TamilSpy

பொழுது போக்கு இணையம்…

“விலைமாதரைக் கொடுத்து” இனப் படுகொலையை மறைக்கும் சிங்கள

“விலைமாதரைக் கொடுத்து” இனப் படுகொலையை மறைக்கும் சிங்களம்: துணைபோகும் இந்தியம்….?.

இண்டர்நேஷனல் இ‌‌ந்திய‌ன் ஃபிலிம் அகாடமி விருதுகள் வழங்கு விழா வரும் யூன் மாதம் 3, 4, 5ஆம் தேதிகளில் கொழும்புவில் நடைபெறும் என்று கூறி, அதில் பங்கேற்குமாறு இந்திய திரைபடத் துறையினருக்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இண்டர்நேஷனல் இ‌ந்‌திய‌ன் ஃபிலிம் அகாடமி விருதுகள் (International Indian film Academy – IIFA Awards) விழா ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஏதாவது ஒரு நாட்டின் முக்கிய நகரில் மிக விமரிசையாக கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இந்திய திரைப்படங்களை உலக மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கோடு இந்த விழா நடத்தப்படுகிறது.

ஹாலிவுட்டின் அகாடமி (ஆஸ்கர்) விருது, கேன்ஸ் பட விழா ஆகியவற்றிற்குப் பிறகு உலக அளவில் பல கோடி மக்கள் ரசிக்கும் திரைப்பட விழா ஐஃபா விருது வழங்கு விழாவாகும். இந்த விழாவை தொலைக்காட்சி மூலம் 110 நாடுகளைச் சேர்ந்த 60 கோடி மக்கள் கண்டு ரசிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஐஃபா விருது விழாவை தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து ஜப்பான் வரை போட்டி போட்டிக்கொண்டு விண்ணப்பம் செய்யும் அளவிற்கு விளம்பர, வணிக முக்கியத்துவம் கொண்ட விழாவாகும்.

2000வது ஆண்டில் இங்கிலாந்து தலைநகர் லண்டனிலும், 2001இல் தென் ஆப்ரிக்காவின் சன் சிட்டியிலும், 2002இல் மலேசியாவிலும், 2003இல் தென் ஆப்ரிக்கத் தலைநகர் ஜோஹனஸ்பர்கிலும், 2004இல் சிங்கப்பூரிலும், 2005இல் ஆம்ஸ்டர்டாமிலும், 2006இல் துபாயிலும், 2007இல் இங்கிலாந்தின் யார்‌க்சயர் நகரிலும், 2008இல் பாங்காக்கிலும், 2009ஆம் ஆண்டு மக்காவிலும் ஐஃபா விருது விழா நடைபெற்றுள்ளது.

இந்த ஆண்டு இவ்விழா வரும் ஜூன் மாதம் 3, 4, 5ஆம் தேதிகளில் கொழும்புவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி வந்த நாளில் இருந்தே இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும், கொழும்புவில் இதை நடத்துவதற்கான பின்னணிக் குறித்தும் பல விவாதங்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

இந்த சர்ச்சைக்கு முக்கியக் காரணம், ஐஃபா விருது விழாவை நடத்த அயர்லாந்து அரசும், தென் கொரியாவும், ஜப்பானும், இங்கிலாந்தும் ஐஃபா அமைப்பை மிகவும் நெருக்கின. இதற்குக் காரணம் இந்த விழா நடைபெறும் நகரம், அந்த நாட்டு அரசிற்கு மிகப் பெரிய நிதிச் செலவு ஏதுமின்றி, ஐஃபா விழா நடப்பதாலேயே அந்த நகரை உலகின் பார்வைக்கு கொண்டு செல்கிறது. இது அந்த நாட்டிற்கு சுற்றுலா வருகையை அதிகரிக்கச் செய்யும். இரண்டாவதாக, இந்த விழாவில் பங்கேற்கவும், பார்க்கவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டிற்கு வருகின்றனர்.

சிங்கப்பூரில் ஐஃபா விழா நடக்கும்போது 30,000 சுற்றுலா பயணிகள் கூடுதலாக அந்நாட்டிற்கு வந்தனர். மூன்றாவதாக, இந்த விழாவின்போது ஏற்படும் வணிக ஒப்பந்தங்கள். பல மில்லியன் டாலர் மதிப்பிற்கு பல்வேறு வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. நான்காவதாக, விழா நிக்ழ்ச்சி தொலைக்காட்சியின் மூலம் 50 முதல் 60 கோடி பேர் வரை கண்டுகளிப்பதால் அந்நாட்டி‌ன் சுற்றுலா மையங்களையும், இயற்கை எழிலையும் காட்டி, அதன் மூலம் திரைப்படப் படபிடிப்புகளுக்கு வாய்ப்பை மேம்படுத்தலாம்.

இதுவே இவ்விழாவை தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என்று முன்னேறிய நாடுகள் கூட அலையும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா அதற்காக ஐஃபாவிற்கு ரூ.50 கோடி அளிப்பதாகக் கூட உறுதியளித்திருந்து என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான், சற்றும் எதிர்பாரா வண்ணம் இந்த விழாவை கொழும்புவில் நடத்த இவ்வாறு முடிவெடுக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்றும், அதற்கு என்ன பின்னணி என்றும் கேள்வி எழுந்தது.

இந்தியப் பின்னணி!

* பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி, ஈழத் தமிழ் மக்கள் மீது சிறிலங்க அரசு நடத்தி முடித்திட்ட இனப் படுகொலைப் போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் பல பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியான நாளில் இருந்து இன்று வரை சிறிலங்க அரசிற்கு உலகளாவிய அளவில் அரசியல், பொருளாதார ரீதியிலான நெருக்கடி அதிகரித்து வருகிறது.

தமிழர்களுக்கு எதிரான போரில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன, அது குறித்து விசாரணை நடத்தி, அதற்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த கோரிக்கையை சிறிலங்க அரசு தட்டிக்கழித்த காரணத்தினால், அந்நாட்டில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் பொருட்களுக்கு அளித்துவந்த இறக்குமதி வரிச் சலுகையை நிறுத்துவதென முடிவெடுத்து அறிவித்தது.

அயர்லாந்து தலைநகரில் கடந்த ஜனவரி மாதம் 14, 15, 16ஆம் தேதிகளில் நடந்த உலக மக்கள் நிரந்தரத் தீர்ப்பாயம், தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்க அரசு போர்க் குற்றம் செய்துள்ளது என்றும், வன்னி முகாமில் நடந்த மனித உரிமை மீறல்கள் மானுடத்திற்கு எதிரான குற்றங்களை மெய்‌ப்பிக்கின்றது என்றும் தீர்ப்பளித்தது மட்டுமின்றி, அந்நாட்டிற்கு எதிரான தமிழினப் படுகொலை குற்றச்சாற்று குறித்து மேலும் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

நா.வின் நிதிச் சீர்திருத்தக் குழுவின் தலைவராக உள்ளவரும், தனது வாழ்வில் காந்தியின் அகிம்சை கொள்கையை கடைபிடித்து வருவதற்காக விருது பெற்ற பிரான்சுவா ஹூடார்ட் தலைமையிலான நிரந்தரத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் ஊடகங்கள் பெரும் செய்தியாக்கியதன் காரணமாக, அதுவரை அசையாமல் இருந்த ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூன், போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசகர்களை நியமிக்க முடிவு செய்தார்.

தனது நாட்டு மக்களின் மீதே தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி இனப்படுகொலை நடத்திய சிறிலங்காவை உலக நாடுகள் தனிமைப்படுத்தி வரும் நிலையில்தான், அந்த நாட்டின் ‘பெருமை’யை கூட்ட, இந்திய அரசின் உந்துதலால் ஐஃபா விருது விழா கொழும்புவில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் சிறிலங்க அரசிற்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், இது முழுக்க முழுக்க இந்திய அரசின் ‘முயற்சி’யே என்றும் கூறப்படுகிறது.

பாலிவுட் துணை போகிறதா?

* சிறிலங்க அரசு நடத்தி முடித்த இனப் படுகொலைப் போருக்கு எல்லா விதத்திலும் துணை போனது இந்திய அரசு என்பது உலகளாவிய உண்மையாகிவிட்ட நிலையில், அதனை மறைப்பதற்கு இந்த விழாவை நடத்த இந்திய அரசின் திட்டத்திற்கு பாலிவுட் துணை போகிறதே என்பதுதான் தமிழகத்தில் எழுந்துள்ள அதிர்ச்சியலையாகும்.

‘இலங்கை ஒரு அமைதியான, அழகிய தீவு’ என்றும், அருமையான சுற்றுலா தலங்கள் நிறைந்த நாடு என்றும் கூறி, அந்நாட்டை உலக மக்களின் பார்வைக்கு கொண்டு சென்று அதன் மூலம் அங்கு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை மறைக்க நடக்கும் முயற்சியே இந்த விழா என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்திய அரசின் துணைகொண்டு தமிழினப் படுகொலை செய்து முடித்த சிறிலங்க அரசிற்கு, அதனை மறைக்க உதவவே ஐஃபா விருது வழங்கு விழாவை அங்கு தள்ளியுள்ளது டெல்லி அரசு. இல்லையென்றால் லண்டன், சியோல், டோக்கியோ ஆகிய நகரங்கள் தொங்கிக்கொண்டு பின்னால் வர, உலக நாடுகளின் சினத்திற்கு ஆளாகி நிற்கும் இலங்கையை ஐஃபா எதற்குத் தேர்ந்தெடுக்கிறது?

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இரண்டரை ஆண்டுகள் நடந்த அந்த இனப்படுகொலைப் போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பது உலக மக்கள் நிரந்தரத் தீர்ப்பாய விசாரணையில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை உலகின் பார்வைக்கு கொண்டுவரும் முயற்சி நடைபெற்றுவரும் சூழலில், இனப்படுகொலைக்கு காரணமான அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவின் விருந்தினராக தங்கிக்கொண்டு விழா அறிவிப்பை நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ளது ஏற்கத்தக்கதாக இல்லை.

இலங்கையில் தமிழினம் படுகொலை செய்யப்பட்டது அமிதாப் பச்சனுக்கோ அல்லது இந்தி திரைப்பட நட்சத்திரங்களுக்கோ தெரியாதா? சிறிலங்க கடற்படையினரால் 400க்கும் அதிகமான தமிழ்நாட்டின் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை மறைத்து அந்நாட்டோடு உறவு வைத்துக் கொள்ளத் துடிக்கும் இந்திய அரசின் மனிதாபிமற்ற நடவடிக்கைக்கு பாலிவுட் திரையுலகம் துணை போகலாமா?

தன்னை வரவேற்ற நடன மாதர்களின் புன்னகையை பாராட்டிய நடிகர் அமிதாப் பச்சன், “அவர்களின் புன்னகையில் சிறிலங்காவின் ஆளுமையும் தெரிகிறது” என்று பேசியதைக் கேட்டபோது, அந்தப் புன்னகையைக் காட்டி சிறிலங்க அரசு மறைக்க நினைக்கும் இனப்படுகொலைக்கு இவரும் துணை போகிறாரே என்றே வருந்தம் தோன்றுகிறது. தன்னை வரவேற்ற நடன மாதர்களின் புன்னகையை பாராட்டிய நடிகர் அமிதாப் பச்சன், “அவர்களின் புன்னகையில் சிறிலங்காவின் ஆளுமையும் தெரிகிறது” என்று பேசியதைக் கேட்டபோது, அந்தப் புன்னகையைக் காட்டி சிறிலங்க அரசு மறைக்க நினைக்கும் இனப்படுகொலைக்கு இவரும் துணை போகிறாரே என்றே வருந்தம் தோன்றுகிறது. சினிமா உலகம் வேறுபாடுகளைத் தாண்டி அனைவரையும் இணைக்கிறது என்று அமிதாப் பச்சன் பேசியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு இணைப்பு தமிழ், இந்தி திரையுலகங்களுக்கு இடையே இன்றுவரை நிலவுகிறது. தமிழ்நாட்டி‌ல் பல நட்சத்திரங்களும், தொழல்நுட்ப நெறிஞர்களும் பாலிவுட்டில் பணியாற்றுகின்றனர். ஆயினும் அவர்கள் மனதில் தமிழினப் படுகொலை ஆறாத இரணமாக நிலைத்துள்ளது என்பதை பாலிவுட் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கைத் தமிழினப் படுகொலையை கண்டித்துப் போராடியது தமிழ்த் திரைப்படவுலகம் என்பதை மறந்துவிட்டு பாலிவுட் கொழும்புவில் விழா நடத்துமானால் அது தமிழனையும், தமிழ்த் திரையுலகத்தை தனிமைப்படுத்துவதாக ஆகாதா?

உள்நாட்டுப் போரினால் அங்கு ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மூன்றரை இலட்சம் மக்கள் தங்கள் குடும்ப உறவுகளையும், வாழ்ந்த இடங்களையும் இழந்து சொந்த மண்ணிலேயே அனாதைகளாக‌த் திரிகின்றனர் என்பதை அறிந்துதான் அந்த விழாவை அங்கு நடத்த ஐஃபா முடிவெடுத்ததா? அல்லது எதையுமே அறியாத ஒரு கனவுலகில் அமிதாப்பும் பாலிவுட்டும் மிதக்கின்றனவா? புரியவில்லை.

தங்களுடைய தொப்புள் கொடி உறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைத்து தமிழ்நாட்டு மக்கள் இன்னமும் துயரத்தில்தான் உள்ளனர். சிறிலங்க கடற்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட தங்களின் மீனவர்களின் இழப்பு அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய இரணம் இன்னமும் ஆறவில்லை. அதற்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஏங்கித் தவிக்கிறது. இதனைப் புரியாத பாலிவுட், கொழும்புவில் விருது விழாவை நடத்தச் செல்லுமானால், அது இதுநாள் வரை போற்றப்படும் உறவிற்கு பாதமாகவே முடியும்.

தமிழகத்திலிருந்து கட்டுரையாளர் ஆதிரையன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*