TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இந்திய அரசின் உண்மை முகம் ஒரு நாள் சர்வதேச அரங்கில்

இந்திய அரசின் உண்மை முகம் ஒரு நாள் சர்வதேச அரங்கில் வெளிச்சமாகும்.

உலகில் வேறெங்கும் இப்படி நடந்திருக்காது, வரலாற்றில் கூட படித்திருக்க மாட்டோம், அப்படிப்பட்ட ஒரு ஈவிரக்கமற்ற மனிதாபிமானப் படுகொலை இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள், சென்னையில் தங்கி மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகத்திடமிருந்து 6 மாத கால (மருத்துவ) விசா பெற்று விமானத்தில் சென்னை வந்துள்ளார். அவரை விமானத்திலிருந்தே இறங்க விடாமல், அதிலேயே அமர வைத்து, “உங்களுக்கு தவறாக விசா வழங்கப்பட்டுள்ளது, நாங்கள் உங்களை இந்தியாவிற்குள் அனுமதிக்க முடியாது” என்று ‘மிகுந்த கரிசண’த்துடன் கூறி, அவரை அதே விமானத்தில் மீண்டும் மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் குடியேற்றத் துறை அதிகாரிகள்!

இந்திய அரசிடமிருந்தோ அல்லது அதன் குடியேற்றத் துறை அதிகாரிகளிடமிருந்தோ மனிதாபிமானத்தை எதிர்பார்க்கும் அளவிற்கு நிச்சயமாகத் தமிழர்கள் முட்டாள்கல்ல. ஈழத் தமிழர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நீடித்த அமைத்தித் தீர்வு காண வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையில் அரசின் நிலையை விளக்கிவிட்டு, அந்தத் தமிழர்களை இனப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் ராஜபக்சவிற்கு ‘ரா’ முதல் ராடார் வரை இரகசியமாக அளித்து ‘இனப் படுகொலையை துரிதமாக நடத்தி முடி’ என்று ஊக்கப்படுத்திய அரசல்லவா இந்திய அரசு?

எனவே, 81 வயதான ஒரு மூதாட்டியை – அவர் 3 மணி நேரம் பயணம் செய்து களைப்புற்றிருந்த நிலையிலும் – அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அதே விமானத்தில் ஏற்றி திருப்பி அனுப்ப குடியேற்றத் துறை கூறிய காரணம் என்ன என்பதைப் படிக்கும்போதுதான் வாயால் சிரிக்க முடியவில்லை.

அந்தக் காரணத்தை ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக உண்மையை மட்டுமே செய்தியாக்கி வெளியிடும் பாரம்பரியமிக்க, தமிழக முதல்வர் கருணாநிதியினால் மிகவும் மதிக்கப்படும் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.

“கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி உரிய மருத்துவ விசாவுடன் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியதைக் கண்ட குடியேற்ற அதிகாரிகள் ஆச்சரியப்பட்டுள்ளனர்” என்று அச்செய்தியை கூறத் துவங்கியுள்ள அந்த ஆங்கில இதழ், “அதற்குக் காரணம்: அவருடைய (பார்வதியின்) பெயர் மத்திய அரசின் எச்சரிக்கை சுற்றறிக்கை பட்டியலில் இருந்துதான். இந்த பட்டியலில் உள்ள ஒருவருக்கு விசா வழங்கவேண்டுமெனில், விசா வழங்கும் அதிகாரி, உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, அவர்களுடைய ஒப்புதலைப் பெற்ற பிறகுதான் அவர் அல்லது அவளுக்கு விசா வழங்க வேண்டும். பார்வதியின் பெயர் இந்தப் பட்டியலில் இருந்தும் அவருக்கு மருத்துவ விசா வழங்கப்பட்டுள்ளது” என்று குடியேற்றத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக அச்செய்தி கூறுகிறது.

விசா அதிகாரிக்கு அந்தப் பட்டியலைப் பற்றி தெரியாதா?

இந்தப் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெற்றது எப்படி? அதையும் குடியேற்றத்துறை வட்டாரங்கள் அந்தப் பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளன.

பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையும், பார்வதியும் 2003ஆம் ஆண்டுவரை திருச்சி இருந்தார்கள். அதன் பிறகு அவர்கள் இலங்கைக்கு சென்றுவிட்டார்கள். அவர்கள் மீண்டும் இந்தியா திரும்ப அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு (ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது) மத்திய அரசுக்கு தெரிவித்துவிட்டது. அதன்படி, தடை செய்யப்பட்டோர் பட்டியலில் அவர்களை மத்திய அரசு சேர்த்துவிட்டது என்று அச்செய்தி கூறுகிறது.

நமது கேள்வி இதுதான்: யார் யாரெல்லாம் இந்தியா வரக்கூடாது என்கிற தடை பட்டியலில் பார்வதி அம்மாளின் பெயரும் இருக்கிறதென்றால், அந்தப் பட்டியலை ஒவ்வொரு நாட்டிலும் இயங்கிவரும் இந்திய அரசின் தூதரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டுமே? அந்தப் பட்டியலைக் கண்ட பிறகுதானே விசா வழங்கு அதிகாரி எந்த ஒரு நபருக்கும் விசா வழங்குவதா கூடாதா என்பதை முடிவு செய்யமுடியும்? அதுமட்டுமின்றி, விசா கோருபவரின் பெயர் பட்டியலில் இல்லாவிட்டாலும், அந்த நபர் குறித்து சந்தேகம் ஏற்பட்டால், உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு அது குறித்து ஆலோசனை பெற்றுதானே விசா அளிப்பு அதிகாரி செயல்படுகிறார்? இதுதானே நடைமுறையாக இருந்துவருகிறது? பிறகு பட்டியில் இடம்பெற்றவருக்கு எப்படி விசா வழங்கப்பட்டது?

பட்டியலில் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் நமது காதில் பூ சுற்றும் காரணமே தவிர வேறில்லை. அவர் இங்கே வருவதை விரும்பாத ‘அரசியல்’தான் இதற்குக் காரணமே தவிர, பட்டியலும் இல்லை, புடலங்காயும் இல்லை.

எந்த ஒரு காரணத்தையும் கூறாமல் அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்தபோது அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிக காலம் இருந்துவிட்டாய் என்பது அல்லது சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்கிற புருடா உட்பட ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நாடு கடத்துவது இந்தியாவின் குடியேற்றத்துறைக்குப் புதியதல்ல. முறையோடு உரிய விசா பெற்று வந்த பல ஈழத் தமிழர்களை இப்படி நாடுகடத்தியுள்ளது இந்திய குடியேற்றத்துறை. இப்போது நடந்துள்ளதன் பின்னணியில் அரசியல் உள்ளதோ என்பதைத்தான் சந்தேக்கிக்க வேண்டி உள்ளது.

காவல் துறைக்கு தெரிந்தது, முதல்வருக்கு தெரியாதா?

இன்றைக்கு தமிழக சட்டப் பேரவையில் இப்பிரச்சனையின் மீது கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் பேசிய பல உறுப்பினர்கள் – காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவைத் தலைவர் சுதர்சனம் தவிர- அனைவரும் பார்வதி அம்மாள் திரும்ப அனுப்பப்பட்டதைக் கண்டித்ததோடு மட்டுமின்றி, அவருக்கு மீண்டும் அழைப்பு விடுத்து வரச் செய்து மருத்துவ சிகிச்சைப் பெற அனுமதிக்க வேண்டும் என்று பேசியுள்ளனர்.

இந்த விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, “இரவு 12 மணிக்கு விமான நிலையத்திலே இப்படிப்பட்ட ஒரு தகராறு நடப்பதாக எனக்குச் செய்தி கிடைக்கிறது. நான் விமான நிலையத்திற்குத் தொடர்பு கொள்கிறேன், அந்த அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்று அடுத்த செய்தி எனக்குக் கிடைக்கிறது. ஆனால் அந்தச் செய்தி முறையாக உரிய வகையில் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. தமிழக அரசில் யாருக்கும் சொல்லப்படவில்லை. அதன் காரணமாக அவர்கள் திரும்ப அனுப்பப்பட்டுவிட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல, இந்தியாவில் சிகிச்சை பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் பார்வதி அம்மையார் சார்பாக கடிதப் போக்குவரத்து இருந்துள்ளது என்றும், ஆனால் அது மாநில அரசுக்குத் தெரியாது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

முதல்வர் கூறியதிலிருந்து ஒரு உண்மை புலனாகிறது. ஏதோ மத்திய உள்துறை அமைச்சகத்திற்குத் தெரியாமல், குடியேற்றத்துறை அறிந்திராத நிலையில் பார்வதி அம்மையார் மருத்துவ விசா பெற்றுக் கொண்டு வந்துவிடவில்லை, அவருக்கு மருத்துவ விசா வழங்க மத்திய அரசு சம்மதமளித்தப் பின்னரே விசா வழங்கப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகிறது.

ஆனால், பார்வதி அம்மாளை அழைத்துச் செல்ல மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலர் வைகோவும், பழ. நெடுமாறன் ஆகியோர் விமான நிலையத்திற்குச் சென்றபோது, அவர்கள் (விமானம் வருவதற்கு முன்னரே அங்கு சென்ற நிலையில்) பெருமளவிற்கு குவிக்கப்பட்டிருந்த தமிழக காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையத்தின் கட்டுப்பாடு மத்திய அரசின் தொழிலக பாதுகாப்புப் படையின் கீழ் உள்ளது, அங்கு செல்வதற்கு நாங்கள் அனுமதிச் சீட்டு பெற்றுள்ளோம், எங்களைத் தடுத்து நிறுத்த நீங்கள் யார்? என்று அவர்கள் இருவரும் கேள்வி எழுப்ப பெரும் விவாதம் நடந்துள்ளது (இதைத்தான் ‘ஒரு தகராறு நடப்பதாக’ முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்). பார்வதி அம்மாள் சென்னை வர இருப்பது தமிழக காவல் துறைக்குத் தெரிகிறது, ஆனால் காவல் துறையின் பொறுப்பை தன்னக்கத்தே வைத்துள்ள தமிழக முதல்வர் அதுகுறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று கூறி, அவருக்கே உரித்தான பாணியில் பழைய வரலாற்றை புரட்டிப்போட்டு அலசியுள்ளார். தமிழக முதல்வரைப் போலவே, குடியேற்றத் துறைக்கும் அவரது வருகை தெரியவில்லை. விமானத்தில் பார்வதி அம்மாளைப் பார்த்ததும் அவர்களுக்கும் ஆச்சரியம்! என்னே கதை விடல்?

81 வயதான பெண்மணி, பக்கவாதம் தாக்கி முடியாத நிலையில் சிகிச்சை பெற சென்னை வருகிறார். ஆனால் மனித உரிமை பிரகடனத்தையும், மானுட அணுகுமுறையையும் மருந்துக்கும் மதிக்காத மத்திய அரசும், எதுவானாலும் அதனை தனது ஆட்சிக்கு ஏற்படும் ஆபத்தாகவே பார்க்கும் மாநில முதல்வரும் இணைந்து அரங்கேற்றிய நாடகம்தான் இந்த நள்ளிரவு மனிதாபிமான படுகொலை.

மனிதாபிமானத்திற்கு எதிரான இந்திய அரசின் உண்மை முகம் ஒரு நாள் சர்வதேச அரங்கில் வெளிச்சமாகும். அன்றைக்கு அது துணை நின்ற இனப் படுகொலை, நடத்திவரும் பழங்குடியினப் படுகொலை, இப்படிப்பட்ட மனிதாபிமான படுகொலை ஆகிய அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும். அது இந்தியாவின் ஜனநாயக முகத்திரையை கிழிக்கும்.

தமிழகத்திலிருந்து ஆதிரையன் வெப்டூனியா

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles, Featured
  • mortin says:

    naangal avamaanatthil thudikkiroam,thamil ina yeluchi naal may 21 anru inippu thanthu thevadiyaa soniavayum neesan karunaanthiyaiyum nokadippoam

    April 25, 2010 at 18:11

Your email address will not be published. Required fields are marked *

*