TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழர்தாயகம் என்பது ஒன்றுதான்: அதனைப்பிரிக்க முடியாது

“தமிழர் தாயகம் என்பது ஒன்றுதான். அதனைப்பிரிக்க முடியாது”

– தமிழீழ தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாரகன் அவர்கள்

தமிழீழ தாயக பூமியைப் பல்வேறு கூறுகளாகத் துண்டாடி, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் முதன்மைத் தூணாக விளங்கும் தாயகக் கோட்பாட்டை சிதைப்பது சிங்கள – இந்திய அரசுகளின் நெடுங்கால நிகழ்ச்சித் திட்டமாகத் திகழ்கின்றது.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் ஆயுதவடிவத்தை எடுக்கத் தொடங்கியதில் இருந்து காலத்திற்குக் காலம் இதற்கான காய்நகர்த்தல்களில் சிங்கள -இந்திய அரசுகள் ஈடுபடுகின்ற பொழுதும், இவற்றைத் தடுத்து நிறுத்தித் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை சரியான பாதையில் இட்டுச்செல்லும் சக்தியாக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணங்களும், தீர்க்கதரினமான முடிவுகளும் அமைவதை வரலாறு அடிக்கடி நினைவூட்டிக் கொள்கின்றது.

மிகப்பெரும் அரசியல் – வாழ்வியல் நெருக்கடியை இன்று எமது தமிழீழ தாயக உறவுகள் எதிர்நோக்கியிருக்கும் நிலையில், இவற்றைப் புறந்தள்ளிவிட்டு தமிழீழ தாயகத்தை இருகூறுகளாக துண்டாடும் நிகழ்ச்சித் திட்டத்தை வி.உருத்திரகுமாரன் அவர்களின் தலைமையிலான நாடுகடந்த அரசமைப்புக் குழு நடைமுறைப்படுத்த முற்படுவது புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே பல்வேறு கேள்விகளையும்,சஞ்சலங்களையும் தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக ஈழத்தீவில் தமிழீழ தனியரசை நிறுவும் உரிமை தமிழர்களுக்கு இருப்பது போன்று, தமிழீழத்தில் இருந்து பிரிந்து சென்று முஸ்லிம் அரசை நிறுவும் உரிமை முஸ்லிம் மக்களுக்கு இருப்பதாக அண்மையில் நாடுகடந்த அரசமைப்புக் குழுவினர் விடுத்துள்ள அறிக்கையான, அனைத்துத் தமிழீழ மக்களும் (இஸ்லாமிய ஈழத்தமிழர்கள் உட்பட) மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியை அவசியத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றது.

தமிழீழ தாயகம் என்பது இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களையும் தழுவிநிற்கும் தமிழ் மக்களுக்கு உரித்தான வரலாற்றுத் தாயகமாகும். மத ரீதியாகப் பார்க்கும் பொழுதும் மூன்று மதங்களும் தமக்கேயுரித்தான தனித்துவமான வழிபாட்டு முறைகளையும், வழக்குகளையும், வாழ்வுமுறைமைகளையும் கொண்டுள்ள பொழுதும், மொழியாலும், வரலாற்றுத் தாயகத்தாலும் ஒன்றுபட்ட தேசிய இனமாக ஈழத்தமிழர்கள் அனைவரும் திகழ்வதை எவரும் மறுக்க முடியாது. மறுதலிக்கவும் முடியாது.

தமிழீழ தேசிய விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம்செய்த வீரமறவர்களில் பல இஸ்லாமிய சகோதரர்கள் இருப்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். இவர்களின் வாழ்வும், வீரமரணமும் தமிழீழம் என்ற ஒரேயொரு உன்னத இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டமைந்திருந்ததை நாம் மறந்துவிட முடியாது. இறுதியாக வன்னி மண்ணில் நிகழ்ந்தேறிய யுத்தத்தில் லெப்.கேணல் தரத்தை சேர்ந்த முஸ்லிம் வீரமறவன் ஒருவர்கூட தமிழீழ தாயக விடுதலைக்காகத் தனது இன்னுயிரை ஈகம்செய்திருந்தார்.

இவ்வாறான பின்புலத்தில், தமிழீழ தாயகத்தை மதரீதியாகக் கூறுபோட்டு, எமது இஸ்லாமிய சகோதரர்களை எம்மிடமிருந்து அந்நியப்படுத்தும் திட்டமொன்றை நாடுகடந்த அரசமைப்புக் குழுவினர் முன்வைப்பதன் அர்த்தபரிமாணத்தை, சிங்கள – இந்திய அரசுகளின் கடந்தகால நடவடிக்கைகளை ஆராய்வதன் ஊடாக நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறான சூழ்ச்சித் திட்டங்களை எவ்வாறு தமிழீழதேசியத் தலைவர் அவர்கள் முறியடித்தார் என்பதை அறிந்து கொள்வது, நாடுகடந்த அரசமைப்புக் குழுவின் சூழ்ச்சியை முறியடிப்பதற்குப் போதுமானதாக அமையும்.

காலம்: நவம்பர் 1986. தமிழகத்தைத் தமது தளமாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கிய அந்தக் காலப்பகுதியில், தமிழீழ தாயகத்தை மதரீதியாகத் துண்டாடும் தீர்வு யோசனை ஒன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழீழத்தில் முஸ்லிம் பிராந்தியங்கள் இருப்பதாகவும், தமிழீழத்தில் இருந்து பிரிந்து சென்று தனியரசை அமைக்கும் உரிமையை முஸ்லிம்கள் கொண்டிருப்பதாகவும் தற்போது நாடுகடந்த அரசமைப்புக் குழுவினர் வியாக்கியானம் செய்வதற்கு ஒப்பான தீர்வுத் திட்டம் ஒன்றே அது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் இந்த யோசனையை அங்கீகரித்த இந்திய அரசு, தமிழீழ தேசியத் தலைவர் அவர்களை அதனை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்க முற்பட்டது. ஆனால் அதனை அடியோடு ஏற்க மறுத்த தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள், தனது தீர்க்கதரிசமான எண்ணத்தாலும், முடிவாலும் சிங்கள – இந்திய சூழ்ச்சியை முறியடித்தார்.

அதுபற்றி போரும் சமாதானமும் நூலில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் குறிப்பிடுகையில்:

‘‘1986 நவம்பர் மாதம் 17, 18ஆம் நாட்களில் பங்களுரில் சார்க் உச்சி மாநாடு நடைபெறவிருந்தது. இந்த மாநாட்டில் தமிழரின் இனப் பிரச்சினைக்குத் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு ஜெயவர்த்தனா நிர்ப்பந்திக்கப்பட்டார். இதன்படி, கிழக்கு மாகாணத்தை மூன்று கூறுகளாகப் பிரிக்கும் திட்டம் ஒன்றை அவர் தயாரித்தார். வடகிழக்கைத் தனி மாநிலமாகக் கொண்ட தமிழர் தாயகக் கோரிக்கைக்கு சாவுமணி அடிக்கும் நோக்குடன், இனத்துவ, மத வேறுபாட்டின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தை மூன்று கூறுகளாகப் பிரிக்கும் இந்த நாசகாரத் திட்டத்தை ஜெயவர்த்தனாவின் ஆட்சிபீடம் மிகவும் சூழ்ச்சித் திறனுடன் தயாரித்திருந்தது.

இத் திட்டத்தின்படி, தமிழர்கள், சிங்களவர், முஸ்லிம்கள் என்ற மூன்று இனத்தவர்களுக்குமாக, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் எல்லைகள் மூன்று பிரதேசக் கூறுகளாக மாற்றியமைக்கப்படவிருந்தன. இத் திட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்கள் வாழும் பகுதிகள் கிழக்கிலிருந்து துண்டாடப்பட்டு ஊவா மாகாணத்துடன் இணைக்கப்படும். திருகோணமலை நகரமும், துறைமுகமும், திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்கள் வாழும் பகுதிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு சிங்கள மாநிலமாக மாற்றப்படும்.

இச் சிங்கள மாநிலம் சிங்கள அரச நிர்வாகத்தின் கீழ்ச் செயற்படும். மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளும், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளும் இணைந்ததாக முஸ்லிம் பிரதேசம் உருவாக்கப்படும். திருகோணமலையில் தமிழர்கள் வாழும் பகுதிகளும் (திருகோணமலை நகரம், துறைமுகம், சிங்களக் குடியிருப்புகள் தவிர்ந்த பகுதிகள்) மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளும் இணைந்ததாக தமிழர் மாகாணம் உருவாக்கப்படும்.

மிக நுட்பமாகத் தயாரிக்கப்பட்ட இந்த எல்லைவரையறைத் திட்டம் சிங்களவர்களுக்கே சாதகமாக அமையப் பெற்றது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலைத் துறைமுகமும், நகரமும் அடங்கியதாக கிழக்கில் பெரியளவு பிரதேசங்களைக் கொண்ட நிலப்பரப்பை சிங்களவருக்கு தாரைவார்த்துக் கொடுக்க இத் திட்டம் வழிசெய்தது. கிழக்கில் தமிழருக்காக ஒதுக்கப்பட்ட குறுகிய நிலப்பரப்பை வடக்கு மாநிலத்துடன் இணைத்து, தமிழரின் தாயகக் கோரிக்கையை நிறைவு செய்யலாம் எனவும் ஜெயவர்த்தனா சிந்தித்தார்.

மூன்று கூறுகளைக் கொண்ட தனது எல்லை வரையறைத் திட்டத்தின் விபரங்களை இந்தியத் தூதுவர் டிக்சிட்டுக்கு விளக்கிய ஜெயவர்த்தனா, கிழக்கு மாகாணத்தில் வதியும் முஸ்லிம்கள், சிங்களவரின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என இந்திய அமைச்சர்களான சிதம்பரமும் நட்வார் சிங்கும் ஆலோசனை கூறியதன் அடிப்படையிலேயே இப் ‘புதிய யோசனைகள்’ வகுக்கப்பட்டதாகக் கூறினார்

……ஈழத் தேசிய விடுதலை முன்னணியைப் பிளவுபடுத்தி, அம் முன்னணியில் அங்கம் வகித்த விடுதலை அமைப்புகளை ஒன்றோடு ஒன்று மோதவிட்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்த றோ புலனாய்வுத் துறையினர் தீட்டிய சதித் திட்டம் படுதோல்வியில் முடிந்தது. முன்பைவிடப் பல மடங்கு பலம்பெற்ற சக்தியாக புலிகள் இயக்கம் பூதாகர வளர்ச்சிபெற்றமை ரஜீவ் அரசுக்கு ஏமாற்றத்தையும்கடுப்பையும் ஏற்படுத்தியது.

அதுமட்டுமன்றி, இலங்கையின் இனப் பிரச்சினையில் விடுதலைப் புலிகளின் தலைமையை அனுசரித்துப் போகவேண்டிய கட்டாயமும் இந்திய அரசுக்கு ஏற்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு வித்தியாசமான ஆளுமையுடைய மனிதர். கொள்கையில் உருக்கை ஒத்த உறுதி உடையவர். நெருக்குவாரத்திற்கு நெகிழ்ந்து கொடுக்கமாட்டார். அதிகாரக்கெடுபிடிகளுக்கு அடிபணியமாட்டார். இப்படியான போக்குடைய ஒரு தலைவனை எப்படியாவது தனது வழிக்கு கொண்டுவரவேண்டும் என இந்திய அரசு கருதியது.

1986 நவம்பர் நடுப்பகுதியில் நிகழவிருக்கும் பங்களுர் பேச்சுகளுக்கு முன்னராக பிரபாகரனைப் படிமானப்படுத்த இந்திய அதிகார பீடம் எண்ணியது.

…..1986 நவம்பர் 8ஆம் நாள் அதிகாலை தமிழ்நாடு காவல்துறையின் அதிரடிப் படையினர் விடுதலைப் புலிகளதும் ஏனைய தமிழ் அமைப்புகளதும் இரகசியத் தங்குமிடங்கள், வீடுகள், முகாம்கள், பயிற்சிப் பாசறைகள் ஆகியவற்றைச் சூறையாடி ஆயுத தளபாடங்களைக் கைப்பற்றியதுடன், அமைப்புகளின் தலைவர்களையும் கைதுசெய்தனர்.

பிரபாகரனும் நானும் அன்றைய நாள் அதிகாலை எமது வீடுகளில் வைத்து கைது செய்யப்பட்டு வௌவேறு காவல் நிலையங்களுக்கு கொண்டு சொல்லப்பட்டோம். அங்கு பல மணிநேரம் தடுத்துவைக்கப்பட்டு குற்றவாளிகள் போல விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோம். எங்கள் இருவரையும் பல கோணத்தில் நிறுத்தி படம் எடுத்தார்கள். கைரேகையைப் பதிவு செய்தார்கள். பண்பற்ற வார்த்தைகளால்அவமானப்படுத்தினார்கள். இவை எல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்ட இம்சைபோலத் தோன்றியது.

இழிவுபடுத்தி, சிறுமைப்படுத்தி பணியவைக்கலாம் என்ற கபட நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந் நடவடிக்கையானது பிரபாகரனைப் பொறுத்தவரை எதிர்மாறான விளைவையே ஏற்படுத்தியது. பிரபாகரன் கொதிப்படைந்தார். ஒரு குற்றவாளிபோல இழிவுபடுத்தப்பட்டதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. தனது சுய-கௌரவத்திற்கு மட்டுமன்றி தமிழீழ சுதந்திர இயக்கத்திற்கு ஏற்பட்ட அவமதிப்பாகவும் அந்நிகழ்வை அவர் கருதினார். எந்த வகையிலும் இந்திய அழுத்தத்திற்கு நெகிழ்ந்து கொடுப்பதில்லை என உறுதிபூண்டார்.

….விடுதலைப் புலிகளின் தலைமையை மிரட்டிப் பணியவைத்து இந்திய சமரச முயற்சிக்கு விட்டுக்கொடுத்து இணங்க வைக்கும் தந்திரோபாயத்துடன் மத்திய, மாநில அரசுகளால் கூட்டாகத்திட்டமிடப்பட்ட சதியின் அடிப்படையிலேயே இப் ‘புலி நடவடிக்கை’ எடுக்கப்பட்டது என்பது எமக்கு நன்கு புலனாகியது.

ஒன்பது நாட்கள் எமது வீடுகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்பு, பிரபாகரனும் நானும் பேச்சுக்களுக்காக பங்களுர் அழைத்துச் செல்லப்பட்டபோதே இந்தியாவின் சூத்திரதார நோக்கு எமக்குப் புலப்பட்டது. 1986 நவம்பர் 17ஆம் நாள். சென்னை நகரப் புறத்திலுள்ள தாம்பரம் விமானத் தளத்திலிருந்து இந்திய வான்படை விமானம் மூலம் பிரபாகரனும் நானும் பங்களுர் கொண்டு செல்லப்பட்டோம்.

அங்கு ராஜ்பவன் விடுதியில் எம்மைத் தங்க வைத்தார்கள். அந்த விடுதிக்கு சென்றடைய இரவு 10 மணி ஆகிவிட்டது. ஒருபுறம் பசி வயிற்றைப் பிடுங்க, களைத்துச் சோர்ந்து போய் விடுதிக்கு சென்ற எம்முடன் இரவிரவாகப்பேச்சுக்களை நடத்தும் நோக்குடன் இந்திய அரச பிரதிநிதிகள் குழு ஒன்று அங்கு காத்து நின்றது. இந்திய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் திரு.நட்வார் சிங், இந்திய வெளியுறவுச் செயலர் திரு.வெங்கடேஸ்வரன், வெளியுறவு அமைச்சின் இணைச் செயலர் குல்திப் சதேவ், இலங்கைக்கான இந்திய தூதுவர் திரு.டிக்சிட் ஆகியோர் எமக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தை மூன்றுகூறுகளாகப் பிரிக்கும் ஜெயவர்த்தனாவின் எல்லை வரையறைத் திட்டத்தை உடனடியாகவே இந்திய பிரதிநிதிகள் எமக்கு எடுத்து விளக்கினார்கள்.

…..கிழக்கு மாகாணத்தின் விபரமான வரைபடம் ஒன்றை எமக்கு முன்பாக விரித்து, கிழக்கு மாகாணத்தை முக்கூறுபோடும் ஜெயவர்த்தனாவின் ‘புதிய திட்டம்’ பற்றி எமக்கு விபரமாக விளக்கிக் கொண்டிருந்தார் திரு.டிக்சிட். இத் திட்டமானது வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்களை இறுதியாக ஒன்றிணைக்க வழிவகுக்கும் என்று கூறிய அவர் இதுவொரு தற்காலிக ஒழுங்கு என்றும் இத் திட்டம் பற்றிதொடர்ந்தது பேச்சுக்களை நடத்தி முன்னேற்றம் காணலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நள்ளிரவு பூராகவும் ஜெயவர்த்தனாவின் திட்டத்தை அக்குவேறு ஆணிவேறாக விளங்கப்படுத்தி, எமது பொறுமையைக் கொலை செய்துவிட்டு, களைத்துப் போய்க் கடுப்புடனிருந்த பிரபாகரனைப் பார்த்து அத் திட்டம் பற்றி அவரது கருத்துக் கேட்டார் டிக்சிட். நான் எதிர்பார்த்ததுபோலவே வெடுக்கென்றுஇசுருக்கமாகப் பதிலளித்தார் பிரபாகரன். அவரது தொனியில் ஆத்திரம் தெறித்தது. ‘‘தமிழர் தாயகம் என்பது ஒன்றுதான். அதனைப் பிரிக்க முடியாது. ஜெயவர்த்தனா அதைப் பிரித்துக் கூறுபோட நாம் அனுமதிக்கப் போவதில்லை.” என்று உறுதிபடச் சொன்னார்.

பிரபாகரனின் அந்த வசனத்தை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறியபொழுது டிக்சிட்டின் முகம் சுருங்கியது. ஜெயவர்த்தனாவின் திட்டத்திலுள்ள குறைபாடுகளையும் ஆபத்துகளையும் நான் டிக்சிட்டுக்கு விளக்கிக் கூறினேன். விடுதலைப் புலிகளின் தலைமையோ அன்றித் தமிழீழ மக்களோ இத் திட்டத்தை ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதை தெட்டத் தெளிவாக அவரிடம் எடுத்துரைத்தேன்.

தனது நிலைப்பாட்டிலிருந்து பிரபாகரன் சிறிதளவும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்பதை நன்குணர்ந்த இந்திய தூதுவர் தனதுமுயற்சியைக் கைவிட்டு, வெளியுறவுச் செயலர் வெங்கடேஸ்வரனை எம்முடன் பேசுமாறு அழைத்தார்

….ஜெயவர்த்தனா அரசு முன்வைத்துள்ள திட்டம் தமிழ்மொழி வாரியான தாயகப் பிரதேசக் கோரிக்கையை ஒரு மட்டத்திற்கு நிறைவுசெய்ய முனைவதாகக் கூறிய வெங்கடேஸ்வரன், இதனை ஒரு இடைக்காலத் தீர்வாக நாம் கருதவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இந்த இடைக்காலத் தீர்வை நாம் ஏற்றுக் கொண்டால், ரஜீவ் காந்திக்கு அது பெரும் ராஜதந்திர சாதனையாக அமையும் என்றும் சொன்னார்.

இந்த சார்க் உச்சிமாநாடு இந்தியப் பிரதமருக்கு ஒரு வெற்றிகரமான அரங்காக மாறுவதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். முடிவில்இ நாம் எமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து ஆக்கபூர்வமான முடிவை எடுக்கும்படியும் வேண்டினார். பிரபாகரனால் சினத்தை அடக்க முடியவில்லை. அது சொற்களாகச் சீறியது. ‘‘ரஜீவ் காந்தியைத் திருப்திப்படுத்தி அவரது புகழை ஓங்கச் செய்வதற்காக எமது மக்களின் அரசியல் இலட்சியத்தை கைவிடச் சொல்கிறீர்களா?” பிரபாகரனின் சீற்றத்தால் வெங்கடேஸ்வரன் ஆடிப்போனார்.

எமது உணர்ச்சியை தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது எனச் சமாதானம் கூறிச் சமாளித்தார். அங்கிருந்து வெங்கடேஸ்வரன் நழுவிச் சென்றதை அடுத்து, நட்வர் சிங் எம்மை அணுகினார். அவர் பேச்சைத் தொடங்குவதற்கு முன்னரே நான் குறுக்கிட்டு, சிறீலங்கா அரசின் திட்டத்திலுள்ள குறைபாடுகளை எடுத்து விளக்கி, அந்த யோசனையை எமது இயக்கமும் எமது மக்களும் ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என உறுதிபடக் கூறினேன்.

”தமிழீழ தாயகத்தை மத ரீதியில் துண்டாடி, எமது முஸ்லிம் சகோதரர்களை அந்நியப்படுத்துவதற்கு ஏறத்தாள 24 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள – இந்திய அரசுகள் எடுத்த முயற்சியை தனது உறுதியான – தீர்க்கதரிசமான எண்ணங்களாலும், முடிவுகளாலும் தமிழீழ தேசியத் தலைவர் முறியடித்ததை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

முள்ளிவாய்க்காலில் வழிந்தோடிய தமிழ்க் குருதி காய்வதற்குள் தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து, மாற்று அரசியல் பாதையில் தமிழீழ தேசத்தை இட்டுச் செல்ல முற்பட்ட கே.பி குழுவினர், தற்பொழுது நாடுகடந்த அரசமைப்புக் குழுவினராகப் பரிணமித்து, தமிழீழ தாயகத்தை, தமிழ், முஸ்லிம் அரசுகளாகத் துண்டாடும் திட்டத்தை முன்வைத்திருப்பதன் சூத்திரத்தைப் புரிந்துகொள்வதற்கு நாம் எல்லோரும் விண்வெளி விஞ்ஞானிகளாக மாறவேண்டியதில்லை.

எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் இயங்கு சக்தியாக விளங்கும் தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து, மாவீரர்களின் சத்திய வரலாற்றின் வழியில் எமது விடுதலையை வென்றெடுப்பதே எம்முன்னுள்ள ஒரேயொரு தெரிவு என்பதைப் புரிந்து கொண்டு, மாவீரர்களின் கனவை நனவாக்குவதே நாம் அனைவரும் எடுக்கக்கூடிய சரியான முடிவாக அமையும்.

ஈழமுரசு.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*