TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழ்க்கட்சிகளின் நிலை என்ன?

அடுத்த ஆறு மாதங்களுக்குள் வடக்கு மாகாணசபைக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கம் கூறியிருக்கிறது. எனவே எப்படியும் இந்த வருட முடிவுக்குள் நிச்சயம் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடக்கப் போவது உறுதியாகியுள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிச்சயம் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடும் என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறியிருக்கிறார்.

வடக்கு மாகாணசபை 36 உறுப்பினர்களைக் கொண்டது. யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய தேர்தல் மாவட்டங்களை உள்ளடக்கியது. 1988இல் ஒருங்கிணைந்த வடக்கு,கிழக்கு மாகாணசபைக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது கூட வடக்கில் தேர்தல் நடக்கவில்லை. இந்திய இராணுவத்தின் பாதுகாப்பில் இருந்த ஈபிஆர்எல்எவ் மற்றும் ஈஎன்டிஎல்எவ் என்பன ஏனைய கட்சிகளைப் போட்டியிட விடாமல் தடுத்ததன் காரணமாக- அந்தக் கட்சிகளே போட்டியின்றித் தெரிவு செய்யப்;பட்டன. கிழக்கில் மட்டுமே அப்போது தேர்தல் நடைபெற்றது.

இலங்கையில் மாகாணசபைகள் தோற்றுவிக்கப்பட்டு 22 வருடங்களாகிவிட்ட போதும்- வடக்கில் மாகாணசபைத் தேர்தல் என்பது இதுவரை நடந்ததேயில்லை. முதல்முறையாக நடைபெறப் போகும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் அரசியல்கட்சிகளின் வியூகங்கள் எப்படி அமையப் போகின்றன என்பது எதிர்பார்ப்புக்குரிய விடயமாக மாறிவருகிறது.
போருக்குப் பின்னர் வடக்கில் அபிவிருத்தி என்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒரு சிவில் நிர்வாகக் கட்டமைப்பு அவசியம். எனவே வடக்கு மாகாணசபையைக் கைப்பற்றுவது தமிழ்க் கட்சிகளுக்கு மிகவும் முக்கியமானதொரு தேவையாக மாறியுள்ளது. தமிழ்க்கட்சிகளைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வடக்கில் இன்று பிரதான கட்சியாக உள்ளது.

பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டு தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில்- தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி என்ற பெயரில் தனியாகப் போட்டியிட்டது ஒரு அணி. இதனால் வாக்குகள் பிரிந்து போயின. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றது. ஆனாலும் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றத் தயார் என்ற ரீதியில் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதுபோலவே கூட்டமைப்பின் தலைவர்களும் அவர்களை இணைத்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது. எனவே மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் வலுப்படுத்தப்படும் சாத்தியங்கள் தென்படுகின்றன.

பிரிந்து நிற்பது இருதரப்புக்குமே பாதகம் என்பதை நன்றாக உணர்ந்துள்ளதால் இணைந்து கொள்வதற்கான உச்சக்கட்ட முயற்சிகள் எடுக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகளவில் துறைசார் வல்லுனர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்ற கோணத்தில் சிலர் ஒன்றிணைய முனைவதாகவும் தகவல். இதற்கு கூட்டமைப்பு எத்தகைய பதிலைக் கொடுக்கப் போகிறது என்பது முதற்கேள்வி. அடுத்து கூட்டமைப்பு பிரதேச மட்டத்தில் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.

பொதுத்தேர்தலில் வலிகாமம் மேற்குப் பகுதியில்- மானிப்பாய், வட்டுக்கோட்டை தொகுதிகளில் இருந்த எந்தவொரு வேட்பாளரையும் நிறுத்தத் தவறியது, வடமராட்சிப் பகுதியில் பலமான வேட்பாளரை நிறுத்தத் தவறியது என்பன கூட்டமைப்புக்கு வாக்குகள் குறைந்து போனதற்கு பிரதான காரணங்கள் என்பதை மறுக்க முடியாது. மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் இதுபோன்ற பிரச்சினைகளைக் களைவதும், பிரதேச மட்ட செயற்பாடுகள் இல்லாத பகுதிகளில் அவற்றை உருவாக்கிக் கொள்வதும் கூட்டமைப்புக்கு அவசியத் தேவையாகியுள்ளது. இதற்கு தற்போது கிடைத்துள்ள அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டால் மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வது அவர்களுக்கு இலகுவானதாக அமையும்.

அடுத்து மிகப்பெரிய கட்சியாக இருப்பது ஈபிடிபி தான். யாழ் மாநகரசபைத் தேர்தலிலும் சரி, பொதுத்தேர்தலிலும் சரி- ஈபிடிபி தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. ஆளும்கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதற்காக வெற்றிலைச் சின்னத்தில் விரும்பியோ விரும்பாலோ நிற்க வேண்டிய கட்டாயம் ஈபிடிபிக்கு ஏற்பட்டது.

மாகாணசபைத் தேர்தலில் ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடப் போவதாகக் கூறியுள்ளார். எனவே இந்தப் போட்டி கடுமையாகவே இருக்கும். ஈபிடிபி மீளவும் வெற்றிலைச் சின்னத்தில் தான் போட்டியிடுமா அல்லது தனது வீணைச் சின்னத்தில் போட்டியிடுமா என்பது தெரியவில்லை. இதைத் தீர்மானிக்கும் அதிகாரம் கூட ஈபிடிபியிடம் இருக்குமா என்பது சந்தேகம் தான். யாழ்ப்பாணத்தில் ஆளும்கட்சிக்கு உயிர்கொடுக்க வேண்டுமானால் ஈபிடிபி வெற்றிலையில் தான் போட்டியிட வேண்டியிருக்கும். இது அவர்களுக்குப் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ள ஒரு விடயம்.

ஈபிடிபி பொதுத்தேர்தலில் தனது பிரதேச அமைப்பாளர்களைப் பெரிதும் நம்பியிருந்த போதும் அவர்களால் வாக்களைப்பெற முடியாது என்பதை உணர்ந்துள்ளது. எனவே மாகாணசபைத் தேர்தலில் அது புதிய வேட்பாளர்களை பொதுமக்களிடத்தில் இருந்து தெரிவு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிஆர்எல்எவ்- பத்மநாபா, புளொட் போன்ற கட்சிகள் ஆகக் குறைந்தளவிலான வாக்குகளைப் கூடப் பெறாததால் ஆசன ஒதுக்கீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டன. ஆனால் மாகாணசபைத் தேர்தலில் இந்தக் கட்சிகளின் வாக்குகள் முக்கியத்துவமானவையாக இருக்கலாம். எனினும் அவை குறைந்தது 5வீதமான வாக்குகளை மாவட்ட ரீதியில் பெறவேண்டியது அவசியம்.

வவுனியாவில் புளொட்டுக்கு செல்வாக்கு இருந்தபோதும்-பொதுத்தேர்தலில் ஆசனப்பகிர்வுக்கான ஆகக்குறைந்த வாக்குகளையாவது பெறவில்லை. இதுபோன்ற கட்சிகள் பிரிந்து நின்று மோதிக் கொள்வதால் நிச்சயம் ஆசனங்களை இழக்கும் வாய்ப்பே உருவாகும். அத்துடன் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலில் வாக்குகள் பிரிந்து போவதற்கே வழிசெய்யும். குறிப்பாக வன்னியில் பல கட்சிகள் பிரிந்து போட்டியிடும் போது நிலைமை சிங்கள மற்றும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு அதிகம் சாதகமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பொதுத்தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழர்களே பெரும்பான்மையினராக இருந்த போதும் அங்கிருந்து மூன்று முஸ்லிம்கள் எம்.பியாகத் தெரிவாகினர். தமிழர்கள் இருவரே நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகினர். இந்தளவுக்கும் வன்னித்தேர்தல் மாவட்டத்தில்- 2007ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி- தமிழர்கள் அண்ணளவாக 92.78 வீதமாகவும், முஸ்லிம்கள் 4.74 வீதமாகவும் உள்ளனர். 5 உறுப்பினர்களைக் கொண்ட வன்னி மாவட்டத்தில் 4.74 வீதமான முஸ்லிம்களுக்காக மூன்று எம்.பிக்கள், 92.78 வீதமான தமிழர்களுக்காக 2 எம்.பிக்கள் என்பது விநோதமான கணக்காகவே உள்ளது. இதற்குத் தமிழ்க்கட்சிகள் பிரிந்து நின்று மோதிக் கொண்டதே காரணம்.

இதுபோன்ற நிலை வன்னித் தேர்தல் மாவட்டத்தில் மாகாணசபைத் தேர்தலிலும் எதிர்நோக்கப்படலாம். அதேவேளை, ஐதேகவும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்கு பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் தலா ஒரு ஆசனம் கிடைத்துள்ளதால்- வடக்கு மாகாணசபைத் தேர்தலில் நிச்சயம் வேட்பாளர்களை நிறுத்தும். ஆனால் ஐதேகவினால் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் பெரியளவில் ஆதிக்கம் செலுத்த முடியுமா என்ற கேள்வி இருந்தாலும், ஆசனப்பகிர்வில் அதுவும் போட்டி போடப் போவது தெளிவு.

வடக்கு மாகாணசபையில் இருப்பதோ 36 ஆசனங்கள் தான். இதைக் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் தன்னால் முடிந்தளவுக்கு முயற்சிக்கும். இது தமிழ்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். யாழ்.மாநகரசபையைப் பறிகொடுத்தது போன்று வடக்கு மாகாணசபையை இழந்து விடாமல் தமிழ்க்கட்சிகள் அதைக் கைப்பற்ற வேண்டுமானால் அதற்காக அவை இப்போதே இறங்கி வேலைசெய்ய வேண்டியிருக்கும். இல்லையேல் ஒட்டகத்துக்கு இடம்கொடுத்த கதையாகி விடும்.

கபிலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*