TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சிவராமின் எதிர்வுகூறலும் நிகழ்கால புவிசார் அரசியல்

சிவராமின் எதிர்வுகூறலும் நிகழ்கால புவிசார் அரசியல் மாற்றங்களும்.

இரும்புக் குண்டுகள் நெஞ்சைத் துளைத்து, மூச்சையும் பேச்சையும் கைவிரலின் அசைவியக்கத்தையும் நிறுத்திய நாள் மே 29. மாபெரும் சமூக, இலக்கிய, அரசியல் விமர்சகர் மாமனிதர் தர்மரட்ணம் சிவராம், 2005 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி அராஜகவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

2004 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் திகதி வீரகேசரி வார வெளியீட்டில் வந்த கட்டுரையொன்றில், “”நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த அழிவையும் சந்திக்கத் தயாராகவே இருக்கின்றேன். ஓடி விட மாட்டேன்…” என்று தமது நிலைப்பாட்டினை உறுதிபடத் தெரிவித்திருந்தார் சிவராம்.

தாயக ஊடகவியலாளர்களை, கணனி யுகத்திற்குள் அழைத்து வந்த பெருமையும் அவரையே சாரும்.

ஆங்கிலப் பத்திரிகை ஊடாக எமக்கு அறிமுகமாகிய சிவராம், தமிழ் ஊடகங்களில் குறிப்பாக வீரகேசரியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர்.

ஆயுதப் போராட்டத்திலும் பின்னர் ஊடகப் பரப்பிலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட இந்த ஈரூடகப் போராளி, தாயக விடுதலை உணர்வு என்கிற தளம் எக்காரணம் கொண்டும் சிதைந்து போகக் கூடதென்பதில் மிக உறுதியாகவிருந்தார்.

ஒப்பந்தங்கள் யாவையும் கிழித்தெறிந்த பேரினவாத அரசுகளிடமிருந்து இனப்பிரச்சினைத் தீர்விற்கான காத்திரமான பதிலைப் பெற முடியாதென்பதை சிவராம் நம்பி னார்.

கொடுப்பதைப் பெற்றுத் திருப்தியடைய வேண்டுமென எல்லாவல மேதானந்த தேரர் உதிர்த்த ஞானோபதேசமும், சிறுபான்மையினமொன்று இங்கு இல்லை என்று நகைச்சுவையாகச் சொல்லும் இலங்கை அதிபரின் அரசியல் பார்வையும் சிவராமின் கூற்றினை உறுதிப்படுத்துகிறது.

இவை தவிர அனைத்துலக வல்லரசுச் சக்திகள் ஆசியாவின் கேந்திர மையமாகத் திகழும் இலங்கையில் பனிப்போர் நிகழ்த்துவதை தமக்குச் சாதகமாக சிங்கள தேசம் எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்தும் அவர் பல ஆய்வுகளில் அம்பலப்படுத்தினார்.

இம்மாதம் 2829 ஆம் திகதிகளில் பூட்டான் தலைநகர் திம்புவில் நடைபெற்ற “சார்க்’ கூட்டமைப்பு நாடுகளின் 13 ஆவது மாநாட்டில், இலங்கை ஜனாதிபதி வெளியிட்ட சில கருத்துகள் பற்றிப் பார்க்க வேண்டும்.

“”மேற்குலகின் அழுத்தங்களுக்கு எதிராக ஆசிய நாடுகள் கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும் என்பதோடு, எமது இறைமை தொடர்பாக நாமே தீர்மானிக்க வேண்டுமென்கிற அதேவேளை, வெளிநாடுகளின் தலையீட்டை தடுப்பதற்கு எமது பிராந்தியப் பிரச்சினை தொடர்பில் நாம் அனைத்துலக மட்டத்திலும் ஐ.நா. விலும்ஒருமித்து செயற்பட வேண்டும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திம்பு சார்க் மாநாட்டில் அறைகூவல் விடுத்த விவகாரத்தை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

அம்மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் யூஸுப் ராஸா கிலானியைச் சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆசிய நாடுகளுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த சிங்கள தேசம் முயற்சிக்கும் அதேவேளை, அமெரிக்காவுடன் உறவினைப் பேணும் நாடுகளை ஒரு விதமாகவும் அதற்கு எதிராகச் செயற்படும் ஏனைய நாடுகளை வேறு விதமாகவும் அணுகுகிறது.

இந்திய ‘சீன மற்றும் அமெரிக்க பாகிஸ்தான் உறவு நிலைச் சமன்பாட்டில் தான் இந்த இராஜதந்திரக் கையாளுகை வேறுபடும்.

இதில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் காணப்படும் நீண்ட கால உறவு நிலையே சிங்கள தேசத்திற்கு அதன் எதிர்கால இராஜதந்திர முன்னெடுப்புகளுக்கொரு பாதுகாப்பான விடயமாக இருக்கும்.

அதேவேளை, மேற்குலகின் அழுத்தங்களிலிருந்து தன்னைப் பாதுகாப்பதற்கு இந்தியா என்கிற பிராந்திய வல்லரசுத் தடுப்பரணைப் பயன்படுத்தும் தந்திரோபாயத்தையே சிங்கள தேசம் பிரயோகிக்கின்றது.

மாமனிதர் “தராகி’ சிவராமின் இழப்பிற்குப் பின்னான அதாவது 2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக மட்டத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

2008 பிற்பகுதியில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும், நிதி நிறுவனங்கள் மற்றும் முதன்மை வங்கிகளின் உதிர்வும் பல சடுதியான தாக்கங்களை உலகெங்கும் உருவாக்கியிருந்தன.

sivaram-dசீராகவும் உறுதியாகவும் நிமிர்ந்து வந்த சீனாவின் பொருண்மிய பலமானது அமெ ரிக்க தடுமாற்றத்தால் இரண்டாவது நிலை க்கு மிக வேகமாகச் சென்றடைந்துள்ளது. உலகப் பொருளாதாரக் கட்டமைப்பில் சீனா வின் வகிபாகம் வழங்கிய மாற்றங்கள்.

ஆசியாவின் பொருண்மிய வலுச் சமன்பாட்டில் புதிய திருப்பங்களை தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (ஐMஊ) போன்ற மேற்குலகின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிதி மையங்களின் ஏகபோக நிலைப்பாட்டிற்கு சீனாவின் வளர்ச்சியானது பெரும் சவாலாக அமைகிறது.

அதேவேளை, இதுவரை காலமும் பிலிப்பைன்ஸ், டியாகோகார்சியாவிலுள்ள படைத்தளங்களை முன்னிறுத்தி அமெரிக்கா செலுத்தி வரும் படைவலு ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் சீனாவின் நகர்வுகள் விரிவுபடுத்தப்படுகின்றன.

தென்னாசியப் பிராந்தியத்தின் கடல்வழித் தலைவாசலில் அமைந்திருக்கும் நாடுகளில் குறிப்பாக பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், மியன்மார் (பர்மா) போன்ற நேச நாடுகளின் துறைமுக அபிவிருத்தி என்கிற போர்வையில் சீனா விரித்து வரும் ஆதிக்கப் பரவலை தடுத்து நிறுத்த அமெரிக்கா முயல்கிறது.

இதுனால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்திய நலனும் பாதிக்கப்படுவதால் சீனாவிற்கெதிராக அமெரிக்கா வகுக்கும் வியூகத்தினுள் இந்தியாவும் இணைந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகமுண்டு.

ஆகவே திறந்து விடப்பட்டுள்ள வல்லரசுச் சக்திகளின் பனிப்போர்க்களமாக இலங்கை மாறி வருவதனை நாம் அவதானிக்கலாம்.

80களின் முற்பகுதியில் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கமான ஈழப் புரட்சி அமைப்பின் (ஈரோஸ்) நிறுவனர், மறைந்த தோழர் இரத்தின சபாபதி இலங்கைத் தீவானது, ஆசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருண்மிய படை வலு மிக்க வல்லரசாளர்கள் மோதிக் கொள்ளும், மையச் சுழல் புள்ளியாக மாறுமென்று தனது எதிர்வுகூறலை அப்போது வெளிப்படுத்தியிருந்தார்.

அந்த தூரநோக்குப் பார்வையிலமைந்த கணிப்புகள் இன்று நிஜமாவதைப் பலரும் ஏற்றுக் கொள்கின்றார்கள்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷினால் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் முன்வைக்கப்பட்ட பயங்கவாதத்திற்கு எதிரான போர்க் கருத்தியலானது தற்போதைய பூகோள அரசியல் தளத்தில் பாகிஸ்தான் வரை நகர்ந்து இன்னமும் ஒரு கொதிநிலைப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது.

ஆனாலும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்பதிலிருந்து விலகி வேறொரு தளத்தில் ஈழப் போராட்டமும் பயங்கரவாதமாக வலிந்து முலாமிடப்பட்டது. அதேவேளை, இலங்கையில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் தென் கிழக்கு ஆசிய நாடுகளை நோக்கிய, அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் பாகிஸ்தானுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

தற்போதைய இலங்கை அரசியல் சூழலில், தேர்தலின் பின் தோன்றும் புதிய அமைச்சரவையில் தமது பிராந்திய நலனோடு ஒத்துப் போகக் கூடியவர்கள் முக்கிய அமைச்சுப் பதவிகளில் அமர வேண்டுமென பல வல்லரசாளர்கள் விரும்புகின்றனர்.

போர் முடிவடைந்த பின்னர் தமக்குச் சாதகமான ஆட்சியதிகார உயர் பீடத்தினை எவ்வாறு நிறுவலாம் என்பதை பல நாடுகளில் இவர்கள் திறம்பட நிறைவேற்றிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் மீதும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமாகிய பசில் ராஜபக்ஷவின் மீதுமே இவர்களின் கழுகுப் பார்வை குவிந்துள்ளது. சுய சிந்தனையின் வழியே இந்தியாவைக் கையாளும் நகர்வுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதி ஜி.எல் பீரிஸுக்கு கிடைக்குமா என்கிற ஆதங்கம் இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் தோன்றியிருப்பதை அவதானிக்கலாம்.

அதேவேளை, போர்க் காலத்தில் இந்தியாவுடன் நெருங்கிய உறவினைப் பேணி வந்த பசில் ராஜபக்ஷ ஊடாக அபிவிருத்திக்கான முதலீடுகளையும் மீள்குடியற்ற நிர்மாணப் பணிகளையும் முன்னெடுக்க முடியுமாவென்கிற விடயத்தில் ஜனாதிபதியின் நிலைப்பாடு எவ்வாறு அமையுமென்ற சந்தேகமும் இந்தியாவிற்கு உண்டு.

ஏனெனில் சீனா என்கிற ஆசிய வல்லாதிக்க முரண்பாட்டுச் சக்தியை தமக்குச் சமமாகக் கையாளும் கோட்பாட்டினை இலங்கை ஜனாதிபதி கடைப்பிடிப்பார் என்கிற அச்சத்தை சில இந்திய முன்னாள் படைத்துறை உயரதிகாரிகள் முன்வைக்கின்றனர்.

ஜி.எல். பீரிஸினால் முயற்சிக்கப்பட்ட பூரண இரு தரப்புப் பொருளாதார நல்லுறவு ஒப்பந்தத்தினை (இஉகஅ) உள் அழுத்தம் காரணமாக இலங்கை அரசு கைவிட்டதனையிட்டு இந்தியாவிற்கு சில மனக்கசப்புகள் உண்டு.

இருப்பினும் மேற்குலகைப் பொறுத்தவரை மனித உரிமை விவகாரம் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் ஊடாக இலங்கை அரசை அணுகும் போக்கு நீடித்துச் செல்லுமென எதிர்பார்க்கலாம்.

பொருளாதார மீட்சி இனப் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் சீனாவுடனான உறவு என்கிற மூவகைப்பட்ட விவகாரங்களையும் ஒரு வெற்றிச் சமன்பாட்டினுள் எவ்வாறு இந்த புதிய அரசாங்கம் உள்ளடக்கப் போகிறதென்பதனை இந்திய அரசு கூர்ந்து அவதானிக்கிறது.

பொருளாதார உதவிகளை அதிகரிப்பதன் மூலம் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தலாமென்பதே இந்தியாவின் தற்போதைய தந்திரோபாய உத்தியாக இருக்கிறது.

ஆனாலும் மேற்குலகத் தளத்தில் உருவாக்கப்போகும் நாடு கடந்த தமிழீழ அரசு என்கிற கட்டமைப்பு சிக்கலான புதிய வாசல்களை திறந்து விடுமென இந்தியா சந்தேகிக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி

வீரகேசரி வாரவெளியீடு.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*