TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தாயக தமிழ்க்கட்சிகளின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

பாடங்களை ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய கட்டாயம் நாளுக்கு நாள் நிகழ்ந்தேறி வருகின்றது. இதற்கு யாரும் விதிவிலக்காக முடியாது என்பதைக் காலம் உணர்த்தி வருகின்றது. சிறீலங்காவின் அரசியல் பீடத்தில் ஒவ்வொரு முக்கிய முகங்களும் பிரகாசித்து அதே வேகத்தில் மங்கிப் போகின்ற வரலாறுகள் அண்மைய காலமாக அரங்கேறியே வருகின்றன.

நாட்டின் கதாநாயகனாகக் கொள்ளப்பட்ட சரத் பொன்சேகா இன்று எத்தனை கம்பிகள் என எண்ணியே சோர்ந்திருக்கின்றார். அதன் தொடராக ஒரு காலத்தில் இலங்கையை நடுங்கவைத்த ஜே.வி.பி இன்று முகவரியற்று சிதைக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல கொழும்புத் தமிழ் மக்களின் நாயகன் எனச் சொல்லுமளவிற்கு விளங்கிவந்த மனோகணேசன் தனது தொகுதியை தனது சகோதரனுக்குக் கொடுத்துவிட்டு மற்றொரு தொகுதியையும் கைப்பற்ற எண்ணி தோற்றுப் போக இறுதியில் ரணிலும் கழற்றிவிட்ட பரிதாபமும் அரங்கேறியது.

சரி இவைதான் போகட்டும் தமிழனத்தினை உலகின் உயர்வில் இருந்து படுபாதாளத்திற்குக் கொண்டு சென்ற பெருமைக்குரிய முரளிதரன் எனப்படுகின்ற கருணா, மற்றும் டக்ளஸ் ஆகியோரின் கதையும் சோகம் நிறைந்தாய்த்தான் மாறியிருக்கின்றது. காரணம் கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறியதன் பின்னர் சிங்கள அரசுகளுடன் கைகோர்த்த போது அன்றே எதிர்வு கூறப்பட்டிருந்தது. காலப்போக்கில் இவர் அரசால் கைகழுவப்படுவார் என்று. அதே போல விடுதலைப் புலிகள் பலமிழந்தால் டக்ளஸ் உட்பட்ட அரசின் சார்பு நிலை எடுத்த அனைத்து தமிழ் அரசியல் சக்திகளும் நிர்க்கதியற்ற நிலைக்குத் தள்ளப்படுவர் என எதிர்வுகூறப்பட்டிருந்தது.

அதனையே புதிய அமைச்சரவை நியமனங்கள் நிரூபித்துள்ளன. கிழக்கு மாகாணத்தை தனி நிர்வாக அலகாகக் கொண்டு அதிகாரம் கேட்ட கருணா அவருடன் கூட இருந்த பிள்ளையானாலேயே வாரிவீழ்த்தப்பட்டு மகிந்தவின் தயவில் தேசிய நல்லிணக்க சேவைகள் அமைச்சர் என்ற ஒரு பெறுமதியற்ற அமைச்சினைப் பெற்றுக் கொண்டு காலம் கடத்தினார். ஆனால் தற்போது மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் என்ற நிலைக்கு கீழ் இறக்கப்பட்ட அவரின் எதிர்கால அரசியல் வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகவே இருக்கப்போகின்றது என்பது வெளிப்படையானது.

இதேவேளை தமிழ் மக்களின் காவலனாக அரசுடன் சேர்ந்திருந்தே தீர்வினைப் பெற்றுத்தரப் போகின்றேன் என முழங்கிவருகின்ற டக்ளஸ் தேவானந்தாவிற்கு மரபுரீதியான தொழில் அபிவிருத்தி மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி என்கின்ற அமைச்சே வழங்கப்பட்டுள்ளது. மறவன்புலவுப் பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் பரப்புரையின் போது மக்களைச் சந்தித்த டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்ட பகுதி மக்களிடம் போதிய வரவேற்பு இன்மையை உணர்ந்து அவர் தெரிவித்த கருத்தே அவருக்கு வினையானதாக சொல்லப்படுகிறது.

அவர் சொன்னது “நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் பொன்சேகாவிற்கே வாக்களியுங்கள்” பொன்சேகா வெற்றிபெற்றதும். நாங்கள் அவருடன் இணைந்து உங்கள் அபிவிருத்திக்காக உழைப்போம்” என்றிருக்கின்றார். இது மகிந்தவிற்கு தெரியவர மகிந்த டக்ளசுக்கு பகிரங்க ஒன்று கூடல் ஒன்றில் வைத்து வசைமாரி பொழிந்ததாக கூறப்படுகின்றது. இதன் தொடராகத்தான் டக்ளஸ் ராஜநாமா செய்யப் போவதாக நாடகமாடி கடையடைப்பை வலியுறுத்த அதனை நேரடியாக மகிந்தவின் பிரதிநிதியே தடுத்து நிறுத்தியதாக யாழ்ப்பாணத்தில் கதைகள் உலாவியமை நினைவிருக்கலாம்.

இதன் தொடராய் டக்ளஸின் கோட்டையிலேயே மகிந்தவின் செல்லப்பிள்ளை அங்கஜன் களம் இறக்கப்பட்டு டக்ளசுக்கு எதிராக மட்டுமே தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் காங்கிரசும் மோதிக்கொண்டிருக்க அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஈபிடிபி மூன்று ஆசனங்களை யாழ்ப்பாண மாவட்டத்தில் தட்டிச் சென்றது. ஆனாலும் டக்ளசை ஒதுக்க வேண்டும் என்ற முனைப்பில் மகிந்த செயற்படுவதன் முடிவாகவே அவருக்கு பெறுமதியற்ற அமைச்சு ஒன்று வழங்கப்பட்டிருக்கின்ற அதேவேளை வடமாகாண ஆளுநராக அங்கஜன் ராமநாதன் தெரிவாகவுள்ளதான தகவலும் வெளியாகியிருக்கின்றது.

யாழ்.மாநகர சபை முதல்வர் டக்ளசின் அதி விசுவாசியான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா நேரடியாகவே அங்கஜனைத் தூற்றி பரப்புரை செய்திருந்த நிலையில் அங்கஜன் ஆளுநரால் என்ன நடக்கும் என்ற செய்தி காலப்போக்கில் ஊடகங்களை ஆக்கிரமிக்கும் என்பது மட்டும் வெளிப்படை.

இந்த நிலையில் தம்முடன் நின்ற அல்லது தாம் நினைத்ததை எல்லாம் சிரம்மேற்கொண்டு ஒப்பேற்றிய தமிழ் பிரதிநிதிகளாகச் சொல்லிக்கொள்வோரின் பற்களைப் பிடுங்கும் நடவடிக்கையினை மகிந்த மேற்கொண்டு வருகின்றமையை இயல்பாகப் புரிந்துகொள்ளலாம்.

இந்த இடத்தில் அடுத்த ஒரு பாய்ச்சலை மகிந்த மேற்கொள்கின்றார் என்ற பேச்சு அரசியல் மட்டங்களில் உலாவருவதை அவதானிக்கலாம். வடமாகாண சபைத் தேர்தலை நோக்கிய முனைப்புக்கள் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே தலைகாட்டத் தொடங்கியிருந்தன. இதில் ஆர்வங்காட்ட பலரும் தயாராகிவிட்டிருக்கின்றனர். ஆனால் வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்விதான் தொக்கிநிற்கின்றது.

காரணம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை அவதானித்த மகிந்த அரசு மாகாண சபைத் தேர்தல் மூலம் வடமாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரகாசமான வெற்றியினைப் பெற்றுக் கொள்ளும் என்பதை இலகுவில் விளங்கிக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந் நிலையில் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தாமலேயே காலத்தை இழுத்தடிப்பது அல்லது மாவட்டங்களை மையப்படுத்தியதான அபிவிருத்திகளை மேற்கொள்ளுதல் என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு தனித் தனியான பிரதிநிதிகளைத் தேர்வு செய்தல் என்ற நிலையினை எடுத்தல் போன்றதான வழிமுறைகளை மகிந்த முன்னெடுக்க முனைவதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய மாவட்டங்களை மையப்படுத்தியதான நகர்வினை மேற்கொள்வது தொடர்பில் இந்தியாவிடம் மகிந்த ஆசி பெற்றிருப்பதான தகவல்களும் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் வட மாகாண சபைத் தேர்தல் என்ற அறிவிப்பும் வெளிவந்திருக்கின்றது. ஆனாலும் அது நடந்து முடிந்ததால் தான் உண்மை புலனாகும்.

எனவே தமிழ் பிரதிநித்துவம், அல்லது தமிழர்களின் முக்கியத்துவத்தினை சிதைக்கும் கைங்கரியத்தினை சிங்கள பேரினவாத அரசு முன்னெடுக்கத் தலைப்பட்டுள்ளது.

இவ்வாறான முனைப்பினை மேற்கொள்ளும் சிங்கள அரசு எமது மக்களுக்கு ஏதாவது ஒருபிடி தீர்வையேனும் தரும் என்கின்ற நப்பாசையைக் கைவிட்டு எங்கள் மக்களுக்கான உடனடியான அபிவிருத்திக்கான வளிகளை ஆய்ந்து அதற்கமைய முனைப்புக்களை மேற்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும்.

தமிழ் தேசியத்திற்காக தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர்கள் நாடாளுமன்றத்தின் மூலம் மட்டும் தான் தமிழ் மக்களுக்கு பணியாற்ற முடியும் என்றிராமல், மக்கள் பணியாற்ற முடிந்தவரையில் முன்வரவேண்டும். அவ்வாறான பணியாற்றலின் ஊடாக மக்கள் மத்தியிலான நம்பிக்கையை வளர்த்து அதன் பின்னர் எமது கருத்துச் செலுத்துதல்களை மேற்கொள்ளல் சாலச் சிறந்தது.

இதேபோன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஒரு பாரிய பொறுப்பு உள்ளதை அது மறந்துவிடக் கூடாது.

தமிழ் மக்களின் பெரும்பான்மை கட்சியாக மக்களால் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றம் அனுப்பப்பட்டுள்ள குறித்த கட்சி எமது மக்களின் உடனடியான வளர்ச்சிக்காக கூடுதல் அக்கறை எடுத்துச் செயற்படவேண்டும்.

எமது மக்களுக்கு உதவ புலம்பெயர் சமூகம் கூடுதல் ஆர்வம் கொண்டிருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் தாயகத்தில் ஒரு பொது அமைப்பு எமக்காக இல்லை. அவ்வாறான அமைப்பினை தொடக்குவதற்கு சிறீலங்கா அரசு தடையாக இருக்கும் என்று கூறினாலும் அதனைக் கடந்து மக்கள் பணியாற்றுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தும் முனைப்புக்களையும், சட்டநுணுக்கங்களையும் ஆய்ந்து மக்களுக்கான உதவிகளை துரிதப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட ஒவ்வொது மக்களதும் வேணவாவாகும்.

இராவணேசன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*