TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஊடக தர்மமும் உதயன் ஆசிரியர் வித்தியாதரனும்!

‘ஊடகங்கள் ஜனநாயகத்தின் மூன்றாவது கண்’ என்றே போற்றப்பட்டு வருகின்றது. நீதியின் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் நீதித் துறை, சட்டங்களை இயற்றும் நாடாளுமன்றம் என்ற ஜனநாயகத்தின் இரு கண்களுக்கும் அடுத்து ஊடகத் துறை நோக்கப்படுகின்றது.

எங்கே தவறு நேர்ந்தாலும், எங்கே மக்களுக்குப் பாதிப்புக்கள் நேர்ந்தாலும், எங்கே நீதி தவறினாலும் அவற்றையெல்லாம் தட்டிக் கேட்கவும், அந்தத் தகவல்களையெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்கவும், மக்களுக்கான நீதியைக் கோரவுமான ஊடகங்களின் தளங்கள் விரிந்தே செல்கின்றன.

இந்த ஊடக தர்மத்தை நிலைநாட்டும் கடமையில் இன்று வரை எண்ணற்ற ஊடகவியலாளர்கள் தமது உயிரையும் அர்ப்பணித்திருக்கிறார்கள். சிங்கள தேசத்தின் இனவாதத்திற் கெதிரான தமிழீழ மக்களின் நியாயங்களை உலகிற்கு எடுத்துச் சொல்லும் தார்மீகப் பணியில் தமிழ் ஊடகவியலாளர்கள் சிங்கள தேசத்தினால் வேட்டையாடப்பட்டார்கள்.

2004 முதல் 2009 வரையிலான காலப் பகுதியில் 31 தமிழ் ஊடகவியலாளர்கள் சிங்கள தேசத்தால் பலி கொள்ளப்பட்டுள்ளதாக ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தமிழ் ஊடகவியலாளர்களின் பங்கு மகத்தானது. சிங்கள தேசத்தின் அத்தனை ஊடக அடக்குமுறைக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் எத்தனையோ தமிழ் ஊடகவியலாளர்கள் தமது நியாயமான கருத்துக்களைத் துணிவோடு பதிவு செய்துள்ளார்கள்.

அதனால், அவர்களில் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். பலர் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டார்கள். பலர் நீண்ட சிறைவாசம் அனுபவித்தார்கள். ஆனாலும், இன்றுவரை நேர்மையான தமிழ் ஊடகவியலாளர்கள் நீதிக்காகப் போராடியே வருகின்றார்கள். அதற்காக, எதையும் இழக்கத் துணிந்தே வருகின்றார்கள் என்ற நம்பிக்கையை உதயன் – சுடரொளி நாழிதழ்களின் ஆசிரியர் திரு. வித்தியாதரன் ஏற்படுத்தியுள்ளார்.

சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பு யுத்தம் உதயன் – சுடரொளி ஊடகத்தையும் விட்டு வைக்கவில்லை. சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு அந்த ஊடகம் தனது 10 ஊழியர்களைப் பலி கொடுத்ததுடன், ஏராளமான அழிவுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இத்தனை இழப்புக்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாத இந்த ஊடகத்தின் பிரதம ஆசிரியர் திரு. வித்தியாதரன் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். உலக நாடுகளின் அழுத்தங்களால் அவர் விடுவிக்கப்பட்ட போதும் தொடர் அச்சுறுத்தல்களுக்கிடையேதான் தனது ஊடகப் பணியைத் தொடர்ந்து வருகின்றார்.

இந்நிலையில்தான், சிங்கள நாடாளுமன்றத் தேர்தல் வடிவில் அவரது ஊடகப் பணிக்கு ஆபத்து உருவாகியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கான ஆதரவுத் தளத்தை உருவாக்குவதற்கு உதயன் ஊடகத்தைப் பயன்படுத்தும் நோக்கத்தில் திரு. வித்தியாதரனை வேட்பாளராக்க முயன்றனர். இரு தடவைகள் அவரது வீட்டிற்குச் சென்ற மாவை சேனாதிராஜா உருக்கமான வேண்டுகோளை வைத்த போதும், ”10 ஊடகவியலாளர்களை களப்பலி கொடுத்து, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் ஊடகமாகத் தொடர்ந்து பணியாற்றும் உதயன் நாழிதழை ஒரு கட்சியின் பத்திரிகையாக மாற்றுவதற்கு நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்” என மறுத்துவிட்டார்.

புலம்பெயர் தமிழர்களின் அதிருப்தியையும், தமிழீழ மக்களது நம்பிக்கையீனத்தையும் மூடி மறைத்து, வெற்றி பெறுவதற்கு ஊடக ஆடை தேவைப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது அடுத்த அஸ்திரத்தை உதயன் – சுடரொளி நிர்வாகிமீது தொடுத்தது. திரு. வித்தியாதரன் அவர்களது மைத்துனரும், முற்று முழுதான வர்த்தகருமான திரு. சரவணபவன் கும்பிட்ட கைகளுடன் மறுப்பேதும் இன்றிக் களத்தில் இறங்கினார்.

இந்தச் செய்தி, திரு. வித்தியாதரன் அவர்களது காதுக்கு எட்டியதும், அவர் முக்கியமான தனது முடிவை எடுத்துவிட்டார். தான் கட்டிக் காத்த ஊடக தர்மம் நொருக்கப்பட்டு, உதயன் பத்திரிகை ஒரு கட்சிப் பத்திரிகையாக வீழ்ச்சி அடையும் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாத வித்தியாதரன் அந்த ஊடகத்துக்கான தனது அத்தனை பொறுப்புக்களிலுமிருந்து விலகிக் கொள்வதாக நிர்வாகத்திற்கு அறிவித்துவிட்டார்.

உதயன் நாழிதழின் நிhவாகியான திரு. சரவணபவன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகக் களம் இறங்கிய செய்தி வெளிவந்த போதே, தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்களது மனதில் வலியும் தோன்றியது. யாழ். குடாநாட்டின் முன்னணி ஊடகமாக வெளிவந்து கொண்டிருந்த உதயன் நாழிதழ் கட்சிப் பத்திரிகையாகக் கீழிறங்கிவிட்டால், யாழ். மக்கள் இருட்டினுள் தள்ளப்பட்டு விடுவார்களோ என்ற அச்சமும் கூடவே எழுந்தது.

ஆனாலும், ஒரு ஊடகவியலாளன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு திரு. வித்தியாதரன் அவர்கள் உதாரணமாகிவிட்டார். இதே காலப் பகுதியில், லங்காசிறி என்ற இணையத்தளம் இதே காரணத்தோடு தன்னைக் கட்சி இணையத்தளமாக மாற்றிக் கொண்டு தாழ்ந்து விட்டதையும் நாம் வேதனையுடன் நினைவு கூரவேண்டியவர்களாகவே உள்ளோம்.

தமிழ்த் தேசியம் என்ற மக்கள் பக்கத்தில் நின்று செயலாற்ற வேண்டிய ஊடகங்கள், தனி மனித விருப்புக்களுக்கும், ஆசைகளுக்குமாகத் தம்மைத் தரம் தாழ்த்திக் கொள்வது மன்னிக்க முடியாத தேசியத் துரோகமாகவே நோக்கப்படுகின்றது. இன்னொரு புறத்தில், தமக்கான வரலாற்றுக் கடமையிலிருந்து தப்பிக் கொள்வதற்காக ‘தமிழ் நாதம்’, ‘புதினம்’ ஆகிய தமிழ்த் தேசிய இணையத்தளத்தினை மூடிவிட்டு, தலைமறைவாகிய ஊடக உரிமையாளரையும் தமிழீழம் மன்னிக்காது என்பதையும் இதில் பதிவு செய்ய விரும்புகின்றோம்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் வரை, விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில், தமிழ்த் தேசியத்திற்காக வருமானத்திற்காகவேனும் மாய்ந்து மாய்ந்து எழுதிய பல ஊடகவியலாளர்களை, தமிழீழம் அவலங்களுக்குள் புதைந்துள்ள காலத்தில் கண்டு பிடிக்கவே முடியாது போய்விட்டது. பல ஊடகவியலாளர்கள் பயத்தினால் மௌனமாகிப் போக, சிலர் தமிழ்த் தேசியத்தைச் சிதைப்பதற்காக முழு மூச்சோடு செயற்பட்டு வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக முன்நின்று உழைத்த தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்கள் சிங்கள தேசத்தால் படுகொலை செய்யப்பட, அதையே காரணமாகக் கொண்டு புலம்பெயர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய சிதைவையே குறியாகக் கொண்டு கட்டுரைகளையும் வானொலி நிகழ்ச்சிகளையும் நடாத்தி வருகின்றனர்.

அண்மைக் காலமாக, சுவிஸ் நாட்டில் புலம் பெயர்ந்து வாழும் ஊடகவியலாளர் திரு. இரா. துரைரட்ணம் அவர்களது தமிழ்த் தேசிய கருத்துச் சிதைவு முயற்சிகள் ஊடகங்களின் விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றது. ஊடகவியலாளர் திரு. இரா. துரைரட்ணம் அவர்கள், புலம்பெயர் தேசத்தின் தமிழ்ச் செயற்பாட்டாளர்களை மிகக் கேவலமாக விமர்சிப்பதன் மூலம் தனது தமிழ்த் தேசியத் துரோகத்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.

முள்ளிவாய்க்காலின் பின்னர் எல்லாமே முடிந்து விட்டதாக எண்ணி, ஊடகவியலாளர்கள் சிலர் தப்புத் தாளங்கள் போட்டுவரும் அவலங்கள் நிரம்பிய இந்த நாட்களிலும், தமிழ்த் தேசியத்திற்காகவும், ஊடக தர்மத்திற்காகவும் தனது பதவியையும், வசதிகளையும், உறவுகளையும் இழக்கச் சித்தமான ஊடகவியலாளர் திரு. வித்தியாதரனைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

ஈழநாடு.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*