TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழரின் பேரம் பேசும் பலமான சக்தியாக புலம் பெயர் சமூகம்

தமிழரின் பேரம் பேசும் பலமான சக்தியாக புலம் பெயர் சமூகமே உருவெடுக்கவுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 144 ஆசனங்களையும், ஐ.தே.க 60 ஆசனங்களையும், ஜனநாயக தேசிய கூட்டமைப்பு 7 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 14 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு இலங்கை அரசுக்கு 6 ஆசனங்களே குறைவாக உள்ளது. இந்த ஆசனங்களை எதிர்த்தரப்பில் இருந்து பெறுவது அரசுக்கு அதிக சிரமமாக இருக்கப்போவதில்லை என்பது வெளிப்படையானது. அதற்கான அறிகுறிகள் கடந்த வியாழக்கிழமை ஏழாவது நாடாளுமன்றம் முதன் முதலாக கூடியபோதே தெரிய ஆரம்பித்துள்ளது.

கொழும்பு மற்றும் நுவெரெலியா ஆகிய மாவட்டங்களில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஐக்கிய தேசியக்கட்சியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தமது ஆதரவுகளை வழங்கப்போவதாக தெரிவித்துள்ளனர். தேசிய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஆகியோர் இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.

தேசியப் பட்டியல் ஆசனங்களை ஒதுக்கீடு செய்ததில் ஏற்பட்ட முறுகல்களே இந்த நிலைமைக்குக் காரணம். எனவே இவ்வாறான நிலையில் இலங்கை அரசுக்கு ஆறு ஆசனங்களை பெற்றுக்கொள்வதில் அதிக நெருக்கடிகள் இருக்கப்போவதில்லை. எனினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறப்போகும் அரசு அதன் மூலம் எதனை நிறைவேற்றப்போகின்றது? என்பதற்கான விடைகளை அனுமானிப்பது கடினமானதல்ல.

இலங்கையில் தற்போதுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பில் கடந்த 17ஆம் திகதி வழங்கிய நேர்காண ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால், இலங்கையில் நடைமுறையில் உள்ள அவசரகாலச்சட்டத்தை இலங்கையில் அமைந்துள்ள புதிய நாடாளுமன்றம் உடனடியாக நீக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

1971 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த சட்டமே இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பெருமளவான மனித உரிமை மீறல்களுக்கு காரணம் என அச்சபை மேலும் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாது ஐ.ம.சு.கூ. தற்போது பெற்றுக்கொண்டுள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதில் மேற்குலகம் தீவிரமாக குரல்கொடுத்து வருகின்றது.

மேற்குலகத்தின் இந்த கோரிக்கைகளுக்கு பின்னால் பூகோள அரசியல் நலன்சார்ந்த நடவடிக்கைகள் இருக்கும் போதும், அதனை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ளது என்றே கூறலாம். எனினும் மேற்குலகத்தை வெளியேற்றிய ஆசிய பிராந்திய வல்லரசுகள் இலங்கையில் அதிக அழுத்தங்களின் ஊடாக தமது ஆளுமைகளை அதிகரித்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தென்னிலங்கையை தனது முழுமையான ஆளுமையின் கீழ் கொண்டுவந்துள்ள சீனாவின் வடபகுதி நோக்கிய நகர்வை தடுப்பதற்கு இந்தியா கடுமையாக முயன்று வருகின்றது. யாழில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் இருந்து, இந்தியாவுக்கான நுழைவு அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் அலுவலகத்தை திறக்கும் வரையிலும் வடபகுதியில் இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கை அரசு விரும்பியோ அல்லது விரும்பாமலோ அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஈழத்தமிழ் மக்களின் மனங்களை வெல்லாது நிலத்தை ஆக்கிரமிக்கும் இந்திய அரசின் முயற்சிகள் எவ்வளவு தூரத்திற்கு சாத்தியமானது என்பதை காலம் விரைவில் உணர்த்திவிடும்.

சிங்கள மக்களின் பெருமளவானோர் இந்தியாவின் தலையீடுகளை விரும்பப்போவதில்லை. இந்த நிலையில் தான் இந்திய அரசு திருமலையில் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த அனல் மின்நிலையத்தின் பணிகளும் நான்கு வருடங்கள் பின்போடப்பட்டுள்ளதாக இந்திய என்.ரி.பி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடிகளை காரணமாக இந்த நிறுவனம் முன்வைத்துள்ள போதும், உண்மையான காரணங்கள் வேறு என கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதாவது இத்திட்டத்துக்கான சில ஒப்பந்தங்கள் இன்னும் பூர்த்தியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் காலூன்றும் இந்திய அரசின் திட்டத்திற்கு விழுந்த முதல் அடியாக இது கொள்ளப்பட்டாலும், வடக்கிலும் வருங்காலத்தில் இவ்வாறான புறம்தள்ளும் முயற்சிகள் நடைபெறலாம் எனவும் கருதப்படுகின்றது.

அம்பாந்தோட்டைப் பகுதியில் சீனா இருக்கும் போது திருமலையில் இந்தியா காலூன்றுவதை சீனா விரும்பப்போவதில்லை. மேலும் புலம்பெயர் தமிழ் சமூகத்தை புறம்தள்ளிவிட்டு மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகள் நடைமுறைக்கு சாத்தியமா என்பதும் கேள்விக்குறியானது. எனினும் அதனை மேற்கொள்ளும் முயற்சிகள் தாயகத்தில் பலமாக மேற்கொள்ளப்படுகின்றன.

புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசியத்திற்கு சார்பான ஊடகங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளும் அரசியல் பிரதிநிதிகளுக்கு தமிழ் மக்கள் தரப்பின் ஊடாகவே அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது தொடர்பாக புலம்பெயர் தமிழ் சமூகம் தயாராகி வருகின்றது.

வளமான ஊடகத்துறை, பலமான அரசியல் கட்டமைப்பு என தெளிவான ஒரு கட்டத்தின் ஊடாக மீண்டும் பயணத்தை தொடரவேண்டும் என்ற உந்துதல்கள் புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் செறிந்துள்ளன. அதுவே தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் பேரம்பேசும் ஒரு பலமான சக்தியை தமிழ் மக்களுக்கு வழங்கப்போகின்றது என்பதை நாம் மறுக்க முடியாது.

வேல்ஸிலிருந்து அருஷ்

நன்றி: வீரகேசரி.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles, Featured

Your email address will not be published. Required fields are marked *

*