TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வீண்பழி சுமத்தாதீர் – வி.உருத்திரகுமாரன்

நாடு கடந்த அரசிற்கும் தமக்கும் எதிராக சில ஊடகங்கள் வெளியிட்டு வரும் கருத்துகள் தொடர்பாக நாடு கடந்த அரசின் இணைப்பாளரான வி. ருத்ரகுமாரன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையின் விபரங்கள் வருமாறு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்களை உலகளாவிய அளவில் மே மாதம் 2 ஆம் நாள் நடாத்துவதற்கான முனைப்பில் நாடு கடந்த ஈழத் தமிழர் தேசம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவ் வேளையில் உண்மைக்குப் புறம்பான அபாண்டங்களையும் அவதூறுகளையும் பரப்பி இம் முயற்சியினை வலுவிழக்கச் செய்யும் முயற்சியினை தேசியத்தின் பெயரால் சிலர் தொடர்ந்தும் செய்ய முயல்வதனையிட்டு நாம் வேதனையுறுவதுடன் அதனை வன்மையாகக் கண்டனம் செய்கிறோம்.

தேசியத்துக்கான ஊடகங்கள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் ஒரு சில ஊடகங்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாகவும் இவ் அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியின் இணைப்பாளரான என் தொடர்பாகவும் வெளிவந்திருந்த அவதூறுகள் குறித்த பதிலாகவே எமது கருத்தை இங்கு பதிவு செய்கிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சியை எப்படியாவது முறியடித்துவிட வேண்டும் எனச் சிறிலங்கா அரசு துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில் – உள்ளிருந்தே கொல்லும் வியாதி போல – தேசியம் பேசுவோரில் ஒரு சிலரும் இம் முயற்சியினைக் கருவறுக்க முயல்வது மிகுந்த அவலமான ஒரு முரண்நகையாகும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பாக மதியுரைக்குழுவின் முதல் அறிக்கை 14.01.2010 அன்று மக்கள் கருத்துக்கு விடப்பட்டதன் பின்னர் பெறப்பட்ட மக்கள் கருத்தின் அடிப்படையில் மீளமைக்கப்பட்ட இறுதி அறிக்கை 15.03.2010 அன்று வெளியிடப்பட்டது. இவ் அறிக்கையில் குறிப்பிப்பட்ட முஸ்லீம் மக்கள் விவகாரம் குறித்து தற்போது சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களும் சர்வதேசச் சட்டங்களுக்கமைய சுயநிர்ணய உரிமையைக் கோரும் பட்சத்தில் கோட்பாட்டு ரீதியில் அவர்களுக்கிருக்கக்கூடிய உரிமைகள் குறித்தே அறிக்கை பேசியிருக்கிறது.

இதே வேளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தே இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவேண்டும் என்பதே மதியுரைக்குழுவின் நிலைப்பாடாக இருந்தது.
மதியுரைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பாக தெரிவிக்கப்படும் எத்தகைய மேலதிகக் கருத்துக்களும் இனி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் கவனத்துக்குரியவையே என எம்மால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மதியுரைக்குழுவின் அறிக்கை தொடர்பாகத் தற்போது வெளியிடப்படும் கருத்துக்களுக்கான பதில் கருத்துக்களை நாம் இப்போது வெளிப்படுத்த விரும்பவில்லை.

வேட்பாளர் கட்டணம் நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களால் தீர்மானம் செய்யப்படுகிறது. நாட்டுக்கு நாடு அந் நாட்டின் சூழலுக்கேற்ப தேர்தல் நடாத்துவதற்கு ஏற்படும் செலவுகளை ஈடு செய்வதற்கு வகுக்கப்பட்டுள்ள திட்டங்களுக்க ஏற்ப வேட்பானர் கட்டணங்கள் மாறுபடுகின்றன. பல நாடுகளில் குறைந்த கட்டணங்களே தீர்மானிக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் வேட்பாளர் கட்டணங்கள் அறவிடப்படவில்லை.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான செயற்குழு தேசியக்கொடி தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதற்குரிய உரித்து இக் குழுவுக்கோ அமையப் போகும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கோ இருப்பதாகவும் நாம் கருதவில்லை.

இதேவேளை என் தொடர்பாக உண்மைக்குப் புறம்பாக அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சியின் நன்மை கருதி அவற்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இடைக்கால நிர்வாகத்தை நான் ஏற்படுத்தித் தருவதாக தேசியத் தலைவருக்குக் கூறியதாக குறிப்பிடுவது நகைப்புக்கிடமானது. இது தேசியத் தலைவரையே அவமரியாதை செய்வது. பேச்சுவார்த்தைகளின் ஒரு கட்டத்தில் இடைக்கால நிர்வாகத்தை முன்வைப்பது குறித்த ஆலோசனைகைள தேசியத்தலைவர் கேட்டிருந்தார். நான் எனது கருத்தை அவருடன் பகிர்ந்திருந்தேன். இடைக்கால நிர்வாக தன்னாட்சி சபைக்கான வரைபினை நாம் பலர் சேர்ந்து உருவாக்கினோம்.

அமெரிக்கப்படைகளை அனுப்புவதாக நடேசன் அவர்களுக்கு கூறியதாகக் கூறுவதும் முள்ளிவாய்க்கால் முடிவின் சூத்திரம் எனக்கும் கேபிக்கும் தெரியும் என்று வீண்பழிசுமத்துவதும் காழ்ப்புணர்வின் உச்சக்கட்டமாக உள்ளது.

உங்களிடம் நாம் கேட்பது ஒன்று மட்டும்தான்.

தயவு செய்து போராட்டத்தின் பெயரால் தேசியத் தலைவரின் பெயரால் போராளிகளின் பெயரால் மாவீரரின் பெயரால் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் பணிக்கு இடையூறு விளைவிக்காதீர்கள். இவர்களின் கனவை நனவாக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் இத் திட்டத்தை இல்லாதொழிக்க நினைப்பது அவர்களுக்கு நாம் இழைக்கும் பெரும் அநீதியாக இருக்கும்.

நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் திட்டத்தை மிகவும் வெளிப்படையாகச் செயற்படுத்துகிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக மக்களுடன் நீண்ட கருத்துப்பரிமாற்றத்தை செய்தே திட்டத்தை வடிவமைத்துள்ளோம்.

இத்தயை திட்டத்தை முகமில்லாத மனிதர்களாக மறைந்திருந்து அசிங்கப்படுத்த முனைவோரிடமிருந்து பாதுகாத்து முன்னெடுத்துச் செல்ல எம்முடன் கைகோர்க்குமாறு அனைத்துத் தமிழ் பேசும் மக்களையும் அமைப்புக்களையும் ஊடகங்களையும் உரிமையுடன் வேண்டுகிறோம்.

இவண்

விசுவநாதன் ருத்ரகுமாரன்

இணைப்பாளர்
தொடர்புகளுக்கு: [email protected]

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*