TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஐ.நா. வில் தனது நண்பர்களை சிறிலங்கா விரைவாக இழக்கிறதா

2009 மே இல் போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஐ.நா. மனித உரிமை சபையில் அதிகரித்தபோது, அணிசேரா அமைப்பைச் (Non-Aligned movement -NAM) சார்ந்த நாடுகள் சிறிலங்காவுடன் இணைந்து நின்று அந்த தீர்மானத்தைத் தோற்கடித்தன. அந்த நாடுகளை சிறிலங்கா தனது ‘உண்மையான நண்பர்களாக’ அடையாளங் கண்டுகொண்டது. ‘ ஐ.நா. வில் ‘போர்க் குற்றம்’ தொடர்பான தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு மேற்குலகை நிர்ப்பந்திப்பதில் வெற்றிகண்டுள்ளது’.

இவ்வாறுதான் சிறிலங்காவினது வெற்றியை லண்டனிலிருந்து வெளியாகும் ரைம்ஸ் பத்திரிகை வர்ணித்திருந்தது. சிறிலங்கா இதனை ‘ஜெனிவாப் போர்’ என்று குறிப்பிட்டது. சிறிலங்கா ஐ.நா. வினுள் புதிய சக்தி ஒன்றை உருவாக்கியிருப்பதாக ஆசிய அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். அணிசேரா நாடுகளின் அமைப்பு மேற்குலகைத் தோற்கடிப்பதற்கு சிறிலங்காவுடன் இணைந்துகொண்டமை அவற்றுக்குப் புத்துயிரையும் பலத்தையும் தந்திருப்பதாகக்கூட இந்த வெற்றி தொடர்பாக சிலர் குறிப்பிட்டனர்.

அண்மையில் ஐ.நா. செயலாளர் நாயகம் சிறிலங்கா தொடர்பான ஆலோசனைகளைப் பெறுவதற்காக வல்லுநர் குழுவொன்றை நியமிப்பதற்குத் தீர்மானித்தபோது, சிறிலங்கா மீண்டும் அணிசேரா நாடுகளின் அமைப்பின் உதவியை நாடியது. அணிசேரா நாடுகளின் அமைப்பின் தலைமைப் பதவியைத் தற்போது வகிக்கும் எகிப்து, பான்; கி மூன் தனது உத்தியோகபூர்வ அதிகார வரம்புகளை மீறுவதாகக் குறிப்பிட்டு, வல்லுநர் குழு அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவருக்குக் கடிதம் ஒன்றை எழுதியது.

இது மேற்குலகிற்கு எதிராகக் கிடைத்த இரண்டாவது வெற்றி என சிறிலங்கா சர்வதேச ஊடகங்களுக்குக் கூறிக்கொண்டது. ஐ.நா. வுக்கும் மேற்குலகிற்கும் எதிராக அணிசேரா நாடுகளின் அமைப்பின் 118 நாடுகள் சிறிலங்காவுடன் ஒன்றிணைந்திருப்பதாக சிறிலங்காவின் பேச்சாளர் ஒருவர் பெருமையாகக் கூறிக்கொண்டார்.

ஆனால் நீண்ட காலத்திற்கு முன்பே அணிசேரா நாடுகளின் அமைப்பின் நடவடிக்கைக்குத் தான் துணைபோகவில்லை என்பதை இந்தியா மேற்குலகிற்குத் தெரியப்படுத்திவிட்டது. பின்னர், அணிசேரா நாடுகளின் அமைப்பின் கூட்டம் முடிவடைந்து உறுப்பினர்கள் அனைவரும் வெளியேறிய பின்னர், சிறிலங்கா தொடர்பாக ஐ.நா. சௌலாளர் நாயகம் பான் கி மூனால் நியமிக்கப்படவிருக்கும் வல்லுநர் குழுவுக்கு அணிசேரா நாடுகளின் அமைப்பின் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என சிறிலங்காவின் பிரதிநிதி பாலித கோகன்ன கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

பல நாடுகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே வெளியேறிய நிலையில் ஏனையவர்களும் வெளியேற இருந்ததால், ஐ.நா. செயலாளர் நாயகத்தின் முடிவுக்கு எதிராக கடிதம் ஒன்றை அனுப்புவது என்ற தீர்மானம் அவசரமாக மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, சிறிலங்கா தொடர்பாக ஐ.நா. சௌலாளர் நாயகம் பான் கி மூனால் நியமிக்கப்படவிருக்கும் வல்லுநர் குழுவுக்குத் தெரிவித்த எதிர்ப்பை அணிசேரா நாடுகளின் அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் எகிப்து பின்வாங்கிக் கொண்டது. பான் கி மூன் அவர்கள் தனது பொறுப்புக்குட்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாகவே செயற்படுவதாக ஐ. நா செயலருக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.

இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து, 2009 மே இல் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தினை எதிர்த்து தனக்கு ஆதரவாக நின்ற அதன் ‘உண்மையான நண்பர்கள்’ விலகிச் செல்வதை சிறிலங்கா உணர்ந்து கொண்டதால் பான் கி மூனின் வல்லுநர் குழுபற்றிப் பேசுவதை அது நிறுத்திக்கொண்டது.

உண்மையில் 2009 மே இல் சிறிலங்காவுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் கிடைத்த வெற்றியுடன் ஒப்பிடும்போது, அணிசேரா நாடுகளின் அமைப்பு தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கிக் கொண்டமையானது அவமானகரமான தோல்வியே.

ஆனால், வல்லுநர் குழுவுக்கு எதிராக அனுப்பப்பட்ட கடிதத்தின் அனுமதிகூட தந்திரமான முறையிலேயே பெறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அணிசேரா நாடுகளின் அமைப்பின் கூட்டம் முடிவடைந்து பிரதிநிதிகள் வெளியேறிக் கொண்டிருந்தபோது சிறிலங்கா இந்த ஆலோசனையை முன்வைத்ததாக அணிசேரா நாடுகளின் அமைப்பின் நாடுகள் குற்றஞ் சாட்டுகின்றன.

சிறிலங்கா அரசாங்கமானது தான் உள்நாட்டில் மேற்கொள்ளும் அரசியல் நடவடிக்கைகள் போல, ஐ.நா. விற்குள்ளும் மேற்கொள்ள முடியும் என கருதுகிறது. ஒரு தலைப்பட்சமாகத் தனக்கு மட்டுமே சாதகமான செய்திகளை மதத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் விளையாட்டுத் துறையில் இருப்பவர்களைக்கூடப் பயன்படுத்தி வெளியிடுவதில் சிறிலங்கா அரசாங்கம் நிச்சயமாக கைதேர்ந்தது.

அவ்வாறு பயன்படுத்தப்பட்ட சில தரப்பினர், தம்மால் கூறப்பட்டதாக ஊடகங்களில் அந்த செய்தி வெளியாகிய பின்னரே அதனைக் காணுவர். அதேபோல, வெளிநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்புக்களின்போதும் குறிப்பாக அரசாங்கத்துக்குச் சார்பான செய்திகளை வெளியிடுவதில் சிறிலங்கா அரசாங்கம் புத்தி சாலித்தனமானது. சிலவேளைகளில் சிறிலங்கா தனது பரிசோதனையை அணிசேரா நாடுகளின் அமைப்புடனும் நடாத்திப் பார்த்திருக்கக்கூடும். துரதிஸ்டவசமாக அது சிறிலங்காவுக்கு பாரிய பின்னடைவையே ஏற்படுத்தியது.

சிறிலங்காவிலுள்ள வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் நடாத்துவதன்மூலம் அவற்றின் வாயை மூடிவிட முடியும் என சிறிலங்கா கருதுகிறது. இந்த வழிமூலம் ஐ.நா. இலும் பரிசோதனையை நடாத்தி அதிருப்தியையும் அவமானத்தையுமே சிறிலங்கா எதிர்கொண்டது.

பான் கி மூனிற்கும் வல்லுநர் குழுவுக்கும் எதிராக ஐ.நா. அமைப்புக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தை நடாத்தியதன் பின்னணியில் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதி கோகன்னவே இருந்தார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இத்தகைய செயற்பாடுகள் சிறிலங்காவுக்கு வரவேற்பைப் பெற்றுத் தராது.

வல்லுநர் குழு அமைக்கப்படுவதற்கான தனது எதிர்ப்பைத் தெரிவிக்க முற்பட்டு சிறிலங்கா தனக்குத் தானே தேடிக்கொண்ட அதிருப்தியும் எந்தவகையிலும் ஆதரவற்ற நிலையும் ஐ.நா. வுக்கான சீனாவின் பிரதிநிதி லி படோங் ஊடகங்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது.

லி படொங் அவர்கள் ஐ.நா வுக்கான புதிய தூதுவராவர். வல்லுநர் குழுவுக்கான சிறிலங்காவின் எதிர்ப்பு, அணிசேரா நாடுகளின் அமைப்பின் கடிதம் மற்றும் மியன்மார் தொடர்பான பிரச்சினைகள் பற்றிக் கேள்விகள் எழுப்பப்பட்டன. மியன்மார் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கையில், ‘இறையாண்மையுள்ள நாடு என்றவகையில் அதற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்’, என்று தெரிவித்தார்.

ஆனால் குறிப்பாக சிறிலங்கா தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்காமல் மௌனமாக வெளியேறிவிட்டார். சிறிலங்காவின் நெருங்கிய நண்பனும் மீட்பனுமாகிய சீனாகூட இந்த விடயத்தில் தலையிடுவதற்குத் தயங்கும்வகையில், சிறிலங்கா அரசாங்கம் இந்தப் பிரச்சினையைக் குழப்பி வைத்திருப்பது தெளிவாகிறது.

2009 இல் போர் முடிவடைந்த உடனேயே அணிசேரா நாடுகள் தமது ஆதரவை சிறிலங்காவுக்கு வழங்கின. சிலவேளை, தேசிய நல்லிணக்கத்தை எட்டுவதற்கு சிறிலங்காவுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்குவதற்காக அவை இந்த உதவியை செய்திருக்கலாம். தற்போது, ஏறத்தாழ ஒரு வருடம் கடந்த நிலையில், சிறிலங்கா தேசிய நல்லிணக்கத்தை எட்டுவதற்கான எந்தவொரு ஆயத்தங்களையும் செய்யாததுடன் அதற்கான திசையிலும் அது செல்லவில்லை.

தேசிய நல்லிணக்கம் எட்டப்பட வேண்டும் என்பதற்காகவே அவை பான் கி மூனின் வல்லுநர் குழுவுக்கு தெரிவித்த எதிர்ப்பிலிருந்து பின்வாங்கியிருக்க வேண்டும். பான் கிமூனின் வல்லுநர் குழுவை அமைப்பதற்கான உந்துதல் பெரிதும் குறைந்திருப்பதாலேயே அணிசேரா நாடுகளின் அமைப்பு தனது எதிர்ப்பைப் பின்வாங்கியதாகவும் சிலர் கருதுகின்றனர்.

எவ்வாறாயினும், வல்லுநர் குழு அமைக்கப்படுவதை அணிசேரா நாடுகளின் அமைப்பின் கடிதத்தினூடாக நிறுத்தும் சிறிலங்காவின் முயற்சி தோற்றுவிட்டது. ஐ.நா.வுடனோ அல்லது மேற்குடனோ மோதுவதென்பது மலையுடன் மோதுவதற்கு ஒப்பானது என்பதை அரசாங்கம் தற்போது விளங்கிக்கொண்டிருக்கவேண்டும்.

சிறிலங்கா அரசாங்கம் ஒரு தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைப்பதை நிர்ப்பந்திப்பதற்காக, தமிழ் ஆயுதக் குழுக்களை இந்தியா தீனிபோட்டு வளர்த்தபோது, அதனை எதிர்கொள்வதற்கு ஜே. ஆர். ஜெயவர்த்தன தயாரானார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காப் படைகளின் கரங்கள் ஓங்கியபோது, சிறிலங்காவின் வடக்கில் இந்தியா உணவுப் பொதிகளை விமானம் மூலம் போட்டது. இந்தியாவின் நடவடிக்கைளை நிறுத்துவதற்கு வேறு வழியின்றி ஜெயவர்த்தனா மேற்குலக நண்பர்களின் உதவியை நாடினார்.

அமைதியான முறையில் இந்தியாவுடன் பேச்சுக்களை நடாத்திப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு அறிவுரை கூறிய மேற்கு நாடுகள் பிராந்தியத்தியத்தின் பலம்வாய்ந்த சக்தியாக இந்தியா விளங்குவதால் அதனைப் பகைத்துக்கொள்ள முடியாதென்பதையும் சுட்டிக்காட்டின.

இதற்குப் பின்னரே ஜெயவர்த்தனவுக்குத் தான் மலையுடன் மோதியிருக்கிறார் என்பது புரிந்தது. இறுதியில் இந்தியாவுக்குப் பாடம் புகட்டுவதற்காக மேற்கின் உதவியை நாடிய ஜெயவர்த்தனவுக்கு மேற்குலகு பாடம் புகட்டியது.

இன்று, மேற்குலகிற்குப் பாடம் புகட்டுவதற்கு அணிசேரா நாடுகளின் அமைப்பின் உதவியை நாடிய சிறிலங்கா அரசாங்கம் அதன் ‘உண்மையான நண்பர்களான’ அணிசேரா நாடுகளின் அமைப்பிடமிருந்து சகப்பான ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*