TamilSpy

பொழுது போக்கு இணையம்…

போர் நிறைவடைந்தமைக்கேற்ற புறச்சூழல்கள் இலங்கை

போர் நிறைவடைந்தமைக்கேற்ற புறச்சூழல்கள் இலங்கையின் படைத்தரப்பில் ஏற்படவில்லை.

நான்காவது ஈழப்போர் நிறைவு பெற்று ஒரு வருடம் அண்மித்துள்ள நிலையிலும் போர் வெற்றி தொடர்பான பேச்சுக்கள் தென்னிலங்கையில் ஓயவில்லை. ஆனால் மறுபுறம் அதனால் பாதிப்படைந்த தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் கூட தீர்க்கப்படவில்லை. தற்போதும் ஏறத்தாள 100,000 தமிழ் மக்கள் வவுனியாவிலும், வடக்கில் உள்ள ஏனைய பகுதிகளிலும் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் சிறீலங்காவில் அமைதி ஏற்பட்டுள்ளது, அங்கு போர் நிறைவடைந்துள்ளது என்ற சூழநிலைகளை தோற்றுவிப்பதற்கான புறச்சூழல்களும் சிறீலங்காவில் ஏற்படுத்தப்படவில்லை. அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் போன்றவை நீக்கப்படவில்லை, வடக்கு – கிழக்கில் படையினரின் பிரசன்னம் குறையவில்லை, உயர்பாதுகாப்பு வலையங்கள் அகற்றப்படவில்லை.

சிறீலங்கா என்ற தேசத்தின் அளவுக்கு தற்போது உள்ள படையினரின் எண்ணிக்கை என்பதும் மிக அதிகம். மேலும் அவர்களை பாராமரிப்பதில் ஏற்பட்டுவரும் செலவீனங்களும் அதிகம்.

சிறீலங்கா இராணுவத்தை பொறுத்தவரையில் ஈழத்தமிழ் மக்களை படைத்துறை ஆளுமைக்குள்; வைத்திருக்கும் நோக்கத்துடன் கடந்த அறுபது வருடங்களாக அது வளர்க்கப்பட்டுள்ளது. ஆட்தொகையில் பிரித்தானியாவின் இராணுவத்தை விட அதிக பருமனுள்ள படைக்கட்டமைப்பாக அது தோற்றம் பெற்று நிற்கின்றது.

பிரித்தானியா இராணுவத்தை பொறுத்தவரையில் 2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அது 6 டிவிசன்களை கொண்ட 146,000 வீரர்களை கொண்டது. ஆனால் சிறீலங்கா இராணுவம் தற்போது 300,000 படையினரை கொண்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கடந்த வாரம் தெரிவித்துள்ளார். மேலும் 50,000 பேரை இணைத்துக்கொள்ளவும் அரச தரப்பு முயன்று வருகின்றது.

சிறீலங்காவின் இராணுவ வரலாற்றை நோக்கினால் அகிம்சைப்போரில் நம்பிக்கையிழந்த தமிழினம் ஆயுதப்போரின் மீது நம்பிக்கை கொண்டு மெல்ல மெல்ல வளர்ச்சி கண்டபோது சிறீலங்கா இராணுவமும் தன்னை வளர்த்துக்கொண்டது. 1970 களில் அதன் எண்ணிக்கை 8,500 ஆக அதிகரித்திருந்தது.

விடுதலைப்புலிகள் 1970 களில் தோற்றம் பெற்ற போதும் அவர்களின் தாக்குதல்கள் 70 களின் நடுப்பகுதியில் அதிகரித்திருந்தது. எனினும் 1981 இல் தான் சீருடை தரித்த இராணுவத்தினர் மீதான தாக்குதலை விடுதலைப்புலிகள் முதலில் மேற்கொண்டிருந்னர்.

விடுதலைப்புலிகளின் முதல் தாக்குதல் தளபதியான லெப். சீலன், கப்டன் லாலா ரஞ்சன், லெப். கேணல் புலேந்திரன் ஆகியோர் மேற்கொண்ட தாக்குதலில் யாழ்ப்பாணம் நகரப்பகுதியின் காங்கேசன்துறை வீதியில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

விடுதலைப்புலிகளின் தாக்குதல்களின் தீவிரத்தை தொடர்ந்து சிறீலங்கா அரசு தனது இராணுவத்தினரின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்திருந்தது. 1983 களில் இராணுவம் 12,000 பேரை கொண்டிருந்தது.

அது பின்னர் 1986 களில் 30,000 பேரை கொண்டதாக மாற்றம் பெற்றிருந்தது. எனினும் 1987 களில் யாழ்குடாநாட்டின் மீதான ஒபரேசன் லிபரேசன் நடவடிக்கைக்காக மேலும் 10,000 இரணுவத்தினர் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தனர்.

இந்திய இராணுவத்தின் நடவடிக்கை காலப்பகுதியில் இராணுவத்தில் அதிக மாற்றங்கள் இடம்பெறவில்லை. ஆனால் இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் அன்றைய பிரேமதாசா அரசு மேலும் படை பல அதிகரிப்புக்களை மேற்கொண்டிருந்தது.

1990 களில் 50,000 ஆக இராணுவத்தின் பலம் உயர்த்தப்பட்டது. ஏறத்தாள நான்கு வருடங்கள் நடைபெற்ற இரண்டாவது ஈழப்போரின் முடிவான 1994 களில் சிறீலங்கா இராணுவத்தின் எண்ணிக்கை 104,000 ஆக உயர்ந்திருந்தது.

மூன்றாவது ஈழப்போரின் ஆரம்பம் படையினருக்கு பாரிய உளவியல் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப்புலிகளின் வான்எதிர்ப்பு பிரிவினரின் ஏவுகணை தாக்குதல்களில் விமானங்கள் வீழந்து நொருங்கியமை படையினர் மத்தியில் பாரிய அச்சங்களை தோற்றுவித்திருந்தன.

இந்த காலப்பகுதியில் படையில் இருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருந்தது. 1994 ஆம் ஆண்டு 104,000 படையினரை கொண்டிருந்த இராணுவத்தின் பலம் 1996 களில் 90,000 ஆக வீழ்ச்சி கண்டிருந்தது.

எனினும் 1994 ஆம் ஆண்டு வரையில் மூன்று கட்டளைப்பீடங்களையும் பல பிரிகேட் தலைமையகங்களையும் கொண்டிருந்த இராணுவத்தின் கட்டமைப்புக்கள் முழுமையான போருக்கு ஏற்ற வகையில் மறுசீரமைக்கப்பட்டது.

அன்றைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்தயினால் இந்த மறுசீரமைப்புக்கள் 1995 களில் மேற்கொள்ளப்பட்டன. 1995 ஆம் ஆண்டு 51, 52, 53 ஆவது படையணிகள் உருவாக்கப்பட்டன. முன்னர் நடவடிக்கை படையணியாக இருந்த படையணிகளே டிவிசன்களாக தரமுயர்த்தப்பட்டன.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பல பாரிய படை நடவடிக்கைகளுக்கு ஏற்ப மேலும் பல டிவிசன்கள் உருவாக்கப்பட்டன. 1997 ஆம் ஆண்டு வரையிலும் 54, 55, 56 ஆவது படையணிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் மூன்று மற்றும் ஆனையிறவு தளம் மீதான தாக்குதல்களில் 54 ஆவது படையணி முழுமையாக சேதமடைந்ததை தொடர்ந்து அது பின்னர் கலைக்கப்பட்டது.

இருந்த போதும் 2001 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் போரின் தீவிரம் குறைந்த போது இராணுவம் ஒன்பது டிவிசன்களை கொண்ட 95,000 படையினரை கொண்டிருந்தது. 11, 21, 22, 23, 51, 52, 53, 55, 56 டிவிசன்களை அன்று இராணுவம் கொண்டிருந்தது.

பின்னர் 2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை தொடர்ந்து இந்த டிவிசன்கள் புதிய படையினரை கொண்டு மறுசீரமைக்கப்பட்டிருந்தன. அதன் எண்ணிக்கையும் 118,000 ஆக அதிகரித்திருந்தது.

2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மகிந்த ராஜபக்சா அரச தலைவராக பதவியேற்ற பின்னர் படையினர் தரப்பில் மேலும் பல மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. 2006 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் மேதல்கள் உக்கிரமடைந்ததை தொடர்ந்து சிறீலங்கா இராணுவம் தனது படை பலத்தை மேலும் அதிகரித்து கொண்டது.

கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் கிளிநொச்சி இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் ஏப்ரல் மாதம் முல்லைத்தீவின் நந்திக்கடல் நீரோரிக்கு அண்மையாக சில கி.மீ பரப்பளவுக்குள் விடுதலைப்புலிகளின் படையணிகளையும், பொதுமக்களையும் சிறீலங்கா இராணுவம் சுற்றிவளைத்த போது அது 20 டிவிசன்களை கொண்டதாக இருந்தது.

அதாவது இந்த காலப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தில் 11, 21, 22, 23, 51, 52, 53, 55, 56, 57, 58, 59, 61 ஆகிய டிவிசன்களும் நடவடிக்கை படையணிகளான இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு மற்றும் எட்டு என்பனவும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.

வடபகுதியில் நிலைகொண்டுள்ள இந்த நடவடிக்கை படையணிகளில் நடவடிக்கை படையணி நான்கு, நடவடிக்கை படையணி ஐந்து, நடவடிக்கை படையணி எட்டு என்பன டிவிசன் நிலைக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த டிவிசன் படையணிகளுடன் மேலும் ஒரு புதிய டிவிசன் (65 ஆவது படையணி) படையணியும் தற்போது போர் நிறைவடைந்த பின்னர் உருவாக்கப்பட்டுள்ளது.

டிவிசன்களை விட நடவடிக்கை படையணிகள் படையினரின் எண்ணிக்கையை குறைவாக கொண்டிருந்த போதும் அதன் கட்டமைப்பில் அது டிவிசனின் தரத்தையே கொண்டிருந்தது. எனவே தான் அவையும் டிவிசன் படையணிகளாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

இராணுவம் கடந்த மே மாதம் மரபுவழியிலான சமரை நிறைவு செய்துள்ளதாக அறிவித்த போது 265 பற்றலியன்களை உள்ளடக்கிய 20 டிவிசன்களை கொண்ட 240,000 படையினரை சிறீலங்கா இராணுவம் கொண்டிருந்தது. எனினும் அது தற்போது 300,000 படையினரை கொண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாது சிறீலங்காவின் முப்படையினரினதும் எண்ணிக்கைகள் 450,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா இராணுவத்தின் தற்போதைய எண்ணிக்கை பிரித்தானியா இராணுவத்தின் எண்ணிக்கையை விட 50 விகிதம் அதிகமாகும். விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டத்தை நசுக்குவதற்காக பல பிராந்திய வல்லரசுகளின் துணையுடன் ஊதிப்பெருத்துள்ள இந்த இராணுவம் சிறீலங்காவின் பொருளாதாரத்தையும் பெருமளவில் ஏப்பம்விட்டு வருவதுடன், தீவிரமடைந்த போரும் சிறீலங்காவிற்கு அதிக சேதங்களை உண்டு பண்ணியிருந்தது.

2009 ஆம் ஆண்டுக்கான சிறிலங்காவின் பாதுகாப்பு செலவீனம் 169 பில்லியன் ரூபாய்கள் (1.6 பில்லியன் டொலர்களாகும்). இது சிறிலங்காவின் மொத்த உற்பத்தியில் அல்லது மொத்த வருமானத்தில் (The gross domestic product) 5 சதவிகிதத்திற்கும் அதிகம். இந்தியா, பாகிஸ்த்தான் ஆகிய நாடுகளின் விகிதங்களுடன் ஒப்பிடும் போது இது இரு மடங்கு அதிகமாகும்.

சிறீலங்கா அரசு தற்போதும் தனது படை பலத்தை போரில் உள்ள நிலையிலேயே பராமரித்து வருவதால் அதன் பாதுகாப்பு செலவீனம் குறைவடையப்போவதில்லை.

மேலும் படைத்தரப்பின் இழப்புக்களை பொறுத்தவரையில் நடைபெற்ற ஈழப்போர்களில் சிறீலங்கா இராணுவமும் அதிக விலையை செலுத்தியிருந்தது. 1981 ஆம் ஆண்டு லெப். சீலன் மேற்கொண்ட தாக்குதலில் இருந்து 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த காலப்பகுதி வரையிலான மூன்று ஈழப்போர்களில் 17,066 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 9,220 அதிகாரிகள் உட்பட 29,486 இராணுவத்தினர் அவயவங்களை இழந்ததாகவும் படைத்தரப்பு தெரிவித்திருந்தது.

ஆனால் மகிந்தா ராஜபக்சா 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்ற போது சிறிலங்கா படைத்தரப்பு 26,000 பேரை அதற்கு முன்னைய போர்களில் இழந்திருந்ததாக பாதுகாப்பு செயலாளர் கடந்த வாரம் இந்திய ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

மேலும் அதன் பின்னர் நடைபெற்ற நான்காவது ஈழப்போரின் இழப்புக்கள் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் 6,200 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 30,000 படையினர் நிரந்தரமாக செயற்பட முடியாதவாறு காயமடைந்துள்ளனர்.

கடந்த மூன்று வருடங்கள் நடந்த கடுமையான போரில் கொல்லப்பட்ட 6,200 படையினரின் குடும்பங்களையும், 30,000 இற்கு மேற்பட்ட காயமடைந்த படையினரையும் பராமரிப்பதே அரசுக்கு மிகவும் சவாலான விடயம். எனவே இதுவரை நடைபெற்ற போரில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த படையினரையும், அவர்களின் குடும்பங்களையும் பராமரிப்பது அரசுக்கு அதிக பொருளாதார அழுத்தங்களை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.

காயமடைந்தவர்களில் பெருமளவானோர் அவயவங்களை இழந்துள்ளனர். பார்வையையும், கேட்கும் சக்தியையும் இழந்துள்ளனர். 300 இற்கு மேற்பட்டவர்கள் தமது இயங்கும் சக்தியை முற்றாக இழந்துள்ளனர்.

இறந்த அல்லது காணாமல்போன படையினருக்கு அரசு காப்புறுதி நிதி மூலம் 750 அல்லது 1,200 டொலர்களை வழங்கி வருகின்றது. அதன் பின்னர் அவர்களின் உறவினர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகின்றது. காயமடைந்த படையினருக்கும் காப்புறுதி நிதியும், ஊதியங்களும் வழங்கப்படுகின்றன. ஆனால் அவை மருத்துவச் செலவுகளுக்கு போதுமானதல்ல என படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காயமடைந்த படையினரை பராமரிப்பது, இறந்த படையினருக்கு நிதிகளை வழங்குவது, இராணுவத்தின் பலத்தை தக்கவைப்பது போன்ற விடயங்களால் சிறீலங்காவின் பாதுகாப்பு செலவீனம் அதிகரித்து செல்கின்றதே தவிர அது போரின் பின்னரும் குறைவடையும் சாத்தியங்கள் இல்லை.

சிறீலங்காவில் போர் நிறைவடைந்து அங்கு நிரந்தர அமைதி தோற்றுவிக்கப்பட்டால் அதன் இராணுவக் கட்டமைப்புக்கு 20,000 இராணுவத்தினரே போதுமானது என்பது இராணுவ ஆய்வாளர்களின் கருத்து.

ஆனால் சிறீலங்கா அரசு தற்போது 450,000 சேவையில் உள்ள படையினரையும், ஒரு இலட்;;சத்திற்கு மேற்பட்ட காயமடைந்த படையினரையும், 32,200 இறந்த படையினரின் குடும்பங்களையும் தொடர்ந்து பராமரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதாவது தனது தேவையை விட பல மடங்கு அதிகமாக படையினரை தொடர்ந்து பரமரிக்கும் நிலைக்கு சிறீலங்கா அரசு தள்ளப்பட்டுள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தில் 80,000 பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்ததாகவும், 2006 ஆம் ஆண்டு ஜுன் மாதம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலும் வான்படையினர் 1,345 வான் தாக்குதல்களையும், குண்டு வீச்சுக்களையும் மேற்கொண்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்திருந்தது. பெரும் தொகையான படையினரை இணைத்துக் கொண்டதாலும், அதிக சுடுவலுவை பிரயோகித்ததாலும் தான் போரில் வெற்றிபெற முடிந்ததாக தற்போது அரசு தெரிவித்துள்ளது.

போர் நிறைவடைந்து ஒரு வருடம் அண்மித்துள்ள நிலையில் போர் எவ்வாறு வெற்றிகொள்ளப்பட்டது என்பது தொடர்பில் சிறீலங்காவின் படைத்துறை உத்திகள் குறித்து பல ஆய்வுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. ஆனால் போரை சிறீலங்கா அரசு இரு வழிகளில் தான் வெற்றி கொண்டுள்ளது. அதாவது அதிக படைவலு, அதீத சுடுவலு என்ற இரு காரணிகள் தான் ஒரு சிறிய அமைப்பின் மரபுவழியிலான கட்டமைப்பை முறியடிக்க சிறீலங்கா அரசுக்கு உதவியிருந்தது.

ஒரு பிரதேசத்தின் உட்கட்டுமானங்களினதும், மக்களினதும் அழிவுகள் தொடர்பில் அக்கறைகள் கொள்ளாத எந்த படையினருக்கும் போரில் வெற்றிபெறுவதற்கு மேற்கூறப்பட்ட இரு காரணிகளும் போதுமானது அதற்கு வேறு போரியல் உத்திகள் அவசியமற்றது.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்

நன்றி: வீரகேசரி வாரஏடு (02.05.2010)

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*