TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அரவணைக்குமா அரசாங்கம்

திருகோணமலையில் கடந்த வாரம் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு முக்கியமான தீர்மானம் ஒன்றை அறிவித்துள்ளது. தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய- நீதியானதும் நிரந்தரமானதுமான அரசில் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து பங்காற்றத் தயார் என்பதே அந்த அறிவிப்பு.

தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காண்பதற்கு கூட்டமைப்பு தயாராக இருக்கிறது என்பதே இந்தச் செய்தி. இதற்கான பதில் அரசாங்கத்திடம் இருந்தே வரவேண்டியுள்ளது. அதையும் கூட்டமைப்பு தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது. இனப்பிரச்சினைத் தீர்வுக்காக ஒரு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை மகிந்த ராஜபக்ஸ அமைத்திருந்தார். 100 இற்கும் அதிகமான கூட்டங்களை நடத்திய இந்தக் குழுவின் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினைத் தீர்வுக்காகத் தம்முடன் இணைந்து கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் கூறி வந்ததே தவிர- அவர்களை பேச்சுக்களில் இணைத்துக் கொள்வதற்கான எந்த உருப்படியான திட்டத்தையும் முன்வைக்கவில்லை என்பதே உண்மை. அதாவது அரசாங்கம் எதிர்பார்ப்பது கிழக்கில் சந்திரகாந்தனையும்;, வடக்கில் டக்ளஸ் தேவானந்தாவையும் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தம்முடன் இணைந்து கொள்ள வேண்டும் என்பதையே. ஆனால் அது தற்கொலைக்கு ஒப்பான முயற்சி என்பது கூட்டமைப்புக்கு நன்கு தெரியும். எனவே அரசாங்கத்தின் கோரிக்கைகளை ஆதரிக்காது நிராகரித்தே வந்தது.

ஆனால் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வுக்கான முயற்சிகளில் பங்களிப்புச் செய்வதற்குத் தயார் என்று அறிவித்துள்ளது. ஆனால் அரசாங்கம் என்ன முடிவை எடுக்கப் போகிறது என்பது தான் சிக்கல். அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விலக்கி விட்டு ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு முனைய முடியாது. வடக்கு-கிழக்கில் உள்ள மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.

வடக்கிலும் கிழக்கிலும் அதற்கு 14 ஆசனங்கள் கிடைத்துள்ளன. தொகுதி ரீதியாகப் பார்த்தாலும் கூட வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 15 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேச்சு நடத்தும் வலுவானதொரு தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருக்கிறது என்பதற்கான ஆணையாகவே இதைக் கருதமுடியும். எனவே இனிவரும் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விலக்கியதாக ஒரு தீர்வு முயற்சியை அரசாங்கத்தால் முன்னெடுக்க முடியாது. ஆனால் அதற்கு எத்தகைய பாத்திரத்தை வழங்க அரசாங்கம் தயாராக இருக்கிறது என்பது முக்கியமான விடயம்.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தமிழர் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய கோரிக்கைகளை வலுவாக ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுக்களில் பிரதான தரப்பாகச் சேர்த்துக் கொள்வதற்கு இலகுவில் ஒப்புக் கொண்டு விடும் எனக் கருத முடியாது, ஆனால் அதைச் செய்யாமல் இருந்தாலும் சிக்கல்களை எதிர்நோக்கியே ஆகவேண்டியிருக்கும்.

வெறுமனே அரசியல் தீர்வு முயற்சிகளில் மாத்திரமன்றி- அபிவிருத்தி மற்றும் மீள்குடியமர்வுத் திட்டங்களிலும் தம்மைக் கலந்தாலோசித்து தமது ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பு எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது. இதுவரையில் அரசாங்கம் தன்னைச் சார்ந்த கட்சிகளைத் தான் மீள்குடியமர்வு, அபிவிருத்தி போன்றவற்றில் இணைத்துக் கொண்டு வருகிறது. ஏனைய கட்சிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை.

யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி. கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள். வவுனியாவில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கே அபிவிருத்தி திட்டங்களிலாயினும் சரி, புனர்வாழ்வுத் திட்டங்களிலாயினும் சரி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. போருக்குப் பின்னர் அபிவிருத்தி இன்றைய முக்கியமானதொரு கருப்பொருளாக மாறியுள்ள நிலையில் இதில தம்மையும் பங்குதாரர்களாக்கிக் கொள்வதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்குமே ஆவல் பிறந்துள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விதிவிலக்கல்ல.

காரணம் அபிவிருத்தி திட்டங்களில், மீள்குடியமர்வு திட்டங்களில் பங்களிப்பு செய்வதன் மூலம் நல்ல பிரசாரம் கிடைக்கும். அது எதிர்காலத்தில் அரசியல் நடத்துவதற்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பது கட்சிகளின் எதிர்பார்ப்பு. எனவே தான் இப்போது எல்லாக் கட்சிகளுமே அபிவிருத்தி திட்டங்களில் தம்மையும் கலந்தாலோசித்தே முடிவுகள் எடுக்கவேண்டும் தாமும் இணைந்து பங்காற்றத் தயார் என்று அறிவிக்க ஆரம்பித்துள்ளன. ஆனால் இந்த விடயத்தில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எந்தளவுக்கு அரவணைத்துக் கொள்ளப் போகிறது என்பது கேள்வியே. ஏனென்றால் வடக்கில் விரைவில் தேர்தல்கள் வரப்போகின்ற நிலையில் அபிவிருத்தி, புனர்வாழ்வுத் திட்டங்களின் மூலம் கிடைக்கக் கூடிய இலாபங்களை கூட்டமைப்புடன் பங்கிட்டுக் கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்காது.

ஆனால் தமிழர்களின் பிரதிநிதியாக- மிகப் பெரிய சக்தியாக இருக்கும் கூட்டமைப்பை ஒதுக்கிவிட்டு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் முனைந்தால் அது மீளவும் பரஸ்பர நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்தும். அரசியல் தீர்வு முயற்சி ஆகட்டும் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கான ஒத்துழைப்புகளாகட்டும் எதற்குமே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு பெறுவது அவசியம் என்றாகி விட்டது. இந்தநிலையில் கூட்டமைப்பு சாதகமான வகையில் அரசாங்கத்துக்கு விடுத்துள்ள அழைப்பை அரசாங்கம் எந்தவகையில் கையாளப் போகிறது என்பது பெரிதும் எதிர்பார்ப்புகளுக்குரிய தொன்றாகியுள்ளது.

பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுடன் அரசியல் தீர்வுபற்றி பேசுவேன் என்று முன்னர் கூறிய மகிந்த ராஜபக்ஸ இப்போது என்ன செய்யப் போகிறார்?

வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடக்கும் வரைக்கும் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை ஒதுக்கிப் போடுவதற்கு அவர் முனையலாம். பொதுத்தேர்தலின் முடிவுகள் அவருக்குத் திருப்தியாக அமையவில்லை என்பது வெளிப்படை. வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பதற்கெல்லாம் மயங்கி விடுவர் என்ற எதிர்பார்ப்பு தோல்வி கண்டிருப்பதால் வடக்கு மாகாணசபைத் தேர்தல் வரைக்கும் இந்த விடயங்களில் காலை வைக்க அவர் விரும்பாதிருக்கலாம். எது எவ்வாறாயினும் பந்து இப்போ அரசின் பக்கம் சென்றிருக்கிறது. கூட்டமைப்புடன் இணைந்து இந்தப் பந்தை விளையாடுவதும் சரி அல்லது அதை ஒளித்து வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல இருப்பதும் சரி அரசாங்கத்தின் கைகளிலேயே இருக்கிறது.

இந்த விடயத்தில் அரசாங்கம் இறங்கி வர முனையாது போனால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று கூட்டமைப்பு சில ஆலோசனைகள் நடத்தியிருப்பதாகத் தகவல்.

அதுபற்றிய எந்த தகவலும் வெளியே கசியாத போதும் – அது அகிம்சை வழியிலான போராட்டங்களுக்குக் களம் அமைக்கலாம் என்று தெரிகிறது. அத்துடன் சர்வதேச அளவிலும் தமது இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்க கூட்டமைப்பு முனையலாம். அரசாங்கத்துக்கு இனப்பிரச்சனைத் தீர்வு என்பது இனிமேலும் பிற்போட முடியாத ஒன்றாக மாறிவருகிறது.

அரசாங்கம் ஏதாவது சாக்குப் போக்குகளை சொல்லி இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகளைப் பிற்போட முனைந்தாலோ அல்லது கூட்டமைப்பை விலக்கி விட்டு வேறொரு வழியில் தீர்வைத் தேட முனைந்தாலோ அது ஆபத்தான பாதையில் செல்லும் பயணமாகவே அமையும்.

சத்திரியன் .

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*