TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வன்னிமக்கள் பேரவைக்கு ஒரு மனந்திறந்த மடல்

வன்னிமக்கள் பேரவை என்ற பெயரில் அறிக்கை விட்ட கட்டுரையாளருக்கு,

வணக்கம்!

தங்களின் அறிக்கை நிரம்பவே சுட்டது. வன்னிமக்களின் அவலங்களைத் தெளிவாகச் சொல்லியிருந்தீர்கள். நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். வன்னிமக்களுக்கு புலம்பெயர்ந்தவர்கள் சரியான முறையில் உதவவில்லையென்ற குற்றச்சாட்டையும் சொன்னீர்கள். மனதார ஏற்றுக்கொள்கிறோம்.

அந்தக் குற்றவுணர்வு எமக்கு நிறையவே உண்டு. அதுவொன்றும் வேண்டுமென்றே தட்டிக் கழித்ததில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள். வன்னிமக்கள் செய்த தியாகங்களும், போராட்டத் தலைமையையும் இயக்கத்தையும் பாதுகாக்கவென அவர்கள் கொடுத்த விலையும் மிகமிக அதிகம்.

இன்றும் அதற்கான விலையை அவர்கள் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிவோம். இவையனைத்துக்கும் நாங்கள் தலை வணங்குகிறோம். ஆனால் இந்தத் தியாகங்கள், பாடுகள், வேதனைகள் எல்லாவற்றையும் அரசியலாக்கி குறிப்பிட்ட சிலருக்கு வாக்குக் கேட்பதற்காக ‘வன்னி மக்கள் பேரவை’ பயன்படுத்திக் கொண்டது தான் எமக்கு சினத்தைத் தருகிறது.

வன்னிமக்களுக்கும் அவ்வாறே உணர்விருக்கும் என நம்புகிறோம். மக்களைக் கவனிக்காத அரசியல்வாதிகள் எல்லோரையும் பொதுவாகச் சாடி உங்கள் அறிக்கை அமைந்திருந்தால், வன்னிமக்களைக் கவனிக்காமல் தேர்தலுக்குப் பணமிறைக்கும் எல்லோரையும் நீங்கள் சாடியிருந்தால், வன்னி மக்களைப் பயன்படுத்தி அரசியல் செய்வோரை அம்பலப்படுத்தி உங்கள் அறிக்கை வெளிவந்திருந்தால் அதில் நியாயமிருந்திருக்கும்.

ஆனால் அப்பட்டமான ஒருபக்கச் சார்புடன், குறிப்பிட்ட சிலரின் மேலுள்ள காழ்ப்புணர்வுடன் அயோக்கியத்தனமான வாதங்களுடன் வெளிவந்திருக்கிறது உங்கள் அறிக்கை. எனவேதான் இது வன்னிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரால் எழுதப்பட்ட விளம்பர அறிக்கையாக எம்மால் பார்க்கப்படுகிறது.

அப்படி நினைப்பதற்குப் போதிய காரணங்கள் உங்கள் அறிக்கை முழுதும் பரவிக்கிடக்கின்றன. முதலில், தாயகத்தில் நிலவிய தேர்தல் பரப்புரை நிலைமையை யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ஊடக தர்மம் என்பது அறவே மறுக்கப்பட்டு அராஜகச் சூழல்தான் யாழ்ப்பாணத்தில் நிலவுகிறது. இதுவொன்றும் சிங்களப் பேரினவாத அரசாலோ அல்லது ஒட்டுக்குழுக்களாலோ ஏற்பட்டதன்று. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாலும் (த.தே.கூ) அதை ஆதரிக்கும் சக்திகளாலும் ஏற்பட்டது.

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி(த.தே.ம.மு) குறித்த செய்திகள் எல்லாம் இருட்டடிப்புச் செய்யப்பட்டது மட்டுமன்றி, மக்களிடத்தில் அதைக் குறித்த தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் விதத்தில் தொடர்ச்சியான பரப்புரை பத்திரிகைகளில் நடத்தப்பட்டு வந்தது. உதயன், தினக்குரல் என்பன என்ன நிலைப்பாடு எடுத்துள்ளன, அவை எப்படிச் செயற்படுகின்றன என்கிற விடயங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு ‘வன்னிமக்கள் பேரவை’ என்று அறிக்கை விட்ட உங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கும்.

இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது? பத்திரிகைக் குழுமத்தின் முதலாளியை போட்டியிட வைத்ததன் மூலம் ஒரேகல்லில் இரண்டு மாங்காய்களைக் கூட்டமைப்புத் தலைமை அடித்துக் கொண்டது. மக்களுக்கு எதுவும் செய்யாதவர்கள் என்று சிலரை மட்டும் குறிப்பிட்டுத் தாக்கும் நீங்கள், கொழும்பிலே ஐ.தே.க. சார்பில் போட்டியிடும் எண்ணத்தோடிருந்த திரு சரவணபவனை யாழ்ப்பாணத்தில் வேட்பாளராக்கியது குறித்து என்ன கருதுகிறீர்கள்? இதன் பின்னாலுள்ள அயோக்கியத்தனமான அரசியல் குறித்து கூட்டமைப்பை விமர்சித்ததுண்டா? இப்படியாக ஒருவழிப் பரப்புரை மட்டுமே யாழ்ப்பாணத்தில் ஊடகங்களில் நடத்தப்பட்டு வந்தது.

வலம்புரியானது த.தே.ம.மு. இன் செய்திகளைப் பிரசுரித்தாலும் மக்கள் மத்தியில் அப்பத்திரிகை அதிக செல்வாக்கைக் கொண்டதில்லை. மாறாக உதயனும் தினக்குரலும் திட்டமிட்டே மிகப்பெரிய ஊடகப்போரை த.தே.ம.மு. மேல் தொடுத்துக் கொண்டிருந்தன. ஓர் எடுத்துக்காட்டு: செல்வராசா கஜேந்திரன் பல ஆயிரங்கள் செலவழித்து உதயனில் தனது கருத்தை ஒரு விளம்பரமாகப் போட்டிருந்தார். ஆம் உதயனில் த.தே.ம.மு. இன் கருத்து ஏதாவது வரவேண்டுமென்றால் பல்லாயிரக்கணக்கில் செலவழித்து விளம்பரமாகத்தான் போடவேண்டும்.

அதற்குள்ளும் ஏராளமான வெட்டுக்கொத்துகள் நடந்துதான் விளம்பரமே வெளிவரும். அந்த விளம்பரத்துக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் அளித்த பதில் உதயனில் செய்தியாக வெளிவந்தது. அதுவும் பெரிய கொட்டை எழுத்தில் முக்கியமான செய்தியாக சுரேசின் அந்தப் பதில் வந்திருந்தது. விளம்பரமொன்றுக்கான பதிலை முதன்மையான செய்தியாக வெளியிட்டதே நியாயமற்றது. சுரேசின் பதிலுக்குப் பதிலளிக்க வேண்டுமென்றால் திரும்பவும் கஜேந்திரன் பல ஆயிரங்களைச் செலவழித்து ஒரு விளம்பரம் கொடுக்க வேண்டும்.

இப்படித்தான் ஓர் ஊடக அராஜகம் நடந்துகொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் மிகப்பயங்கரமான ஊடக அராஜகத்தை த.தே.கூ. உதயனின் துணையோடு நடத்திக் கொண்டிருக்கிறது. உதயன் எந்த நிலைவரை போயிருக்கிறதென்றால், தேசியத் தலைவர் பிழை, விடுதலைப் புலிகள் இயக்கம் பிழை, ஏக பிரதிநிதித்துவம் என்று புலிகளை விட்டது பிழை, புலிகளின் பிடியிலிருந்து தப்பித்துள்ள த.தே.கூ. இனித்தான் மக்களுக்காகப் போராடப்போகிறது என்ற பொருள்பட பிறவிடங்களில் எழுதப்படும் கட்டுரைகளை அள்ளிப்போட்டும் மொழிபெயர்த்துப் போட்டும் தனது பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறது உதயன் பத்திரிகை.

‘இயக்கப்பாணி அரசியல்’ நடத்தும் குழுவாகவும், ஆயுதக் குழுவாகவும் த.தே.ம.முன்னணியைப் பகிரங்கமாகச் சித்தரிக்கிறது உதயன். உண்மையில் ‘இயக்கப்பாணி’ என்று உதயன் எதைச்சொல்கிறதோ அது த.தே.கூட்டமைப்புக்கும் உதயன் பத்திரிகைக்குமே பொருந்தும். இந்நிலையில்தான் புலம்பெயர் அமைப்புக்கள் தமது விளம்பரங்களை வெளியிடத் தீர்மானித்தன.

அதுவும் கடைசிநாட்களில்தான் – நீங்களே உங்கள் அறிக்கையில் குறிப்பிட்டதைப் போன்று கடைசி நாளில்தான்- அதிக விளம்பரங்கள் வெளிவந்தன. புலம்பெயர் அமைப்புக்கள் தமது பெயர்களைப் பயன்படுத்தி விளம்பரங்களைக் கொடுக்க வேண்டிய நிலையைத் தோற்றுவித்தது த.தே.கூட்டமைப்பும் அதற்குரிய ஊடகப்பிதாமகனும் தான். தாயகத்திலும் புலத்திலும் இந்த ‘அமைப்புக்களின் அறிக்கைப் போரை’த் தொடங்கிவைத்தவர்கள் நீங்கள் ஆதரவளிக்கும் இந்தக் கூட்டம்தான்.

உதயனிலே ‘பிரித்தானியா மக்கள்’ என்று குறிப்பிட்டு த.தே.கூ. ஐ ஆதரித்து விளம்பரம் வெளிவந்திருந்தது. அப்போதெல்லாம் புலம்பெயர் அமைப்புக்கள் எவையும் விளம்பரம் கொடுத்திருக்கவில்லை. பெயர், ஊர் இல்லாமல் இப்படி விளம்பரம் போட்டு ஏதோ புலம்பெயர் மக்கள் எங்களுக்குத்தான் ஆதரவளிக்கிறார்கள் என்ற மாயையை யாழ்ப்பாணத்தில் உருவாக்கவென திட்டமிட்டு இப்படியொரு நாடகம் த.தே.கூ. ஆல் நடத்தப்பட்டது.

அத்தோடு கனடாவிலே உள்ள தமிழ்ப்படைப்பாளிகள் கழகத்தின் நிலைப்பாட்டை பலமுறை செய்தியாக்கி அதன் மூலமும் புலம்பெயர் மக்கள் அனைவரும் தம்மோடுதான் நிற்கிறார்கள் என்ற மாயை உருவாக்கப்பட்டது. அப்போதெல்லாம், ‘உங்கள் கருத்தை எங்கள் மேல் திணிக்காதீர்கள்’ என்று எழுத உங்களுக்கு மனம்வரவில்லை. இந்நிலையில்தான், உண்மை நிலையை விளக்கவேண்டிய கடப்பாடு புலம்பெயர் அமைப்புக்களுக்கு ஏற்பட்டன.

ஆக, இப்படியாக விளம்பரங்கள் கொடுக்க வேண்டிய நிலைக்கு புலம்பெயர் அமைப்புக்களைத் தள்ளியதே வன்னிமக்கள் பேரவை ஆதரவளிக்கும் த.தே.கூட்டமைப்பும் அதன் ஊடகங்களும்தான். புலத்திலேயும் இதே நிலையைத்தான் த.தே.கூட்டமைப்பும் அதன் ஆதரவு வலைத்தளமும் ஏற்படுத்தின. முதன்முதலில் தாயகத் தேர்தல் தொடர்பான ஆதரவு அறிக்கை வெளிவந்தது யாரிடமிருந்து என்பதை நீங்கள் அறிவீர்களா? அது த.தே.ம.முன்னணிக்கான ஆதரவு அறிக்கையாக இருக்கவில்லை.

மாறாக த.தே.கூ. ஐ ஆதரித்து இதுவரை இல்லாத ‘வடக்கு கிழக்கு பழைய பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம்’ என்ற பெயரில் ஓர் அறிக்கை அந்த வலைத்தளத்தில் வெளிவந்தது. அதுதான் தொடக்கம். தமிழ்ப்படைப்பாளிகள் கழகத்தின் அறிக்கை இதில் சேர்த்தியில்லை, ஏனென்றால் அது ஏற்கனவே இருக்கும் ஓர் அமைப்பு.

இல்லாத அமைப்பின் பெயரில் அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியது குறித்தே இவ்விடத்தில் சொல்லப்படுகிறது. அதன்மூலமும் புலத்துமக்கள் த.தே.கூட்டமைப்பை ஆதரிக்கிறார்கள் என்ற மாயையை உருவாக்க முனைந்தார்கள். அதன்பின்னர்தான், உண்மையான மக்கள் கட்டமைப்புக்கள் – ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள் கட்டமைப்புக்கள் தமது த.தே.ம.முன்னணிக்கான ஆதரவை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamileelam News
  • Ruth says:

    இனித் திறந்த மடலை மூடுவதற்கு யார் மடல் எழுதப் போகினம். சும்மா உல்டா பண்ணாதேயுங்கோ

    April 9, 2010 at 12:22

Your email address will not be published. Required fields are marked *

*