TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பிரபாகரனின் தாயார் செய்த குற்றம் தான் என்ன?

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் (80 வயது) என்ன குற்றம் செய்தார் என்று கூறாமலே நடு இரவில் சென்னை வானூர்தி நிலையம் வந்தடைந்தவுடன் தரை இறங்கவிடாமலே திரும்பவும் மலேசியா நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள் இந்திய வல்லாதிக்க ஆட்சி.

இதற்கு துணை போய்விட்டார் தமிழ் நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி. சென்னையில் நீங்கள் தரை இறங்குவதற்கு அனுமதியில்லை என்று கூறி விமானத்தை விட்டுக் கீழே இறங்குவதற்கு கூட பார்வதி அம்மாளை அனுமதிக்கவில்லை.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் கடந்த 16-4-2010 இரவு மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்தில் அவரை இறங்க அனுமதிக்காமல் தடுத்து அதே விமானத்தில் மலேசியாவிற்கு மீண்டும் திருப்பி அனுப்பிவிட்டனர். பிரபாகரனின் தாயார் தனது சிகிச்சைக்காக விசா பெறலாம் என்ற நிலையில் அரசின் உத்தரவு அமைந்து மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் அந்த விசாவினைப் பெற்று அவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது மத்திய அரசினுடைய அதிகாரிகள் சிலர் விமான நிலையத்தில்-விமானத்துக்குள்ளே நுழைந்து தவறுதலாக உங்களுக்கு விசா வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறி மலேசியாவுக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். அவரை அழைத்துச் செல்வதற்காக சென்னை வானூர்தி நிலையம் சென்றிருந்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் அதிர்ச்சியுடன் தமது வீடுகள் திரும்பினர்.

வேடிக்கை என்னவென்றால் தமிழ் நாட்டு சட்டமன்றத்தில் இந்த சம்பவம் தொடர்பாக இடம்பெற்ற கடும் கொந்தளிப்பான நிலைக்குப் பின்னர் கருணாநிதி தனது வழக்கமான நீலிக்கண்ணீர் வடிப்பு நாடகத்தை வெளிப்படித்தினார்.

கருணாநிதியின் கண்துடைப்பு நாடகம்

தமிழக சட்டமன்றத்தில் கலைஞர் தனது பேச்சில் கூறியதாவது: “இதுபற்றிய முழுத் தகவலை மறுநாள் காலையில் பத்திரிகைகளைப் படித்த பிறகே தெரிந்து கொள்ள முடிந்தது. இதேபோல ஒரு சம்பவம் 1985-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டுமென தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன் பாலசிங்கம் சத்தியேந்திரா ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவும் அன்றிருந்த மாநில அரசின் வேண்டுகோள்படிதான் இடப்பட்டது எனக் கூறப்பட்டது. அதில் உண்மை எதுவோ எனக்குத் தெரியாது. எங்களுக்குச் செய்தி கிடைத்து உடனடியாக டெசோ அமைப்பின் சார்பாக சென்னையில் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். உடனடியாக சந்திரஹாசன் மீதான உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அதற்குப் பிறகு பாலசிங்கம் மீதான நாடு கடத்தும் உத்தரவும் திரும்பப் பெறப்பட்டது.”

மேலும் அவர் கூறியதாவது: “பார்வதியம்மாள் தமிழகத்துக்கு வருவது பற்றி அவரிடமிருந்தோ அவர்களுக்கு துணை புரிய விரும்புகிறவர்களிடம் இருந்தோ தமிழக அரசுக்கு எந்தவிதமான கடிதமோ தகவலோ நேரடியாக வரவே இல்லை. மத்திய அரசுக்கும் பார்வதியம்மாளுக்கும் இடையே தான் இந்தப் பயணம் பற்றிய செய்தித் தொடர்பு இருந்திருக்கிறதே தவிர தமிழக அரசுக்கு இதிலே எந்தவிதமான தொடர்பும் கிடையாது. கடந்த 2003-ம் ஆண்டில் தமிழக அரசின் சார்பில் மத்திய உள்துறைக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தின் 2-வது பத்தியில் இலங்கைத் தமிழர்கள் வேலுப்பிள்ளை மற்றும் பார்வதியம்மாள் ஆகியோர் இந்தியாவுக்குள் சட்ட ரீதியாகவோ அல்லது சட்ட விரோதமாகவோ நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும். அவர்களது பெயர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கடிதம் எழுதி அதன் காரணமாக தடை விதிக்க ஏற்பாடு செய்தவர்கள்-எங்கே அந்த உண்மை இங்கே வெளியிடப்பட்டு விடும் என்ற காரணத்தாலோ என்னவோ-மிக முக்கியமான இந்தப் பிரச்சனையில் எல்லா கட்சியினரும் குரல் எழுப்புகின்ற இந்தப் பிரச்சனையில் அவர்கள் (அதிமுக) மாத்திரம் வராமல் இருந்து விட்டார்கள் என்பதைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். அவர்கள் தான் இன்றைக்கு மாபெரும் கூட்டணியில் இருக்கிறார்கள். அது தமிழர் கூட்டணி எனச் சொல்லப்படுகிறது.”

“அப்படிப்பட்ட நண்பர்கள் இந்தப் பிரச்சனையில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால் இது முழுக்க முழுக்க தமிழக அரசுக்கு உரிய பிரச்சனை என்பதைப் போல ஏடுகளில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு தகராறு நடைபெறுவதாக எனக்குச் செய்தி கிடைக்கிறது. நான் விமான நிலையத்துக்குத் தொடர்பு கொள்கிறேன். பார்வதியம்மாள் திரும்ப அனுப்பப்பட்டு விட்டார்கள் என்று அடுத்த செய்தி எனக்குக் கிடைக்கிறது. ஆனால் இந்தச் செய்தி முறையாக உரிய வகையில் எனக்குச் சொல்லப்படவில்லை. அரசில் யாருக்கும் சொல்லப்படவில்லை. அதன் காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள். அப்படி திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மலேசியாவுக்கே திரும்பச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அங்கே மருத்துவ வசதி பெறுவதாக செய்திகள் வந்திருக்கின்றன. மீண்டும் தமிழகம் சென்று மருத்துவம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று பார்வதியம்மாள் அறிவித்தால் அதைப் பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அது பற்றி கடிதம் எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது. மத்திய அரசின் பதிலைப் பற்றி-அது என்ன கூறுகிறது என்பதைப் பற்றி அது பற்றிய விளக்கம் தேவைப்பட்டால் அந்த நேரத்தில் பதில் வந்த பிறகு அதனை இந்த அவைக்குத் தெரிவிப்பேன்” இப்படியாக நீலிக்கண்ணீர் விட்டார் முதல்வர் கருணாநிதி.

70-ஆம் ஆண்டுகளில் செல்வராஜா யோகச்சந்திரன் என்றழைக்கப்படும் குட்டிமணியை நாடு கடத்தினார் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி. பின்னர் சிங்கள ஆட்சியாளர்களினால் கைது செய்யப்பட்டு கண் தோண்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட பின்னர் கருணாநிதியோ ஏதோ தனது பழைய நாசகார வேலைகளை மறைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் குட்டிமணி மற்றும் ஐம்பதுக்கும் அதிகமான தமிழ் மாந்தர்கள் படுகொலையை தனது கட்சி வளர்ச்சிக்கான பிரச்சாரமாக கருணாநிதி மேற்கொண்டார்.

பாவம் இந்த பார்வதி அம்மாள். படுத்த படுக்கையில் பயணம் செய்த அவருக்குத் துணையாக ஒரு பெண்ணும் சென்றார். அவர்கள் இருவரும் விமானத்தை விட்டுக் கூட இறங்க அனுமதிக்கப்படாமல் சென்ற விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர். அத்துடன் தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். சிங்களச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர். பெரும்பாலான நேரங்களில் சுய நினைவை இழந்த நிலையிலே இருப்பவர். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று போற்றப்படும் தமிழகத்திற்குள் பார்வதி அம்மாள் தனக்கு உரித்துடைய தமிழகத்துக்கு வருவதைத் தடுத்துத் திருப்பி அனுப்பியதைப் போன்ற மனித நேயமற்ற கொடுமை வேறு இருக்க முடியாது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்திய அரசு ஆறு மாத காலத்திற்குரிய விசாவை அவருக்கு அளித்துள்ளது. ஆனால் அவர் சென்னையில் வந்து இறங்கியவுடன் இரவோடு இரவாக அவரைத் திருப்பி அனுப்பியதற்கு யார் காரணம்? அவர் வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்று சொன்னால் விசா வழங்காமலேயே இருந்திருக்க வேண்டும். காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும்.

மானத்தமிழ் தலைவர்கள் என்ன கூறுகின்றார்கள்?

நெடுமாறன் கூறியதாவது: “பார்வதி அம்மாள் அவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல நானும் வைகோ அவர்களும் சென்றிருந்தோம். அவர் வருகையை நாங்கள் யாருக்கும் தெரிவிக்கவில்லை. அவரது உடல்நலம் மட்டுமே எங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது. வெளியில் தெரிந்தால் கூட்டம் கூடும். அது அவரது உடல் நலனுக்குக் கேடாக முடியும் என்ற காரணத்தினால் அவர் வருகையை வெளியிடவில்லை. விமான நிலையத்திற்கு வைகோவும் நானும் சென்ற போது நாங்கள் வருவதற்கு முன்பே அங்கு குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காவல் படையினர் பாய்ந்தோடி வந்து எங்களை வழிமறித்துத் தடுத்தார்கள். விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட எல்லை வரை நாங்கள் செல்வதற்குரிய அனுமதிச் சீட்டுகள் எங்களிடம் இருந்தன. ஆனால் எங்களைப் பிடிவாதமாக அனுமதிக்க மறுத்து பிடித்துத் தள்ளும் அளவிற்கு காவல்துறையினர் அட்டூழியம் புரிந்தனர். தொடர்ந்த தள்ளு முள்ளுக்கு நடுவேதான் நாங்கள் விமான நிலையத்தின் பார்வையாளர் பகுதியையே அடைய முடிந்தது. விமான நிலையத்தில் தனியான பாதுகாப்புப் படையினர் இருக்கிறார்கள். ஆனால் சென்னை புறநகர்க் காவல்படையினர் அத்து மீறி செயல்பட்டு எங்களைத் தடுத்தார்கள். முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாமல் இது ஒரு போதும் நடந்திருக்க முடியாது. இந்திய அரசு விசா வழங்கிய பிறகு கருணாநிதியின் வற்புறுத்தலின் பேரிலேயே பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். இரக்கமற்ற இந்தக் கொடிய செயலுக்கு அவரே முழுமையான பொறுப்பாளி ஆவார். உலகத் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசியத் தலைவரான பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்தத் தாயாரை தாய்த் தமிழகத்தை உரிமையோடு நம்பி வந்த தமிழ் மகளை கொஞ்சமும் இரக்கமில்லாமல் விரட்டியடித்த கருணாநிதியை உலகத் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.”

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி கூறியதாவது: “விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை தமிழகத்தில் தங்க வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடிய பிரபாகரனின் தாயார் சிகிச்சை பெற சென்னை வந்தபோது அவரைத் திருப்பி அனுப்பிய செயல் மனிதாபிமானமற்றது. கொடுங்குற்றம் புரிந்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்குக் கூட தண்டனையை நிறைவேற்றும் முன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக மருத்துவ சிகிச்சை அளிக்கிறார்கள். ஆனால் பார்வதி அம்மாளை சிகிச்சைக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டனர். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்கவும் அவர் வாழ்நாள் முழுவதும் தமிழகத்தில் தங்கியிருக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.”

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளதாவது: “விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் ஒரு பயணியாக வந்துள்ளாரே தவிர ஒரு முக்கிய அரசியல் பிரமுகராக அல்ல. இந்த விஷயம் பற்றி தனக்கு தெரிவிக்கவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி குறைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. சென்னை விமான நிலையத்தில் மத்திய மாநில அரசுகளின் உளவுத்துறையினர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தகவல் உடனடியாகத் தெரிந்திருக்கும். அப்படியிருக்க தனக்கு தெரியாது என்று முதல்வர் கருணாநிதி சொல்வது நம்பக்கூடியதாக இல்லை. இந்திய அதிகாரிகள் மூலம் விசா பெற்றுத்தான் பார்வதி அம்மாள் சென்னை வந்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் தன்னை இறங்கவிடமாட்டார்கள் என்று அவர் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? அவரை இறங்கவிடாமல் தடுத்தது இந்திய அரசுதான். ஆகவே இத் தகவல் தெரிந்தும் மௌனம் சாதித்துள்ளது தமிழக அரசு. ஆகவே தடை ஆணை விதித்த இந்திய அரசும் அதற்கு துணை போன முதல்வர் கருணாநிதியும்தான் மீண்டும் பார்வதி அம்மாள் சென்னைக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக பார்வதி அம்மாள் கோரிக்கை வைத்தால் பரிசீலிப்போம் என்று சொல்வது என்ன நியாயம்? 2003-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிரபாகரனின் பெற்றோர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வர தடைவிதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்த சு10ழ்நிலை வேறு இன்றைய நிலை வேறு. 2003-ம் ஆண்டு பட்டியலை பல ஆண்டுகள் கழித்துதான் பரிசீலிக்க வேண்டும் என்பதில்லை. தமிழக அரசின் சார்பில் முதல்வர் கருணாநிதி இந்த தகவல் தனக்கு தெரிந்த உடனேயே இன்றைய சு10ழ்நிலையை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி அந்தப் பட்டியலை ரத்து செய்திருக்கலாம். ஏன் இதை இன்றுகூட செய்யவில்லை என்பதுதான் கேள்வி.”

சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியதற்கு மத்திய அரசின் தவறான உள்நோக்கமே காரணம் என்று பா.ஜ.க. குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை: “பார்வதி அம்மாளை பிரபாகரனின் தாயாராக பார்க்காமல் முறையான அனுமதி பெற்று மருத்துவ சிகிச்சை பெற வந்த 80 வயது மூதாட்டி என்ற முறையில் பார்த்தால் அவரைத் திருப்பி அனுப்பிய மத்திய அரசின் செயல் மனிதாபிமானமற்றது. பாகிஸ்தானிலிருந்து இங்கு வந்து பலர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். நாடாளுமன்றத்தைத் தாக்க சதி செய்த அப்சல் குரு மத்திய அரசால் விருந்தாளி போல் நடத்தப்படுகிறார். மும்பை தாக்குதலுக்குக் காரணமான கசாப்பிற்கு இன்று பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கூட இங்கு ராஜபட்ச சகோதரர்களுக்கு மத்திய அரசால் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் வயதானவர் என்ற முறையிலாவது பார்வதி அம்மாள் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளித்திருக்க வேண்டும். மத்திய அரசின் இந்தப் போக்கு ஒரு தவறான உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. மத்திய அரசின் இந்தப் பாரபட்சமான நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் இந்த முடிவு தமிழக அரசுக்கோ முதல்வர் கருணாநிதிக்கோ தெரியாமல் இருக்க சாத்தியமில்லை. பார்வதி அம்மாள் தமிழகத்தில் இருந்தபோது பல அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவே இருந்தனர். இன்று ராஜபக்சவை திருப்திப்படுத்துவதற்காக எடுத்துள்ள முடிவை மனிதாபிமானமற்றது என்றுதான் கூற வேண்டும்.”

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கையில் கூறியுள்ளதாவது: “பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டதற்குக் காரணம் 2002 இல் அ.தி.மு.க. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மத்திய அரசுக்கு எழுதி பெற்றுக்கொண்ட கடிதம்தான் என்பதையும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பிரபாகரனின் தாயார் திருமதி பார்வதி அம்மாள் வேலுப்பிள்ளை அவர்கள் பக்கவாத நோயினால் தாக்குண்டு பெரிதும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இலங்கையிலிருந்து மலேசியாவிற்குச் சென்று அங்கு சரியான சிகிச்சைக்கு வழி இல்லை என்பதற்காக விசா பெற்று இங்கே (தமிழ்நாட்டிற்கு) மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ள நிலையில் 16.4.2010 அன்று விமான நிலையத்தில் அவரை இறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது மனிதநேயத்திற்கு விரோதமான செயல் என்பதைச் சுட்டிக்காட்டி அறிக்கை விடுத்திருந்தோம் (17.4.2010). பல கட்சியினரும் உணர்ச்சிபூர்வமாக அறிக்கை விடுத்தனர். அ.தி.மு.க.வைத் தவிர! சட்டப்பேரவையில் இந்நிலை ஏற்பட்டதற்கு மூல காரணம் 2002 இல் பிரபாகரனின் தாய் தந்தையர் இலங்கை சென்றுவிட்ட நிலையில் அவர்கள் மீண்டும் திரும்பி வந்தால் அவர்களை அனுமதிக்கக்கூடாது என்று ஒரு ஆணையை மத்திய அரசுக்கு எழுதிப் பெற்ற பெருமை ஜெயலலிதாவைத்தான் சாரும். அவர்கள் முதல்வராக இருந்தபோதுதான் இந்தச் சாதனையைச் செய்தார்! நம் அதிகாரிகளுக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலை இதனால்தான் என்ற உண்மையை தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்கள். அதோடு பிரபாகரனின் தாயார் இங்கே வந்து மீண்டும் சிகிச்சை பெற விரும்பினால் மத்திய அரசுக்கு தமது அரசு கடிதம் எழுதி உதவிடத் தயார் என்றும் குறிப்பிட்டிருப்பது மிகவும் மனிதாபிமானத்துடன் கூடிய நல்ல செயல்; நம் முதல்வரின் கூற்றை வரவேற்பதோடு அவர்கள் இம்முயற்சியைச் செய்யவேண்டும் என்றும் உலகத் தமிழர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இதற்குமுன்புகூட ஜெயலலிதா (அ.தி.மு.க.) ஆட்சியின்போது தோழர்கள் பழ. நெடுமாறன் சுப. வீரபாண்டியன் போன்றவர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டு பேசத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தில் வாங்கிய நிலை தொடர்வதை ரத்து செய்து அவர்களது வாய்ப்பூட்டை விலக்கிய செயலும் கலைஞர் அரசின் மனிதநேயம் மனித உரிமைக் காப்பினைக் காட்டுவதாகும். எனவே இதற்குக் காரணமான அ.தி.மு.க. ஆட்சிபற்றி தமிழ்கூறும் நல்லுலகம் தெரிந்துகொள்வது முக்கியமாகும்.”

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது: “இந்திய குடிவரவைச் சார்ந்த அதிகாரிகள் இவ்வாறு நடந்துகொண்டதற்கு கடந்த 2003ஆம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கைச் சுற்றறிக்கையே காரணம் என்பது தெரியவருகிறது. அதாவது 1980க்குப் பின்னர் தமிழகத்திற்கு வந்த மேதகு பிரபாகரன் அவர்களின் பெற்றோர் 2003ஆம் ஆண்டு வரையில் திருச்சிராப்பள்ளியிலேயே தங்கியிருந்தனர். 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து பலரும் ஈழத்திற்குத் திரும்பினர். அதே போல மேதகு பிரபாகரன் அவர்களது பெற்றோரும் 2003ஆம் ஆண்டு தமது தாயகத்திற்குத் திரும்பினர். அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா பிரபாகரனின் பெற்றோர் மீண்டும் தமிழகத்திற்கு வர தடை விதிக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்திருக்கிறார். அந்த விண்ணப்பத்தின் அடிப்படையிலேதான் அவர்கள் தமிழகத்திற்கு வர தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அந்தத் தடையின் அடிப்படையில்தான் அதிகாரிகள் அன்னை பார்வதி அம்மாள் அவர்களை சென்னையில் இறங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிய வருகிறது. அதாவது பார்வதி அம்மாள் அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கு அன்றைய அதிமுக அரசு பெற்ற தடையாணைதான் காரணம் என்பது இப்போது உறுதியாகியுள்ளது. எனினும் அதனைக் காரணம் காட்டி அவரை இங்கு மருத்துவம் பெறவிடாமல் திருப்பி அனுப்பிய நடவடிக்கையானது வன்மையான கண்டனத்துக்குரியதாகும். இந்நிலையில் இந்திய அரசின் அனுமதி மறுப்புப் பட்டியலிலிருந்து அன்னை பார்வதி அம்மாள் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழகத்திற்கு அவரை அழைத்து வரவேண்டும் எனவும் தமிழக அரசை வற்புறுத்துகிறோம்.”

இந்தியா தமிழருக்கு எதிரான செயல்களை தொடர்ந்தும் செய்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை நிரூபித்து காட்டியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: “தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் தாயர் இந்தியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளமைக்கு நாம்தமிழர் இயக்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நாம்தமிழர் இயக்கத்தின் தலைவரும் தமிழ் உணர்வாளரும் இயக்குனருமான செந்தமிழ் சீமான் தனது கண்டனத்தினை வெளியிட்டுள்ளார். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் தனது உடல்நலம் குன்றியதால் சிகிச்சை பெறுவதற்காக முறைப்படி அனுமதி பெற்று இந்தியாவிற்கு வந்தவரை கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல் மத்திய மாநில அரசுகள் திருப்பி அனுப்பியுள்ளமை மனிதாபிமானம் அற்றசெயல் மட்டுமல்ல சட்டவிரோதசெயல் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இந்தியமண்ணிற்கு தொடர்பில்லாத இத்தாலியர் தொடங்கி மாறுபாடி குஜராத்தி மலையாளி தெலுங்காளி வரையில் அனைவரும் உல்லாசமாக வாழவும் அதிகாரத்திலும் இருக்கையில் எங்கள் அன்னையின் உடல்நலத்திற்கு சிகிச்சை பெற இந்தமண்ணில் அனுமதி மறுக்கப்படுகின்றது என்பது வெட்கக்கேடான விடயம் என்றும் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் சிகிச்சை அளிக்கமுடியாது ஆனால் பாக்கிஸ்தான் நாட்டு சிறுவனுக்கு சிகிச்சைபெற இந்தியா உதவி உலகத்திற்கு படம் எடுத்துக் காட்டியவர்கள் இதில் இரட்டைவேடம் போடுகின்றார்கள். உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் எங்கள் தேசியத்தலைவர் அவர்களின் தாயாரை மனிதாபிமானம் அற்று திருப்பி அனுப்பியதன் மூலம் இந்திய மாநில அரசுகள் தமிழர்களுக்கு எதிரான தங்கள் செயல்களை தொடர்ந்து செய்துகொண்டு இருக்கின்றதை வெளிக்காட்டி நிற்கின்றது.”

தேசியத் தலைவர் பிரபாகரனை தமது முடிசு10டா மன்னனாக போற்றிய பல தமிழ் நாட்டுத் தலைவர்கள் இன்று பல மாறு பட்ட கருத்துக்களை பல வடிவங்களில் கூறுகின்றார்கள். குறிப்பாக வீரமணி அவர்கள் இன்று ஜெயலலிதா மீது பழியைப் போட்டுவிட்டு தப்பிக்க முனைகின்றார். இவர் பல காலகட்டங்களில் ஜெயலலிதாவுடன் செயலாற்றியவர். இன்று கருணாநிதியுடன் செயலாற்றிக்கொண்டிருக்கின்றார். ஆக இப்படியான தமிழ் நாட்டுத் தமிழர்களினால் தான் இன்று ஈழப் போராட்டம் இந்த நிலையை அடைந்திருக்கின்றது என்றால் மிகையாகாது.

புது டெல்லியில் இருந்து பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் அத்வானி இந்திய நாடாளுமன்றத்தில் பார்வதி அம்மாளின் நிகழ்வை வன்மையாக கண்டித்து பேசியுள்ளார். இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானில் இருந்து வரும் பயங்கரவாதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவில் சிவப்பு கம்பள மரியாதை அளித்து அவர்களுக்கு அத்தனை வசதிகளையும் ஏற்படுத்தும் நடுவண் அரசுஇ பாவம் ஒன்றும் அறியா பிரபாகரனின் தாயார் மட்டும் நாட்டுக்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இது மனிதாபிமானத்திற்கு விழுந்த பலத்த அடியாகத் தான் பார்க்கவேண்டும் என்று கூறியதன் மூலம் அத்வானி போன்ற வட இந்தியத் தலைவர்கள் தமிழ் நாட்டுத் தலைவர்களிலும் விட பரவாயில்லை போலும். நிச்சயம் பார்வதி அம்மாளை நாட்டுக்குள் விடாமல் செய்ததன் மூலம் இந்தியா மீண்டும் பெரும் தவறை இழைத்துவிட்டது. மனிதாபிமானம் பேசிய புத்தர் காந்தி நேரு என்று பல தலைசிறந்த தலைவர்கள் பிறந்த இந்திய நாடு இன்று தலை குனிந்து வெட்கப்படும் நிகழ்வை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு குற்றமும் செய்யாத பார்வதி அம்மாளை நாட்டுக்குள் விடாமல் செய்ததன் மூலம் மீண்டும் ஈழத் தமிழரின் வெறுப்புக்குள்ளாகியுள்ளது இந்திய நடுவண் அரசு மற்றும் அதற்கு உறுதுணையாக இயங்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி. இந்தியாவின் ஈழத் தமிழர் விரோத போக்கு எல்லை கடந்து சென்று கொண்டிருக்கின்றது என்பதை பல கடந்த கால நிகழ்வுகள் மற்றும் இந்த சம்பவம் மூலம் நிரூபணமாக்கப்பட்டுவிட்டது.

அனலை நிதிஸ் ச. குமாரன்
[email protected]

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • vijayabhaskar says:

    It is a curse that we tamilian have Karunanidhi who claims to be the “leader” of tamils. He is just the leader of his family and is looking after the interest of SUN family. It is time that we tamil should address him as “Duroki Karunanidhi” or “DK” in short and not “MuKa”

    April 28, 2010 at 13:33

Your email address will not be published. Required fields are marked *

*