TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மே 18 – போர்க் குற்றவியல் நாள்: தமிழீழ மக்கள் அவை

அன்பார்ந்த தமிழ் ௨றவுகளே‚

மே 18… சிங்கள தேசம் எங்கள் மக்கள் மீது நிகழ்த்திய கொடூர யுத்தத்தின் இறுதி நாள்… கொத்துக் குண்டுகளும், எங்கள் மக்கள் மீது கொடூர நச்சுக் குண்டுகளும் பரீட்சித்துப் பார்த்த நாள்… எங்கள் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரோடு புதைக்கப்பட்ட நாள்…

மே 18… எங்கள் நெஞ்சங்களை ரணமாக்கிய நாள்… பூக்களும், பிஞ்சுகளும், காய்களும், பழங்களுமாய் பூத்துக் குலுங்கிய எங்கள் தேசத்து ஆலம் விருட்சம் வேரோடு சாய்க்கப்பட்ட கரி நாள்… உயிர் காக்க, உடல் தெறிக்க ஓடிய எம் பாசத்திற்குரிய மக்கள் சிங்களம் வீசிய குண்டுகளுக்கு வீழ்ந்து கருகிய நாள்…

மே 18… மனிதமே வெட்கித் தலைகுனிய மானிட தர்மம் நிலை குலைய விடுதலை வேண்டிய தமிழர்கள் வீழ்ந்து சாய்ந்த நாள்… மிருகவதைச் சட்டம் போட்டு விலங்குகளுக்கும் காவலர்களாய் நின்ற, அகில உலகமும் வேடிக்கை பார்க்க, எமது மக்கள் சிங்களத்தால் வேட்டை ஆடப்பட்டு குருதி சிந்திய நாள்…

மே 18… நாகரீக உலகில், நமக்கு மட்டும் சுதந்திரம் மறுக்கப்பட்டது… வாழும் மனிதர்கள் போல் வாழ விரும்பிய ஈழத் தமிழர்கள் இழி நிலைக்குள் தள்ளப்பட்ட கொடூர நாள்… விடுதலை எமக்கு மீண்டும் மறுக்கப்பட்ட நாள்…

எங்கள் மக்கள்மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் நாளாக இந்த மே 18-ம் நாளை போர்க் குற்றவியல் நாளாகத் தமிழீழ மக்கள் அவை பிரகடனப்படுத்துகின்றது.எங்கள் தேசத்து மக்களின் சுதந்திர தாகத்தை முற்றாகத் துடைத்தெறிய… சிங்களம் திட்டமிட்டு நடாத்திய இனப் படுகொலையை நாம் மறந்துவிட முடியுமா…? முள்ளிவாய்க்காலில் எமது மக்களின் மூச்சு நிறுத்தப்பட்டதை உலகத் தமிழினம் மறந்துவிட முடியுமா…? மே 16 முதல் 18 வரை ஈழத் தமிழர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களை மனித குலம் மறந்துவிட முடியுமா…?

எனவே, இந்தக் கொடூர நாளை சிங்கள அரசின் அதி உச்ச “போர்க் குற்றவியல் நாள்” என்று ஈழத் தமிழர்கள் சார்பில் தமிழீழ மக்கள் அவையினர் பிரகடனப்படுத்துகின்றனர்.

1) சர்வதேசங்களினால் தடை செய்யப்பட்ட நச்சுக் குண்டுகளையும், எரிகுண்டுகளையும் பாவித்து பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தது,

2) பாதுகாப்பு வலையங்களாக அறிவித்து, மக்களை அங்கே வரவழைத்து, அவர்கள்மீது விமானக் குண்டுகளையும், எறி கணைகளையும் இரவு பகலாக வீசி இன அழிப்பு நடாத்தியது,

3) பாதுகாப்புத் தேடிப் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியிருந்த மக்களை ஈவிரக்கமில்லாமல் உயிரோடு மண்மூடிப் புதைத்தது,

4) காயப்பட்ட, அங்கவீனப்பட்ட மக்கள்மீதும், போராளிகள் மீதும் கனரக வாகனங்களை ஏற்றிக் கதறக் கதற நெரித்துக் கொன்றது,

5) வெள்ளைக் கொடியுடன் நிராயுதபாணிகளாக வருமாறு கூறி, அவ்வாறு வந்த போராளிகளை இரக்கமின்றிச் சுட்டுக் கொன்றது,

6) காயப்பட்டுக் களத்தில் வீழ்ந்த பெண் போராளிகள் மீது மிருகத் தனமாகப் பாலியல் கொடும் வதை புரிந்து, அவர்களைப் பலி கொண்டது,

என எண்ணற்ற போர்க் குற்றங்கள் புரிந்த கொடூரமிக்க சிங்கள அரசினை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை பெற்றுக் கொடுக்க நாம் அனைவரும் அணி திரள்வோம்.

நன்றி

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

இவ் வண்ணம்

சி. பிரதீபன்,

இணைப்பாளர்

அனைத்துலகச் செயலகம்

தமிழீழ மக்கள் அவை

[email protected]

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*