TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சரணாகதி அரசியலுக்கும் சாணக்கிய அரசியலுக்கும்

சரணாகதி அரசியலுக்கும் சாணக்கிய அரசியலுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள்: நிராஜ் டேவிட்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டது என்பது போன்ற ஒரு குற்றச்சாட்டு புலம்பெயர் ஊடகங்களிலும் வடக்கு கிழக்கு தேர்தல் மேடைகளிலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

அத்தோடு த.தே.கூட்டமைப்பு சரணாகதி அரசியலை நடாத்தி வருகின்றது என்ற குற்றச்சாட்டுக்களும், புலம்பெயர் தேசங்களில் ஒரு தரப்பால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஊடகம் ஒன்றிற்கு அண்மையில் செவ்வி வழங்கிய தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் யாழ்மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.வரதராஜன் அவர்களும் த.தே.கூட்டமைப்பு சரணாகதி அரசியலை நடாத்துவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றித்தான் நாம் இன்று ஆராய இருக்கின்றோம்.

தமிழினம் மிகுந்த நெருக்கடிக்குள் நின்றுகொண்டிருக்கின்ற இன்றை சூழலில் தமிழினத்தின் தலைவர்கள் ஒரு நகர்வினை மேற்கொள்ளுகின்ற பொழுது அந்த நகர்வு வெளிப்பார்வைக்கு தமிழீழத் தனிஅரசு என்ற விடயத்தை தவிர்த்துவிட்டுச் செல்வதுபோல் தோன்றினால் உடனடியாகவே அந்த நகர்வை சரணாகதியாக துரோகமாக அடயாளப்படுத்திவிடும் போக்கு எம்மத்தியில் புரையோடிப்போயுள்ளது.

அந்த நகர்வின் பின்னால் உள்ள இராஜதந்திரம் அந்த நகர்வினை மேற்கொள்ளுவதற்கு காரணமான அகப் புறச் சுழ்நிலைகள் – இவை எதனையுமே கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் அந்த நகர்வு பற்றி எதிர்மறையான முடிவினை எடுத்துவிடும் ஒரு கலாச்சாரம் ஈழத் தமிழர் மத்தியில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது.

எம்மத்தியில் புரையோடிப்போயுள்ள இதுபோன்ற போக்கானது எதிர்காலத்தில் ஈழத் தமிழ் தலைமைகள் தமது இனம்சார்ந்த எந்த ஒரு இராஜதந்திர நகர்வினையும் செய்யமுடியாத ஒரு இக்கட்டை தோற்றுவித்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழ் அரசியல் தலைமைகள் உண்மையாகவே தமிழீழத்தை கைவிட்டு விட்டார்களா?

அவர்கள் சரணாகதி அரசியலைத்தான் நடாத்திக்கொண்டிருக்கின்றார்களா?

இதுபற்றித்தான் இன்றைய கட்டுரையில் சற்று விரிவாக நாம் ஆராய இருக்கின்றோம.

இன்று எதற்கெடுத்தாலும் 35 ஆயிரம் மாவீரர்களின் ஆத்துமாக்களைக் காரணம்காட்டிதான் தமது எதிராளிகளை துரோகிகள் என்றும் சரணாகதி அடைந்தவர்கள் என்றும் குற்றம்சாட்டும் வழக்கம் எம்மத்தியில் உள்ள ஒருசிலரிடம் காணப்படுகின்றது.

எமக்காக எம் இனத்தின் நல்வழ்விற்காக எமது இனத்தின் எதிர்காலத்திற்காகவென்று தமது உயிர்களை அகுதியாக்கிக்கொண்ட அந்த 35 ஆயிரத்திற்கும் அதிகமான மாவீரர்கள் ‘தமிழீழம்’ என்ற ஒரே இலட்சியத்திற்காகத்தான் தங்களை எமக்குக் கொடையாகத் தந்துள்ளார்கள்.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்று உரக்கக் கோஷமிட்டு அந்த குறிக்கோளுக்காகவே அவர்கள் தம்மை தியாகம் செய்திருந்தார்கள்:

ஆனால் இன்று அந்த தமிழீழம் என்ற வார்த்தையை அந்த மாவீரர்களின் ஆத்துமாக்கள் இன்றும் உச்சரித்துக்கொண்டு இருக்கும் அந்த சொற்பதத்தை நாம் தவிர்த்துவிட்டுத்தான் அரசியல் செய்துகொண்டு இருக்கின்றோம் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

உதாரணத்திற்கு புலம்பெயர் தேசங்களில் ஈழ விடுதலைக்கு என்று செயற்படுகின்ற அமைப்புக்களின் பெயர்களை எடுத்துப் பார்த்தால் அவைகளில் அனேகமானவை தமிழீழம் என்கின்ற சொற்பதத்தை தவிர்த்துவிட்டுத் தமது அமைப்பை வெளிஉலகிற்கு அடையாளப்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது. புலம்பெயர் தமிழர் மத்தியில் பிரபல்யமான Global Tamil Forum, British Tamil Forum, Canadian Tamil Congress, Swiss Tamil Forum

போன்ற இந்த அமைப்புக்களில் தமிழீழம் என்ற சொற்பதமே இல்லை. அதேபோன்று தமிமீழம் என்ற தமிழ் மக்களின் அபிலாஷையைக் கட்டிக்காப்பதாகவென்று கூறி களமிறங்கியுள்ள கஜேந்திரக்குமார் தலைமையிலான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் பெயரில் ‘தமிழீழம்’ என்ற வார்தையே இல்லையே.

80களின் ஆரம்பத்தில் தமிழீழம் என்ற வார்தையை தமது பெயர்களில் உள்ளடக்காத போராட்ட அமைப்புக்களே இருக்கவில்லை என்பதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

ஆனால் இன்று ஏற்பட்டுள்ள அகப் புறச் சூழல் இப்படியான ஒரு மாற்றத்தை இந்த அமைப்புகள் மீது நிர்ப்பந்தித்திருக்கின்றது.

நான் இதனை தவறென்றோ அல்லது அந்த 35ஆயிரம் மாவீரர்களுக்குச் செய்கின்ற துரோகம் என்றோ சொல்லவரவில்லை. இன்று நாம் நின்றுகொண்டிருக்கின்ற காலச்சுழலைக் கருத்தில்கொண்டு எமது உண்மையான குறிக்கோளை மனதினில் ஆழப்பதித்துக்கொண்டு வெளி உலகிற்காகவென்று சில நகர்வுகளைச் செய்யவேண்டியது காலத்தின் அவசியமாக இருக்கின்றது.

இதனைத்தான் இராஜதந்திரம் சாணக்கியத் தந்திரம் என்று கூறுவது.

ஒரு இனத்திற்கு நெருக்கடி ஏற்படுகின்ற நேரத்தில் அந்த நெருக்கடியில் இருந்து மீளவதற்காகவென்று ஒரு தலைமை மேற்கொள்ளுகின்ற நடவடிக்கையில் இராஜதந்திரம் சாணக்கியம் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அந்த இனத்தை ஒரு வெற்றிப் பாதையில் ஒரு தலைமையினால் நடத்த முடியும்.

விட்டுக்கொடுப்பு என்பதும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்துகொடுத்து காரியமாற்றுவதென்பதும் சாணக்கியத்தின்(இராஜதந்திரத்தின்) முக்கியமான அம்சங்கள்.

ஒரு நெருக்கடி ஏற்படுகின்ற சந்தர்பத்தில் எப்படியான சாணக்கியத்தனத்தை ஒரு தலைமை வெளிப்படுத்த வேண்டும் என்பதுபற்றித்தான் நாம் இந்தக் கட்டுரையில் சற்று விரிவாக ஆராய இருக்கின்றோம்.

சமூகங்கள் அல்லது நாடுகள் நெருக்கடிகளைச் சந்தித்த சந்தர்ப்பங்களில் அதன் தலைமைகள் விட்டுக்கொடுப்பு அல்லது நழுவல் ராஜதந்திரத்தைச் செய்த சந்தர்ப்பங்களை வரலாற்றின் பல இடங்களிலும் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஜோன் எப் கென்னடி ஹிட்லர் ஸ்டாலின் ஜவகர்லால் நேரு பிடல் கஸ்ரோ லார்ட் மவுன்பெட்டன் மாவோ சேதுங் மகாத்மா காந்தி தோமஸ் ஜபர்சென் என்று பல தலைவர்களும் நெருக்கடியான காலகட்டங்களில் இதுபோன்ற இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த நெருக்கடிகளில் இருந்து தம்மையும் தாம் தலைமைதாங்கிய சமூகத்தையும் வெற்றிப்பாதையில் நடாத்திய சம்பவங்களை வரலாற்றில் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆனால் அந்த உலகத் தலைவர்களின் இராஜதந்திர நகர்வுகளை இன்றைய எமது தமிழ்அரசியல் தலைமைகளுடைய சாணக்கிய நகர்வுகளுடன் ஒப்பிட்டு நான் ஆராயப்போக பாவம் அந்த உலகத்தலைவர்களையும் சில புலம்பெயர் இணையத்தளங்கள் துரோகிகள் என அடையாளப்படுத்துவிடுவார்கள். அதனால் எமது புலம்பெயர் இணையத் தளங்கள் இலகுவில் துரோகிகள் என்று அடையாளப்படுத்த முடியாத ஒரு தலைவர் மேற்கொண்ட சில இராஜதந்திர நகர்வுகள் பற்றி ஆராய்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

ஆம் எமது தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் பற்றித்தான் கூறுகின்றேன்.

தமிழீழத் தேசியப் போராட்ட வரலாற்றில் அந்தப் போராட்டம் நெருக்கடிகளைச் சந்தித்த காலகட்டங்களில் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மேற்கொண்ட சில இராஜதந்திர நகர்வுகள் பற்றிய பார்ப்பது இராஜதந்திரத்தின் பக்கங்களை விளக்குவதற்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்:

1994ம் வரும் ஈழத் தமிழினம் ஒரு நெருக்கடியான சூழ்நிலையைச் சந்தித்த காலகட்டத்தில் தேசியத் தலைமை மேற்கொண்ட ஒரு இராஜதந்திர நகர்வு பற்றி முதலில் பார்ப்போம்.

முதலில் 94ம் ஆண்டு வடக்கு கிழக்கு மக்கள் வாழ்ந்த சூழ்நிலைபற்றி ஞபகப்படுத்த விரும்புகின்றேன்.

அந்த நேரத்தில் யாழ் குடா மற்றும் வன்னியின் பெரும் பகுதிகள் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. மட்டக்களப்பின் வாகரை மற்றும் படுவான்கரைப் பிரதேசங்களின் பெரும் பகுதிகளும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தன.

பிரேமதாசவின் கொடுங்கோல் ஆட்சிக்காலம் அது.

பயங்கரவாதத்தடைச் சட்டம் அவசரகாலச்சட்டம் பொருளாதாரத் தடை போன்றனவற்றை தமிழ் மக்கள் மீது பிரயோகித்து தமிழ் மக்களின் வாழ்வியலை ஒரு இருப்புப் பிடிக்குள் வைத்துக்கொண்டு பிரேமதாச கொடுமையான ஆட்சியொன்றைப் நடாத்திக்கொண்;டிருந்தார்.

மறுபக்கம் இந்தியா ரஜீவ்காந்தி கொலையினால் சினந்தெழுந்து ஒருவகையான கடல்வழி முற்றுகையை தமிழர் தாயகம் மீது மேற்கொண்டிருந்த காலம். தமிழ் நாட்டில் இருந்து உணவுப் பொருட்கள் வருவது கிட்டத்தட்ட முற்றாகவே தடுக்கப்பட்டிருந்தது. கடல் வழியான ஆயுத வினியோகமும் இந்தியக் கடற்படையினால் தடைசெய்யப்பட்டிந்தது.

அந்தக் காலம் என்பது தமிழர் தேசமே மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. அந்த அநீதியான நடவடிக்கையின் விளைவாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் மீது உணவுக்கும் எரிபொருட்கள் மருந்து – என்று அனைத்து அத்தியாவசிப் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. மீன்பிக்கும் தடை. மின்சாரத்திற்குத் தடை.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் குழந்தைக்களுக்காக பால்மா கிடைப்பது அரிது. தலைவலிக்கான ஒரு பனடோலின் விலை நூறு ருபாய். சோப் ஷம்போ போன்றனவற்றிற்குப் பதிலாக பனம்பாணியை மக்கள் உபயோகித்த காலம் அது. வானொலி கேட்பதானால் துவிச்சக்கர வண்டியை ஸ்டாண்ட போட்டு நிறுத்திவிட்டு வண்டியை மிதித்து சைக்கிள் டைனமோவிலிருந்து மின்சாரத்தை எடுத்து அதில் வானொலியைப் பொருத்தி அதன் பின்னர்தான் வானொலி கேட்கமுடியும்.

என்றுமில்லாத இன்னல்களை தமிழர் தேசம் எதிர்கொண்ட காலம் அது.

மறுபக்கம் விடுதலைப் புலிகளும் தொடர் இராணுவ நடவடிக்கையினால் பாரிய ஆயுதப் பற்றாக்குறையை எதிர்கொண்ட காலம் அது.

ஒப்பரேசன் வன்னி விக்கிரம-1 2 3 ஒப்பரேஷன் மின்னல் ஒப்பரேஷன் சிக்சர் ஒப்பரேஷன் யாழ் தேவி என்று சிறிலங்கா இராணுவத்தின் தொடர் படை நடவடிக்கைகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது பிரயோகிக்கப்பட்ட காலகட்டம் அது. கடல் ரீதியாகவும் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகள் மீது பாரிய முற்றுகையை சிறிலங்கா மற்றும் இந்தியக் கடைபடைகள் மேற்கொணடிருந்ததால் விடுதலைப் புலிகளுக்கும் அந்த நேரத்தில் பாரிய ஆயுதத் மற்றும் வெடி பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.

தளபதி பால்ராஜ் தலைமையிலான சார்ஸ் அன்டனி படை அணியை அவசர அவசரமாக மின்னல் வேகத் தாக்குதல் என்ற பெயரில் எதிரிகளிடம் இருந்து ஆயுதங்களைக் கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் அளவிற்கு விடுதலைப் புலிகளும் அந்தக் காலகட்டத்தில் பலத்த நெருக்கடிகளைச் சந்தித்திருந்த காலகட்டம் அது.

இப்படியான ஒரு நெருக்கடி நேரத்தில்தான் சிங்களத் தலைவியான சந்திரிக்கா சமாதானம் பேசியபடி புலிகளுக்கு நேசக்கரம் நீட்டியிருந்தார்.

தான் ஆட்சிக்கு வந்தால் விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை நடாத்திப் போருக்கு முடிவுகட்டுவேன் என்று அவர் தேர்தல் மேடைகளில் முழங்கி வந்தார். தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கி வடக்கு கிழக்கில் இருந்து சிங்களப் படைகளை கௌரவமாக வரவழைப்பேன் என்று கூட கொழும்புப் புறநகர் பகுதியில் உள்ள நுகேகொடை என்ற இடத்தில் பகிரங்கமாகச் சந்திரிக்கா அறைகூவல் விடுத்திருந்தார்.

சந்திக்காவின் இந்த நிலைப்பாடு நெருக்கத்திற்குள் நின்று திக்குமுக்காடிக்கொண்டிருந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.

சந்திரிக்காவின் இந்த நேசக்கரத்தைத் தமிழ் மக்கள் பற்றிப் பிடித்தார்கள்.

சிங்களத் தலைமையின் அந்த நேசக்கரத்தை தேவை கருதி விடுதலைப் புலிகளும் பற்றிப்பிடித்தது.

நெருக்கடி ஒன்றை தமிழ் இனம் எதிர்கொண்ட அந்தச் சந்தர்பத்தில் அந்த நெருக்கடியில் இருந்து தமிழினத்தை மீட்டெடுக்கும் நோக்குடன் தமிழீழத் தேசியத் தலைமையும் சில இராஜதந்திர நகர்வுகளை அந்த நேரத்தில் மேற்கொண்டது.

சந்திரிக்காவின் இந்த நேசக்கரத்தைத் தமிழ் மக்கள்தான் பற்றிப் பிடித்தார்கள் – விடுதலைப் புலிகள் ஒன்றும் அதனைப் பற்றிப்பிடிக்கவில்லை என்று வரலாற்றை மறந்து மறைத்து விவாதம் நடத்தும் ஒரு சிலருக்கு இந்த விடயம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் கலாநிதி அன்டன் பாலசிங்கம் அவர்கள் எழுதியுள்ள ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

War and Peace என்ற தனது புத்தகத்தில் 4ம் அத்தியாயத்தில் கலாநிதி அன்டன் பாலசிங்கம் அவர்கள் சந்திரிக்கா நீட்டிய கரத்தை விடுதலைப் புலிகள் பற்றிப்பிடித்ததை புலிகள் மேற்கொண்ட ஒரு தந்திரோபாய நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு 1994ம் ஆண்டுத் தேர்தலில் சந்திரிக்கா வெற்றிபெறுவதை ஒரு இராஜதந்திர நோக்கத்திற்காக விடுதலைப் புலிகள் விரும்பினார்கள் என்பதையும் சில விட்டுக்கொடுப்புக்களையும் அந்த நேரத்தில் புலிகளின் தலைமை மேற்கொண்டது என்பதையும் வெளிப்படுத்தும் மேலும் சில சம்பவங்களையும் இன்றைய இந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதித் தேர்தலில் குதிக்கும் முன்னர் அவர் சமாதானம் பேசியபடி பொதுத் தேர்தலில் குதித்து 1994ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19ம் திகதி பிரதம மந்திரியாகப் பதவியேற்றார். அவர் பவியேற்று இரண்டு வாரங்களுக்குள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு சில அத்தியாவசியப் பொருகள் கொண்டுசெல்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையின் ஒரு பகுதியை நீக்கி தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

சந்திரிக்காவின் இந்த மனிதாபிமான நல்லெண்ணச் சமிக்கைக்கு விடுதலைப் புலிகளின் தலைமை சாதகமாப் பதிலளித்தது.

விடுதலைப் புலகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்த 10 சிறிலங்கா காவல்துறையினரை விடுதலைசெய்து புலிகள் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து 1994ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2ம் திகதியிட்டு புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் சந்திரிக்காவிற்கு ஒரு கடிதத்தையும் செஞ்சிலுவைச்சங்கத்தினூடாக அனுப்பிவைத்தார்.

பிரபாகரன் அவர்கள் தனது அந்தக் கடிதத்தில் சந்திரிகாவின் நல்லெண்ணச் சமிக்கையை தாம் வரவேற்பதாகவும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க தான் தயாரென்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு ஏதுவான அமைதியான சூழ்நிலையையும் இயல்பு நிலையையும் உருவாக்குவதற்குச் சந்திரிக்கா அரசாங்கம் மேற்கொள்ளும் சகல முயற்சிகளுக்கும் தாம் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் அவர்கள் சந்திரிக்காவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் 1994ம் ஆண்டு நவெம்பர் மாதம் 9ம் திகதி நிச்சயிக்கப்பட்ட நிலையில் புலிகளின் தலைவர் திரு பிரபாகரன் அவர்கள் சந்திரிக்காவுக்குச் சாதகமாக செப்டெம்பர் மாதம் இந்தக் கடிதத்தை எழுதியிருந்தது இங்கு நோக்கத்தக்கது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் எழுதிய கடிதம் அவரது கையொப்பத்துடன் சகல ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.

இது மாத்திரம் அல்ல 1994ம் ஆண்டு தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக ஏறத்தாள 11 கடிதங்களை சந்திரிக்காவுக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் அனுப்பி வைத்திருந்தார். அதேபோன்று திpரு.பிரபாகரன் 5 கடிதங்களை சிறிலங்காவின் பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் ஜெணரல் அனுருத்த த்வத்தைக்கு அனுப்பி வைத்திருந்தார்.

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் 02.09.1994 12.09.1994 23.09.1994 08.10.1994 20.11.1994 25.02.1995 16.03.1995 22.03.1995 28.03.1995 06.04.1995 18.04.1995 போன்ற திகதிகளில் சந்திரிகா குமாரதுங்கவுக்கு கடிதங்களை எழுதியிருந்தார். 25.11.1994 08.12.1994 15.12.1994 21.12.1994 01.01.1995 திகதிகளில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை அவர்களுக்கும் திரு.பிரபாகரன் கடிதங்களை எழுதியிருந்தார்.

இந்தக் கடிதப் பரிமாற்றங்கள் அனைத்திலும் தமிழீழத் தேசியத் தலைவரினால் எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் கூட ‘புலிகளின் தாகம் தமிழீத் தாயகம்’ என்ற புலிகளின் வழமையான அடிப்படை வாசகம் எழுதப்படவில்லை என்பது இங்கு நோக்கத்தக்கது.

இதேபோன்று அந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்தைகள் நடைபெற்றன. ஆனால் அந்தப் பேச்சுவார்தை மேசைகளில் தமிழீழ பற்றியோ தமிழ் தேசியம் பற்றியோ தன்னாட்சி பற்றியோ சுயநிர்ணயம் பற்றியோ விடுதலைப் புலிகள் எந்தக் கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் ஈழத் தமிழர்களின் அடிப்படை அரசியல் உரிமைகள் சம்பந்தமாக பேசுவதையோ நிலைப்பாடு எடுப்பதையோ தவிர்த்து மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை மாத்திரமே முதன்மைப்படுத்தி காய்களை நகர்த்தியிருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனைத்தான் இராஜதந்திரம் என்று அழைப்பது.

இந்த சம்பவங்களுடன் ஒட்டிய மற்றொரு விடயத்தையும் இங்கு சுட்டிக் காண்பிக்க விரும்புகின்றேன்.

அந்தக் காலகட்டத்தில் சந்திரிக்கா என்கின்ற சிங்களத் தலைவரின் வெற்றிக்காக விடுதலைப் புலிகள் தமது கண் அசைவினைக் காண்பித்தார்கள்.

சந்திரிகா என்ற சிங்களத் தலைவியின் வெற்றி அந்த வெற்றியின் பலனாக வரவிருந்த சமாதானப் பேச்சுவார்தை அதனுடாக ஒரு கால அவகாசத்தைச் சம்பாதித்துக்கொண்டு அந்த கால அவகாசத்தில் தம்மைச் சுதாரித்துக்கொள்ளும் நோக்குடன் காய்களை நகர்த்தினார்கள் விடுதலைப் புலிகள்.

மிகுந்த நெருக்கடிக்குள் நின்றுகொண்டிருந்த ஈழத் தமிழர்களை மீட்டெடுக்கும் நோக்குடன் இந்த இராஜதந்திரத்தைச் செய்தார்கள் விடுதலைப் புலிகள்.

விடுதலைப் புலிகளுக்கும் சந்திரிக்கா அரசாங்கத்திற்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் 1994ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் திகதி சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் இலங்கை முழுவதும் சந்திரிக்காவுக்கு மக்கள் தமது வாக்குகளை வழங்கி அமோக ஆதரவைத் தெரிவித்தார்கள்:

இந்தத் தேர்தலில் சந்திக்காவுக்கு அதிக வாக்குகள் விழுந்த முதல் இரண்டு மாவட்டங்கள் எது தெரியுமா?

சந்திரிக்காவுக்கு அதிக வாக்குகளை அளித்த முதலாவது மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டமே. யாழ்ப்பாண மக்களில் 96.35 வீதமான மக்கள் சந்திக்காவுக்கு வாக்களித்திருந்தார்கள். சந்திரிக்காவுக்கு அதிக வாக்குகளைச் செலுத்திய இரண்டாவது மாவட்டம்: மட்டக்களப்பு மாவட்டம். மட்டக்களப்பில் 87.30 வீதமான மக்கள் சந்திரிகாவுக்கு வாக்களித்திருந்தார்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால் சந்திரிக்காவின் சொந்தமாவட்டமான கம்பகா மாவட்டத்தில் அவர் பெற்ற வாக்குகள் 64.74 வீதம் மட்டும்தான்.

இன்னொரு அதிசயமும் நடைபெற்றது. இலங்கையின் சரித்திரத்திலேயே அதிக வீதமான வாக்குகள் ஒரு வேட்பாளருக்கு வழங்கப்பட்ட தேர்தல் தொகுதி மட்டக்களப்பின் பட்டிருப்புத் தேர்தல் தொகுதிதான்.

இந்தப் பட்டிருப்புத் தொகுதியில் சந்திரிக்காவுக்கு 94.2 வீதமான வாக்குகள் விழுந்திருந்தன. சந்திரிக்காவின் சொந்தத் தேர்தல் தொகுதியான அத்தனகல தேர்தல் தொகுதியில் கூட சந்திரிகா வெறும் 73.6 வீதமான வாக்குகளைத்தான் பெற்றிருந்தார். அந்த அளவிற்குத் தமிழ் மக்கள் சந்திரிக்காவிற்கு தமது வாக்குகளை அள்ளி இறைத்திருநதார்கள்.

இதில் இங்கு குறிப்பிடத்தக்க முக்கிய அம்வம் ஒன்று இருக்கின்றது.

இலங்கையிலேயே சந்திரிக்காவிற்கு மாவட்டமட்டத்தில் அதிக வாக்குகள் கிடைத்த யாழ் மாவட்டமும் தொகுதி மட்டத்தில் சந்திரிக்காவுக்கு அதிக வாக்குகள் கிடைத்த பட்டிருப்புத் தேர்தல் தொகுதியும் அந்த நேரத்தில் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப் பாட்டின் கீழேயே இருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழினம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்ட காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட அந்த இராஜதந்திர நகர்வுகளின் பரிமாணங்கள் ஓரளவு விளங்கி இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இதேபோன்று தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல சந்தர்பங்களில் விடுதலைப் புலிகள் தமிழீழத் தனியரசிற்கான கோரிக்கைகளை தாம் கைவிட்டுவிட்டது போன்று நடித்ததை அல்லது சற்று அடக்கி வாசித்திருந்ததை இந்தச் சந்தர்ப்பத்தில் நான் ஞபகப்படுத்த விரும்புகின்றேன்.

1980களின் பிற்பகுதியில் இந்தியப்படைகளுடனான சண்டைகளில் விடுதலைப் புலிகள் பலத்த நெருக்கடிகளைச் சந்தித்து அலம்பில் காடுகளுக்குள் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கைகளையும் இந்தச் சந்தர்பத்தில் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இந்தியாவின் இராணுவ பலம் ஒரு பக்கம்.

அரசியல் ரீதியாக வடக்கு கிழக்கு மாகாணசபை வரதராஜபெருமாளின் கைகளுக்குச் சென்றுவிட்டிருந்தது.

மக்கள் தொண்டர்படை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொண்டு ஒரு ஆயுதப் படையை உருவாக்கி வடக்கு கிழக்கில் நடமாடவிட்ட தொல்லை மற்றொரு பக்கம். தேசிய விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டு நகர்த்த முடியாமல் போயிருந்த நெருக்கடியான நிலையில் சிறிலங்காவின் அரச தலைவர் பிரேமதாசவுடன் சமாதானம் பேசி நிலமையைக் கையாள முன்வந்தர்கள் விடுதலைப் புலிகள்.

விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காவின் ஜனாதிபதி ரணசிங்கப் பிரேமதாசவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் தமிழீழத் தனியரசுக்கான தமிழ்மக்களின் நிலைப்பாட்டை சற்று அடக்கி வாசித்ததாக திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதிய சுதந்திர வேட்கை என்ற நூலில் தெரிவித்திருக்கின்றார்.

பிரேமதாசாவுடனான விடுதலைப் புலிகளின் முதலாவது சந்திப்பின் பொழுது பிரேமதாசா ஒற்றை ஆட்சியின் கீழேயே இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பதை திரு அன்டன் பாலசிங்கம் அவர்களிடம் நேரடியாகத் தெரிவித்திருந்ததாகவும் அதன் பின்னர் விடுதலைப் புலிகளுடன் பிரேமதாசா அரசாங்கம் மேற்கொண்ட அனைத்துப் பேச்சுவார்தைகளிலும் அந்த விடயத்திலேயே சிறிலங்கா அரசாங்கம் நின்றதாகவும் புலிகள் தரப்பும் தனிதமிழ் நாடு என்ற விடயத்தை தவிர்த்து இராஜதந்திர நகர்வுகளைச் செய்ததாகவும் அன்டன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய போரும் வாழ்வும் என்ற தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு ஒற்றை ஆட்சியின் கீழேயே அமையவேண்டும் என்றும் தமிழரின் தாயகம் சுயநிர்ணய உரிமை ஆகியனவற்றை பிரேமதாசா வன்மையாக எதிர்த்தார் என்றும் திருமதி அடேல் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

பிரேமதாசாவின் விரும்பத்தின் பெயரில் விடுதலைப் புலிகள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட மாகாணசபைக்கான தேர்தலில் பங்கேற்கவும் ஒரு சந்தர்பத்தில் சம்மதித்திருந்ததாகவும் திரு. பாலசிங்கம் மற்றம் திருமதி அடேல் பாலசிங்கம் போன்றவர்கள் தமது புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அதாவது சிறிலங்காவின் ஒன்றையாட்சியின் கீழ் தமிழீழத் தனியரசுக்கு மாற்றாக சிறிலங்கா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை ஒரு சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு ஏற்றுக்கொண்ட விடுதலைப் புலிகள் தம்மை ஒரு அரசியல் கட்சியாக சிறிலங்காவின் தேர்தல் ஆணையகத்தில் பதிவும் செய்துகொண்டார்கள். விடுதலைப் புலிகளின் அந்த அரசியல் கட்சிக்குப் பெயர்: விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி.

அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் இருந்த ‘தமீழீழம்’ என்ற பதத்தை நீங்கிவிட்டுதான் ‘விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி’ என்று புலிகள் பெயர் சூட்டியிருந்தார்கள்.

சிறிலங்காவின் ஒற்றை ஆட்சி என்ற அரசியல் யாப்பிற்கு உட்பட்டு விடுதலைப் புலிகள் அமைத்துக்கொண்ட அரசியல் கட்சியின் தலைவர்: அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதித் தலைவராக இருந்த மாத்தையா.

அந்த நேரத்தில் புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த திரு.யோகரட்ணம் யோகி அவர்கள் விடுதலைப் புலிகளின் அந்த அசியல் கட்சியின் செயலதிபராக நியமிக்கப்பட்டார்.

சிறிலங்காவின் ஒற்றை ஆட்சியின் அஸ்திவாரமான அரசியல் யாப்பை ஏற்றுக்கொண்டு விடுதலைப் புலிகளின் அந்த அரசியல் கட்சி சிறிலங்காவின் தேர்தல் திணைக்களத்தில் தன்னை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவுசெய்துகொண்டது.

தமிழீழத் தனியரசுக் கோட்பாட்டைத் தவிர்த்து தனக்கென ஒரு யாப்பையும் அந்தக் கட்சி வரைந்துகொண்டது. இற்றைவரைக்கும் அந்தக் கட்சி சிறிலங்காவின் தேர்தல் திணைக்களத்தில் பதியப்பட்ட நிலையிலேயே இருக்கின்றது (இலங்கை தேர்தல் திpணைக்களத்தில வெளியிடப்பட்ட கட்சிகளின் விபரப்பட்டியலில் 42வது கட்சியாக இந்த விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சி இன்றைக்கும் இருப்பது குறிப்பிடத்தக்கது)

ஒற்றையாட்சிக்குள் இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காணும் நோக்கத்தோடு சிறிலங்காவின் ஜனாதிபதி பிரேமதாசவினால் 1989ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 9ம் திகதி கூட்டப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளும் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டார்கள்.

விடுதலைப் புலிகளின் அந்த அரசியல் கட்சியின் முதலாவது மாநாடு மட்டக்களப்பு வாகரையில் 1990ம் ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி முதல் மார்ச் மாதம் 1ம் திகதி வரை நடைபெற்றது.

தமிழீழத் தனியரைக் கைவிட்டது போன்று நடித்து அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இராஜதந்திர நகர்வின் மூலம் பல அனுகூலங்களை ஈழத் தமிழினம் தனதாக்கிக்கொண்டது.

இந்தியப்படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்து தமிழீழத்தை மீட்டுக்கொண்டது. பெருமளவு ஆயுத தளபாடங்களை எதிரியிடம் இருந்தே பெற்றுக்கொண்டது. இந்தியாவின் கைக்கூலிகளையும் துரோகக் கும்பல்களையும் வடக்கு கிழக்கில் இருந்து வெளியேற்றியது. இந்தியப்படைகளுடனான யுத்தம் காரணமாக பலவீனமடைந்து காணப்பட்ட தமது போட்ட வலுவை மீழக் கட்டியெழுப்பும் கால அவகாசத்தை தேடிக்கொண்டது. இப்படி அந்த இராஜதந்திர விட்டுக்கொடுப்பு நாடகத்தின் மூலம் பல நன்மைகளை தமிழினம் அறுவடை செய்திருந்தது.

ஒரு பாரிய நெருக்கடிக்குள் இருந்து போராட்டத்தை மீட்டெடுக்கும் நோக்குடன் விடுதலைப் புலிகளின் தலைமை மேற்கொண்ட மற்றொரு இராஜதந்திர நகர்வாக இந்தச் சம்பவத்தை அடையாளப்படுத்தலாம்.

ஒரு நெருக்கடியில் நிற்கின்ற சமூகத்தை அந்த நெருக்கடிக்குள் இருந்து மீட்டெடுக்கும்படியான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் அந்தச் சமூகத்தின் தலைமையினால் மேற்கொள்ளப்படும்; நகர்வுகளை சரணாகதி அரசியல் என்று கூறக்கூடாது.

அதனை துரோகம் என்றும் கூறிவிடமுடியாது.

எமது தலைமைகள் செய்யும் இராஜதந்திர நகர்வுகளுக்கு தொடர்ந்து துரோகப்பட்டங்களையே நாம் கட்டிக்கொண்டு இருப்போமேயானால் எமது எதிர்காலத்தில் நல்லவர்கள் யாருமே எம்மைத் தலைமைதாங்க முன்வராத நிலை எமது இனத்திற்கு ஏற்பட்டுவிடும்.

Niraj David
[email protected]

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles, Featured

Your email address will not be published. Required fields are marked *

*