TamilSpy

பொழுது போக்கு இணையம்…

போர் குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்த வேண்டும்

போர் மரபுகளை மீறியதற்காகவும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்ததற்காகவும் இன அழிப்பில் ஈடுபட்டதற்காகவும் அப்பாவிப் பொது மக்களின் குறிப்பாகப் பெண்கள் குழந்தைகள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தவறியதற்காகவும் சிறிலங்கா தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் சர்வதேச மட்டத்தில் வலுத்து வருகிறது.

நகர்வுகள் ஆமை வேகத்தில் மேற்கொள்ளப்பட்டாலும் இந்தியா சீனா ரஷ்யா போன்ற நாடுகள் தடங்கல்களை ஏற்படுத்தினாலும் சிறிலங்காவைப் போர் குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தும் முயற்சிகள் உறுதியாக நடைபெற்று வருகின்றன.

இலங்கைப் போரில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமானதும் சுதந்திரமானதுமான விசாரணைகள் மேற்கொள்ள ஆளும் பிரிட்டிஷ் தொழிற் கட்சி அழுத்தங்களை முன்னெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அயர்லாந்துத் தலைநகர் டப்ளின் தீர்ப்பாயம் சிறிலங்காப் போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தி வருகிறது டப்ளின் தீர்ப்பாயமும் புதுடில்லி பல்கலைக் கழகத் தமிழ் மாணவர்கள் பேரவையும் இணைந்து சிறிலங்கா இனப் படுகொலை தொடர்பான கருத்தரங்கை அண்மையில் புதுடில்லியில் நடத்தியுள்ளன.

ஏற்கனவே டப்ளின் தீர்ப்பாயம் முதற் கட்ட விசாரணை நடத்திச் சிறிலங்காவைப் போர் குற்றவாளியாகக் கண்டுள்ளது போர் குற்றங்களை நேரடியாகக் கண்ட நிறுவமையப் படுத்தப்படாத தொண்டர்களின் பெறுமதி மிக்க சாட்சியங்கள் டப்ளின் தீர்ப்பாயத்தில் பதியப்பட்டுள்ளன அரசின் ஆணைக்குக் கட்டுப்பட்ட ஐநா உதவி அமைப்புக்களும் சர்வதேச அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களும் வெளியேறிய நிலையில் நிறுவமையப் படுத்தப்படாத தனித்தனி மற்றும் குழுவாக இயங்கிய தொண்டர்கள் அளப்பரிய பணியாற்றியுள்ளனர்.

இவ்வகைத் தொண்டர்களில் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற தமிழ் இளைஞர்களும் இளம் பெண்களும் அடங்குவர். உள்நாட்டுத் தொண்டு நிறுவனங்களான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சீடொற் எனப்படும் தமிழர் சமூக பொருளாதார மேம்பாட்டு அமைப்பு ஆகியன தமது பாரம்பரிய பூர்வீக நிலங்களில் இருந்து விரட்டப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட உலக சமுதாயம் கைவிட்ட வன்னி மக்களுக்கு அரும்பணி ஆற்றி வந்தனர் குழந்தைகளுக்குப் பால் உணவு வழங்குதல் நோயுற்றோருக்கு மருத்துவ சேவை இறுதிக் கட்டத்தில் உணவுப் பற்றாக் குறை ஏற்பட்ட போது இரு அமைப்புக்களும் அரிசிக் கஞ்சி வழங்கும் இலவச பணியை மேற்கொண்டன.

இந்த அமைப்புக்களின் தற்காலிகக் கொட்டில்களின் முன்னால் தமது ஒரு வயிற்றுக் கஞ்சிக்காக குடும்பத்தோடு நீண்ட வரிசையில் நின்ற அப்பாவி மக்கள் மீது சிறிலங்கா வான்படை மிலேச்சத்தனமான குண்டு வீச்சுகளை நாளாந்திரம் நடத்தியது இவை எழுதும் தனித்தியங்கிய தொண்டனாகிய என் முன்னால் ஒரு குண்டு வீச்சில் மாத்திரம் ஐம்பதிற்கும் குறையாத ஆண் பெண் சிறுவர்கள் கொல்லப்பட்டனர் பலர் காயப்பட்டனர். சீடொற் அமைப்பின் பொறுப்பாளர் இவ்வகைக் குண்டு வீச்சிலும் படுகாயம் அடைந்தார்.

அன்னம் ஓங்கினால் அஞ்சும் ஒடுங்கும் என்பார்கள் குண்டடிப் பட்டாலும் பசிப் பிணி தீர்க்கும் கஞ்சிக் கலயத்தை நோக்கி மக்கள் வந்தபடி இருந்தனர். வரிசையாக நிற்கும் பசித்த மக்கள் மீது குண்டு வீச்சு நடத்துவதற்காகச் சிறிலங்கா வான்படை ட்ரோன் அல்லது யூஏவி எனப்படும் ஆளில்லா வேவு விமானங்களையும் கணனி வரிசைகள் பொருத்தப்பட்ட உயரப் பறக்கும் வேவு வான் கலங்களையும் தாராளமாகப் பயன் படுத்தியது இந்திய வான் படைக்குச் சொந்தமான வேவு விமானங்களும் காட்டிக் கொடுப்புப் பணியில் ஈடுபட்டன கணனி வரிசைகள் பொருத்தப்பட்ட உயரப் பறக்கும் வேவு வான்கலங்கள் பெரும் பாலும் வன்னி வானில் இரவில் தான் பறப்பதுண்டு அது வருவதை அறிந்த மக்கள் தமது சிறிய குப்பி விளக்குகளை அணைத்து விட்டுப் பாதுகாப்புத் தேடி ஓடுவார்கள் ஏனென்றால் இந்தரக வேவு விமானம் வந்து சென்ற சில நிமிடங்களில் குண்டு வீச்சு விமானங்கள் தாக்குதலுக்கு வந்த விடுகின்றன.

நிலவுக்கு ஒளித்துப் பரதேசம் போனாலும் அங்கும் நிலவு இருந்தே தீரும் பாதுகாப்புத் தேடி ஓடினாலும் குழிகளில் பதுங்கினாலும் குண்டு வீச்சில் கொல்லப்பட்டேரர் எண்ணிக்கை குறையவில்லை இறந்தோரைப் புதைக்கும் வலு இறுதிக்கட்டத்தில் வன்னி மக்களுக்கு இல்லாமல் போய்விட்டது இறந்தோரை எரிக்கும் பாரம்பரிய வழக்கத்தைக் கொண்ட வன்னி மக்கள் தமது மதக் கோட்பாட்டையும் மீறிப் புதைக்கத் தொடங்கினர் எரிப்பதற்கு விறகு தேடவேண்டும் உடலை எரிக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் அடுத்தது உடல் எரிந்து சாம்பளாகும் வரை காத்திருக்க வேண்டும் புதைப்பதை எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் மேற்கொள்ள வேண்டும்.

தமது பாச உறவுகளைப் புதைப்பதற்கு வலுவற்ற நிலை வந்த போது வன்னி மக்கள் இறந்தோர் உடல்களை இறந்த இடத்திலோ தெரு ஓரத்திலோ போட்டு விட்டுச் சென்றனர் இப்படி கைவிடப்பட்ட உடல்களை எளியேன் பன்முறை பார்த்துள்ளேன் இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போற்றுதற்குரிய அரும் பணியை ஆற்றியுள்ளது தன்னிடம் கைவசம் உள்ள குறைந்தளவு நிதியின் ஒரு பங்கை விடப்பட்ட உடல்களைப் புதைப்பதற்காக அது பயன்படுத்தியது. நாளந்திரக் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களும் உடல் வலுவற்றவர்களாக இருந்த படியால் ஆழமான புதைகுழிகளை அவர்களால் வெட்ட முடியவில்லை.

அகழ்வோரைத் தாங்கும் பூமித் தாயின் மடியில் ஆழம் குறைந்த ஒடுக்கமான சவக்குழியை வெட்டி அதில் புதைப்பார்கள். வன்னியில் சவப் பெட்டிப் பாவனை அற்றுப் போனதையும் குறிப்பிட வேண்டும். சவப் பெட்டி செய்வோரும் இல்லை. கொடுத்து வாங்குவதற்குப் கையில் பணமும் இல்லை. ஆபத்திற்குப் பாவம் இல்லை என்பதால் ஒரு வெள்ளைத் துணியால் சவத்தைச் சுற்றிப் புதைப்பார்கள்.

எனது தொண்டுப் பணிகளின் போது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் புதைப்பு நடவடிக்கைகள் தொடர்பான பதிவேடுகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது ஒரு மாதத்தில் மாத்திரம் 42,000 உடல்களைப் பொறுப்பேற்றுப் புதைத்திருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்த வேளையில் அவர்களால் இயங்க முடியவில்லை தெருவிலும் பிற இடங்களிலும் போடப்பட்ட உடல்களும் கைவிடப்பட்ட படுகாயம் அடைந்தோர் உடல்களும் போட்ட படியே கிடந்தன.

தொடரும் ….

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*