TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மூன்றில் இரண்டு பெரும்பான்மை: ஆளும்கட்சியின் தவறிபோன குறி

ஏழாவது நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

நாவலப்பிட்டியில் நடைபெற்ற தேர்தல் வன்முறைகளின் விளைவாக நாடளாவிய தேர்தல் முடிவு மீள்வாக்குப் பதிவுக்குப் பின்னரே வெளியிடப்படும் நிலை உருவாகியுள்ளது.

தேர்தல் வன்முறைகளால் வாக்களிப்பு இரத்துச் செய்யப்பட்டு மறுவாக்குப்பதிவு நடத்தப்படுவது இங்கு புதுமையானதொரு விடயம்.

ஏற்கனவே சில தேர்தல்களில் மோசடிகள் இடம்பெற்ற வாக்களிப்பு நிலையங்களின் வாக்குகளை செல்லுபடியற்றதாக தேர்தல் திணைக்களம் அறிவித்து வந்தது.

ஆனால் இந்தமுறை அதற்கு முரணான வகையில் ஒட்டுமொத்த தேர்தல் முடிவையுமே நிறுத்தி வைக்கின்ற ஒரு முடிவை எடுத்திருக்கிறது. இது ஒருவகையில் ஜனநாயக ரீதியான தேர்தலுக்கு வழிசமைக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

அதாவது மறுவாக்குப் பதிவு- வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் என்று இழுபடுவதை எந்த அரசியல் கட்சியும் விரும்பாது. எனவே வருங்காலங்களில் மறுவாக்குப் பதிவுக்கு இடம்கொடுக்கக் கூடாது என்பதற்காக வன்முறைகளற்ற தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்க ஒவ்வொரு கட்சியும் முன்வரும் வாய்ப்புகள் உள்ளன.

இது ஒருவகையில் நல்லதொரு விளைவாகவே இருக்கப் போகிறது. ஆனால் ஒன்று அடுத்த நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் என்ற இறுதி நிலவரத்தை உடனடியாக அறிந்து கொள்ள முடியாதநிலை ஏற்படுள்ளது.

ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு ரத்துச் செய்யப்பட்டு மீள் வாக்குப்பதிவுக்கு உத்தரவிடும் போது அந்த மாவட்டத்தின் முடிவை வெளியிடுவதைத் தள்ளிவைக்க வேண்டியிருக்கும். அத்துடன் மாவட்ட முடிவுகள் வெளியிடப்படாமல் தேசியப்பட்டியல் ஆசன ஒதுக்கீடு பற்றிய முடிவுகளை அறிவிக்க முடியாது.

எனவே எந்தக் கட்சிக்கு எத்தனை ஆசனம் கிடைக்கலாம் என்று ஒரு குத்துமதிப்பான தகவல்கள் மட்டும் வெளியாகுமே தவிர மறுவாக்குப்பதிவுக்குப் பின்னரே உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகப் போகின்றன. ஆனாலும் இந்தத் தேர்தல் முடிவுகள் வெளியான தொகுதிகள், மாவட்டங்கள் அடிப்படையில் சில போக்குகளை கவனிக்க முடிகிறது.

* இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாகவே மக்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்பது முதலாவது விடயம்.

* ஜனாதிபதித் தேர்தலில் முண்டியடித்த வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் குறைந்தளவிலேயே ஆர்வம் காட்டியது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது.

* அரசாங்கத்தின் மீது கொண்ட வெறுப்பின் வெளிப்பாடே என்கின்றன எதிர்க்கட்சிகள். அதேவேளை எதிர்க்கட்சிகளின் பலவீனமான செயற்பாடுகளே காரணம் என்கிறது அரசாங்கம்.

* எது சரியானது என்பது வாக்காளர்கள் ஒவ்வொருவரையும் ஆய்வுசெய்யும் போதே உண்மை புலப்படும்.

* அரசாங்கத்துக்கு எதிரான வெறுப்பு பரவலாக இருக்கவில்லை என்பது உண்மை. அப்படியிருந்திருந்தால் ஆட்சியை மாற்ற மக்கள் முனைந்திருப்பார்கள். ஆனால் அதற்கான முயற்சிகள் நடக்கவில்லை.

* அதேவேளை எதிர்க்கட்சியான ஜதேக பெரும்பான்மை பலம் தமக்குக் கிடைக்கும் என்று கதைத்துக் கொண்டிருந்தாலும் அதற்கு வாய்ப்புகள் இல்லையென்பதை முன்கூட்டியே அனுமானிக்க கூடியதொன்றாகவே இருந்தது எனவே தேர்தல் முடிவு ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயம் அல்ல.

ஆனால் ஆளும்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் குறிவைத்திருந்தது. அது சாத்தியமாகாது போலவே தெரிகிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக் கொண்டு ஆளும்கட்சி பல கற்பனைக் கோட்டைகளைக் கட்டி வைத்திருந்தது. அவையெல்லாம் இப்போது சாத்தியமாகாது.

அவற்றைச் சாத்தியமாக்க வேண்டுமானால் ஐதேகவில் இருந்து சிலரை விலைக்கு வாங்க வேண்டியது தான் ஒரே வழியாக இருக்கப் போகிறது.மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறமுடியாத நிலை ஆளும்கட்சிக்கு ஏற்பட்டிருப்பது ஒருவகையில் சறுக்கல் தான்.

அதன் பாரிய திட்டங்களும் அதற்கான பிரசாரங்களும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குயைப் பெறுவதற்கு உதவவில்லை. இன்னொரு வகையில் இந்தத் தேர்தல் முடிவு அதிர்ச்சியைக் கொடுத்திருப்பது ஜேவிபிக்குத் தான்.

அது தென் மாகாணத்தை தமது கோட்டை என்று கொண்டாடுகின்ற கட்சி ஆனால் மாத்தறை, அம்பாந்தோட்டை பகுதிகளில் ஒரு ஆசனத்தைக் கூட ஜேவிபியால் வெல்ல முடியாது போயுள்ளது. ஆனால் புறக்கணித்து ஒதுக்கிவிடக் கூடியதொரு கட்சியாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்து விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரத் பொன்சேகாவின் மீதுள்ள அனுதாப அலையை வாக்குகளாக்கிக் கொண்டதால் ஜேவிபி 5 ஆசனங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இல்லையேல் கொழும்பு, கம்பகா, காலி போன்ற மாவட்டங்களில் அதற்கு இந்தளவு வாக்குகள் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.

தேசியப்பட்டியல் ஆசனம் கிடைக்கும் வாய்ப்பும் இதற்கு இருக்கிறது அதேவேளை, இந்தக் கூட்டணிக்கு தேசிய அளவில் குறிப்பிடத்தக்க வாக்குகள் கிடைத்திருப்பது புறக்கணிக்க முடியாத விடயமாக இருந்தாலும் அரசியலில் தாக்கம் செலுத்தக் கூடிய சக்தியாக இது வளர்வதற்கு நீண்டகாலம் எடுக்கலாம் என்ற உண்மையை இந்தத் தேர்தல் அவர்களுக்கு உணர வைத்துள்ளது.

* தென்னிலங்கை நிலவரங்களைப் பொறுத்தவரையில் ஆளும்கட்சி எதிர்பார்த்தளவுக்கு மூன்றில் இரண்டு ஆசனங்களைப் பெறமுடியாது போவது ஒரு வகையில் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. ஆனால் ஐதேக தம்மால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று கூறிக்கொண்டாலும் அது தமக்கிருக்கும் செல்வாக்கை மதிப்பிடாமல் இருந்திருக்க முடியாது.

இந்த முடிவை அவர்கள் எதிர்பார்த்திருப்பார்கள். எனவே தான் தேர்தல் முடிவதற்கு முன்னரே இது ஜனநாயக ரீதியாக நடக்கவில்லை என்று அறிக்கை வெளியிடத் தொடங்கினர்.

அதேவேளை ஜேவிபியைப் பொறுவரையில் இந்தத் தேர்தல் முடிவு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தவே செய்துள்ளது. சரத் பொன்சேகா அனுதாப அலை அவர்களுக்கு கைகொடுத்துள்ளது. இல்லையேல் அவர்கள் படுதோல்வியைச் சந்தித்திருக்க நேரிடும்.

களனிப் பல்கலைக்கழகத்தின் கருத்துக் கணிப்பில் ஜேவிபி-சரத் பொன்சேகா கூட்டணிக்கு ஒரு ஆசனம் கூடக் கிடைக்காது என்று கூறப்பட்டிருந்தது அதற்கு மாறாக கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் அளவுக்கு ஆசனங்களை இந்தக் கூட்டணி பெற்றுள்ளது. இதுவே அவர்களுக்கு ஆறுதலான விடயமாக இருக்கும்.

கொழும்பிலிருந்து கபிலன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*