TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சிறிலங்காவின் சூழ்ச்சியில் விழுந்தது பாலிவுட்

சிறிலங்காவிற்கு நான்காம் ஈழப்போராட்டம் கொடுத்த அடி மரண அடி. இதிலிருந்து மீள பல பிரயத்தனங்களை மேற்கொண்டார் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. அரச பயங்கரவாதம் ஈழத் தமிழருக்கு எதிராக கட்டவிழ்த்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொலைசெய்யப்பட்டதாகப் பகிரங்கமாகவே உலகநாடுகள் சிறிலங்கா மீது குற்றம்சாட்டி குற்ற விசாரணைக்கு உட்படுத்தவேண்டிய தலைவர்களில் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரின் சகோதரர் கோதபாய ராஜபக்ச முன்னணியில் உள்ளார்கள்.

இந்த உலக நாடுகளின் குற்றச்சாட்டுக்களில் இருந்து மீள்வதற்கு ஒரே வழி ஜனநாயகத் தேர்தல்களையும் மற்றும் உலக விழாக்களையும் சிறிலங்காவில் நடாத்தி நற்பெயரைப் பெற்று விடவேண்டும் என்ற முனைப்புடன் செயலாற்றுகின்றார் ராஜபக்ச. பாவம் இந்தச் சூழ்ச்சியில் வீழ்ந்துள்ளது மும்பாயை தலைமையிடமாகக் கொண்ட பாலிவுட்.

இண்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் அகாடமி விருதுகள் (International Indian Film Academy – IIFA Awards) விழா ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டின் முக்கிய நகரில் குதூகலமாக கடந்த ஒரு தசாப்தங்களாக நடைபெற்று வருகின்றது.

இந்திய திரைப்படங்களை உலக கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கோடு இந்த விழா நடத்தப்படுகிறது. ஹாலிவுட்டின் அகாடமி (ஆஸ்கர்) விருது, கேன்ஸ் பட விழா ஆகியவற்றிற்குப் பிறகு உலக அளவில் பல கோடி மக்கள் ரசிக்கும் திரைப்பட விழாவாக இந்த சர்வதேச இந்தியப் பட விழா கொண்டாடப்படுகின்றது.

இந்த விழாவை தொலைக்காட்சி மூலம் 100-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 50 கோடிக்கும் அதிகமான மக்கள் கண்டு ரசிப்பதாக கூறப்படுகின்றது. வட இந்திய நடிகர் நடிகைகள் முதற்கொண்டு தென்னிந்திய நட்ச்சத்திரங்கள் வரை கலந்துகொண்டு சிறப்பிக்கும் விழாவாகவே இது இருந்து வந்துள்ளது.

இப்படியான இந்த சர்வதேச இந்தியப் பட விழாவை தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து ஜப்பான் வரை போட்டி போட்டிக்கொண்டு விண்ணப்பம் செய்யும் அளவிற்கு விளம்பர, வணிக முக்கியத்துவம் கொண்ட விழாவாகும். 2000-ம் ஆண்டில் இங்கிலாந்தின் லண்டன் மாநகரிலும், 2001-இல் தென் ஆபிரிக்காவின் சன் சிட்டியிலும், 2002-இல் மலேசியாவிலும், 2003-இல் தென் ஆபிரிக்கத் தலைநகர் ஜோஹனஸ்பர்கிலும், 2004-இல் சிங்கப்பூரிலும், 2005-இல் ஆம்ஸ்டர்டாமிலும், 2006-இல் துபாயிலும், 2007-இல் இங்கிலாந்தின் யோர்க்சயர் நகரிலும், 2008-இல் பாங்கொக்கிலும், 2009-ஆம் ஆண்டு மக்காவிலும் இந்த விருது விழா நடைபெற்றுள்ளது.

இந்த ஆண்டு இவ்விழா வரும் ஜூன் மாதம் 3, 4, 5ஆம் தேதிகளில் கொழும்பில் நடைபெறும் என்று மிகச் சமீபகாலத்தில் தான் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவிற்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் விளம்பரத் தூதராக இருக்கிறார். அவரே முன்னின்று இந்த விழாவுக்கான செயல்களை நடாத்திக்கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில் தான் தென்னிந்தியாவின் அரசியல் மற்றும் தமிழ் திரையுலகத்தினர் போர் முரசு கொட்ட ஆரம்பித்துவிட்டனர்.

இந்த விழாவை பாகிஸ்தானில் நடத்த முடியுமா?

அமிதாப்பச்சனால் இந்த விழாவை பாகிஸ்தானில் நடத்திவிட்டு மும்பைக்கு திரும்ப முடியுமா? இது தான் தமிழ் நாட்டின் அரசியல் மற்றும் திரையுலகத்தினர் முன்வைக்கும் கேள்வி. அவர்களின் ஆதங்கத்திலும் ஒரு காரணம் உண்டு. நான்காம் ஈழப்போர் உக்கிரம் அடைந்த காலப்பகுதியில் பல ஆயிரம் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள். காயமடைந்து சாவின் விளிம்புக்கே போய்க்கொண்டிருந்த ஈழத்தமிழரை ஈவு இரக்கமின்றி கொடுமைப்படுத்தியது சிங்கள தேசம். அவர்களின் இராணுவம் ஈழத் தமிழரின் குருதியையே குடித்து ரசித்ததாக களத்தில் இருந்து வந்த பல செய்திகள் கூறின.

ஆனால் கோடான கோடி தொப்புழ்கொடி உறவுள்ள தமிழ் நாட்டின் தன்மானத் தமிழர்கள் மீளமுடியாத சோகத்தில் மூழ்கியிருந்தார்கள். ஏன் 17-க்கும் அதிகமான மானத்தமிழர் தமது உயிரை தீக்கு இரை கொடுத்தாவது வட இந்தியாவின் ஆதிக்கவாதிகளின் மனக்கதவுகளையேனும் திறந்து ஈழத் தமிழரை காப்பாற்றலாமென்று எண்ணினார்கள். நடந்தது என்ன? வட இந்திய வல்லாதிக்கம் மென்மேலும் ஆயுதங்களை கொடுத்து ஈழத் தமிழரை அழித்தது. ஈழம் எரிந்துகொண்டிருந்த நேரம் மற்றும் தமிழ் நாட்டில் வசிக்கும் பல கோடி மக்களின் மானசீகக் கோரிக்கையினைக் கூட வட இந்திய ஆதிக்க சக்திகள் செவிமடுக்கவில்லை.

தமிழ் நாட்டின் திரையுலகத்தினர் பல போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் பாலிவுட் நட்சத்திரங்களோ வாய்மூடி மௌனிகளாக இருந்தார்கள். அன்று இந்த நட்சத்திரங்கள் ஒரு வார்த்தையேனும் கூறியிருந்தால் மத்திய சர்க்கார் அடிபணிந்திருக்கும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. மாறாக வெந்த புண்ணில் வேல்பாச்சும் செயலில் இன்று அவர்கள் இறங்கியுள்ளார்கள். மே மாதம் இன்னொரு கருப்பு ஜூலையாக வர்ணிக்கப்படுகின்றது. சரியாக ஒரு வருடம் பூர்த்தியாகும் வேளையில் மகிந்த இந்த நிகழ்ச்சியை எப்படியாயினும் சிறிலங்காவில் நடாத்தி தமிழரின் கொலையின் ஒருவருடப் பூர்த்தியை களியாட்ட நிகழ்வாக நடத்தலாம் என்று எண்ணியுள்ளார் போலும்.

இதற்கு துணைபோகின்றது பாலிவுட். சிறிலங்காவில் இந்த விழாவை நடத்தக்கூடாது என்று நடிகர் அமிதாப்பச்சனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அவசர தந்தி அனுப்பியுள்ளது. அதில் தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து திரைப்பட விழாவை கைவிட வேண்டும் என்றும், திரைப்பட விழாவை இலங்கையில் நடத்துவது எங்களுக்கு அதிர்ச்சி தருகிறது என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. சிறிலங்காவில் நடக்கும் இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டால் அவர்களது பரம்பரைக்கே தீராத களங்கமான காட்டிக் கொடுத்த ‘எட்டப்பன்’ பழி வந்தே தீரும் என்று இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: “இலங்கை சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்த அமிதாப்பச்சன் ஏற்பாடு செய்து வருவதாக அறிகிறோம். நாங்கள் அமிதாப் பச்சன் மீது ஒரு மரியாதை வைத்திருக்கிறோம். இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா நடத்துவதை அவர் கைவிட வேண்டும். இதற்கான முயற்சியே தவறு. இலங்கையில் நம் தமிழினத்தை கூண்டோடு அழித்துக் கொலை வெறியாட்டம் நடத்திய ராஜபக்ச தன் மீது படிந்து விட்ட கறையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சியில் அமிதாப் பலியாகி விடக்கூடாது. தமிழ் நடிகர்கள் மட்டுமன்றி தமிழ்த்திரையுலகத்தைச் சேர்ந்த தமிழ் உணர்வுள்ள எவரும் இதில், கலந்துகொள்ள மாட்டார்கள். கலந்து கொள்ளவும் கூடாது.

இதையும் மீறினால் அவர்களது பரம்பரைக்கே தீராத களங்கமான காட்டிக் கொடுத்த எட்டப்பன் பழி வந்தே தீரும்.” ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போன்ற தமிழக தலைவர்கள் சிறிலங்காவில் இந்த நிகழ்வை நடாத்துவதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மேலும் இயக்குநர் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் அமிதாப்பச்சன் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அமிதாப் அழைப்பை தமிழக முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் புறக்கணித்துவிட்டனர்.

அமிதாப் என்ன சொல்லுகின்றார்?

மகிந்தாவின் வலையில் விழுந்துவிட்டு ஏதோ தமிழர் என்றால் கொத்தடிமைகள் என்றோ அல்லது சூத்திரதாரர்கள் என்றோ என்னவோ இன்னும் வட இந்தியர்கள் தமிழரை இளிச்சவாயர்களாகவே பார்க்கின்றார்கள். எப்படி அமிதாப் போன்ற வட இந்தியாவின் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் தமிழரை அழித்த மகிந்த விரித்த சிவப்பு கம்பளத்தின் உலா வரமுடியும்? இவர் என்ன மும்பையில் இருந்தே கொழும்பை சென்றடைந்தவரா? இவர் திராவிடரின் பூமியைத் தாண்டி அவர்கள் விடும் மூச்சுக்காற்றை தாங்கி நிற்கும் ஆகாய மார்க்கமாகத் தான் கொழும்பை சென்றடைய முடியும்.

மேலும் இவரைக் காவிச்செல்லும் வானூர்தி திராவிட நாட்டில் அமைந்திருக்கும் வானுர்தி நிலையம் ஊடாகத்தான் செல்ல முடியும். அப்படியிருக்க இந்த அமிதாப்பச்சனுக்கு எங்கே இருந்து வந்தது இந்த அகங்காரம்? இந்தியா என்ற பெரு வல்லாதிக்கம் இந்திரா காந்தி பிரதம மந்திரியாக இருந்த காலப்பகுதியில் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ்) என்ற நாட்டை மேற்கு பாகிஸ்தானிடம் (பாகிஸ்தான்) இருந்து விடுவிப்பதற்காக 1971-ஆம் ஆண்டுகளில் போர் புரிந்து சில நாட்களிலையே சுதந்திர பங்களாதேசை உருவாக்கிக் கொடுத்தது. இந்தியாவின் வான் பரப்பையே பாகிஸ்தான் பாவித்துக்கொண்டிருந்தது.

ஆனால் இந்தியா பாகிஸ்தானின் செயல்பாட்டை தனது கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்க மறுத்தது. பின்னர் தமது இராணுவ செயல்பாடுகளை பாகிஸ்தான் சிறிலங்கா ஊடாகத் தான் மேற்கொண்டது. தமிழ்நாட்டுத் தமிழர் கொதித்தெழுந்தால் அமிதாப் மீண்டும் அடிக்கடி கொழும்பு சென்றுவருவதையோ அல்லது மகிந்தாவுடன் தோழமை கொள்வதையையோ நிச்சயம் சிந்திப்பார். இவர் போன்ற பல இந்தியத் தலைவர்களுக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும். தொப்புள்கொடி உறவுள்ள ஈழத் தமிழர்கள் சென்னை வந்தால் அவர்களை தமிழ் மண்ணுக்குள்ளையே விடாமல் அனுப்பிவிடுகின்றார்கள்.

ஆனால் மகிந்தாவின் தனயன் சென்னை வந்தால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றார்கள். தமிழர்களின் நலன்களுக்கெதிராக இயங்கும் அரசியல் கோமாளியென்று எல்லோராலும் வர்ணிக்கப்படும் சுப்ரமணிய சுவாமி போன்ற அரசியல்வாதிகள் தமிழ் மண்ணில் வலம் வருகின்றார்கள். ஆனால் ஈழத் தமிழர்களையோ ஏதிலி முகாம்களிலும் மற்றும் சிறைச்சாலைகளிலும் பல்லாண்டுகளாக அடைத்து வைத்திருக்கின்றார்கள். தமிழ்நாட்டின் தமிழர்கள் பொங்கி எழுந்தால் இப்படியான நிலை மாறி இன்று செல்வச் செழிப்போடு வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

எது எப்படியாயினும் தமிழர்களை ஏமாளிகளாகவே இன்றும் பலர் பார்க்கின்றார்கள் என்பது மட்டும் உண்மை. தமிழ்த் தலைவர்கள் இன்று அறிக்கை விட்டவுடனேயே அமிதாப் பதில் அறிக்கை தருகின்றார். அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: “தமிழகக் குழுவினர் எனது வீட்டை முற்றுகையிட்டனர். இலங்கையில் இந்திய சர்வதேச பட விழாவை நடத்தக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த விழாவை நடத்தக் கூடிய அமைப்பினர் என்னைக் கேட்டுக்கொண்டதால் அதற்கான ஏற்பாட்டை நான் செய்தேன். நான் சர்வதேச இந்திய படக்குழுவின் விளம்பரத் தூதராக இருப்பதால் என்னை அணுகினர்.

என்னைப் பொறுத்தவரை எல்லோருடைய உணர்வுகளுக்கும் கட்டாயம் மதிப்பு அளிப்பேன். அமைதி, அன்பு, புரிந்துணர்வு ஏற்பட முயற்சிப்பேன். ” அமைதியைப் போதிக்கும் அமிதாப்பச்சன் மகிந்த விரித்த வலையில் வீழ்ந்துவிட்டார் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஏற்கனவே பணத்தில் மிதக்கும் அமிதாப்பச்சன் நிச்சயம் பணத்திற்காக விலைபோயிருக்க சந்தர்ப்பமில்லை. அப்படியாயின் எதற்காக இவர் விலைபோய்விட்டார் என்று எல்லோர் மனதிலும் கேள்விக்கணைகள் எழும்.

இந்தியாவின் மத்திய சர்க்கார் மற்றும் இந்தியாவின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான “ரோ” மூலமாக மகிந்த இந்த நிகழ்ச்சியை கொழும்பில் எப்படியாயினும் நடாத்தி தன் மீது விழுந்திருக்கும் கொலைப்பழியில் இருந்து மீள இந்த நிகழ்ச்சியை நடாத்தி தமிழரை அழித்த ஒரு வருட களியாட்டத்தை இந்த விழா மூலம் கொண்டாடலாம் என்று போட்ட கணக்கின் விழைவு தான் இந்த நிகழ்ச்சி. இந்த நிகழ்வு எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்பது தமிழ்நாட்டின் செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது.

அனலை நிதிஸ் ச. குமாரன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*