TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தேசியப்பட்டியல் ஆசனங்களால் உருவாகியுள்ள புதிய குழப்பம்

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற அங்கத்துவம் என்பது எப்போதுமே சர்ச்சைக்குரியதொன்றாகவே இருந்து வருகிறது. 1978ம் ஆண்டின் அரசியலமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 ஆக அதிகரித்தது. மாவட்ட ரீதியாக 196 உறுப்பினர்களும், தேசியப்பட்டியல் மூலம் 29 உறுப்பினர்களுமாக மொத்தம் 225பேர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று இந்த அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியாக- தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுபவர்கள் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்படுவர். எஞ்சிய 29 பேருடைய தெரிவும் தான் கட்சித் தலைமைகளால் தீர்மானிக்கப்படுபவை. தேர்தலில் பிரதிநிதித்துவ வாய்ப்பை இழந்த சிறுபான்மையினங்களின் பிரதிநிதிகள், சமூகத்தின் மதிப்பு மிக்க பிரஜைகள், சமூக சேவையாளர்கள், புத்திஜீவிகள் ஆகியோரை நாடாளுமன்றத்துக்குள் உள்வாங்கும் நோக்குடனேயே இந்தத் தேசியப் பட்டியல் ஆசனமுறை கொண்டு வரப்பட்டது.

ஆனால் இந்த அரசியலமைப்பின் கீழ் நடைபெற்ற எந்தவொரு தேர்தலின் போதுமே தேசியப்பட்டியலின் அடிப்படை நோக்கத்தை நிறைவேற்றுகின்ற வகையில் நியமனங்கள் செய்யப்படவில்லை என்பது தான் வேடிக்கை. போட்டியில் நின்றால் தோல்வியடைந்து விடுவோமோ என்று அச்சப்படும் அரசியல்வாதிகளும், தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளுமே அநேகமான சந்தர்ப்பங்களில் தேசியப் பட்டியலை நிரப்பியிருக்கிறார்கள்.

அண்மையில் கூட அமைச்சர் டியூ.குணசேகர தேசியப்பட்டியல் மூலம் புத்திஜீவிகள் நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். உண்மையில் புத்திஜீவிகள் மற்றும் துறைசார் வல்லுனர்களுக்கென்று உருவாக்கப்பட்ட இந்த தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக குரல் கொடுக்க வேண்டிய நிலை ஒன்று உருவாகியுள்ளது.

வழக்கத்தில் கட்சிகளுக்கு இடையில் தேசியப்பட்டியல் ஆசனத்தைப் பகிர்ந்து கொள்வதில் பிரச்சினைகள் வருவது வழக்கமே. இந்தமுறை அது கொஞ்சம் அதிகமாகவே வந்திருக்கிறது. இந்தப் பிரச்சினை தேசியப்பட்டியல் ஆசனத்தைப் பகிர்ந்து கொள்ளும் பிரதான கட்சிகளுக்கு இடையில் தான் தோன்றியிருக்கிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 17 ஆசனங்களும், ஐதேகவுக்கு 9 ஆசனங்களும் தேசியப்பட்டியலில் கிடைத்துள்ளன.

ஆயினும் இவற்றுக்கு யாரை நியமிப்பது என்ற இழுபறிகள், குழப்பங்கள் ஏற்படவே செய்துள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசியப்பட்டியல் உறுப்பினர் நியமனங்களின் போது கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி தமது சார்பில் ஆச்சல ஜாகொட மற்றும் முஸம்மிலை எம்.பியாக்க முனைந்தது. இதொகாவுக்கும், ஜாதிக ஹெல உறுமயவுக்கும் கூட தலா இரு ஆசனங்களை வழங்குவதாக உறுதிமொழி கொடுத்திருந்தது. ஆனால் தேசிய சுதந்தர முன்னணியில் முஸம்மிலுக்கு இடம் வழங்கப்படவில்லை. ஜாதிக ஹெல உறுமய சார்பிலும், இதொகா சார்பிலும் தலா ஒருவருக்கே தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் சபாநாயகர் லொக்குபண்டார, முஸம்மில், ஓமல்பே சோபித தேரர், பேராசிரியர் விஸ்வ வர்ணபால, அனுருத்த ரத்வத்த, எம்.எச் முகமட், லெஸ்லி தேவேந்திர, ஹரிஸ்சந்திர விஜேதுங்க, சரத் கொங்ககே, சண்முகநாதன் போன்றோருக்கு ஆளும்கட்சி தேசியப்பட்டியல் உறுப்பினராகும் வாய்ப்பை வழங்க மறுத்து விட்டது. ஆளும்கட்சியின் சார்பில் தேசியப்பட்டியல் மூலம் 5 புதுமுகங்கள் நாடாளுமன்றம் சென்றுள்ளனர்.

* பிரபல நடிகை மாலினி பொன்சேகா, பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, கமலா ரணதுங்க, சூரியப்பெரும, ஜனக பண்டார பிரியந்த ஆகியோரே அவர்கள். இவர்களில் சூரியப்பெரும ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் குடும்பத்துக்கு நெருக்கமானவர். ரஜீவ விஜேசிங்க சமாதான செயலகப் பணிப்பாளராக இருந்தவர்- போர் நடைபெற்ற காலங்களில் சர்வதேச அளவில் இலங்கை அரசின் பெயரைக் காப்பாற்றிக் கொள்வதில் முக்கிய பங்கு வகித்தவர். ஜனக பிரியந்த பண்டார சப்ரகமுவ ஆளுனராக இருந்தவர்- ராஜபக்ஸ குடும்பத்தின் உறவினர். கமலா ரணதுங்க சுதந்திரக் கட்சியின் பெண்கள் பிரிவுத் தலைவர்.

தேசியப்பட்டியல் உறுப்பினர் தெரிவில் ஐதேகவில் இருந்து கட்சி மாறிவந்தோருக்கும் சரி- அனுருத்த ரத்வத்த போன்றோருக்கும் சரி, அல்லது கூட்டணிக் கட்சிகளுக்கும் சரி-ஏற்கனவே உறுதியளித்தபடி இடம் கொடுப்பதற்கு தயாராக இல்லை என்பதை ஆளும்கட்சி வெளிப்படுத்தியுள்ளது.

லொக்கு பண்டாரவின் மகனும், அனுருத்த ரத்வத்தயின் மகனும் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்டதற்காக- தேசியப்பட்டியலில் அவர்கள் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் அவரது மகனும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர். இதனால் இந்தவாதம் பொய்யாகிப் போயுள்ளது.

கூட்டணிக் கட்சிகளின் இல்லாமலேயே நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதால் இறுக்கமான போக்கை மகிந்த ராஜபக்ஸ தேசியப்பட்டியல் ஒதுக்கீட்டில் கடைப்பிடித்துள்ளார் என்றே தெரிகிறது. இதொகா இந்தமுறை பெரிதும் பலவீனப்பட்டுப் போய் நிற்கிறது. அதற்கு பதுளையில் இந்தமுறை எந்த ஆசனமும் கிடைக்கவில்லை. கண்டியையும் பறிகொடுத்து விட்டது. கொழும்பிலும் எதுவும் கிடைக்கவில்லை.

நுவரெலியாவில் கிடைத்த 3 ஆசனங்களுடன் தேசியப்பட்டியல் ஆசனங்கள் 2 கிடைக்கும் என்று நம்பியிருந்தது. ஆளும்கட்சியின் தேசியப்பட்டியலில் இதொகாவி;ன் சார்பில் முத்துசிவலிங்கம், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் பெயர்கள் இருந்த போதும் முத்து சிவலிங்கம் மாத்திரமே எம்.பியாக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் இதொகாவின் பலம் 4ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஆளும்கட்சி மெல்ல மெல்ல கூட்டணிக் கட்சிகளைக் கழற்றிவிடத் தொடங்கியுள்ளதையே தேசியப்பட்டியல் ஆசனப்பங்கீட்டில் அது கடைப்படித்த அணுகுமுறையில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. அதேவேளை இதே சிக்கல் ஜதேகவுக்குள்ளேயும் இருக்கவே செய்கிறது.

ஐதேகவின் தேசியப்பட்டியல் உறுப்பினர் வாய்ப்பு முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் பேரன் ருக்மன் சேனநாயக்க, முன்னாள் அமைச்சர் கே.என்.சொக்ஸி, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் செல்லச்சாமி போன்றோருக்கு மறுக்கப்பட்டுள்ளது. ருக்மன் சேனநாயக்க அண்மைக்காலத்தில் ரணிலின் தலைமையுடன் முரண்பட்டு வந்தவர். இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் தேசியப்பட்டியல் ஆசன ஒதுக்கீட்டில் புறக்கணிக்கப்பட்டதால் ஐதேகவின் உபதலைவர் பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளார்.

சொக்ஸியும் ஐதேவில் சரியாக வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. அவரை ஒருகட்டத்தில்- ரவூப் ஹக்கீமுக்கு எம்.பி பதவி கொடுப்பதற்காக தேசியப்பட்டியல் ஆசனத்தை விட்டுக் கொடுக்குமாறு கேட்டபோது அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார்.

திலக் மாரப்பனவும் தீவிர அரசியலில் ஈடுபடும் ஒருவராக இருக்கவில்லை. தேர்தல் காலத்தில் கட்சி மாறிவந்த செல்லச்சாமிக்கு இடம்கொடுப்பதற்கம் ஐதேக மறுத்து விட்டது. ஆனாலும் ஐதேக சுவாமிநாதன், யோகராஜன் ஆகிய இரு தமிழருக்கும், ஹசன்அலி, சலீம் முகமட் ஆகிய இரு முஸ்லிம்களுக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

களுத்துறையில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் சலீம் முகமட்டுக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்கியுள்ள ஜதேக கண்டியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மனோ கணேசனுக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்க மறுத்துள்ளது. இது ஐதேகவுக்கும் மனோ கணேசனுக்கும் இடையிலான உறவில் முறிவை ஏற்படுத்தியுள்ளது. கண்டியில் தோல்வியடைந்ததால் தேசியப்பட்டியல் ஆசனம் ஒன்றை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார்.

அது தொடர்பான உடன்பாடு ஒன்றும் செய்து கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அதை ஐதேக தலைமை மதிக்கவில்லை என்பது மனோ கணேசனின் குற்றச்சாட்டு. ஜதேக தமக்குத் துரோகம் செய்துவிட்டதாகவும், இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் பொருமிக் கொண்டிருக்கிறார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரமும், மங்கள சமரவீரவும் கூட தமக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர். அவர்களின் கோரிக்கையையும் ஐதேக மறுத்துவிட்டது. இதனால் திகாம்பரம் தனித்தே இயங்கப் போவதாக அறிவித்துள்ளார். பிரதான கட்சிகளுக்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஆனங்களைப் பங்கு போடுவதில் குழப்பங்கள் இருக்கவே செய்தன. தேர்தல் வெற்றிக்காக அதிகளவான கட்சிகளை கூட்டணி வைத்துக் கொள்ளப் போய் வந்த பிரச்சினை தான் இது.

* தேசியப்பட்டியல் ஆசனங்கள் எதற்காக உருவாக்கப்பட்டன என்பதை அரசியல்கட்சிகள் மறந்து போய்விட்டன. இந்த நிலையானது தேசியப்பட்டியல் உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே சிதைத்து விட்டதென்றால் மிகையாகாது.

ஹரிகரன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*