிரம் தலைவிரித்தாட அனைத்துப் பகுதியையும் சேர்ந்த நான்கரை இலட்சம் வரையான மக்கள் குறிப்பிட்ட சில கிலோமீற்றர்களுக்குள் நகர்கின்றனர்.

உடையார்கட்டு, வள்ளிபுனம், தேவிபுரம் உட்பட்டபகுதிகளில் நிறைந்திருந்த மக்கள் கூட்டம் படிப்படியாக நகர்ந்து இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், மந்துவில் உட்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்து அங்கிருந்து பழைய மாத்தளன், புது மாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொற்கணை, வலைஞர்மடம், இரட்டை வாய்க்கால், பனையடி, சாளம்பன், கரையாம் முள்ளிவாய்க்கால், வெள்ளாம் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளை நோக்கியதாக மக்களது இடப்பெயர்வு அமைகின்றது.

மேலே குறிப்பிட்ட பகுதிகளுக்கான பிரதான பாதைகளாக மூன்று வழிகள் காணப்படுகின்றன. குறிப்பாக முல்லைத்தீவு பரந்தன் சாலையூடாக இரட்டைவாய்க்காலை அடைந்து அங்கிருந்து முள்ளிவாய்க்கால்களுக்கோ அல்லது அம்பலவன் பொற்கணைப் பகுதிகளுக்கோ நகர்வது. ஆனாலும் அந்த வீதிக்கு கிழக்காக நந்திக்கடலை அடுத்து முல்லைத்தீவும் அதற்குச் சமாந்தரமாக வற்றாப்பளை, கேப்பாப்புலவு ஆகிய இடங்களும் உள்ளன.

அந்தப் பகுதிகள் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்தமையால் குறிப்பிட்ட வீதியில் வாகனங்களோ, மக்கள் நடமாட்டமோ தென்படுகின்றபோது அந்த வீதியை இலக்குவைத்து சரமாரியான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட வண்ணமே இருந்தன. இதன் காரணமாக அந்த வீதியில் பெருமளவான இடம்பெயர்ந்து சென்ற மக்கள் சம்பவ இடங்களிலேயே உயிரிழந்தனர். எல்லாம் இழந்த மக்கள் தமது உயிரைக் காத்துவிடுவோம் என்கின்ற நம்பிக்கையை மட்டுமே கொண்டு நகர்ந்ததால் அவர்கள் அந்த வீதியினை முற்றாகத் தவிர்த்தார்கள்.

அதற்குச் சமாந்தரமாக ஆனந்தபுரத்தினூடாக நீராவியடி, உணாவில் ஆகிய வயல்வெளிகளை ஊடறுத்து வலைஞர்மடத்தினை நோக்கிச் செல்லும் சிறிய பாதையினை மக்கள் பெருமளவில் பயன்படுத்தினர். அதே போல ஆனந்தபுரத்தின் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை ஊடாக அம்பலவன் பொற்கணைக்கான பாதை அமைந்துள்ளது. அது பச்சைப்புல்மோட்டைப் பகுதியை ஊடறுத்துச் செல்வது. பச்சைப்புல்மோட்டை என்பது வன்னியின் நீர்நிலைகளில் இருந்து செல்கின்ற நீரினை நந்திக்கடலுடன் இணைக்கும் பகுதியாகும். இதன் அருகருகாக பரந்த வயல்வெளிகள் காணப்படுகின்றன.

பச்சைப்புல் மோட்டையை அண்டிய காட்டுப் பகுதி உணாவில் என்ற காட்டுப் பகுதியாகும். இந்தக் காட்டுப் பகுதியில் சாதாரண காலத்தில் எவரும் தனித்துச் செல்ல அஞ்சுவார்கள். அதன் மத்தியில் ஒரு சுடுகாடும் அமைந்துள்ளமையால் அந்தப் பகுதியில் மாடுமேய்ப்போர், வயல்களுக்குச் செல்வோர் மட்டுமே எப்போதாவது தென்படுவர் என அந்தப் பகுதி மக்கள் கூறுவர். இந்தப் பகுதியின் ஊடாக மக்கள் பயணித்த அதேவேளை அந்தக் காட்டுப் பகுதியிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கிடைத்த பொருட்களைக் கொண்டு குடிசைகளை அமைத்து குடியமர்ந்தனர்.

இதனைவிடவும் இரணைப்பாலை ஊடான மாத்தளனுக்கான பிரதான வீதிதான் மக்களின் பிரதான போக்குவரத்து வீதியாக விளங்கியது. ஏனைய பகுதிகளினூடான போக்குவரத்துப் பாதைகள் பற்றி இலட்சக்கணக்கான மக்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதனால் இந்த வீதியே கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டது. வாகனங்களின் நெருசல்கள் என்பது வாய்விட்டுக் கூற முடியாதது. காலை வேளை இரணைப்பாலைப் பகுதியில் நகரும் வாகனங்கள் மாலைவேளையே மாத்தளனைச் சென்றடையும். இரண்டிற்குமான தூரம் 3 தொடக்கம் 4 கிலோமீற்றர்கள் வரையே இருக்கும்.

இதனைவிடவும் இரணைப்பாலையின் உள்பகுதி தேவிபுரத்தின் “ஆ” பகுதிகளில் இருந்து இரணைப்பாலையின் பாண்டியன்வெளி என்ற பகுதியினையும் மக்கள் தமது இடப்பெயர்வுப் பகுதியாகப் பயன்படுத்தினர்.

இந்த இடங்களில் மிக மோசமான அவலம் என்னவென்றால் ஏற்கனவே ஏனைய பகுதிகளில் இருந்த மருத்துவமனைச் செயற்பாடுகள் எல்லாம் மாத்தளன், பொற்கணை, முள்ளிவாய்க்கால்ப் பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டு விட்டிருந்தன. ஆனாலும் தேவிபுரம் முதல் மந்துவில் வரையான பகுதிகளில் மக்கள் செறிந்திருக்கும் பகுதிகளை இலக்குவைத்ததான தாக்குதல்கள் தொடர்ந்தவண்ணமே இருந்தன. இறந்தவர்கள் போக எஞ்சியவர்களைக் காப்பாற்றத் துடிக்கும் மக்கள் முடிந்தவரை காயமடைந்தவர்களை வாகனங்களிலோ மோட்டார் சைக்கிள்களிலோ ஏற்றிச் செல்வார்கள். வாகன நெரிசல்களைக் கடந்து செல்லத் தாமதம் காரணமாக சிறிய காயங்களுக்கு உட்பட்ட பல நூற்றுக் கணக்கானோர் இரத்தம் வெளியேறிப் பரிதாபகரமாக உயிர்களை இழந்தனர்.

இதனைவிடவும் ஒவ்வொரு இடப்பெயர்வுகளும் நிமிடத்திற்கு நிமிடம் மாறுபடும் என்பதால் ஒரு பகுதிக்குச் செல்லும் ஒருவர் மீண்டும் திரும்பி வருவதற்கு இடையில் அவர்கள் இருந்த பகுதியில் ஏதாவது ஒரு சம்பவம் நிகழ்ந்தேறியே விடும். அவர்கள் வீட்டின் மீது செல்விழுந்திருக்கலாம். விமானங்கள் குண்டுவீசியிருக்கலாம். அல்லது படையினர் மிக அண்மித்து வந்திருக்கலாம். அவ்வாறான ஒரு அபாய நிலை எதிர்கொள்ளப்பட்டால் வீட்டில் இருந்து வெளியேறியவர்களுக்கு தகவல் தெரிவிக்க வன்னியில் கையடக்கத் தொலைபேசியா இருந்தது?

உண்மையில் வீட்டில் இருந்து புறப்பட்ட நபர் இடம்பெயர்ந்து சென்றால் ஒரு இடத்தினைப் பிடித்து அதில் இருக்கவேண்டும் என்றோ அல்லது தமது பிள்ளைகளுக்கோ வயது முதிர்ந்த தாய் தந்தையருக்கோ ஒரு வேளை கஞ்சியாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தைத் தணித்துக் கொள்வதற்காகவோ சென்றிருப்பார். அவர் மீண்டும் பயணச் சிரமங்கள், தனது உயிரைக் காத்தல் எல்லாம் கடந்து உறவுகளைச் சென்றடையுமட்டும் அவருடைய உடலில் உயிர் இருக்காது. அவ்வாறு சென்றால் அவர்கள் வேறு எங்காவது நகர்ந்திருப்பார்கள். அல்லது அவர்களது உயிரற்ற உடல்களைக் கூட பார்க்க முடியாத அவல நிலை காணப்படும். இல்லையெனில் உயிரற்ற உடல்கள் அனாதைகளாகக் காணப்படும். இவை எல்லாம் இல்லாமல் அனைவரும் உயிருடன் இருந்தால் அவர் தனது கையில் கிடைக்கும் பொருட்களையும் எடுத்துக்கொண்டு இடம் பெயர ஆரம்பித்து விடுவார். வழிப்பயண நெருக்கடிகள், உயிர் அச்சுறுத்தல்கள் எல்லாவற்றையும் தாண்டி மிக நீண்ட நேரம் பயணித்தால் அவர் ஏற்கனவே பார்த்துவிட்டு வந்த இடத்தில் வேறு யாராவது குடியமர்ந்துவிடுவார்கள்.

களப்பு வெளி

சரி இவர்கள் நோக்கிப் பயணிக்கும் இடத்தின் தன்மை பற்றிப் பார்க்கலாம். பழைய மாத்தளன் முதல் முள்ளிவாய்க்கால் வரையான பகுதிகள் கரையோரக்கிராமங்கள் ஆகும். கடலில் இருந்து சராசரி அரை முதல் ஒன்றுவரையான கிலோமீற்றர்களை அடுத்து கடலுக்குச் சமாந்தரமாக பிரதான வீதி அமைந்திருக்கும். இந்தவீதியானாது உண்மையில் திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவை ஊடறுத்து வெற்றிலைக்கேணி ஊடாக யாழ்ப்பாணத்தைச் சென்றடையவேண்டிய வீதியாகும். ஆனாலும் போர்க்காரணங்களால் இன்றுவரை அந்தவீதி நாங்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கான போக்குவரத்து வீதியாக மக்கள் பயன்பாட்டில் இல்லை. அந்த வீதிக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதி கடற்கரை மணல் நிறைந்தபகுதியாகும். ஆனாலும் வீதிக்கு மறுபக்கம் அமைந்து பகுதியானது உவர் நிறைந்த களப்பு வெளியாகும்.

இதனை வாசகர்கள் இலகுவில் விளங்கிக் கொள்வதற்கு ஒரு உதாரணத்தைக் கூறலாம், இதே பகுதியில் அமைந்துள்ள மாத்தளன் வெளியில் குறிப்பிட்ட காலத்தில் உப்பு அகழ்வு இடம்பெறுவது முக்கியமானதாகும். களப்புப் பகுதியில் சாதாரண காலத்தில் அதாவது கோடை காலத்தில் வெற்றுக் கால்களுடன் நடந்தால் கால்களில் உவர் மண் ஒட்டிக் கொள்ளும் என்பதால் அந்தப் பகுதிகளில் மக்கள் நடமாடுவதே மிக அரிது. சில காலங்களில் அங்கு வண்டில்ச் சவாரி மட்டுமே இடம்பெற்றுவரும். இந்தப் பகுதி நந்திக்கடலின் தொடரான நீரேரிப்பகுதி என்பதுதான் உவர் நிலைக்கான பிரதான காரணியாகும்.

இந்தநிலையில் நான்கு இலட்சத்து ஐம்பதனாயிரத்திற்கும் அதிகமான மக்களுக்குமான வாழ்விடங்களை தீர்மானிக்கப்போகின்ற பகுதியாக கடற்கரைப் பகுதியும், நாங்கள் குறிப்பிட்ட களப்புப் பகுதியும் மட்டுமே காணப்படுகின்றன. வன்னியைப் பொறுத்த வரையில் ஆண்டின் இறுதிப் பகுதியே மாரிகாலமாகும். ஆனாலும் 2008இன் இறுதிப் பகுதியில் குறிப்பிடக் கூடிய அளவிலான மழைவீழ்ச்சி வன்னியில் நிகழாமையால் இடம்பெயர்ந்த மக்களுக்கு சற்று ஆறதலாக அமைந்தது.

வன்னியில் இடம்பெயர்ந்த 3 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தாங்கள் இடம்பெயர்ந்து செல்கின்ற இடங்களிற்கு தமது வாழ்நாளிலே ஒரு முறை கூட சென்றிருப்பதற்கான வாய்ப்புக்களே இல்லை என்று கூறலாம். இந்த ஆபத்து தான் அவர்களை பாரிய அவலத்திற்கு இட்டுச் சென்றது. இடம்பெயர்ந்து சோர்ந்து பயண நெரிசலைக் கடந்த மக்கள் பரந்த வெளியினை அவதானித்தார்கள். தமக்கான வாழிடமாக அதனை அமைத்துக் கொள்வதற்கு சரியான இடமென அவர்கள் கருதினார்கள். இடம்பெயர்ந்த மக்களில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் தமது வாழிடமாக களப்பு வெளிப் பகுதியினைத் தேர்ந்தெடுத்தார்கள்.

ஏற்கனவே தமது வீடுகளில் இருந்து கழற்றிக் கொண்டுவரப்பட்ட கூரைத் தகடுகளையோ அல்லது தறப்பாள்களையோ அரணாக வைத்துக் கிடைக்கும் சிறிய தடிகளை நட்டு சிறிய கொட்டில்களை ஆக்கிவிடுவார்கள். உண்மையில் அவர்கள் அமைக்கும் கொட்டில்களின் கூரைகளுக்குப் பயன்படுத்தப்படும் தறப்பாள்கள் ஏற்கனவே எங்காவது எறிகணைத் தாக்குதல்களுக்கு உட்பட்டு சல்லடை போடப்பட்டவைகளாகத் தான் அனேகமாக இருக்கும். அல்லது அவர்களது உடு புடைவைகள் தான் அவற்றுக்கான கூரைகளாக இருக்கும்;. ஆனாலும் ஏதோ ஒரு அச்சறக்கையான கொட்டில் ஒன்றே போதும் என்ற நோக்குடன் அமைத்துக் கொண்டு அவர்கள் வாழ்ந்தார்கள். பழைய மாத்தளனில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை நந்திக்கடலுக்குச் சமாந்தரமாகவும் பிரதான வீதிக்கு இடையிலும் மக்கள் வாழ்க்கையை ஆரம்பித்தனர்.

மழை:

மக்களின் தொடர் அவலங்களை மேலும் அதிகரிக்கும் வகையிலான மற்றொரு பாரிய அவலம் என்பது மழை மூலமும் கிடைத்தது. குறிப்பிட்ட களப்பு வெளிப்பகுதியில் குடியமர்ந்த மக்களை பாரிய அளவில் பாதித்தது மழை வெள்ளம். இரண்டு நாட்கள் தொடராக இரண்டு சந்தர்ப்பங்களில் பெய்த மழைவீழ்ச்சி காரணமாக அந்தப் பகுதி பாரிய வெள்ள அனர்த்தத்திற்கு உட்பட்டது. மழை பெய்தால் அங்கு நீர் தேங்கும் என்று அந்த மக்கள் சிந்தித்திருக்கவில்லை காரணம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல அந்தப் பகுதி தொடர்பான தெளிவோ அல்லது மாற்று நடவடிக்கைக்கான நிலையோ அவர்களுக்கு இருக்கவில்லை.

மக்களது தறப்பாள்கள் ஏற்கனவே சல்லடை போடப்பட்டவையாகவும், பழுதடைந்த வையாகவும் காணப்பட்ட அதேவேளை பல மக்கள் தமது கூடாரங்களை முடிந்தவரை பழைய துணிகளாலேயே மூடியிருந்தனர் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெயர்ந்த மக்களுக்கு தறப்பாள்கள் (கூரைவிரிப்புக்கள்) வழங்கப் பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கவிடயம். மழை தொடராக இடம்பெற இடம்பெற ஒரு சில மாதங்களே ஆன பச்சிழம் குழந்தைகள் முதல் நடக்க முடியாத நிலையில் நூறை அண்மித்த வயதை உடைய முதியவர்கள் வரையில் நேரடியான மழைத்தாக்கத்திற்கு உட்பட்டு நனைந்தனர். அதே வேளை தரையில் தேங்கிய நீர் குடிசைகளுக்குள் புகுந்து கொண்டது.

மழையில் விறைக்க விறைக்க குழந்தைகளை ஏந்தியபடி இரவிரவாய் கண்ணீர்களை மழைநீருடன் கரைத்தபடி நின்றிருந்த இலட்சக்கணக்கான மக்கள் சந்தித்த அவலம் என்பது வார்த்தைகளுக்கு அடக்கமுடியாதது. அதே நேரத்தில் அந்த மக்களை ஈவிரக்கமற்ற முறையில் இலக்குவைத்து நடத்தப்பட்ட கண்மூடித்தனமான எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் இருந்து மக்கள் தம்மைக் காத்துக் கொள்ள முடியவில்லை. காரணம் மக்கள் உயிர்காக்க அமைத்திருந்த அனைத்து பதுங்குகுழிகளுக்குள்ளும் நீர் முழுமையாக புகுந்துவிட்டிருந்தது. மழை நடுவில் எதிர்கொள்ளப்பட்ட எறிகணை மழைகளில் பல நூறு உயிர்கள் பிரிந்தன. அந்த மழை நாள்களில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதல்களில் சிறிய காயங்களிற்கு உட்பட்ட மக்களில் பெருமளவானோர் சிகிச்சைக்காகக் கொண்டு செல்ல முடியாத நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்தனர் என்பது வெளி உலகில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த மழைச் சம்பவம் இரண்டு சந்தர்ப்பங்களில் நிகழ்ந்தேறியது ஒவ்வொரு தடவையும் மேற்குறிப்பிட்டதான நெருக்கடிகளை மக்கள் எதிர் கொண்டனர். அதே வேளை முக்கியமாக மக்கள் சிறுகச்சிறுகச் சேமித்து வைத்த அரிசி, மா, பருப்பு போன்ற பொருட்கள் நீரில் நனைந்து பழுதடைந்தன. சரி அவற்றைப் பயன்படுத்தியாவது ஏதாவது உணவினை சமைத்து உண்ணலாம் என்றால் விறகு என்பது அங்கு பாரிய பிரச்சினையாக இருந்தது. கிடைக்கும் சிறிய தடிகளை வைத்தாவது சமைக்கலாம் என்றால் அதனை எங்கு சமைப்பது? சமைப்பதற்கான இடம் ஏது? நிலம் எல்லாம் நீர் என்றால் அந்த மக்கள் என்ன செய்திருக்கமுடியும். அதேபோல அப்பகுதியில் நீர் தேங்கியமையால் மக்களின் உடைகள், உடைமைகள் அனைத்தும் நனைந்துவிட்டன.

இதனால் மூன்று நான்கு நாட்களாகக் கூட ஈரமான உடைகளுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது வாழ்க்கையைக் கழித்த சம்பவங்களும் இடம்பெற்றன. இந்த இடத்தில் இயற்கைக் கடன்களைக் கழிப்பதற்கு மக்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் என்பன மிக மோசமாக அமைந்திருந்தன. இதனால் பாரிய சுகாதாரச் சீர்கேடுகளையும் அந்த மக்கள் எதிர்கொண்டனர். பலர் தொற்றுக்களுக்கு உட்பட்டனர். வாகனங்களின் இயந்திரப் பகுதிகளுக்குள் நீர் புகுந்தமையால் அவை தொடர்ந்து செயற்பட முடியாத நிலையில் மக்களால் கைவிடப்பட்டன. மழை தந்த அவலத்தினை அடுத்து மக்கள் அனைவரும் கடற்கரை நோக்கியே நகர்ந்தனர்.

மக்கள் மீதான தாக்குதல்கள்:

வன்னியின் அழிவின் பிரதான கருப்பொருள் அல்லது மூலப் பொருள் என்பது வான், கடல், மற்றும் தரைவழித் தாக்குதல்தான். ஆனாலும் அதன் வகைகளை விளக்கவேண்டிய தேவை என்பது இந்தப் பகுதிக்கு உள்ளது. எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமநேரத்திலேயே எறிகணைத் தாக்குதல்களும், விமானத் தாக்குதல்களும், பீரங்கித் தாக்குதல்களும், கடற்படையினரின் தாக்குதல்களும் அந்தமக்களை இலக்கு வைத்ததாகவே அமைந்திருக்கும். சர்வதேசத்தின் முன்பாகவும் இந்தியாவின் முன்பாகவும் வாக்குறுதிகளை இலங்கை அரச இயந்திரம் அள்ளி விதைத்துக் கொண்டே எதிரான நிலைப்பாட்டினை மக்கள் மீது எடுத்துவந்தது. கொத்துக்குண்டுகள், பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள், பொஸ்பரஸ் குண்டுகள், தொலை தூர ஆட்லறி பீரங்கித் தாக்குதல்கள் உட்பட்டவற்றை நடத்தவில்லை என்று அப்பட்டமாக அறிவித்து செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் போதே அனைத்து வகையான தாக்குதல்களும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டன.

விமானப்படை மேற்கொண்ட இன அழிப்பென்பது மிக மோசமானது. ஒலியினை விட வேகமான விமானங்களான இஸ்ரேல் நாட்டுத்தயாரிப்பான கிபிர் மிகை ஒலி விமானங்களும், றைசிய நாட்டுத் தயாரிப்பான பைற்றர் எனப்படும் உலங்குவானூர்திகளுமே வான் தாக்குதல்களில் கூடுதல் பங்கு வகித்தன. இவற்றுக்குத் துணையாக அல்லது பிரதான வழிகாட்டியாக பாகிஸ்தான் நாட்டின் வேவுவிமானங்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. தன்னியக்க விமானங்களான இவை வழிகாட்டவே மக்கள் மீதான தாக்குதல்கள் துரிதப்படுத்தப்பட்டன.

கிபிர் விமானங்கள் பயணிக்கும் வேகத்திற்கு மக்களால் ஈடுகொடுத்து தம்மைக் காத்துக் கொள்ள பதுங்கு குழிகளுக்குள் செல்வவோ ஏன் தரையில் படுத்துக் கொள்ளவோ நேரம் போதாது. மக்கள் கிபிர் என்று உணர்ந்து கொள்ள முன்பாகவே தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிடும். இந்தத் தாக்குதல்களின் போது ஐம்பதற்கு குறையாத உயிரிழப்புக்களோ காயமடைதல்களோ நிகழ்ந்தேறிவிடும். இந்த விமானத்தின் மூலம் வெவ்வேறு விதமான வகைகளில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும். குண்டுகள் வீழ்ந்து தரையை எட்டுவதற்கு 10 முதல் 15 அடிக்கு மேலாகவே குண்டுகள் வெடித்து விடும் இதனால் குண்டுச் சிதறல்கள் ஒரு கிலோமீற்றர்கள் வரை சென்று தாக்கத்தை ஏற்படுத்த வல்லன. அதேபோல பதுங்குகுழிகளை ஊடறுத்துச் சென்று நிலத்தின் கீழே வெடிக்கும் ஆற்றல் கொண்ட குண்டுகளும் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும். இந்தக் குண்டுகளின் தாக்கங்களினால் அப்பகுதிகளில் பாரிய கிணறுகளுக்கு நிகரான குழிகள் ஏற்பட்டுவிடும். அந்தத் தாக்குதல்களில் உட்பட்ட மக்களது சிறிய தசைத் துண்டுகளைக் கூட எடுப்பது என்பது மிகக் கடினம்.

இதனை விடவும் உலங்குவானூர்த்திகளின் மூலம் நடத்தப்படும் தாக்குதல்களில் இருந்து மக்கள் தப்பிப்பது என்பது மிகக் கடினம். காரணம் அவற்றின் மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள் மிக மிகத் தொலை தூரத்தில் இருந்தே அதாவது பல கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்தே நடத்தப்படும். றொக்கெற் தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள் என்பதால் அவை மிகவும் துல்லியத்தன்மை வாய்ந்ததாகவே அமைந்துவிடும்.

கொத்தணிக் குண்டு என்பது பல குண்டுகளை ஒன்றிணைத்ததான ஒரு பாரிய குண்டாகும். மக்கள் செறிவாக வாழும் பகுதிகளை இலக்கு வைத்து இதன் மூலம் தாக்குதல் நடத்தப்படும். ஒரு குண்டின் மூலம் பத்து முதல் பதினைந்து வரையானோர் கொல்லப்பட்டோ அல்லது படு காயத்திற்கோ உட்படுவர். காரணம் குண்டு விழுந்து வெடித்ததும் அதில் இருந்து சிதறும் குண்டுகள் அனைத்துப் பகுதிகளிலும் விழுந்து வெடிக்கும். இதனால் தாக்கம் என்பது மிக அதிகமாகக் காணப்படும்.

பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள் என்பது மிகப் பயங்கரமானது. ஒரே நேரத்தில் பத்திற்கு மேற்பட்ட நாற்பதற்கு உட்பட்ட குண்டுகளை மக்கள் வாழ்விடங்களின் மீது ஏவுவதே அது. இந்தத் தாக்குதலின் போது சராசரியாக அரை ஏக்கர் பரப்பளவான பகுதி நிர்மூலமாக்கப்படும். அங்கிருக்கும் அனைவரும் இதன் தாக்கத்திற்கு உட்படுவர்.

இதேபோல பொஸ்பரஸ் குண்டு என்படும் தடை செய்யப்பட்ட குண்டினால் தாக்குதல் நடத்தப்படும் போது அது தாக்குகின்ற பகுதி எரிந்தே அழிந்துவிடும். தாக்கத்திற்கு உட்படுவோர் கருகியே உயிரிழப்பர். ஏற்கனவே ஊடகங்களின் மூலம் எரிந்த நிலையில் காணப்படுகின்ற உடலங்களைப் பார்வையிட்டவர்கள் இதன் தாக்கத்தினை புரிந்து கொள்ளலாம். அந்தக் குண்டு வீழ்ந்த சில விநாடிகளிலேயே அந்த இடம் முழுமையாக எரிந்தழிந்துவிடும். இதன் தாக்கத்திற்கு உட்பட்டு உயிர்பிழைத்தவர்கள் எரிகாயங்களுக்கு உட்பட்டு பாரிய அவலத்தினை எதிர்கொள்வர். இந்தத் தாக்கத்தினால் மட்டுமே பல ஆயிரம் உயிர்கள் பிரிந்திருந்தன. பல ஆயிரம் உயிர்கள் எரிகாயங்களுக்கு உட்பட்டன.

ஆட்டிலறி தொலை தூர எறிகணைத் தாக்குதல்களின் தாக்கம் என்பது இவை அனைத்திலும் வித்தியாசமானது மிக ஆபத்தானதுமாகும். இந்த எறிகணைகள் ஒரு பகுதியை இலக்குவைத்து நடத்தப்பட்டால் அந்த இடத்தில் இருந்து எந்தப் பொருளையும் முழுதாக எடுப்பது என்பது மிக மிக அரிதே. இந்தத் தாக்குதல்களிற்கு உட்படும் மக்களின் நிலையினை எண்ணிப் பார்க்க வேண்டுமா?

இதேபோன்று குறுந்தூர எறிகணைகள், ஆர்பிஜிகள் மற்றும் பீரங்கிகளின் தாக்குதல்கள் தொலை தூரத்தில் இருந்து குறிபார்த்துச் சுடும் தாக்குதலுக்குமே வன்னியின் கோரக் கொலைகள் இரையாகின.

இவற்றிற்கு நிகராக கடற்படையினரின் மக்கள் மீதான பீரங்கித் தாக்குதல்களும் பாரிய அளவில் நடந்தேறின. கடற்படைக்கென இந்தியாவால் வழங்கப்பட்ட கப்பல்களே கூடுதல் அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. கடற்படையினர் கடலில் இருந்து மக்கள் செறிவாக வாழ்கின்ற இடங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்படும். கடற்கரையில் இருந்து கடலுக்கு இடையில் தடுப்பு அல்லது மறைவு ஒன்றும் இல்லை. இந்த நிலையில் கடற்படையினரின் ஒவ்வொரு தாக்குதல்களும் உயிர்க்குடிப்பினை உறுப்படுத்துவதாகவே அமைந்திருக்கும்.

இந்தச் சந்தர்ப்பங்களில் மிக மிக வேதனையளிப்பது என்னவென்றால், ஒரு இடத்தில் விமானத்தாக்குதலுக்கோ அல்லது எறிகணை, பீரங்கித் தாக்குதல்களுக்கோ யாராவது உட்பட்டுக் காயமடைந்தால் அவர்களைக் காப்பாற்றுமாறு அருகில் இருப்போரும், காயமடைந்தோரும் எழுப்பும் அவலக் குரல் என்பது நெஞ்சறையை பிளக்கும் அளவிற்கே இருக்கும். காயமடைந்தவர்களில் பச்சைக் குழந்தைகள் இருப்பர், அல்லது மூத்தவர்கள் இருப்பர், பெண்கள் இருப்பர். இந்த இடத்தில் காயமடைந்தவர்களைக் காப்பதற்காக அங்கிருப்போர் சம்பவ இடத்திற்கு ஓடிச் செல்வர். ஆனால் பரிதாபம் என்னவென்றால் அதே பகுதிக்கு உடனடியாக நடத்தப்படும் தாக்குதல்களில் உதவிக்குச் சென்றவர்கள் பரிதாபகரமாக உயிரிழப்பினைச் சந்திக்கின்றமைதான் மிகக் கொரூரமானது.

சாவுகளைத் தவிர்க்க மக்கள் மேற்கொண்ட முயற்சிகள்

தாக்குதல்களில் இருந்து தம்மைக் காத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் பதுங்குகுழிகளை முடியுமானவரை மக்கள் அமைத்தே வந்தனர்.

ஓரளவு வசதி படைத்தோர் அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் செல்வாக்குப் பெற்றோர் முடிந்தமானவரை பனைகளையும், தென்னைகளையும் தறித்து பதுங்குகுழிகளை அமைத்தனர். வன்னியில் மாத்தளன் முதல் வட்டுவாகல் (வெட்டு வாய்க்கால்) வரையான பகுதி பனை உற்பத்தியில் கூடுதல் பங்கு பெறுகின்ற பகுதியாகும். இங்கு நின்றிருந்த பனைகளில் 90வீதமானவை பதுங்குழிகள் அமைப்பதற்காக தறிக்கப்பட்டும், எறிகணை மற்றும் விமானப் படைத் தாக்குதல்களுக்கு உள்ளாகியும் அழிந்துவிட்டன.

இவ்வாறான வசதி என்பது நான்கரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கும் கிடைக்காது என்பது இயல்பானது தான். ஆனாலும் அவ்வாறான வசதி இல்லாத ஒவ்வொருவரும் தமது குடிசைகளுக்கு அருகருகாக சிறிய அளவிலான குழிகளை வெட்டி பாதுகாப்பு நிலைகளை அமைத்துக் கொள்வர். சிலர் இருக்கும் கூரைவிரிப்புக்களை சதுரவடிவில் வைத்துக்கட்டி அதனைச் சுற்றி மண் அணைத்து அரண் ஆக்குவர்.

மண் அணைத்து பாதுகாப்பு நிலைகளை ஏற்படுத்துவதற்கு சாக்கு அல்லது பைகள் என்பனவு எந்தளவிற்கு அங்கிருக்கும். அது கூட அங்கில்லை. இந்த நிலையிலும் வன்னி மக்கள் சோர்ந்துவிடவில்லை. அவர்கள் புதிய உத்தி ஒன்றைக் கைக் கொண்டார்கள். அல்லது கண்டறிந்தார்கள். தம்மிடம் இருந்த சாறிகளை (சேலைகள்) துண்டுகளாக்கி அவற்றை சாக்குகள் அளவிலான பைகளாக தைத்து அவற்றினுள் மணலை அடைத்து அரண்களாக்கினர். அவற்றுக்கு மேலாக கிடைத்த தடிகளையோ, பலகைகளையோ அமைத்து அவற்றிற்கும் மேலாகவும் தம்மால் தயாரித்த மண் பைகளை அடுக்கிப் பாதுகாப்புத் தேடிக்கொண்டனர்.

ஆனாலும் இந்தத் தயாரிப்பினாலும் பரிதாபமாக பல நூறு உயிர்கள் பிரிந்த அவலமும் இந்த இடத்தில் குறிப்பிடப்படவேண்டியுள்ளது. மணல்களால் நிரப்பப்பட்ட சாறிகளால் ஆன பைகளில் எறிகணைச் சிதறல்களில் ஒரு துண்டு பட்டால்ப் போதும். அதனுள் இருக்கும் மணல் மிக வேமாக வெளியேறிவிடும். அது வெளியேறியதும் அதற்கு மேலாக வைக்கப்பட்டிருக்கும் ஏனைய பைகளும், மேலே வைக்கப்பட்டிருக்கும் பாரங்களும் உள்ளே இருக்கும் மக்கள் மீது வீழ்ந்துவிடும். இதனால் எறிகணைகளின் தாக்களுக்கு நேரடியாக உட்படாத மக்கள் மூச்சுத்திணறியோ அல்லது பாரம் தாங்காமலோ உயிரிழந்துவிடுவர். இ;வ்வாறான அவலம் வலைஞர்மடத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையான பகுதிகளிலேயே அதிகளவில் நிகழ்ந்தேறியது.

இதனைவிடவும் நீர்நிலைகளை அண்மித்த பகுதிகளில் காணப்படும் பாலங்களையும் நீர் வெளியேறும் நீரோடைகளையும் மக்கள் தமது காப்பரண்களாக அமைத்துக்கொண்டனர்.

வலிகள் தொடரும்……..

இராவணேசன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*