TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வடக்கு கிழக்கு தமிழரின் பூர்வீகத்தாயகம்

தமிழன் தனக்கென தமிழ் இராட்சியத்தை உருவாக்கி ஆண்ட சரித்திரம் உண்டு. இந்த வகையில் 16ஆம் நூற்றாண்டு காலத்தின் இறுதியில் தமிழ் அரசனான சங்கிலிய மன்னனால் இலங்கையின் வடக்குக் கிழக்கு மகாணமும் வேறு சில பகுதிகளும் உள்ளடங்கலாக தமிழ் இராட்சியம் பரந்து இருந்தமை வரலாற்று ரீதியான உண்மையாகும். இந்த வகையில் தமிழர் தாயகம், தமிழ்த் தேசியம் என்பவற்றை பேசுவதற்கும் அனுபவிப்பதற்கும் ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அந்த உரிமையையும் தமிழர் கொண்டிருந்த இறைமையையும் இன்று வரை எவரிடமும் தமிழன் ஒப்படைக்கவில்லை என்றும் கொள்வதே சாலச் சிறந்ததும், பொருத்தமானதுமாகும்.

அந்நியராம் ஆங்கிலேயர் தம்மால் கைப்பற்றப்பட்டு ஆளப்பட்ட இராட்சியங்களான கண்டி, கோட்டை, யாழ்ப்பாணம் இராடசியங்கள் என்பன எந்த இனத்தால் ஆளப்பட்டதோ அவ் இனத்திடம் மீள ஒப்படைக்கப்பட முன்வரும் போது முன்னைய தமிழ்த் தலைவர்கள் முன்பிருந்த சிங்களத் தலைவர்களுடன் ஒன்றாக ஆளுவதற்கு நிபந்தனைகள், புரிந்துணர்வு, நன்னம்பிக்கை அடிப்படையில் இணக்கம் கண்டார்களே தவிர தமிழ்த் தேசிய உணர்வை தமிழர் தாயகமாகிய வடக்குக் கிழக்கு மாகாணத்தை பெரும்பான்மை சமூகத்திடம் தாரைவார்த்துக் கொடுக்கவும் இல்லை. தமிழர்கள் தம்முடைய இறைமையை யாரிடமும் ஒப்படைக்கவும் இல்லை. இக் கருத்து தமிழ்த் தலைவர்கள் நால்வர்களுக்கு எதிராக யூரலல்லாத விசாரணையில் மேல்நீதிமன்ற வழக்கில் ஜி.ஜி.பொன்னம்பலம் (கி.இ), முன் னைநாள் சொலிசிற்றர் ஜெனரல் பிள்ளை நாயகம் ( கி.இ), மு.திருச்செல்வம் (கி.இ) ஆகியோர்களால் முன்வைக்கப்பட்ட வாத மும் கூட.

தமிழ்த் தலைவர்களும் சிங்களத் தலைவர்களும் ஏற்றுக் கொண்ட நியதிகளின் படி தென்னிலங்கை ஆட்சியாளர்கள் நடவாமல் பெரும்பான்மைச் சமூகம் சிறுபான்மை சமூகத்தை தனித்து ஆளப் புறப்பட்டதனாலேயே தன்னைத்தான் ஆண்ட தன்மானமுள்ள தமிழன் அந்நோக்கத்திற்காக தன்னால் ஒப்படைத்திருக்காத இறைமையைப் பிரயோகிக்கவும் தனது தேசியத்தை, தனது வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகக் கோட்பாட்டை நிலை நிறுத் தவும் பெரும்பான்மைச் சமூகத்தின் நடவடிக்கைகளால் தள்ளப்பட்டனர். எனவே இந் நிலையில் தமிழரின் எதிர்பார்ப்பு தமிழ்த் தேசிய உணர்வே தவிர அபிவிருத்தியல்ல. எனக் கூறுவதே சாலப்பொருத்த மானதாகும்.

தமிழ் மக்கள் அதுவரை காலமும் அனுபவித்துவந்த உரிமைகளை வென்றெடுப் பதற்காக, ஆரம்ப காலத்தில் தமிழர்களுடைய பெரும் கட்சியாகத் திகழ்ந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் பெரும்பான்மை இனத்துடன் சம உரிமையுடன் இணைந்து வாழும் போக்கைக்கைக் கொண்டு பெரும்பான்மை சமூகத்தினருடைய ஆட்சியாளரால் பலகோணத்திலும் ஏமாற்றப்பட்ட நிலையில் அவரால் கைக்கொள்ளப்பட்ட நடைமுறை தோல்வியைத் தழுவியது.

* ஜீ.ஜீ.பொன்னம்பலத்துடன் இணைந்து செயற்படும் போக்கு எந்தக் காலத்திலும் வெற்றிபெறுமா என்பது அரசால் முன்னெடுக்கப்பட்டு நடந்துவந்த செயற்பாடுகளின்படி கேள்விக்குறியாகவே அமைகின்றது. காரணம் பெரும் பான்மை சமூகத்தைச் சேர்ந்த அரசு காலத்திற்குக்காலம் தமிழர் தாயகத்தில் திட்ட மிட்ட குடியேற்றத்தின் மூலம் தாயக நில அபகரிப்பைச் செய்ததுடன் வேலைவாய்ப்பு, அபிவிருத்தி என்பவற்றில் சிறுபான்மையோர் மீது காட்டிய புறக்கணிப்பைப் பற்றி நாடாளுமன்றத்திற்கு உள்ளும் புறமும் தமிழ்க் கட்சிகளால் எடுத்துக்கூறியும் இவ் விடயங்களை ஆட்சேபித்தும் பெரும்பான்மை யோரின் அரசின் போக்கில் இன்றுவரை எவ்வித மாற்றம் ஏற்படவில்லை. எனவே சிறு பான்மை பெரும்பான்மையுடன் ஒற்று மையாகச் சேர்ந்து செயற்படும் கோட்பாடு தென்னிலங்கை ஆட்சியாளரது குறுகிய நோக்கால் வெற்றி பெறவில்லை. மற்று மொரு கட்சியான தமிழரசுக்கட்சியின் தலைவர் தந்தை செல்வாவால் சமஷ்டி ஆட்சி முறை முன்வைக்கப்பட்டது. இதுவரை காலமும் சமஷ்டி ஆட்சிமுறை தென்இலங்கை ஆட்சியாளரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதுடன் அமரர் எஸ். டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்காவைப் பிரதமராகக் கொண்ட அரசு சமஷ்டி ஆட்சி முறையை முன்னெடுத்தபோது ஐக்கிய தேசியக் கட்சி அதனை எதிர்த்து அக்கொள்கையும் கைவிடப்பட்டு சமஷ்டி ஆட்சி முறைக் கோட்பாடும் தோல்வியடைந்து விட்டது.

* இக்கோட்பாடுகள் ஒரு புறமிருக்க தமிழர்களுடைய தாயகக் கோட்பாடு, தமிழ்த் தேசியம் என்பவற்றை இலங்கையில் இருந்து அகற்றி இலங்கை ஒரு பௌத்த நாடு என்றும் சிங்கள மொழி அரச மொழி என்றும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் ஆட்சியில் 19.06.1956 ஆம் திகதி முன் வைக்கப்பட்ட கருத்து ஒட்டு மொத்தமாகத் தமிழர் தாயகத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் இந்த நாட்டில் இடமிருக்கமாட்டாது என்பதற்குப் பச்சைக்கொடி காட்டப்பட்ட செயலாகும். குறித்த சமஷ்டி ஆட்சி முறைச் செயற்பாடுகளுக்கு பெரும்பான்மை சமூகத்தாலும் எதிர்க்கட்சியாலும் காட்டிய எதிர்ப்புக்களால் 1958இல் இனக்கலவரம் ஏற்பட்டதும், பண்டா செல்வா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அது பின் ஐக்கிய தேசியக் கட்சியின் பாதயாத்திரை எதிர்ப்பால் கிழித்தெறியப்பட்டதும் வரலாறாகும்.

நில ஆக்கிரமிப்பு, இன ஒழிப்பு, இன ஒடுக்கல் போன்ற செயல்களைத் தடுத்து நிறுத்த மேற்கொண்ட, சேர்ந்து வாழும் புரிந்துணர்வு கோட்பாடும் ஒரே இலங்கையில் சமஷ்டி முறை ஆட்சிக் கோட்பாடும் தோல்வியைத் தளுவிய அதே நேரம் தமிழர்களுக்கும் தமிழ்த்தாயகத்துக்கும் தேசியத்துக்கும் மாறான அச்சுறுத்தும் செயற்பாடு துரிதமாகச் செயற்பட அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய நிலையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ, தந்தை செல்வா ஆகியோரால் பல கடையடைப்பு, சட்டமறுப்புப் போராட்டம், சத்தி யாக்கிரகம், உண்ணாவிரதப் போராட்டங்கள் எனப் பலவித சாத்வீக முறையிலான போராட்டங்கள் மேற்கொண்டும் பயனளிக்கவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் தீர்வுகள் முன்வைக்கப்படும் பொழுது அதனை ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுத்தாமல் தடுத்ததும் குறிப்பாக முன்னைநாள் ஜனாதிபதியான சந்திரிகா குமாரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டம் ஐக்கிய தேசிய கட்சியால் குழப்பப்பட்டதும் அதேபோல ஐக்கிய தேசியக் கட்சி முன் வைத்த மாவட்ட சபை ஆட்சிமுறைக்கு (ஈ.ஈ.இ) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் எதிர்ப்புத் தெரிவித்திருந்தும் அச்சபை முறை (ஈ.ஈ.இ) நடைமுறைக்கு வந்ததுமான செயற்பாடுகள் அனைத்தும் சமஷ்டி ஆட்சிக்கோ தமிழர் தாயகக் கோட்பாட் டிற்கோ, தமிழ்த் தேசியத்திற்கோ எந்தக் காலத்திலும் இலங்கையில் இடமிருக்காது என்ற தென்னிலங்கை ஆட்சியாளர்களின் தொடர்ச்சியான செயற்பாடுகள் அறை கூவல்களாக அமைகின்றன.

1987இல் இந்தியாவின் தலையீட்டினால் ஐக்கிய தேசியக் கட்சியால் நிறைவேற்றப்பட்ட 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் வாயிலாக உருவாக்கப்பட்ட மாகாணசபை ஆட்சிமுறையில் மாகாணசபைக்குச் சட்டத்தில் கிடைத்த அதிகாரம் கூட பெரும்பான்மை அரசால் மாகாணசபை அமைக்கப்பட்டும் அதிகாரம் வழங்கப்படாமலும் இதுவரை வட கிழக்கு மாகாணங்களுக்கு ஒரு தமிழர் ஆளுநராக நியமிக்கப்படாமலும் இன்று வரை சாக்குப் போக்குக் காரணங்கள் கூறி தட்டிக்கழிக்கப்பட்டு வருகின்றன என்றால் வடகிழக்கு இணைந்த தமிழ்த் தாயகம், தமிழ்த் தேசியம் என்பது தமிழர்களைப் பொறுத்தவரை சிங்களப் பெரும்பான்மை இன அரசு தானாக முன்வந்து வழங்கும் என்றோ அல்லது பேச்சு மூலம் தீர்க்கப் படும் என்றோ எதிர்பார்க்கக் கூடிய ஒன்றல்ல.

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தாம் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மைத் தமிழர்களுடைய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழர்கள் திருப்தியடையும் வகையில் அரசியல் தீர்வு வழங்கப்படும் என காலாகாலமாகத் தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினரே தவிர குறித்த வாக்குறுதிகளை இதுவரை எந்தக் கட்சியும் நிறைவேற்ற முன்வரவுமில்லை, நிறைவேற்றி இருக்கவுமில்லை. இது இவ்வாறிருக்க வழமையான பாணியில் இம்முறையும் இதே கோஷம் தென்னிலங்கைக் கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது என்பது மட்டுமல்லாமல் தமிழர்களுடைய உரிமைகளை வலியுறுத்த அவர்களுக்கு என ஒரு உறுதியான கட்சியோ அல்லது பிரதிநிதித்துவங்களோ கிடைக்காது போகும் வகையில் பல யுத்திகள் கையாளப்படுகின்றன. தமிழ்த் தேசியம்,தமிழ்த் தாயகக் கோட்பாடு என்பவற்றை மழுங்கடிக்க முனையும் வெளியுலக வலைப்பின்னலில் தமிழ்க் கட்சிகளை சிக்க வைத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குறித்த கொள்கைக்கு மாறான செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருப்பது, நடந்து கொண்டிருக்கும் நடவடிக்கைகளை உன்னிப்பாக ஆராயும் பொழுது உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாகப் பலரும் பேசிக் கொள்வதில் எந்தவித அர்த்தமும் இல்லையெனக் கொள்வதற்கு இடமில்லை.

* உலக நாடுகளிடையே தற்காலத்தில் காணப்படும் மனித சமுதாயத்தின் உரிமை மதிக்கப்பட வேண்டும். அவர்களுடைய ஆட்சி, மொழி, சமயம், அரசியல், பிராந்தியம் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற தற்கால போக்கிற்கு அமைய சர்வதேசங்களின் அழுத்தங்களினாலேயே ஒரே இலங்கைக்குள் தமிழர்களுக்கு ஒரு தன்னாட்சி அமைய வேண்டும் என்ற நிலை இருந்து வருகின்றது.

இந்த வகையில்

1. இலங்கை நாடு இந்தியப் பிராந்தியத்திலிருந்து பிரிந்த பகுதி, இந்தியாவில் இருந்து வந்தவர்களே இலங்கை மக்கள் என்கின்ற தன்மையில் இலங்கைப் பிரச்சினையில் தலையிட இந்திய நாட்டுக்கு முதல் உரிமையுண்டு.

2. அதேபோல சங்கிலியன் ஆட்சியைப் பறித்த போர்த்துக்கல், ஒல்லாந்து, ஆங்கில நாடு ஆகியவர்களுக்கும் இலங்கையின் இறைமையைப் பாதிக்காத வகையில் தலையீடு செய்து பிணக்கைத் தீர்த்து வைக்க உரிமையுண்டு.

தமிழரது ஆட்சியை 1947 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு மூலம் பிரித்தானிய ஆட்சியாளர் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தி உரிமையை வழங்கிய அப்பாதுகாப்பு ஏற்பாடுகள் 1972ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு யாப்பால் நீக்கப்பட்ட உத்தரவாதம் மீறப்பட்டு குறித்த 1972ஆம் ஆண்டு அரசியல் அமைப்பால் பெரும்பான்மை இனத்திற்கு மட்டும் சிறப்புரிமை வழங்கியமை மற்றும் 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்பால் சிங்கள மொழி அரச மொழி என உறுதிபடக் கூறி தமிழ் மொழியும் அரச நிர்வாக மொழியாக அமையும்.
ஆனால் அதற்கான சட்டங்கள் ஆக்கப்பட வேண்டும் என கண்துடைப்பிற்கான வாசகம் காட்டப்பட்டு அதற்கான சட்டங்களை ஆக்காது தவிர்க்கும் அதே நேரம் தமிழர்கள் விடயத்தில் மென்மைப் போக்கு கடைப்பிடிப்பதாக உலகிற்குக் காட்டி வருவதை மனிதாபிமான தன்மை யில் தட்டிக் கேட்பதற்கும் பிரச்சினையில் தலையிடவும் மேற்குறித்த நாடுகளுக்கு உரிமை கிடைக்கிறது எனலாம்.

* தமிழர் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன இல்லை என்றால் அபிவிருத்தி என்பது அர்த்தமற்றது. அபிவிருத்தி என்பது எக்காலத்திலும் மேற்கொள்ளக் கூடிய ஒன்று. ஆனால் அனுபவித்து வந்த தமிழர் தாயகம்,தமிழ்த் தேசியத்தை இழந்தால் அப்பிரதேசத்தில் அபிவிருத்தி மேற்கொண்டாலும் கூட உரிமைப் பாதிப்பால் அங்கு அபிவிருத்தியை அனுபவிக்க முடியாமல் வேதனை நிறைந்த வாழ்க்கையாகத்தான் தமிழர்களுடைய வாழ்க்கை அமையலாம்.

அரசினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் இலங்கை முழுவதும் இருந்து பெறும்வரிகள், வெளிநாட்டு உதவிகள் மூலம் மேற்கொள்ளப்படுவதால் அதே வேளை வடக்கு கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தியை மேற்கொண்டு ஓரம்காட்டாது சமநிலையில் அபிவிருத்தி செய்ய வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு. எனவே வடக்கு கிழக்கில் அபிவிருத்திக்காகப் பெரும்பான்மை சமூக கட்சிகளுக்கு சிறுபான்மையோரின் ஆதரவைப் பெற்ற அரசியல் கட்சி துணைபோக வேண்டும் என்பது காரணமாக அமையமாட்டாது. இலங்கை நாட்டின் பாகமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் அமைவதால் அதற்குரிய அபிவிருத்தியை அரசு புரிய வேண்டிய கட்டாயநிலை இருப்பதால் அபிவிருத்திக்காக அரசுடன் நிற்க வேண்டியுள்ளதென அரசுக்கு மறைமுகமாக உதவி நிற்பது அரசையும் அதேவேளை தன் இனத்தையும் ஏமாற்றும் மாபெரும் துரோகமான செயலாகும். அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர், தாயகம், தமிழ்த் தேசியம் என்ற உணர்வை மழுங்கடிக்கும் நோக்கத்துக்கு மானமுள்ள எத்தமிழனும் துணைபோக மாட்டார்கள் என்பதே தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வாக அமையுமென்பதில் இருவேறுபட்ட கருத்து இருக்க முடியாது.

தற்பொழுது எதிர்நோக்கும் நாட்டின் அபிவிருத்தியா? தேசியமா ? என்ற போட்டியில் அபிவிருத்தி அணி வெற்றியீட்டின் தமிழர்களுக்காக அவர்களின் உரிமைக்காக குரல் எழுப்பும் மேலைத்தேய நாடுகளும், இந்திய மாநிலமும் உறங்கிவிடும். அதன் பின் தமிழ்த் தாயகம்,தேசியம் மழுங்கடிக்கப்பட்டு விடும். தட்டிக் கேட்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். தமிழ்த் தாயகம் ,தேசியம் சார்பான அணி வடக்கிலும் கிழக்கிலும் வெற்றிபெறுமாயின் தமிழ னுக்கு ஒரே இலங்கைக்குள் ஆனால் தன்னைத்தான் ஆளும் கௌரவமான பூரண அதிகார ஆட்சி அமைவதற்கு வெளிநாடு களின் அழுத்தம் அமைய சாத்தியமுண்டு என்பதுடன் அபிவிருத்தியும் ஏற்பட வாய்ப்பிருக்கும் என்பதில் இருவேறுபட்ட கருத்தும் இருக்க முடியாது.

இலங்கையில் இரு தேசியங்கள் இருதாயகங்கள் இவை இரண்டும் ஒரே நாட்டுக்குள் இணைந்த அலகுகளாக ஒரு இலங்கைக்குள் யாப்பு ரீதியாக அரசியல் தீர்வு அமைவதன் மூலமே நீண்ட, நிரந்தர அமைதியான தீர்வு அமைய முடியும். எதிர்வரும் பொதுத் தேர்தல் முடிவே இதற்குப் பதிலாக அமையப் போகிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*