TamilSpy

பொழுது போக்கு இணையம்…

குற்றங்கள் மலிந்த பூமியாக மாறிவருகிறது யாழ்ப்பாணம்

போர் முடிவுக்கு வந்து ஒரு வருடமாகப் போகின்ற நிலையிலும் யாழ்ப்பாணக் குடாநாடு பதற்றம், பீதிக்குள் இருந்து விடுபட முடியாத நிலைக்குள் சிக்கிப் போயிருக்கிறது. இதைச் சொல்லப் போனால் அரசாங்கத்துக்கு எரிச்சலோ, கோபமோ கூட வரலாம். ஆனால் உண்மை நிலை இதுதான்.

போர் நடந்த காலத்தில் மக்களிடையே இருந்த பீதி ஒரு விதமானது. ஆனால் இப்போதிருக்கும் பயம்- அச்சம் வேறொரு விதமானது. மக்கள் இப்போது தாம் பாதுகாப்பற்றதொரு சூழலுக்குள் வாழ்வதை உணர்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை.

போர் முடிவுக்கு வந்து யாழ்ப்பாணத்துக்கான தரை வழிப்பாதையை அரசாங்கம் திறந்து விட்டதும் நிலைமைகள் வேகமாக மாறத் தொடங்கின. யாழ்ப்பாணம் நோக்கி உள்ளுர் ,வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் படையெடுத்தன. அதுபோலவே உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் படையெடுத்தனர்.

இதையெல்லாம் பார்த்து யாழ்ப்பாணம் இப்போது மாறத் தொடங்கி விட்டது, வேகமாக இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது என்றொல்லாம் பலரும் நம்பத் தொடங்கினர். இதற்கு வசதியாக தேர்தல் காலச்சலுகைகளாக இராணுவச் சோதனைகள் நிறுத்தப்பட்டு சுதந்திரமாகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகளும் கிடைத்தன. ஆனால் இவையெல்லாம் யாழ்ப்பாண மக்களிடையே இயல்பு வாழ்வை உருவாகி விட்டதற்கான அடையாளங்கள் அல்ல என்பதை இப்போது இங்கு நடக்கும் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

* மர்மமாக நடக்கும் கொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம்கோரும் சம்பவங்கள் என்று குற்றச்செயல்களின் பூமியாக யாழ்ப்பாணம் மாறி வருகிறது. வன்னியில் இருந்து வந்த ஒரு பெண் தனியாக பஸ்தரிப்பு நிலையத்தில் வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த போது- கடத்தபட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம், யாழ்ப்பாணம் எந்தளவுக்கு மாறிவிட்டது என்பதற்கு தகுந்த அடையாளம். இதுபோன்ற ஒரு சம்பவத்தை யாழ்ப்பாணம் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் சந்தித்ததாக நினைவில்லை. அதற்கு முன்னரும் இடம்பெற்றிருக்காது.

ஆயுதப்போராட்டம் உச்சமடைந்திருந்த காலங்களில் இப்படியான குற்றச்செயல்கள் அறவே நடக்கவில்லை என்பது உண்மை. அதற்கான தண்டனைகள் உச்சமாக இருந்ததால் அனைவரும் அடங்கியே இருந்தனர். நள்ளிரவில் கூடத் தனியாகப் பெண்கள் நடமாடிய காலம் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

மாலை 7 மணிக்குக் கூட ஒரு பெண்ணால் தனித்து நடமாட முடியாதுள்ளது. இந்தளவுக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ளுர் பஸ்சேவைகள் இரவு 9 மணிக்கு மேலும் நடந்து கொண்டிருக்கின்றன. பஸ்களில் இரவில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று மூவரைக் கைதுசெய்த பொலிசார் கடைசியில் ஒருவரைத் தப்பவிட்டு விட்டு நிற்கிறார்கள்.

சாவகச்சேரியில் ஒரு வர்த்தகரின் மகனைக் கடத்தி கப்பம் கேட்டனர். கடைசியில் அந்த சிறுவனின் உடலையே பொலிசாரால் மீட்க முடிந்தது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைப் பொலிசார் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதுபோல மற்றொரு கடத்தல் சம்பவம் ஆனைக்கோட்டைப் பகுதியில் நடந்தது. கடத்தப்பட்டவர்கள் கொல்லப்படும் நிலையில் இருந்தபோது மீட்கப்பட்டதால் தப்பிக் கொண்டனர். வாகனங்களில் சிறுவர்களைக் கடத்தும் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் தகவல்.

ஒரு சிறுவன் தப்பியபோது வேறு இரு சிறுவர்களை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டதாக கூறியுள்ளார். இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்க, யாழ்ப்பாண படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவோ யாழ்ப்பாணத்தில் யாரும் கடத்தப்பட்டதாக தமக்கு தகவல் வரவில்லை என்று கூறியுள்ளார். அதேவேளை கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த 51வது டிவிசன் தளபதி பிரிகேடியர் சரத் விஜேசிங்கவோ- குடாநாட்டில் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தணிக்கவும் கடத்தல், கொலை, கப்பங்கோரல் போன்ற குற்றங்களைத் தடுக்கவும் மீளவும் சோதனை நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபடப் போவதாக கூறியிருக்கிறார்.

அதாவது இராணுவத்தினரின் வாகனச்சோதனைகள் இடம்பெற்ற காலங்களில் குற்றச்செயல்கள் ஏதும் நிகழாதது போன்றிருக்கிறது அவரது வாதம். படையினர் இறுக்கமான சோதனைகளின் போது வெள்ளைவான்களில் ஆட்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் எத்தனையோ நடந்தன. அவற்றுக்கெதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டன?

பொதுமக்களின் வசதி கருதி வாகனசோதனைகளை நிறுத்தியதாக கூறிவிட்டு- இப்போது அவர்களுக்காகவே அதை மீள ஆரம்பிக்கப் போவதாகவும் கூறியிருக்கிறது இராணுவம். அதாவது வீதிச் சோதனைகளுக்கு புதுக்காரணம் ஒன்றைத் தேடும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்று கண்டுபிடிக்கப்பட்டு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட வேண்டியது அவசியம். இதில் பொலிஸ்தரப்பு, நீதித்துறை மற்றும் சமூகவியலாளர்கள் ஒன்றிணைந்து செய்றபட வேண்டியது அவசியம். இதுபோன்ற மோசமான குற்றச்செயல்கள் நடக்கின்ற இடமாக யாழ்ப்பாணக் குடாநாடு இதுவரை இருந்ததில்லை.

ஆனால் இப்போது அதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்றால் அதற்கான காரணங்கள் தேடப்பட வேண்டும். திறந்து விடப்பட்டிருக்கும் யாழ்ப்பாணத்துக்குள் இப்போது எல்லாக் குப்பைகளும் வந்து சேர்கின்றன. இந்தக் குப்பைகள் யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தையும்,பண்பாட்டு விழுமியங்களையும் நாசம் செய்து விடும் ஆபத்துகளும் உள்ளன.

2002ம் ஆண்டு போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பின்னர், தீனா குறூப், றெட்குறூப் என்று தென்னிந்திய சினிமாப்பாணி ரவுடித்தனங்கள் கோலோச்சத் தொடங்கியதை யாழ்ப்பாண மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் அப்போது புலிகள் முக்கிய பங்கு வகித்திருந்தனர். ஆனால் இன்று புலிகள் இல்லை. இந்தத் துணிவு இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்குத் தாராளமாகவே இருப்பது தெரிகிறது.

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் மோசமான குற்றச்செயல்களை கட்டுப்படுத்த இப்போதே இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம்.இதைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்படாது போனால் தமிழ்மக்கள் தமக்கென ஒரு தனியான பாதுகாப்புக்கவசம் தேவை என்று உணரும் நிலை உருவாகும்.

ஹரிகரன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*