TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கிழக்கின் உதயத்தில் ‐ அஸ்தமிக்கும் உண்மைகள்

காலம் காலமாக நாம செய்து வந்த தொழிற்துறைகள் எல்லாமே யுத்தத்தோட அடிபட்டுப் போயிட்டுது. நாங்கள் எங்கட இடங்களையெல்லாம் விட்டு போய் இப்ப இங்க திரும்பி வந்து இருக்கம். எங்களுக்கு அரசாங்கம் எல்லா வசதியலையும் செய்து தாறன் எண்டுதான் சொல்லுறாங்க. அதை நம்பி நாம வந்தம் ஆனா யுத்தம் ஓஞ்சாப்புறகு கூட எங்ட வாழ்வு இப்பிடித்தான் சீரழியும் எண்டா என்னதான் நாம செய்யிறது. ஏதோ உயிரை வச்சுக்கொண்டு இப்பிடியே காலத்தை ஓட்டி செத்திட வேண்டியதுதான் என்கிறார்கள் வாகரைக் கிராமங்கள் பலவற்றில் மீள் குடியேற்றம் என்ற பெயரில் பேருந்துகளில் ஏற்றிக் கொண்டுபோய் இறக்கிவிடப்பட்ட மக்கள்.

மிக மிகப் பின்தங்கிய கிராமங்களாக இன்னும் அடிப்படை வாழ்வாதாரங்களுக்கே பொருத்தமற்றதாக இருக்கும் இந்தக் கிராமங்கள் படையினரால் சூழப்பட்டவையாக கடும் பாதுகாப்பிற்கு உட்பட்டவையாகவே இருக்கின்றன. மிகவும் அடிநிலையில் வறுமைக்கோட்டில் வாழுகின்ற இந்தமக்களில் வயது குறைந்த இளம் பெண்பிள்ளைகள் பலர் படையினரின் இம்சைகளுக்கு பழக்கப்பட்டவர்களாகிப் போயுள்ளனர். இந்தக் கிராமங்கள் சிலவற்றில் இப்போது வறுமை பாலியலுக்கான ஆயுதமாகிவிட்டது.

வாகரையின் ஒரு கிராமத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட 20, 22 வயது மட்டத்திலான சில பெண்பிள்ளைகள் படையினரால் பாலியல் தேவவைகளுக்கு பயன்படுத்துவது குறித்து அவர்களில் சிலரிடம் பேச முற்பட்ட போது வெளிப்பட்ட அந்த சோகங்கள் இங்கு சொல்லி ஆறமுடியாதவை.

இளவயதில் திருமணமாகி யுத்தத்தின் விளைவுகளால் கணவர்களை இளந்த இளம் பெண்கள் சிலர், திருமணமே ஆகாத இளம் பெண்பிள்ளைகள் சிலர் இப்போது பாலியலைத் தொழிலாக மேற்கொள்பவர்களாகிவிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்பவர்களாக கிராமத்தைச் சேர்ந்த சிலரே உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் காயங்கேணி, மாங்கேணி, பனிச்சங்கேணி, வாகரை, கண்டலடி, பால்சேனை, கதிரவெளி ஆகிய கிராமங்களையும் ஏனைய பல குக்கிரமங்களையும் கொண்ட பிரதேசமாகும்.

கட்டுமுறிவுக்கு போவதாயின் அந்த கிராமத்தின் நுழைவாயிலில் உள்ள அந்த ஒரு தேத்தண்ணிக் கடையைத் தாண்டித்தான் உள்ள போகனும். அந்த கடை முதலாளி அண்ணைக்கு கிராமத்துள்ள போற எல்லாரையும் தெரியும். அவரிட கடையில வஞ்சகமில்லமா எல்லாக் கடவுளரும் இருக்கினம். ஊருக்குள்ள இண்டைக்கு யாரெல்லாம் அண்ணன் போனவை எண்டு அவரிட்ட கேட்டா ஒன்று விடாமல் எல்லாத்தையுமே அவர் சொல்லுவார். என்கிறார் அங்குள்ள ஒருவர்.

கண்டலடியில இருந்த மாவீரர் இல்லம் இப்ப தரைமட்டம். காடு கட்டிப்போய் கிடக்கு. பெடியள் எப்பிடி வைச்சிருந்தாங்கள் இப்ப ஆமிக்காரன் உடைச்ச கல்லக்கூட அதில விட்டு வைக்கல்ல என்கிறார் என் நண்பர்.

பெரிய கடல் இருக்கு, ஏரி இருக்கு, வெள்ளாமைக்கு வயல், விறகு வெட்ட காடு வேற இருக்கு. நல்ல வழமான இடம் எங்கட வாகரை. ஆனா இந்த யுத்தம் எங்கட வாழ்வில விளையாடிப்போட்டுது பாருங்கோ. எங்கட நிலத்தில வெள்ளாமையைச் செய்வம், மீனைப் பிடிப்பம் காட்டுக்கு போவம் பட்டினி கிடக்க மாட்டம். ஏதோ வசதியா இருந்தனாங்க. இப்ப ஒருவேளைச் சாப்பாட்டுக்கு என்ன பாடு படுறம். புள்ளை குட்டியள இந்த நிலமையில எப்பிடி கவனமா வளக்க ஏலும்? எல்லாம் போச்சு என பெரு மூச்சு விடுறாங்கள் இந்த வாகரை மக்கள்.

எங்கட பக்கத்தில மீன்பிடிக்கிற போட்டுகள் சிறியதா இருக்கு. ஆனா சிங்கள ஆக்கள் பெரிய போட்டுகள்ள வந்து மீன்பிடிக்கிறாங்க. அவங்களோட நாம எப்படி மீன்பிடிக்கிறது. முன்னயெல்லாம் புலியள் இருக்கிதென்று கெடுபிடி பண்ணினாங்க. ஆனா எங்கட கடலில மீன்பிடிக்கிறதுக்கு இப்பவும் படையோட அனுமதி வாங்கித்தான் கடலுக்கு போகனும். தேனெடுக்க, விறகு வெட்ட தொழில் செய்ய காட்டுக்கு போறதுக்கும் படையிட்ட பொமிசன் வாங்கனும் என்கிறார் மீனவர் ஒருவர்.

அப்ப அபிவிருத்தி எண்டு அரசாங்கம் சொல்லுது குடியேறுவதற்கு உதவி செய்யிறதெண்டு சொல்லுது நிவாரணம் தாறெதெண்டு சொல்லுது அப்ப அதெல்லாம் என்ன பொய்யே என அவங்களிடம் கேட்க நீங்க யாராவது வந்து பாக்கலாம் தானே இங்க என்ன நடக்குது எண்டு என தங்கட கோபத்தை இந்த வாகரை மக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

ஆனால் பொதுவாக யுத்தத்தின் பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை வேளாண்மை நெல்விளைச்சல் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தும் கூட அதனை விற்பனை செய்ய முடியாமல் அந்த விவசாயிகள் பெரும் நஸ்டத்தை எதிர்நோக்கி நெல்லை விற்பனை செய்திருக்கிறார்கள். விளைந்த நெல்லை சந்தைப்படுத்த அரசாங்கத்தின் நெல்சந்தைப்படுத்தும் சபையினது களஞ்சியசாலை அங்கு இருக்கவில்லை.

யுத்தகாலத்தில் இந்த களஞ்சியசாலை மூடப்பட்டு அந்தக் கட்டடம் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. கிழக்கில் யுத்தம் முடிந்து முழுமையாக கிழக்கை படையினர் கைப்பற்றி ஏறத்தாழ 3 வருடங்கள் ஆன பிறகு கூட இதுவரை நெல் சந்தைப்படுத்தும் சபை மீண்டும் நிறுவப்படவில்லை. இதனால் 2200 ரூபாய்க்கு விற்க வேண்டிய நெல்லை தென்பகுதி வர்த்தகர்களுக்கும் முஸ்லீம் வியாபாரிகளுக்கும் 1700, 1800 ரூபாவிற்கு விற்றதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

இப்படி சாதாரணமான மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாத அல்லது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதத்தை வழங்க முடியாத மகிந்த அரசாங்கம் அபிவிருத்தி என்ற போர்வையில் கிழக்கை பல்தேசியக் கம்பனிகளுக்கும், உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகர்களுக்கும் விலைபேசி விற்று வருகின்றது.

உண்ண உணவின்றியும் உடுக்க உடையின்றியும் பாதுகாப்பான வாழ்வின்றியும் மோசமான வாழ்வை வாழும் மக்களுக்கு பெரிய காப்பற் றோட்டும், பாசிக்குடா பீச்சும், தயார் செய்கிறது மகிந்த அரசாங்கம்.

பொலநறுவை ‐ கபரணை ‐ வாழைச்சேனை மற்றும் மட்டு ‐ கல்முனை இணைப்பு என பாரிய காப்பற் றோட் திட்டத்தை ஆரம்பித்து அதில் பாதியை பூர்த்திசெய்தும் முடித்துள்ளது.

அக்கரைப்பற்று ஓட்டமாவடி றோட்டும் போடப்படுகிறது. தெற்கு கம்பனிகளுக்கும் வெளிநாட்டுக் கம்பனிகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்படும் இந்த வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் கிழக்கின் குடிமக்கள் 5 வீதம் கூட உள்வாங்கப்படவில்லை என்கிறார் மாவட்டத்தின் புத்திஜீவி ஒருவர்.
போகட்டும் வெளியாட்களை வேலைக்கு அமர்த்தி பெருந்தெருக்களில் அக்கறை காட்டும் இந்த அரசாங்கம் கிராமங்களின் உள்வீதிகளை அபிவிருத்தி செய்கிறதா எனக்கேட்டால் அதுவும் இல்லை.

90 சதவீதமான வீதிகளில் மழை பெய்தால் போட் ஓடலாம். இதனால் தனியார் போக்குவரத்து வண்டிகள் சேவையில் ஈடுபடுவதில்லை. தமது வாகனங்களின் ரயர்கள் விரைவாகப் போய்விடும் வாகனங்கள் பழுதடைந்துவிடும் எனக் கூறி சேவையில் ஈடுபடுவதில்லை. சரி தனியாரை விடுங்கள் அரசாங்கத்தின் போக்குவரத்து சேவைகள் ஒழுங்காயிருந்தாலும் பறவாயில்லை.

கொக்கொட்டிச் சோலைக்கு ஒரு பஸ் ரவுனில் இருந்து புறப்பட்டா அது போய் திரும்பி வரும் இரண்டு அல்லது இரண்டரை மணிநேரம் காத்துக்கிடக்க வேண்டும் அடுத்த பஸ்சுக்கு. ஈச்சந்தீவு நாவற்குடாப் பக்கம் எல்லாம் ஒரு ஒரு பஸ்தான். மட்டக்களப்பு ‐ வவுணதீவு வீதி மற்றும் வவுணதீவுப் பாலம் எல்லாம் திருத்தி 20 வருடமாயிற்று என்கிறார் இந்த வீதிகளில் பயணம் செய்து உடல் நோவில் உள்ள பயணி ஒருவர்.

சுகாதார சேவை வைத்தியசேவையை எடுத்தாலும் சரி உதாரணமாக வாகரையில் கடமையாற்றும் ஒரு வைத்தியர் லீவு எடுத்தால் வருத்தம் வாற ஆக்கள் அதே கதிதான். பிறகு அம்புலன்ஸ் வந்து ரவுணுக்கு கொண்டு போகும் வரை எல்லாத்தையும் தாங்க வேணும்.

கிழக்கில யுத்தம் காரணமாக கணவர்களை இழந்த இளம்பெண்களின் வாழ்வும் பெரும் கேள்விக்கு உள்ளாகி இருக்கு. இதில அரைப்பங்கிற்கு மேற்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் பெண்கள் தமது கணவர்களை இழந்துள்ளதுடன் இவர்களில் 25 ஆயிரம் பேர் 25 வயதுக்கும் குறைவான பெண்கள் என தெரியவருகிறது. இந்த 25 ஆயிரம் பெண்களில் 12 ஆயிரம் பெண்களுக்கு குறைந்தது தலா மூன்று பிள்ளைகளோ அதற்கு மேலதிகமாகவே இருக்கலாம் என சிறுவர் மற்றும் மகளீர் நலத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்.

மக்களுடைய சோகம் இப்படியிருக்க அண்மையில கிழக்கு முதலமைச்சர் தம்பி பாசிக்குடாவை துப்பரவு செய்திருக்கிறாரு. பொலிஸ் இராணுவம் தன்னுடைய ஆட்களோட போய் சுத்தம் செய்ததை மீடியா எல்லலாம் படம்புடிச்சுப் போட்டுது.
அதில பெரும் கதையே இருக்குது. பாசிக்குடாவில 1000 றூம் கொண்ட ஹொட்டல்கள் கட்டப் போயினமாம். ஒவ்வொரு ஹொட்டலும் குறைஞ்சது 12 முதல் 15 றூம்கள் இருக்கணுமாம். காணிகள் எல்லாம் துண்டு துண்டாக பிரிச்சு பெரிய பெரிய வர்த்தகர்களுக்கு கொடுத்தாயிற்றாம். உள்ளுரில இத வாங்கியதா எவரும் இல்ல. எல்லாமே தென்பகுதி வர்த்தகர்களும் முஸ்லீம் வர்த்தகர்களும் தான் எனச் சொல்லுறாங்கள்.

சீனா, இந்தியா, யப்பான் போன்ற ஆசியநாடுகளில இருந்து போற உல்லாசப் பயணிகளை இலக்கு வைச்சுத்தான் குறைந்த செலவில அவர்களுக்கு குடுக்கத்தான் இந்த ஏற்பாடாம்.
இந்த ஹொட்டல் திட்டத்தில 1800 பேர் வரை வேலைக்கு அமர்த்தலாம் என கணக்குப் பண்ணியிருக்கிறாங்கள். அதில 1500 பேர்வரை வெளியிடங்களில இருந்துதான் வேலைக்கு கொண்டு வரப் போறாங்கள். பிறகென்ன இவங்களோட குடும்பம் குட்டி என ஒரு கிராமமே பாசிக்குடாவில உருவாகப் போகுது.

அதோட உல்லாசப் பயணமா வாறவை வறுமையில வாழுற பிள்ளைகளையும் சும்மாவிடப் போறதில்லை. இந்தத் திட்டத்திற்கு உள்ளுரில எதிர்ப்புகள் இருந்தாலும் அபிவிருத்தி என்ற பேரில முதலமைச்சர் தம்பி மாகாண சபையூடாக ஒப்பந்தங்களில கைச்சாத்திட்டுட்டார். என்ன பண்ண முடியும் கிழக்கின் உதயத்தில இந்த உண்மைகள் எல்லாம் அஸ்தமனமாகி தெலைந்து போகிறது.

நாகேஸ் நடராஜா.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*