TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தேர்தலின் பின்னரான அரசியல் மாற்றங்கள்

ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பான நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பு ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

படுகொலைச் சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்காத 12 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரை நிகழ்த்தப்பட்ட ஊடகவியலாளர் மீதான படுகொலைகளை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் ஈராக் மீதான அமெரிக்க தலையீட்டின் பின்னர் அந்நாட்டில் 88 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இக்காலப் பகுதியில் இலங்கையில் 10 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டாலும் எவரும் தண்டிக்கப்படவில்லையென்பதை அழுத்திக் கூறுகிறது அவ்வறிக்கை. ஏனைய நாடுகளில் நடந்த படுகொலை குறித்து தொடர்ச்சியான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. இவை அனைத்தும் ஜனநாயக நாடுகளென்று மேற்குலகால் கணிக்கப்படுவதே பெரும் சோகமாகும்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, உரிமைகள் வழங்கப்படாவிட்டால் மக்களை அணி திரட்டி போராடுவேன் என எச்சரித்திருந்தார். கடந்த தேர்தலில் 50 சதவீத மக்கள் வாக்களிக்கச் செல்லாத நிலையில் மக்களை வீதியில் இறக்கிப் போராடுவேனென கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

வாக்களிப்பதற்கே வீதியில் இறங்காத மக்கள், போராட வருவார்களா என்பது சந்தேகமே. ஊடகவியலாளர்களுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதாக சர்ச்சை எழுகிறது. சிறையில் இருந்தவாறு தேர்தலில் வெற்றியடைந்து ஏழாவது நாடாளுமன்றத்தில் தனது கன்னி உரையை நிகழ்த்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மாற்றுக் கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமென உரிமைக் குரல் எழுப்பியுள்ளார்.

ஜனநாயக நாட்டில் தனி மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென ஜனநாயகக் குரல் எழுப்பும் பொன்சேகா, இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் எழுந்த பேரவலக் குரல்கள் குறித்து பேச மாட்டார். மே 18 இல் இன அழிப்பின் உச்சியைத் தொட்ட ஓராண்டு சோக தினம், உலகெங்கும் நினைவு கூரப்படவிருக்கிறது. அந்த துயரப்பட்ட மக்களின் வலியின் ஒரு பகுதியை பொன்சேகா இன்று உணர்வதுதான், வரலாறு மக்களுக்குச் சொல்லும் தெளிவான செய்தி.

இவரின் துணைவியார் அனோ மா பொன்சேகா வடிக்கும் கண்ணீரும் முள்ளிவாய்க்காலிலும் வன்னி முகாம்களிலும் மக்கள் சிந்திய செந்நீரும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டதன் வெளிப்பாடுகளே. மனோ கணேசன் மீது தொடர்ச்சியாக ஜனநாயகத்தின் பெயரால் பிரயோகிக்கப்பட்ட வன்முறைகள், மலையக மக்களை வீட்டிற்குள் முடக்கியது. தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் உரிமை பல வன்முறை வடிவங்களினூடாக மறுக்கப்படும் போது மக்கள் ஜனநாயகம் என்கிற சொல்லாடல் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

மக்களும் அவர்கள் சார்ந்த அரசியல் பிரதிநிதிகளும் ஜனநாயக அரசியலில் இருந்து அந்நியமாக்கப்படுவது தேர்தல்கள் மீது இருக்கும் சிறிதளவு நம்பிக்கையையும் இழக்கச் செய்து விடும். ஆனாலும் தேர்தல் காலத்திலும் அது முடிவடைந்த அடுத்த சில வாரங்களில் மட்டுமே, மக்கள் உரிமை, மனித உரிமை, பேச்சுரிமை குறித்து எல்லோரும் நிமிர்ந்து நின்று பேசுவார்கள். இத் திருவிழா முடிவடைந்து மந்திரி சபை, மாகாண சபை பற்றிய விவகாரங்கள் எழுந்தவுடன் மக்களின் சிந்தனையை தனி நபர் தெரிவு அரசியலிற்குள் இழுத்துச் சென்று விடுவார்கள் இந்த ஜனநாயகக் காவலர்கள்.

தேசியப் பட்டியலில் எவரைப் போடுவது என்பது குறித்தும் தமது அணிக்கு இன்னுமொரு பிரதிநிதித்துவம் தேவை என்றும் புதிய சர்ச்சைகளைக் கிளப்பி கூட்டணிக்குள் தமது உரிமை மறுக்கப்படுவதாக ஆளுங்கட்சிக்குள்ளே அதிகாரப் போராட்டம் நிகழும். மக்களால் நேரடியாக ஜனநாயக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படாத தேசியப் பட்டியல் பிரதிநிதிகளின் தேர்வு விவகாரம் முடிவடைந்த நிலையில் கட்சிகளை சீரமைக்கும் பணி ஆரம்பமாகிறது.

சஜித் பிரேமதாஸ போன்ற இளைஞர்களை உப தலைவராக்கி, நொந்து போயிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்தவின் மகன், நாமல் ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்தை கருத்தில் கொண்டே இத்தகைய மாற்று நகர்வுகளை ரணில் மேற்கொள்கின்றார். அதேவேளை அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற விமல் வீரவன்சவிற்கு, ஆட்சியதிகார மையத்தில் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறித்து அதிருப்தி ஏற்படுவது போல் தெரிகிறது.

தேசியப் பட்டியல் மோதல்கள், இந்த எச்சரிக்கையுணர்வின் வெளிப்பாடாகப் பார்க்கப்படலாம். தற்போது தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் பட்டியல் வருகிற ஜூன் மாதம் முன் வைக்கப்படவிருக்கும் வரவு செலவுத் திட்ட அறிக்கையின் பின், மாற்றப்படுவதற்கான வாய்ப்புண்டு. திறைசேரி பலவீனமாகவுள்ள நிலையில் கடனுதவி வழங்கும் நாடுகளின் பக்கம், அரசின் ஏக்கப் பார்வை திரும்பினாலும் பிராந்திய நலனை மையப்படுத்தியே அவ்வுதவிகள் கிட்டும்.

ஏற்கெனவே எழுதப்படாத அரசியலமைப்புச் சட்ட விதியாகவும் மாதச் சடங்காகவுமிருக்கும், அவசர காலச் சட்டத்தினை நீக்கும்படி அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. புதிய அரசியலமைப்பில் தீர்வுத் திட்டத்தை முன்வைக்குமாறு மிகவும் பணிவாகக் கேட்கிறது அமெரிக்கா. அநேகமாக உதவிகள் கிடைக்கப் பெறும்வரை, அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டு வருவதை இலங்கை அரசாங்கம் இழுத்தடிக்குமென்று நம்பலாம்.

அதேவேளை தீர்வு குறித்த அரசோடு பேசுவதற்குத் தயாரென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தும் அரசாங்கத் தரப்பிலிருந்து இன்றுவரை எதுவித பதிலுமில்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று, அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்திய பின்னரே கூட்டமைப்புடன் அரசாங்கம் பேசுமென ஊகிக்கப்படுகிறது.

ஆனாலும் மாகாணத்திற்கு சுயாட்சி கோருவது, பிரிந்து செல்வது போலாகுமென்பதால் அக்கோரிக்கையை தடை செய்யும் புதிய சரத்துகளையும் அரசியலமைப்பில் சேர்த்துக் கொள்ளுமென எதிர்பார்க்கலாம்.1983 இல் கொண்டு வரப்பட்ட 6 ஆவது திருத்தச்சட்டம், பிரிவினைக் கோரிக்கையை தடை செய்தது போன்று, சுயாட்சி கோருவது தேசத் துரோகம் என்கிற வகையில் புதிய சட்டமொன்று எழுதப்படலாம்.

அதேவேளை, புதிய அரசியலமைப்புச் சட்ட மாற்றத்தில் தற்போதுள்ள சில நிர்வாகப் பரவலாக்க அதிகாரங்களும் மாகாண சபை முறைமையிலிருந்து அகற்றப்படலாமென்று எதிர்வு கூறப்படுகிறது.

இதயச்சந்திரன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*